கடந்த மார்ச் 25 அன்று டெல்லியின் ஜந்தர் மந்தரில் கழிவு நீர் கால்வாய் மற்றும் மலக்குழிகளை சுத்தம் செய்வதால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க வலியுறுத்தி “எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்” என்ற முழக்கத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைகளால் மனித மலத்தை அகற்றுகின்ற சமூக அநீதியை முற்றிலுமாக ஒழிப்பதற்காகப் போராடி வருகின்ற “சஃபாய் கர்மச்சாரி அந்தோலன்” (SKA – Safai Karmachari Andolan) என்ற அமைப்பு இப்போராட்டத்தை ஒருங்கிணைத்தது. இதில் இந்தியா முழுவதிலிமிருந்து 10 மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், மலக்குழியில் தங்களது உறவினர்களை பறிகொடுத்தவர்களும் பங்கெடுத்துக் கொண்டனர்.
புது டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகில் கூடிய தூய்மைப் பணியாளர்கள், “எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”, “சாக்கடைகளிலும், மலக்குழிகளிலும் ஏற்படுகின்ற மரணங்களை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்”, “பிரதமரே, நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்” போன்ற முழக்கங்களை முன்வைத்துப் போராடினர்.
போராட்டத்தில் பங்கேற்ற எஸ்.கே.ஏ. அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் ரமோன் மக்சேசே விருது பெற்றவருமான பெஸ்வாடா வில்சன், “இந்த ஆண்டு ஏற்கெனவே 41 பேர் கழிவுநீர்க் கால்வாய்களில் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், எங்கள் உயிர்களுக்கும் மரணங்களுக்கும் எந்த மதிப்பும் இல்லாதது போல அரசாங்கம் மௌனம் காக்கிறது. சாதிய மனப்பான்மையின் காரணமாக, எங்கள் மக்கள் இந்த மரணப் பொறிகளுக்குள் தள்ளப்படுகிறார்கள். மனிதர்களைக் கழிவுநீர்க் கால்வாய்களுக்குள் அனுப்புவதைச் சட்டம் தெளிவாகத் தடை செய்திருந்த போதிலும், இந்தக் கொலைகளுக்காக இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை.” என்று இந்த அரசாலும் சாதியக் கட்டமைப்பாலும் தலித் மக்கள் மலக்குழிக்குள் இருத்தப்படுவதை அம்பலப்படுத்திப் பேசினார்.
“அரசு ஏன் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுகிறது?” என்று கேள்வி எழுப்பிய எஸ்.கே.ஏ. அமைப்பின் தலைவர் தீப்தி சுகுமார், “2025-இல், எஸ்.கே.ஏ. 121 உயிரிழப்புகளைப் பதிவு செய்தது; ஆனால், அரசு 46 உயிரிழப்புகள் என்று அறிவித்தது. 2024-இல், எஸ்.கே.ஏ. 116 உயிரிழப்புகளைக் கணக்கிட்டது; ஆனால், அரசு 55 உயிரிழப்புகள் என அறிவித்தது. விடுபட்ட எண்கள் எங்கே? நாடாளுமன்றத்தில் உண்மையைச் சொல்ல வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார். எஸ்.கே.ஏ. அமைப்பின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும், அரசாங்கமும் உள்ளாட்சி நிர்வாகங்களும் தொடர்ந்து சாதி அடிப்படையிலான பாகுபாட்டுடன் செயல்படுவதை அம்பலப்படுத்திப் பேசினர்.
படிக்க: ‘டிஜிட்டல் இந்தியா’வில் தொடரும் மலக்குழி மரணங்கள்!
போராட்டத்திற்குப் பிறகு எஸ்.கே.ஏ. தங்களுடைய கோரிக்கைகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்து அவற்றை நிறைவேற்ற வலியுறுத்தியது. அவற்றில் முக்கிய கோரிக்கைகள் பின்வருவன,
- கழிவுநீர் மற்றும் மலக்குழி மரணங்களுக்காகப் பிரதமர் தேசிய அளவில் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
- உயிரிழப்புகள் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும்.
- கழிவுநீர் மரணங்களை உடனடியாகத் தடுப்பதற்கான, கால வரையறைக்குட்பட்ட தேசிய செயல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
- அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21 தூய்மைப் பணியாளர்களுக்குக் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும்.
- கழிவுநீர் கால்வாய் மரணங்களுக்குக் காரணமான அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கியமாக, தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறைந்த இந்தக் காலகட்டத்தில், இந்தியாவால் நிலவின் தென் துருவத்திற்கு விண்கலம் அனுப்ப முடிகிறது. ஆனால், மலக்குழி மரணங்களைத் தடுக்கும் வகையில் கழிவுநீர்க் கால்வாய்களைப் பாதுகாப்பாகச் சுத்தம் செய்வதற்கான இயந்திரங்களை உருவாக்க முடியவில்லை. அதாவது, அரசு தூய்மைப் பணியை நவீனமயப்படுத்தாமல் தலித் மக்களை இதே அவல நிலையில் அமிழ்த்தி வைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன் நீட்சியாகத்தான் அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்குவதாகச் சொல்லப்படுகின்ற “கண்ணியத்துடன் வாழும் உரிமை” துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகிறது.
குறிப்பாக மலக்குழி மரணங்களைத் தடுப்பதற்குப் பதிலாக, மோடி அரசு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி அவற்றை மூடி மறைப்பதிலேயே முனைப்புக் காட்டுகிறது. 2026-ஆம் ஆண்டின் முதல் 80 நாட்களில் 41 துப்புரவுத் தொழிலாளர்களும், 2025-ஆம் ஆண்டில் 121 தொழிலாளர்களும் மலக்குழியினுள் கொல்லப்பட்டுள்ளதை என்று எஸ்.கே.ஏ. அமைப்பின் பதிவு செய்துள்ளது. ஆனால், மோடி அரசின் புள்ளிவிவரங்களோ 2025-ஆம் ஆண்டில் 46 பேர் மட்டுமே உயிரிழந்ததாகக் கூறி மலக்குழிக்குள் இறந்தவர்களை மீண்டும் படுகொலை செய்கிறது.
மலக்குழி மரணங்கள் சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தாலும், கைகளினால் மலத்தை அகற்றுகின்ற அவலநிலை உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு, பீகார், ஜம்மு-காஷ்மீர் என இந்தியா முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஆனால், மோடி அரசும் அதன் அமைச்சர்களும் கையால் மலம் அள்ளும் கொடுமை ஒழிக்கப்பட்டுவிட்டதாக அப்பட்டமாகப் பொய்யுரைக்கின்றனர். டெல்லி தூய்மைப் பணியாளர்கள் நடத்தியுள்ள இப்போராட்டமானது அப்பொய்யின் மீது காறி உமிழ்கிறது.
மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் வர்ணமாக – சாதியாகப் பிரித்து வைத்துள்ள பார்ப்பனியமானது அருந்ததியினர், மடிகா, வால்மீகி, மகர் போன்ற தலித் மக்களை மலக்குழிகளுக்குள்ளே இருத்தி வருகிறது. தற்போது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிச கும்பலின் ஆட்சியில் இந்திய நாட்டு உழைக்கும் மக்கள் மீதான பார்ப்பனிய தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்குறிப்பிட்ட தலித் மக்களோ இன்னும் ஆழமாக மலக்குழிகளுக்கே அமிழ்த்தப்படுகின்றனர். எனவே, மலக்குழி மரணங்களையும், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் கொடுமையையும் தடுப்பதற்கு பார்ப்பனியத்தையும், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பலையும் வீழ்த்துவது இன்றியமையாததாகும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











