தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியைக் கொள்ளையடிக்கும் எலான் மஸ்க்கும் வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையும்

எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸுக்காக பாதுகாப்பு நடைமுறைகள் தூக்கி எறியப்பட்டன. பங்குக் குறியீட்டுப் பட்டியலில் விரைவான சேர்க்கை என்பதை விதியாகவே சேர்க்கும்படி நாஸ்டாக் போன்ற பங்குச்சந்தை குறியீட்டு நிறுவனங்களுக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிர்ப்பந்தம் கொடுத்ததாக மார்ச் 26 அன்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.

ஜூன் 12, 2026 அன்று எலான் மஸ்க்கினுடைய “ஸ்பேஸ்எக்ஸ்” (SpaceX) நிறுவனப் பங்குகள் நாஸ்டாக் பங்குச் சந்தை வர்த்தகத்தைத் தொடங்கும் போதே, அதற்கான பொறி (Trap) ஏற்கெனவே தயார் நிலையில் அமைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் கோடிக் கணக்கான தொழிலாளர்கள் வால் ஸ்ட்ரீட் பங்கு பட்டியல்களை பின்பற்றும் 401-k, IRA (individual retirement account) எனப்படும் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளைக் கொண்டுள்ளனர். (401-k தொழிலாளர் ஊதியத்திலிருந்து ஒரு தொகையை பிடித்தம் செய்து அந்த நிறுவனம் ஒரு தொகையை சேர்த்து ஓய்வுக்குப் பின் ஒப்படைக்கும் முறை.) வால் ஸ்ட்ரீட்டின் அந்த பங்கு குறியீட்டு நிறுவனங்கள் வால் நாஸ்டாக்-100, ரஸ்ஸல்-1000, எஸ்&பி-500 என்று அழைக்கப்படுகின்றன.

புதிதாக ஒரு நிறுவனம் இக்குறியீட்டுப் பட்டியல் ஏதேனும் ஒன்றில் சேர்க்கப்பட்டவுடன், அதன் பங்குகளை இந்த வருங்கால வைப்பு நிதி தானாகவே, அதாவது தானியங்கியாக முன்வந்து, வாங்கிக் கொள்கின்றன. பங்கின் விலை நியாயமானதா, நிறுவனத்தின் உண்மையான இலாபத் திறன் என்ன என்பதைப்பற்றி அவை எந்தக் கேள்வியும் எழுப்புவதில்லை. அப்பணத்தின் உண்மையான உரிமையாளர்களான தொழிலாளர்களிடம் ஒப்புதல் எதுவும் கேட்பதில்லை. (இதுவே அந்த மோசடி ஏற்பாட்டுப் பொறி).

தொழிலாளர்கள் ஏற்கெனவே உழைத்து ஈட்டியிருந்தும், வருங்கால ஓய்வூதியத்திற்காகவென்று சேமித்து வைக்கப்பட்டிருந்த ஊதியத்தை, அவர்களது ஒப்புதல் இல்லாமலே எலான் மஸ்க்கின் நிறுவனப் பங்குகளை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அப்போது ஸ்பேஸ் – எக்ஸ் நிறுவனம் பெரும் நட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருந்தது. இருந்தபோதிலும், அதை உடனடி எதிர்காலத்தில் மாபெரும் வெற்றியைப் பெறப்போகும் நிறுவனமாக வால் ஸ்ட்ரீட் மதிப்பிட்டது. அதன் பங்கின் விலை வலிந்து உயர்த்தி வைக்கப்பட்டது. அந்த மதிப்பீட்டை உயர்த்தி நிலைநிறுத்த வேண்டுமென்றால் எலான் மஸ்கிற்கு அப்பங்குகளைத் தொடர்ந்து வாங்கும் முதலீட்டாளர்கள் தேவைப்பட்டனர். அந்த முதலீட்டாளர்களை சப்ளை செய்தது தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதிதான்.

விண்ணில் ஏவும் ராக்கெட்டுகள், எலான் மஸ்க்கின் இணைய சேவையகமான ஸ்டார்லிங்க், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி வளையத்தில் தரவு மையங்களை நிறுவும் திட்டங்கள் போன்ற எலான் மஸ்க்கின் எதிர்காலக் கனவுகள்தான் முதலீட்டாளர்களைக் கவரும் கதைகளாகப் பரப்பப்பட்டன. மேலும் xAI எனப்படும் முன்னேறிய செயற்கை நுண்ணறிவு பற்றிய எதிர்கால ஆய்வு முயற்சிகளும், ஊகக்கனவுகளும் இத்துடன் இணைக்கப்பட்டது. அது இன்னும் வெற்றியடைந்து நடைமுறையில் இலாபத்தைக் காட்டாத ஊக முதலீட்டுத் துறை என்றபோதிலும் தொழிலாளர்களின் வைப்பு நிதிப் பணம் அவற்றுடன் பிணைக்கப்பட்டது.

நடைமுறையில் இலாபம் காட்டாத நிலையில் வால் ஸ்ட்ரீட் இதை “செயலற்ற முதலீடு” (Passive Investing) என்று அழைக்கிறது. ஆனால் தொழிலாளர்களைப் பொருத்த வரையில் இது, அவர்களின் வருங்கால வைப்பு நிதியை நிர்ப்பந்தப்படுத்தி முதலீடு செய்ய வைக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

மஸ்க்கிற்காக விதிகள் திருத்தி எழுதப்பட்டன:

வால் ஸ்ட்ரீட்டின் முதலீட்டுக் குறியீட்டுப் பட்டியல்களை (Stock Index) நிர்ணயிப்பது அதாவது எந்த நிறுவனத்தை பட்டியலில் சேர்ப்பது என்பது பற்றிய முடிவெடுப்பது நாஸ்டாக், FTSE ரஸ்ஸல், எஸ்&பி, டவ் ஜோன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களேயாகும். தனியார் நிறுவனங்களின் இம்முடிவுகள் டிரில்லியன் டாலர் முதலீட்டு நிதிகளின் போக்கைத் தீர்மானிக்க கூடியவை.

இதற்கு முன்பு புதிதாகப் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் முக்கியக் குறியீட்டுப் பட்டியல்களில் சேர்வதற்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இதன் மூலம், முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்தின் மதிப்பைச் சோதித்துப் பார்க்க கால அவகாசம் கிடைத்தது. அதன் பிறகே ஓய்வூதிய நிதிகள் அந்தப் பங்குகளுக்குள் செலுத்தப்பட்டன. சில பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

ஆனால் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸுக்காக இந்தப் பாதுகாப்பு நடைமுறைகள் தூக்கி எறியப்பட்டன. பங்குக் குறியீட்டுப் பட்டியலில் விரைவான சேர்க்கை என்பதை விதியாகவே சேர்க்கும்படி நாஸ்டாக் போன்ற பங்குச்சந்தை குறியீட்டு நிறுவனங்களுக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிர்ப்பந்தம் கொடுத்ததாக மார்ச் 26 அன்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது கவனத்துக்குறியதாகும்.

அவ்வாறே நாஸ்டாக் தம் பழைய விதிமுறைகளை மாற்றி 15 நாட்களில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நாஸ்டாக் – 100 பட்டியலில் சேர்த்தது. அதேபோன்ற இன்னொரு நிறுவனமான FTSe ரஸ்ஸல் ஐந்தே நாட்களில் தனது ரஸ்ஸல் – 1000 பட்டியலில் சேர்த்து விட்டது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது மொத்த பங்குகளில் மிகச் சிறியதான 4% பங்குகளை மட்டுமே பொதுச் சந்தையில் வெளியிட்டிருந்தது. அதன் மூலம் சந்தையில் மிகக் குறைவான பங்குகளே கிடைக்கும்படி செய்தது. ஆனால் மாற்றப்பட்டிருந்த புதிய விதிகளின்படி பெருந்தொகையான வருங்கால வைப்பு நிதி அப்பங்குகளை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குறைவான பங்குகளை நோக்கி பெரும் முதலீட்டுப் பணம் பாய்ந்ததால், பங்கு விலை மேலும் மேலும் உயர்ந்தது.

எஸ்&பி – 500 மட்டும் தனது விதிகளைத் மாற்றி அமைக்க மறுத்துவிட்டது. பட்டியலில் சேர்க்கப்படும் நிறுவனம் லாபம் ஈட்டுவதாக இருக்க வேண்டும், அதைப் பற்றி முதலீட்டாளர்கள் புரிந்து கொள்வதற்கு குறிப்பிட்ட காலம் வெளியில் காத்திருக்க வேண்டும், மேலும் பலரும் வாங்கும் வகையில் போதுமான பங்குகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்கிற தனது பழைய அடிப்படை விதிகளில் ஊன்றி நின்றது.

எஸ்&பி டௌ ஜோன்ஸ் அவ்வாறு தனது விதிகளைப் பற்றி நின்றது தன் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை பாதுகாத்துக் கொள்ளவே அன்றி தொழிலாளர்களின் ஓய்வூதியத்தின்பால் அக்கறை பட்டதனால் அல்ல.

நாஸ்டாக் மற்றும் ரஸ்ஸல் நிறுவனங்கள் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தன. உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கிற்குச் சேவை செய்வதற்கேற்ப அவை தங்கள் விதிகளை மாற்றிக் கொண்டன.

நிரூபிக்கப்பட்ட வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தை மோசடி:

வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தைக்கு இந்த மோசடி உத்தி ஒன்றும் புதியதல்ல. இதே உத்தியை ஏற்கெனவே பயன்படுத்தி இருக்கிறது. இந்த மோசடி உத்தி வேலை செய்யும் முறையைப் பரிசீலிப்போம்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு வால் ஸ்ட்ரீட் குறியீட்டுப் பட்டியல் ஒன்றில் சேர்க்கப்படவிருக்கிறது என்றால் அதற்கான தகவல் வெளியாகிய உடனே ‘பெரிய முதலீட்டாளர்கள்’ அந்தப் பங்குகளை முன்கூட்டியே பதிவு செய்து வாங்கிவிடுகின்றனர். ஏனெனில் ‘கட்டாயம்’ வருங்கால வைப்பு நிதிகள் உடனடியாக இப்பங்குகளை வாங்க முன்வரும் என்பதை அவர்கள் அறிவார்கள். ‘கட்டாயமாக வாங்க வேண்டிய’ இந்த நிலைமை பங்குகளின் விலையை உயர்த்தி விடுகின்றன.

இத்தருணத்திற்காக காத்திருக்கும் முந்திய முதலீட்டாளர்கள் உடனடியாக பங்குகளை விற்பனை செய்து விட்டு லாபத்துடன் வெளியேறி விடுகின்றனர். இப்போது தொழிலாளர் வைப்பு நிதி உயர்ந்த விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுவிடுகிறது. அதாவது சந்தையில் ஊதிப் பெருக்கிய விலை (Inflated price) கொடுத்து வாங்கப்படுகிறது. பின்னர் தவிர்க்க முடியாமல் பங்கின் விலை சரிய, இழப்பும் நட்டமும் வைப்பு நிதிகளின் மீது விழுகிறது. இதுவே எலான் மஸ்கின் மோசடி.

(இவ்வாறு இலாபம் தனியாருக்குச் சொந்தமாகிறது; இழப்பு சமூகமயமாக்கப்படுகிறது. இதுவே பங்குச்சந்தை நிதி மூலதனத்தின் செயல்முறையாகும் – மொர்)

ஹார்வேர்ட் வணிகப் பள்ளியில் (Harvard Business School) 2025-இல் மேக்ரோ சம்மான் மற்றும் கிறிஸ் முர்ரே ஆகியோர் மேற்கொண்ட ஆய்வு இந்த வகை வணிகத்தில் இதுவரை எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. இது நாள் வரையிலும் இதற்கு முந்திய வழக்குகளில் இதேபோன்ற மோசடியில் ’கட்டாய‘ வாங்குதலின் மூலமாக 15% தொகை கூடுதலாக தரப்பட்டுள்ளது. கடந்த 2017 முதல் 2023 வரையிலான காலத்தில் வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையிலிருந்து 5.8 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை இந்த மோசடி ஊக வாணிகப் பேர்வழிகளுக்கு எடுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இப்போது ஸ்பேஸ் எக்ஸ் இந்த மோசடியை இன்னொரு உயர்ந்த தளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

தொழிலாளர்கள் எப்படி தங்கள் வருங்கால வைப்பு நிதியை இழந்தனர்?

தொழிலாளர்கள் ஓய்வு பெறுவதற்கு பங்குச்சந்தையில் சூதாட வேண்டிய தேவை எப்போதும் இருந்ததில்லை. தொழிலாளர் இயக்கங்கள் உத்தரவாதமான ஓய்வூதியத்தை வெகுவாக போராடி வென்றுள்ளனர். அந்த ஓய்வூதியம் வரையறுக்கப்பட்ட பணப்பலன் (defined benefit pension) என்று அழைக்கப்பட்டது. இந்த ஓய்வூதியத்தில் அவரது எதிர்காலத்துக்கான பணப்பலன் மாதாந்திரம் உறுதி செய்யப்பட்டு விடுகிறது.

அத்தொகை முறையான மற்றும் சீரான அவரது ஆண்டு கணக்கிலான வேலையுடன் பிணைக்கப்பட்டது. மாறாக அன்றாடம் உயர்ந்தும் தாழ்ந்தும் என்று எப்போதும் தாறுமாறாக ஊசலாடும் வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையுடன் பிணைக்கப்பட்டிருக்கவில்லை. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது மாதாந்திர ஊதியத்திலிருந்து ஓய்வூதியத்திற்காக என்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஊதியமாகும், மற்றும் அவரது வேலையின் மாதாந்திர ஊதிய பட்டியலுடன் இணைக்கப்பட்டதாகும்.

தனியார் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் ஓய்வூதியத்திற்கும் ஒன்றிய அரசின் ஓய்வூதிய காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் சட்டப் (ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்திய வருவாய் பாதுகாப்பு சட்டம் 1974) பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு தனியார் நிறுவனம் வருங்கால வைப்பு நிதியை முறையாக செலுத்த தவறினாலோ அல்லது நிறுவனமே திவாலாகி போனாலும் ஓய்வூதியத்திற்கு சட்டபூர்வமான பாதுகாப்பு உண்டு.

தனியார் கார்ப்பரேட் நிறுவனத் தலைவர்கள் அந்த கடப்பாட்டில் இருந்து விடுபட விரும்பினார்கள்.

401(k) என்கிற புதிய ஓய்வூதிய திட்டம் அதற்கான வழியை திறந்து விட்டது. 1978 ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு பின்பு 1981 இல் வருவாய்த்துறை விதிகளின் கீழ் தாராளமயமாக்கப்பட்ட 401(k) திட்டமானது உத்திரவாதம் அளிக்கப்பட்ட ஓய்வூதியத்தில் இருந்து அந்தந்தத் தனி நபர் கணக்காக (IRA – individual retirement account) மாற்றி அமைக்கப்பட்டது.

இதன் மூலம், முதலாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மாதா மாதம் பணம் செலுத்துவதாக உறுதியளிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. தொழிலாளர்கள் பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட கணக்குகளை தொடங்க நெட்டி தள்ளப்பட்டனர். இப்போது 401 (k) என்பது ஓய்வூதியத் திட்டமல்ல. அது பிற வங்கிக் கணக்குகள் போல ஒரு கணக்கு மட்டுமே. இக்கணக்கிற்கு தானியங்கி முறையில் வந்து சேரும் தொகை அதேபோன்று தானாகவே பங்குச்சந்தை முதலீடாக மாறும். ஓய்வூதியத்தின் உத்தரவாதம் மாயமாகிவிட்டது. இனி இக்கணக்கின் இருப்புத் தொகையை பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கமே தீர்மானிக்கும்.

இவ்வாறு தான் பங்குச் சந்தை முதலீடு என்பது பெரும்பாலான தொழிலாளர்களின் தேர்வாக மாறியது. ‘இச்சிறப்பு’ திட்டத்தின் மூலம் கணிசமான பங்குகளை வாங்க முடிந்தது. மிகக் குறைந்த சேவை கட்டணம். தனித்தனி பங்குகளாக பார்த்து பார்த்து வாங்க வேண்டிய தேவையில்லாமல் போனது. 2026-இல் அமெரிக்க தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இவ்வாறான பங்குச் சந்தை கணக்குகளோடு எதிர்காலத்தைப் பிணைத்துக் கொண்டனர்.

கோடிக்கணக்கான இக்கணக்குகளில் குவிந்திருக்கும் டிரில்லியன் கணக்கானப் பெருந்தொகையை இப்போது பிளாக் ராக், வேன் கார்ட் மற்றும் ஸ்டேட் ஸ்ட்ரீட் ஆகிய தனியார் பங்குச் சந்தைப் பெருநிறுவனங்கள் தம் விருப்பம் போல் பங்குச் சந்தையில் சூதாடிப் பராமரித்து வருகின்றன. அந்தப் பணத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனப் பங்குகளில் எலான் மஸ்க் நிர்ணயித்த விலையில் முதலீடு செய்ய வழி செய்யும் வகையிலான விதிகளை வகுக்கக் கோரியபோது அவர்களும் அதைச் செயல்படுத்தினார்கள்.

இதற்கான மசோதா பின்னர் வரும்:

வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையை இயக்கும் ஊதிப் பெருக்கப்பட்ட அதே குமிழியுடன் தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் பிணைக்கப்பட்டு இருக்கிறது. அதன் செயற்கை நுண்ணறிவு, ஸ்டார்லிங்க் மற்றும் எதிர்கால விண்வெளி திட்டங்கள் ஆகியன பெரிய லாபங்களை ஈட்டி தரும் என்று எலான் மஸ்க் கொடுக்கும் வாக்குறுதியே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனப் பங்கின் விலையை நியாயப்படுத்துவதற்கு உள்ள ஒரே அம்சமாகும். வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தை அந்த வாக்குறுதியின் பேரில் ஏற்கெனவே தொழிலாளர்களின் வைப்பு நிதியை வாரிச்சுருட்டி விட்டது. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, இதுவரை லாபத்தை கண்ணிலும் காட்டாத வெற்று வாக்குறுதிகளின் அடிப்படையில் ஸ்பேஸ் எக்ஸ் பங்குகளில் கொட்டப்பட்டு விட்டது.

ஸ்பேஸ் எக்ஸ் என்பது ஒரு சோதனைக் களம் மட்டுமே. எலான் மஸ்க்கின் ஓபன் ஏ.ஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஆகிய நிறுவனங்கள் வரிசையில் நிற்கின்றன. இவற்றின் புதிய பங்குகளும் இதே வலைப்பின்னல் மற்றும் இதே வழிமுறையை பயன்படுத்தி விற்கப்படலாம். அதாவது ஒரு கம்பெனியை வானளாவப் புகழ்ந்து ஒரு பிம்பத்தை உருவாக்குவது, அடிப்படை சட்டதிட்டங்களை மாற்றுவது தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகையைக் கட்டாயப்படுத்தி உள்ளிழுப்பது, பிறகு பங்கின் விலை சரிந்தால் நட்டத்தை தொழிலாளர்கள் தலையில் ஏற்றி விடுவது. இதுவே எலான் மஸ் பின்பற்றும் வழிமுறை. இந்தச் சுழற்சி மீண்டும் நிகழக்கூடும்.

குமிழி மென்மேலும் பெருத்து கொண்டே போனால் லாபமடைவது எலான் மஸ்க், வங்கிகள் மற்றும் ஆரம்பத்தில் பங்குகள் வாங்கிய முதலீட்டாளர்கள் ஆகியோரே. குமிழி உடைந்து போனால் நட்டத்தில் வீழ்பவர்கள் 401(k) ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள வாகன ஓட்டுனர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், கடைகள் மற்றும் சரக்கு குடோன்களில் வேலை செய்யும் பல லட்சக்கணக்கானத் தொழிலாளர்கள் ஆகியோரே. தொழிலாளர்கள் யாரும் பேராசை கொண்டு தங்கள் வருங்கால வைப்பு நிதியைச் சுமந்து கொண்டு எலான் மஸ்க்கை தேடிப் போகவில்லை. கார்ப்பரேட் முதலாளி வர்க்கமும் நிதி ஆதிக்கக் கும்பலும் சேர்ந்து கொண்டுதான் தொழிலாளர்களை பங்குச்சந்தைப் புதைகுழிக்குள் இழுத்து விட்டனர்.

நன்றி: mronline.org

(சற்றே சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்புக் கட்டுரை)


தமிழில்: வானுறை சம்பத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க