நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை இன்றும் இந்தியாவில் நீடிக்கிறது. இது வெறும் சமூகப் பிரச்சனை மட்டுமல்ல; இது நமக்கும், வளர்ந்த பொருளாதாரம் என்று கூறிக்கொள்பவர்களுக்கும் ஒரு தேசிய அவமானமாகும். எந்தவொரு நாகரிக சமூகத்திலும், இத்தகைய நிகழ்வுகள் அந்தச் சமூகத்தின் விழிப்புணர்வு குறித்துப் பலத்த கேள்விகளை எழுப்புகின்றன. ஒரு மனிதன் வெறும் பிழைப்புக்காக சாக்கடை அல்லது மலக்குழிக்குள் இறங்கி உயிரிழக்கும் போது, நாம் போற்றும் நாகரிகம் எங்கே மறைந்து போகிறது? இதுவே இங்கு எழும் கேள்வி.
வாழ வேண்டும் என்பதற்காக, பிறர் கழிவுகளைச் சுத்தம் செய்வது – மரணத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுப்பது போன்றவற்றிற்கு ஒரு மனிதனை தள்ளுவதானது மனிதாபிமானமற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான செயலாகும். “தலித் ஆதிவாசி சக்தி அதிகார் மஞ்ச்” அமைப்பின் தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியின் போது 116 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; 2025-இல் இந்த எண்ணிக்கை 158-ஆக உயர்ந்துள்ளது. இதன் பொருள், நம் நாட்டில் ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கும் ஒருமுறை, பாதாள சாக்கடை அல்லது மலக்குழி சுத்தம் செய்யும் போது ஒரு மனிதன் இறக்கிறான். இவை அனைத்தும் தொடர்வதற்கு காரணம் – சமூகத்தின் அலட்சியம், நிர்வாகம் மற்றும் அரசியல்வாதிகளின் அக்கறையின்மையே ஆகும். மத்திய அரசு மாநிலங்களவையில் வழங்கிய தகவலின்படி, 2021 முதல் 2025 வரை 315 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா 53 மரணங்களுடன் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து ஹரியானா (43), தமிழ்நாடு (38), உத்தரப்பிரதேசம் (35), டெல்லி (26), குஜராத் (25) மற்றும் ராஜஸ்தான் (24) ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஆனால், இந்தத் தரவுகளைக் கூட நம்புவது கடினம், ஏனெனில் உண்மையில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகம். கிராமப்புறங்களிலும், தொலைதூரப் பகுதிகளிலும், ஒப்பந்ததாரர்களின் அழுத்தத்தின் காரணமாக, நிகழும் எண்ணற்ற மரணங்கள் ஒருபோதும் பதிவு செய்யப்படுவதில்லை.
தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் (NCSK) தரவுகளின்படி, 1993 முதல் ஜூன் 2025 வரை மொத்தம் 1,313 சாக்கடை மற்றும் மலக்குழி மரணங்கள் பதிவாகியுள்ளன. அதாவது இந்தத் தடை செய்யப்பட்ட நடைமுறையினால் ஆண்டுக்குச் சராசரியாக 41 உயிர்கள் இறக்கின்றன. “சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன்” அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பெஸ்வாடா வில்சன், பல மரணங்கள் அறிக்கையில் இல்லாததால், இந்த எண்ணிக்கை உண்மையை விட மிகக் குறைவு என்று கூறுகிறார். டெல்லியில், 2025 ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன, ஆறாவது மரணம் செப்டம்பரில் நிகழ்ந்தது. 2024 முழுவதிலும் டெல்லியில் ஏழு மரணங்கள் பதிவாகின. மனிதக் கழிவுகளை அகற்றும் பணிகளால் ஏற்படும் மரணங்களில் டெல்லி இப்போது நாட்டின் மோசமான நிலையில் உள்ளது; மேலும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்குக் கூட இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. தலைநகரின் நிலையே இதுவென்றால், நாட்டின் பிற பகுதிகள் எதை அனுபவித்துக் கொண்டிருக்கும் என்று நினைத்தாலே ஈரக்குலை நடுக்கம் ஏற்படுகிறது.
இந்தத் துயரத்தின் வேரைக் கண்டறிய நாம் மிக ஆழமாகத் தேட வேண்டிய அவசியமில்லை. இந்தியாவின் மக்கள் தொகையில் தலித்துகள் 16 சதவிகிதம் மட்டுமே என்றாலும், மனிதக் கழிவுகளை அகற்றுபவர்களில் 97 சதவிகிதம் பேர் தலித்துகள். இது தற்செயலானது அல்ல; இது ஆயிரக்கணக்கான ஆண்டுகால சாதி அமைப்பின் விளைவு. குறிப்பிட்ட சில மனிதர்கள் கழிவுகளைச் சுத்தம் செய்வதற்காகவே பிறந்தவர்கள் என்று தீர்மானித்த இந்த கட்டமைப்பில் சில சட்டங்கள் மாறியிருந்தாலும் சாதிய மனநிலை மாறவில்லை. நாடாளுமன்றத்தில், இந்தப் பணி சாதி அடிப்படையிலானது அல்ல, தொழில் அடிப்படையிலானது என்றும், இறந்த தொழிலாளர்களின் சாதி வாரியான தரவுகள் பராமரிக்கப்படுவதில்லை என்றும் அரசாங்கம் கூறுகிறது. ஒரு பக்கம் இப்பணியைச் செய்பவர்களில் 97 சதவிகிதம் பேர் தலித்துகள், மறுபக்கம் இது சாதி சார்ந்தது அல்ல என்று அரசாங்கம் கூறுகிறது. இந்த முரண்பாடு எவ்வளவு ஆழமானது என சிந்தித்துப் பாருங்கள்.
இப்போது சட்டத்தைப் பார்ப்போம். 1993-இல், மனிதக் கழிவுகளை அகற்றுவதைத் தடை செய்யும் முதல் சட்டம் வந்தது – அது காகிதத்திலேயே நின்றது. 2013-இல், இரண்டாவது சட்டமான “மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வுச் சட்டம்” வந்தது. 2014 மார்ச் 27 அன்று உச்சநீதிமன்றம், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி எவரையும் சாக்கடைக்குள் இறக்குவது தண்டனைக்குரிய குற்றம் என்றும், அதற்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டது. 2023 அக்டோபரில், இழப்பீட்டுத் தொகையை 10 லட்சத்திலிருந்து 30 லட்சமாக உயர்த்தி நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. 2025 ஜனவரியில், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு முக்கிய நகரங்களில் மனிதர்கள் மூலம் சாக்கடையை சுத்தம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் முழுமையான தடையை விதித்ததுடன், பிப்ரவரிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று நகராட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டது. ஆனால், அத்தகைய நடவடிக்கை எதுவும் பின்பற்றப்படவில்லை.
சட்டங்கள் வருகின்றன, உத்தரவுகள் வருகின்றன, இழப்பீடுகள் அதிகரிக்கின்றன – ஆனால் மரணங்கள் நின்றபாடில்லை. இது காயத்தைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக, தொடர்ந்து கட்டுகளை மாற்றுவதைப் போன்றது.
“மாநிலங்களில் மனிதக் கழிவுகளை அகற்றும் நிகழ்வுகள் எதுவும் காணப்படவில்லை” என்றும், “மனிதக் கழிவுகளை அகற்றுவதால் மரணங்கள் ஏதும் ஏற்படவில்லை” என்றும் மோடி அரசாங்கம் 2025 ஜூன் 29 அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், அதே நேரத்தில், தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் (NCSK) தரவுகள் மரணங்கள் தொடர்வதைக் காட்டுகின்றன. ஒரு பக்கம் பிணங்கள் கிடைக்கின்றன; மறுபக்கம் மரணங்களே இல்லை என்று மோடி அரசாங்கம் சொல்கிறது. இந்த வேடத்தை என்னவென்று அழைப்பது?
பொறுப்பிலிருந்து நழுவுவதற்காக, “மனிதக் கழிவுகளை அகற்றுதல்” மற்றும் “அபாயகரமான சாக்கடை சுத்திகரிப்பு” என அரசாங்கம் ஒரு செயற்கையான வேறுபாட்டை உருவாக்குகிறது. ஒரு தொழிலாளி இறக்கும் போது, அந்த மரணம் ஒரு விபத்து என கூறுகின்றனர். இந்த அதிகாரப்பூர்வ மொழி விளையாட்டு மனித உயிர்களோடு விளையாடுகிறது. இந்தியாவின் ‘டிஜிட்டல் இந்தியா’ ஒரு பக்கம், சந்திரயான் நிலவில் இறங்குகிறது; மறுபக்கம் இருண்ட சாக்கடைக்குள் நச்சு வாயுக்களால் மக்கள் மூச்சுத்திணறி இறக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய முரண்பாடு.
படிக்க: “எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”: மலக்குழி மரணங்களுக்கு எதிரான போராட்டம்
2023 ஜூலையில் தொடங்கப்பட்ட “நமஸ்தே” (NAMASTE) திட்டத்தின் கீழ், 2025 ஆகஸ்ட் மாதத்திற்குள் 85,819 சாக்கடை மற்றும் மலக்குழித் தொழிலாளர்கள் டிஜிட்டல் பதிவு செய்யப்பட்டனர். 76,736 தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன; மேலும் 60,586 தொழிலாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்பட்டன என மோடி அரசு தெரிவிக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் நிம்மதி அளிப்பது போல் தோன்றினாலும், களத்தில் கையால் மலம் அள்ளும் அதே அவலநிலைதான் தொடர்கிறது.
தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்திற்கு கடந்த ஆண்டு ஊதியம் வழங்காதது, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது மற்றும் சாதி ரீதியான பாகுபாடு குறித்து 842 புகார்கள் வந்தன (பதிவான புகார்கள் மட்டும்) – அந்தப் புகார்களில் 130 உத்தரப்பிரதேசத்திலிருந்து மட்டும் வந்தவை. இவ்வளவு நடந்தும், அரசாங்கம் எல்லாம் சரியாக இருப்பதாகச் சொல்கிறது.
இதில் மிகவும் ஆத்திரமூட்டும் விசயம் என்னவென்றால், மனிதக் கழிவுகளை மனிதர்களையே சுத்தம் செய்ய வைக்கும் கொடுமைக்கு முற்றிலுமாக தண்டனை இல்லாததுதான். பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஒரு தொழிலாளியைச் சாக்கடைக்குள் இறக்குவது தண்டனைக்குரிய குற்றம் என்று 2013 சட்டம் தெளிவாகக் கூறுகிறது. இருப்பினும், நச்சு வாயுவில் ஒரு தொழிலாளியைச் சாகவிட்ட ஒரு ஒப்பந்ததாரர் கூட இதுவரை குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளவில்லை. தூய்மைப் பணியாளர்களைக் கடன் வாங்கி இயந்திரங்களை வாங்குமாறு அரசாங்கம் கேட்கிறது – இது அவர்களை இயந்திரங்களுடன் அதே வேலையிலேயே கட்டிப் போடுகிறது. “இயந்திரங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும். அவற்றை வழங்காதது நவீன காலத் தீண்டாமை.” இதனை நிர்வாக அலட்சியம் என்று மட்டும் சொல்ல முடியாது – இதனை நிர்வாகக் கூட்டுச்சதி என்றுதான் அழைக்க வேண்டும்.
தமிழ்நாடு, சில நகரங்களில் “பண்டிகூட்” (Bandicoot) என்ற ரோபோ கருவியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது; ஐ.ஐ.டி. மெட்ராஸ் சாக்கடை சுத்தம் செய்யும் ரோபோவை உருவாக்கியுள்ளது; கேரளா, தொழிலாளர்களுக்கு இயந்திரங்களை இயக்கப் பயிற்சி அளித்து வருகிறது. இந்தச் சிறிய முயற்சிகள் நம்பிக்கையின் கதிர்கள். “நமஸ்தே” திட்டம் சாக்கடை ஜெட்டிங் இயந்திரங்கள், உறிஞ்சும் இயந்திரங்கள் மற்றும் ரோபோ உபகரணங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தி, தொழிலாளர்களை இயந்திர இயக்குநர்களாகப் பயிற்றுவிக்கிறது – இதை வெறும் பாதுகாப்போடு மட்டும் இணைக்காமல் சமூக கண்ணியத்தோடும் இணைக்கிறது. ஆனால், இது போதாது. மரணங்கள் நிகழும் விகிதத்துடன் ஒப்பிடும்போது, இயந்திரமயமாக்கல் ஆமை வேகத்திலேயே உள்ளது.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஒருமுறை கூறினார்: “நமது போராட்டம் செல்வத்திற்காக அல்ல, மனித கண்ணியத்திற்காக.” அந்த வார்த்தைகளை இன்று உச்சரிப்பது வெட்கத்தை அளிக்கிறது. ஏனெனில், ‘சுதந்திரம்’ அடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த கண்ணியம் இன்னும் வழங்கப்படவில்லை. எல்லையில் வீரமரணம் அடைந்த ஒரு வீரருக்கு நாடே அஞ்சலி செலுத்துகிறது. ஆனால், சாக்கடையில் உயிரை இழந்த அந்தப் பெயரற்ற தொழிலாளியின் பெயரை யார் உச்சரிக்கிறார்கள்? போர்வீரன் நாட்டின் எல்லைகளைக் காக்கிறான்; தூய்மைப் பணியாளன் நம் நகரங்களை நோய்களிலிருந்து காக்கிறான். ஒருவருக்கு மேம்பட்ட ஆயுதங்கள் கிடைக்கின்றன; மற்றவருக்கு வெறும் கைகள் மட்டுமே – இதுதான் நமது நாகரிகமா?
உழைப்பின் கண்ணியம் பேச்சுகளில் மட்டும் இருக்கக்கூடாது – அது தரை மட்டத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். குற்றவாளியான ஒவ்வொரு ஒப்பந்ததாரரும் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டும், இறந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் உரிய நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு சாக்கடைக்குள்ளும் மனிதனுக்குப் பதிலாக இயந்திரமே இறங்க வேண்டும் – இல்லையெனில், இந்தத் தேசத்தின் காயங்கள் ஆறாமல் அப்படியே திறந்தே இருக்கும்.
மூலக் கட்டுரை: ஃப்ரீ வாய்ஸ்
![]()
மொழிபெயர்ப்பாளர்: அஜிதா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads












