ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2026: மக்களின் உரிமைகள் பறிப்பு அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

புதிய அணுசக்தி சட்டம், புதிய விதை மசோதா வரிசையில் அமெரிக்காவிற்கு அடிமை சேவை புரிவதற்காகவும், அம்பானி – அதானி கார்ப்பரேட் கும்பல் உண்டு கொழுப்பதற்காகவுமே இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ந்தியாவில் 2026 – 2027 நிதியாண்டிற்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மோடி அரசின் கடந்த 11 ஆண்டுகால பாசிச ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைப் போன்றே இதிலும் நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உரிமைகள் திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளன. அம்பானி-அதானி மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்களின் ஆதிக்கத்தைப் பொருளாதாரத்தில் நிறுவும் வகையில் அக்கும்பலுக்கு பல்வேறு சலுகைகள் வாரியிறைக்கப்பட்டுள்ளன.

மக்கள் நலத்திட்டங்களுக்கான
நிதி வெட்டு

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தேசிய ஆயுஷ் மிஷன், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு மிஷன், பிரதமர் கிராம் சதக் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, குடிநீர் விநியோகம் சார்ந்த 18 திட்டங்கள் மோடி அரசால் அறிவிக்கப்பட்டு ரூ.2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அப்போதே இத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறையாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த ஆண்டு இத்திட்டங்களுக்கான நிதி ரூ.2.12 லட்சம் கோடியாக பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்குக் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியிலும் ரூ.81.350 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என்பது மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் சொற்ப நிதியும் மோடி அரசால் முடக்கப்படுகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்டுவதற்கேற்ப “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை” நீக்கிவிட்டு, “விபி ஜி ராம்ஜி” சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றியது. இத்திட்டத்தின்படி, பயனாளர்களுக்கு 125 நாட்கள் வேலை வழங்க குறைந்தபட்சம் ரூ.3.84 லட்சம் கோடி செலவாகும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இத்திட்டத்திற்கு ரூ.95,692 கோடியை மட்டுமே ஒதுக்கி மக்களை வஞ்சித்துள்ளது மோடி அரசு.

மேலும், சிறுபான்மை விவகார அமைச்சகத்திற்குக் கடந்த ஆண்டை விட வெறும் ரூ.50 கோடி மட்டுமே அதிகரித்து ரூ.3,400 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால், இவ்வாறு சொற்பமாக ஒதுக்கப்படும் தொகையிலும் மிகக் குறைந்த தொகையே மோடி அரசால் செலவிடப்படுகிறது. சான்றாக, 2023-24 நிதியாண்டில் ரூ.3,097.60 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் வெறும் ரூ.154.17 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் மீது தொடரும் தாக்குதல்

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கும், உணவு மானியம், உர மானியம் உள்ளிட்ட உயிராதாரமான திட்டங்களுக்கும் கடந்தாண்டை போல சொற்ப தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் காலநிலை மாற்றத்தினால் புயல், பெருவெள்ளம், வறட்சி, வெப்ப அலை உள்ளிட்ட பேரிடர்கள் உருவாகி பேரழிவை ஏற்படுத்துவதும், அதில் விவசாயம் மிகத்தீவிரமாகப் பாதிக்கப்படுவதும் புதிய இயல்புநிலையாகியுள்ளது. இச்சூழலில், நிதிநிலை அறிக்கையில் பயிர் காப்பீட்டிற்கான ஒதுக்கீட்டை கடந்த ஆண்டை விடக் குறைத்து இந்திய விவசாய வர்க்கத்தின் மீது மோடி அரசு தாக்குதலை தொடுத்திருக்கிறது.

குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும், விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் ஆகிய விவசாயிகளின் உயிராதாரமான கோரிக்கைகள் குறித்தும் எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. மேலும், பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை ஆண்டுக்கு ரூ.6,000-லிருந்து ரூ.12,000-ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நேரெதிராக பி.எம்.கிசான் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை பணவீக்கத்திற்கேற்ப கூட உயர்த்தவில்லை.

மாறாக, “பாரத் விஸ்டார்” என்ற பெயரில் கைபேசி அழைப்புகள் மூலம் விவசாயிகளுக்கு விவசாயத் தரவுகளை வழங்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு தளத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் வேளாண்மை இயக்கம் என்ற பெயரில் இந்த நிதியாண்டில் 11 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் ஐ.டி-களை (Digital IDs) உருவாக்குவதற்கான திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் எல்லாம் விவசாயத்துறையை டிஜிட்டல்மயமாக்கி கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகளே ஆகும்.

புறக்கணிக்கப்பட்ட கோரிக்கைகள்

இந்திய தொழிலாளி வர்க்கத்தின் முக்கியக் கோரிக்கைகளான பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம், பழைய ஓய்வூதியத் திட்டம், எட்டு மணி நேர வேலை உள்ளிட்டவை குறித்து நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. நாடு முழுவதும் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான கிக் தொழிலாளர்களின் நியாயமான ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களை எந்த உரிமைகளுமற்ற, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கொத்தடிமைகளாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே இக்கோரிக்கைகள் மோடி அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

மேலும், அமெரிக்க வரி விதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்; மூலப்பொருட்களின் விலை உயர்வு, அமேசான், ஃபிளிப்-கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் ஆதிக்கத்தால் சந்தையை அணுகுவதில் உள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகள் குறித்தும் அறிவிப்புகள் ஏதுமில்லை. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்த வேண்டும் என்ற அடிப்படையிலே அக்கோரிக்கைகளை மோடி அரசு திட்டமிட்டு புறக்கணித்துள்ளது.

அதேபோல், இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான எந்த ஆக்கப்பூர்வமான திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த கூலியில் கொத்தடிமைகளை உருவாக்கிக் கொடுப்பதற்காகத் தொடங்கப்பட்ட பி.எம்.இண்டன்ஷிப் திட்டம் (PM Internship) ஏற்கெனவே இளைஞர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அத்திட்டத்திற்கு ரூ.4,766 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.10,831.07 கோடி நிதியில் வெறும் ரூ.526 கோடியே செலவிடப்பட்டுள்ளது. இது, இத்திட்டத்தின் அப்பட்டமான தோல்வியைக் காட்டுகிறது.

மேலும், இந்த நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.12.2 லட்சம் கோடியினால் வேலைவாய்ப்புகள் பெருகும் என்று மோடி அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால், இந்த மூலதனச் செலவில் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய உள்கட்டமைப்புகளுக்கான ஒதுக்கீடு மிகக் குறைவு. மாறாக, அதிவேக இரயில் பாதைகள், சரக்கு போக்குவரத்துச் சாலைகள், பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான ஒதுக்கீடே அதிகம். இத்திட்டங்கள் வேலைவாய்ப்பை பெருக்குவதற்குப் பதிலாக, அதானி, எல்&டி போன்ற உள்கட்டமைப்பு கார்ப்பரேட்டுகளுக்கே இலாபம் அளிக்கும்.

அதேபோல, தனிநபர் வருமான வரி வரம்பு உயர்த்தப்படும் என்ற நடுத்தர வர்க்கத்தின் எதிர்ப்பார்ப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் மோடி அரசால் பூர்த்தி செய்யப்படவில்லை. மாறாக, கல்வி, மருத்துவச் செலவுகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான ஆதார வரி (TCS) குறைப்பு, வெளிநாடு வாழ் இந்தியர்களின் அசையா சொத்துகள் மீதான வரிக் குறைப்பு, ஏழு அதிவேக இரயில் வழித்தடங்களுக்கான அறிவிப்புகள் என மேட்டுக்குடி வர்க்கத்தினரை குறிவைத்தே திட்டங்களும் சலுகைகளும் வாரியிறைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற தங்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு இருக்கும் என்று அம்மாநில ஆளும் கட்சிகளிடம் எதிர்ப்பார்ப்புகள் இருந்தன. ஆனால், அவை தவிடுபொடியாகியுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு எந்தப் புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.

அதேபோல, ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாயில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் பங்கு 41 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அதுவும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.1.4 லட்சம் கோடியில் பெருந்தொகை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு அளிக்கப்படுமே தவிர, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் புறக்கணிக்கப்படும் என்பதே கடந்த கால அனுபவம்.

அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு
சிவப்பு கம்பள வரவேற்பு

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், தரவு மையங்களை (Data center) இந்தியாவில் கட்டியமைக்கும் உலகளாவிய கிளவுட் சேவைகளை (Global Cloud Service) வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047-ஆம் ஆண்டு வரை வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் தங்களது தரவு மையங்களை அமைக்க விரும்பும் கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளையும் நிலம், மின்சாரம், நீர் போன்ற வளங்களை எளிதாக அணுகுவதற்கான ஏற்பாடுகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசின் ஆணையின் பேரிலே மோடி அரசு தரவு மையங்களுக்கு வரிச்சலுகையை அறிவித்திருக்கிறது.

இச்சலுகையால் இந்தியாவில் அதானி, டாடா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் இலாபமடைகின்றன. 2035-ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயங்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை (AI-ready data centers) அமைக்க 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாக அதானி குழுமம் அறிவித்திருப்பது இதனை உணர்த்துகிறது. மேலும், அமெரிக்க நிறுவனங்கள் அதானி, டாடா, பாரதி ஏர்டெல் நிறுவனங்களுடன் இணைந்தும் தரவு மையங்களை அமைக்கவிருப்பதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அதேபோல், நிதிநிலை அறிக்கையில், அணுமின் உற்பத்தித் திட்டங்களுக்குத் தேவைப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்குமான அடிப்படைச் சுங்க வரி விலக்கு 2035-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதும் அமெரிக்க-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல்களின் நலன்களிலிருந்தே ஆகும். “அமெரிக்க-இந்திய காம்பாக்ட்” திட்டத்தின் அடிப்படையில் இந்திய அணுசக்திதுறையை கார்ப்பரேட்மயமாக்குவதற்காகப் புதிய அணுசக்தி சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றியிருப்பதும், அணுசக்தித் துறையில் கால்பதிப்பதற்கான நடவடிக்கையில் அதானி ஈடுபட்டு வருவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அரிய வகைக் கனிமங்களைப் பிரித்தெடுத்து சுத்திகரிப்பதற்கான பிரத்தியேக வழித்தடங்கள் (Dedicated Rare Earth Corridors) அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்படும் அப்பட்டமான பயங்கரவாதமாகும்.

குறிப்பாக, உலகின் அரிய வகைக் கனிமவள இருப்பில் சீனா, பிரேசிலுக்கு அடுத்து 6.9 மில்லியன் டன் அளவுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அரிய வகைக் கனிம உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க முயற்சித்துவரும் அமெரிக்காவிற்கு அடிமை சேவகம் புரியும் நோக்கத்திலே மோடி அரசு இத்திட்டங்களை அறிவித்துள்ளது. அமெரிக்க-இந்திய காம்பாக்ட் திட்டத்திலும் அரிய வகைக் கனிமங்களை வெட்டியெடுப்பதற்கு கூட்டிணைவு திட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த அரிய வகைக் கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான ஒப்பந்தமும் சுரங்கத்துறையில் ஆதிக்கம் செலுத்திவரும் அதானி-அகர்வால் கும்பல்களுக்கே அடிமாட்டு விலைக்குத் தாரைவார்க்கப்படும்.

அதேபோல், மின்னணுப் பொருட்களின் இதயம் என்று அழைக்கப்படும் குறைக்கடத்திகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளையும் வாரி வழங்கியிருக்கிறது. நிதிநிலை அறிக்கையில் “இந்திய குறைக்கடத்தி மிஷன் 2.0” (India Semiconductor Mission 2.0) என்ற பெயரில் குறைக்கடத்திகள் உற்பத்திக்கு ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையும் குறைக்கடத்திகள் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் அதானி, டாடா கார்ப்பரேட்களின் சட்டைப் பையையே நிரப்பும்.

நாட்டை அடிமையாக்கும் மோடி அரசு

அமெரிக்க-இந்திய இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்பதற்காக இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு 50 சதவிகிதம் வரி விதித்தது உள்ளிட்டு பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்து வந்தது அமெரிக்க டிரம்ப் அரசு. அமெரிக்காவின் நெருக்கடிக்கு அடிபணிந்தே ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு மோடி அரசு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. அதாவது, நம் நாட்டின் நீர், நிலம், கனிம வளங்கள், மக்களின் உழைப்பை சூறையாடுவதற்குச் சலுகைகள் வாரியிறைத்து அமெரிக்க கார்ப்பரேட்டுகளை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது, மோடி அரசு.

மோடி அரசின் அமெரிக்க அடிமைத்தனத்தை மேலும் உறுதி செய்யும் விதமாக, பிப்ரவரி 20 அன்று டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் (AI Impact Summit) அமெரிக்கா தலைமையிலான “பேக்ஸ் சிலிக்கா” (Pax Silica) கூட்டணியில் இந்தியா 12-வது நாடாக இணைந்துள்ளது. இது குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புகள், அரிய வகைக் கனிமங்கள், முன்னேறிய உற்பத்திமுறைகள் மற்றும் தரவு உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட முன்னேறிய தொழில்நுட்பங்களுக்கான விநியோகச் சங்கிலியை அமெரிக்கா கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணியாகும்.

நாளுக்கு நாள் கார்ப்பரேட் சூறையாடலை தீவிரப்படுத்திவரும் பாசிச மோடி அரசு, அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு அடிபணிந்து முற்றுமுழுதாக நாட்டை அமெரிக்காவிற்கு அடகு வைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளதையே இவை எடுத்துக்காட்டுகின்றன. புதிய அணுசக்தி சட்டம், புதிய விதை மசோதா வரிசையில் அமெரிக்காவிற்கு அடிமை சேவை புரிவதற்காகவும், அம்பானி – அதானி கார்ப்பரேட் கும்பல் உண்டு கொழுப்பதற்காகவுமே இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்திய – அமெரிக்க ஒப்பந்தத்திற்கு எதிராகப் போராடும் விவசாயிகள், தங்களுடைய உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பாசிச மோடி அரசிற்கு எதிராக அணிதிரள வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து அந்நிய நாடுகளுடனான அடிமை ஒப்பந்தங்களையும் இரத்து செய்கின்ற – அம்பானி-அதானி கார்ப்பரேட்டுகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்கின்ற – உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்றுக் கட்டமைப்பை நோக்கி போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியுள்ளது.


அமீர்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க