‘டிஜிட்டல் இந்தியா’வில் தொடரும் மலக்குழி மரணங்கள்!

2017 ஆம் ஆண்டு முதல் ஒன்பது ஆண்டுகளில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மலக்கழிவுத் தொட்டிகளில் சுத்தம் செய்யும் போது 622 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 25 பேரின் குடும்பங்களுக்கு பாதி இழப்பீடும், 52 பேரின் குடும்பங்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை.

0

மார்ச் 17 ஆம் தேதி அன்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது சமஜ்வாதி கட்சியின் உறுப்பினர் இக்ரா செளத்ரி (Iqra Choudhary) இந்தியாவில் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்படும் மரணங்கள் மற்றும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வழங்கிய பதிலில் 2017 ஆம் ஆண்டு முதல் ஒன்பது ஆண்டுகளில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மலக்கழிவுத் தொட்டிகளில் (septic tank) சுத்தம் செய்யும் போது 622 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 539 பேரின் குடும்பங்களுக்கு மட்டும் முழுமையான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 25 பேரின் குடும்பங்களுக்கு பாதி இழப்பீடும், 52 பேரின் குடும்பங்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை. 6 வழக்குகள் எந்தவித விசாரணையும் இல்லாமல் முடித்து வைக்கப்பட்டதாக அலட்சியமாகத் தெரிவித்துள்ளது.

மாநில வாரியாக அமைச்சகம் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 86 உயிரிழப்புகளும், மகாராஷ்டிராவில் 82, தமிழ்நாட்டில் 77, ஹரியானாவில் 76 குஜராத்தில் 73 மற்றும் டெல்லியில் 62 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைக்கும் இழப்பீடு பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக உள்ளது. அங்கு 86 குடும்பங்களில் 13 குடும்பங்களுக்கு எந்த நிதியுதவியும் கிடைக்கவில்லை, மேலும் இரண்டு குடும்பங்களுக்கு பகுதியளவு தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உயிரிழந்த 62 குடும்பங்களில் ஒன்பது குடும்பங்களுக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை. குஜராத்தில், இரண்டு குடும்பங்களுக்கு தற்போது வரை இழப்பீடு வழங்கப்படவில்லை; ஒரு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் ஒன்பது குடும்பங்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை.

உத்தரப் பிரதேசத்தில், மாவட்ட அளவிலான தரவுகளின்படி, சந்தௌலியில் நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன; ஆனால் எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. அம்பேத்கர் நகரில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன; இரண்டுக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை. கௌதம் புத்நகரில் 16 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் எட்டு வழக்குகளுக்கு முழு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது; ஆறு வழக்குகளுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை, மேலும் இரண்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.


படிக்க: துப்புரவுப் பணியில் பதிலி முறை: சாதியத் தீண்டாமைக்குள் இருத்தப்படும் வால்மீகி சமூக மக்கள்


முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் கழிவுநீர் தொட்டிகள் அல்லது சாக்கடைகளைச் சுத்தம் செய்வது போன்ற அபாயகரமான சூழ்நிலைகளில் பணிபுரியும் போது 9 தொழிலாளர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. அதில், இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் பணியின் காரணமாக எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று பொய்யாகக் கூறப்பட்டுள்ளது.

செப்டிக் டேங்க், கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக அரசு வழங்கியுள்ள தகவல்கள் மிகவும் குறைவானவையென்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் “கையால் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களை பணியமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013” கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் (manual scavengers) குறித்த வரையறையில் நேரடியாக மனித கழிவுகளை அகற்றுபவர்களை மட்டுமே சேர்த்துள்ளது. செப்டிக் டேங்க் மற்றும் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்பவர்கள் சேர்க்கப்படவில்லை. எனவே சட்டத்திலே ஓட்டையை வைத்துக் கொண்டு கையால் மலம் அள்ளுவதை ஒழித்துவிட்டோம் என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு.

அதேபோல், 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட இரண்டு கணக்கெடுப்புகளில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் 58,098 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (32,473) உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இது தேசிய எண்ணிக்கையில் பாதிக்கும் மேலாகும்.

பின்னர் 2023-24 ஆம் ஆண்டு கையால் மலம் அள்ளுவதை ஒழித்து, இயந்திரங்கள் மூலம் துப்புரவு பணிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நமஸ்தே (namaste) திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களுக்குத் தேவையான உபகரணங்களும், பாதுகாப்பும் வழங்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் கையால் மலம் அள்ளும் அவலநிலை நீடித்துக் கொண்டே இருக்கிறது; குறைந்தபாடில்லை.

குறிப்பாக ரயில் நிலையங்கள், வணிக வளாகங்களில் உள்ள செப்டிக் டேங்குகளை எந்தவித பாதுகாப்பு உபகரணங்களின்றி ஆபத்தான முறையில் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தால் உரிய இழப்பீட்டையும் இந்த அரசு வழங்குவதில்லை.


படிக்க: தாழ்த்தப்பட்ட மக்களை மலக்குழிக்குள்ளேயே இருத்தும் பாசிச மோடி அரசு!


சமீபத்தில் சென்னையில் தாம்பரம் ஆதி நகரைச் சேர்ந்த பிரவீன்குமார் கழிவுநீர்த் தொட்டியில் மோட்டார் அடைப்பைச் சரி செய்ய இறங்கிய போது கால் தவறி உள்ளே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். பின்னர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையிலிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் மார்ச் 17 ஆம் தேதி அன்று சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா கேர் என்ற தனியார் மருத்துவமனையின் செப்டிக் டேங்கை சுத்தம் செய்த போது நச்சு வாயு தாக்கியதில் மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

துப்புரவுத் தொழில் இயந்திரமயமாக்கலுக்குப் பிறகு தொழிலாளர்களின் சராசரி வருமான உயர்வு குறித்து எந்தத் தரவையும் வெளியிடவில்லை. இயந்திரமயமாக்கலால் செயல்திறன் அதிகரித்ததைக் காட்டும் அளவுகோல்கள் எதுவும் நிர்ணயிக்கவில்லை. நமஸ்தே திட்டத்தின் விதிகளை மீறும் ஒப்பந்ததாரர்கள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தரவுகளைப் பராமரிக்கவில்லை என்று ஒன்றிய அமைச்சகம் அலட்சியமாகப் பதிலளித்துள்ளது.

மேலும் ஏழாவது அட்டவணையின் கீழ் சுகாதாரம் மாநிலப் பட்டியலில் வருவதால் அது தொடர்பான தரவுகள் ஒன்றிய அளவில் பராமரிக்கப்படுவதில்லை என்று அமைச்சகம் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழித்து மாநிலங்களின் மீது பழி சுமத்தியுள்ளது.

இந்த தகவல்கள் இத்திட்டம் பெயரளவில் மட்டும் உள்ளதே தவிர, முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையே உணர்த்துகின்றன.

மேலும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது, பாதுகாப்பு உபகரணங்கள் மறுக்கப்படுவது மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடு ஆகியவை தொடர்பாக 2025-ஆம் ஆண்டில் தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணையம் 842 புகார்களைப் பெற்றுள்ளது.

அதில் அதிகபட்சமாக டெல்லி 140 புகார்களையும், அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் 130 புகார்களையும், மகாராஷ்டிரா 95 புகார்களையும் பதிவு செய்தன.

சட்டங்களாலும் திட்டங்களாலும் மலக்குழி மரணங்களைத் தடுக்க முடியவில்லை. அவை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக தலித் மக்கள் எந்தவிதப் பாதுகாப்புமின்றி இதுபோன்ற ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களோ, உரிய ஊதியமோ கொடுக்கப்படுவதில்லை. செத்தாலும் உரிய இழப்பீட்டைக் கூட வழங்குவதில்லை.

பார்ப்பனியம் கோலோச்சும் ‘டிஜிட்டல் இந்தியா’வில் மலக்குழி மரணங்கள் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க