Monday, July 26, 2021
முகப்பு கட்சிகள் சி.பி.ஐ - சி.பி.எம் மூணார் தேயிலைத் தொழிலாளர் போராட்டம் - நேரடி ரிப்போர்ட்

மூணார் தேயிலைத் தொழிலாளர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்

-

லைகள் சேகரிக்கும் மழைத்துளிகள் ஆறாய் பெருக்கெடுத்து வழிந்தோடுவதைப் பார்த்திருப்போம்; மலைகள் கண்ணீரைப் போல் வடிக்கும் நீரூற்றுகளை நீங்கள் மூணாரில் காணலாம்.

மூணார்… மேற்குத் தொடர்ச்சி மாலையில் திருப்பூர் மாநகர மாவட்டத்தின் மேற்கெல்லையில் இருந்து எண்பது கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்டத்திற்கு மேலே 5500 அடியில் இருக்கிறது. மறையூர் என்ற இடைநிலை கட்டம் வரை காடுகளடர்ந்திருக்கும் மலைகள், கடந்து செல்லச் செல்ல காடுகளைக் காவு வாங்கிய தேயிலைத் தோட்டங்களாகப் பரந்திருக்கிறது.

கே‌.டி‌.எச்‌.பி எனப்படும் கண்ணன் தேவன் மலைத் தோட்டங்கள் என்ற நிறுவனமும், டாடாவும், தலையார் தேயிலை நிறுவனமும் இந்தப் பரந்த தேயிலைத் தோட்டங்களின் ஏகபோக உரிமையாளர்கள். இவற்றில் கண்ணன் தேவனும், டாடாவும் பெரும்பான்மைத் தேயிலைத் தோட்டங்களைத் தங்கள் வசம் வைத்திருக்கின்றன. விளம்பரங்களைக் கவனித்திருப்பவர்களுக்கு இங்கே ஒரு கேள்வி எழக்கூடும். கண்ணன் தேவன் என்பது டாடாவின் தயாரிப்புதானே? அவ்வாறெனில் ஏன் தனித்தனி நிறுவனங்களாக இவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்? என்று.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இங்கே தொடங்குகிறது சூழ்ச்சியின் திரி. பற்ற வைத்தால் சுழலும் சங்குச் சக்கரம் எரிந்து பொசுங்கும் மலையின், தேயிலைத் தோட்டங்களின், மலைக்காடுகளின் முற்றாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வை, வாழ்நிலையை நாலாத் திசைகளிலும் தீக்கங்குகளாகச் சிதறடிக்கின்றது.

கண்ணன் தேவனின் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்களிலேயே அதிக சதவீதப் பங்குகளை வைத்திருப்பவர் – டாடா நிறுவனம்தான். மீதப் பங்குகள்? அவை அத்தோட்டங்களிலேயே பணிபுரியும் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பிரைவேட் ஷேர்களாகப் (தனிநபர் பங்குகள்) பிரித்தளிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தொழிலாளியும் 3,000 மதிப்புள்ள பங்குகளின் உரிமையாளர். ஆனால் அவர் அதை விற்று காசாக்க முடியாது. அப்படி விற்றால் அதை டாடாவிற்கே விற்க வேண்டி வரும். நடைமுறையில், ஓய்வு பெற்றுச் செல்லும் தொழிலாளர்களிடம் அந்நிறுவனம் அந்தப் பங்குகளை இவ்விதம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது.

கண்ணன் தேவன் தேயிலைத் தோட்ட தொழிலாளிகளின் குடியிருப்புகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தொழிலாளர்களின் அறியாமை வேறு அந்நிறுவனத்திற்கு பெரும் சாதகம். கடந்த மாதம் முழுவதும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அங்கே கூலி உயர்வு கேட்டுப் போராடிய செய்திகளை நீங்கள் கண்டிருக்கக் கூடும். தேயிலைத் தோட்டம் மட்டுமல்ல, ரப்பர் மற்றும் எஸ்டேட் தொழில்களைச் சேர்ந்த அனைத்துத் தொழிலாளர்களும் கேரளாவெங்கும் போராடினர். மலையாளிகளின் வார்த்தையில் சொன்னால் “இது தோட்டத் தொழிலாளிகளின் சமரம்”.

தொழிற்சங்கங்களுக்குப் பேர் போன கேரளாவில் இது ஒண்ணும் புதியதல்ல என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இப்போராட்டம் துவங்குவதற்கான காரணமே தொழிற்சங்கங்களின் துரோகம்தான்.

ஜனவரியிலேயே இக்கூலி உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் பி‌.எல்‌.சி என்று பரவலாக அறியப்படும் தோட்டத் தொழில்களின் ஊதியக் குழுவால் தொடங்கி நடத்தப்பட்டு கூலி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். துரோகத் தொழிற்சங்கங்களில் பெரும்பான்மையற்ற சங்கங்களான ஐ‌.என்‌.டி‌.யு‌.சி, சி‌.ஐ‌.டி‌.யு, ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி ஆகியவை இப்பேச்சுவார்த்தையை தங்கள் பங்குக்குத் தள்ளிப்போட்டு ஒன்பதாவது மாதம் வரை இழுத்தடித்திருக்கின்றனர். இவர்கள்தான் இக்கூலி உயர்வை பி‌.எல்‌.சி-ல் பேசும் உரிமையையும் பிரதிநிதிகளையும் கொண்டிருப்பவர்கள்.

இதுவரை, கூலி ரூ.232 ஆக இருந்திருக்கிறது. இதிலும், ஒரு நாளைய இலக்கான 21 கிலோ தேயிலையை ஒரு தொழிலாளி பறிக்கும் போதே பெற முடியும். தொழிலாளிகளைப் பொருத்தவரை 21 கிலோ என்பது பெரிதல்ல. நூறு கிலோவைக் கூட விளைச்சல் காலத்தில் அநாயாசமாகத் தாண்டுகிறார்கள். இலக்கு தாண்டி கொண்டு வரும் ஒவ்வோரு கிலோவுக்கும் கூடுதலாக 35 கிலோ வரை ஒரு ஸ்லாப் (SLAB) பாக ஒரு விலையும் (பைசாக்களில் தான்) 49 கிலோ வரை ஒரு ஸ்லாப்பும், 69 கிலோ வரை ஒரு ஸ்லாப்பும் அதற்கு மேல் வருவது சிறப்பு ஸ்லாப்பாகவும் கணக்கிடப்படுகிறது.

ஒவ்வொரு ஸ்லாப் உயரும் போது அதற்கான கூலியும் உயர்கிறது. கடைசியான சிறப்பு ஸ்லாப்பில் எடுக்கப்படும் ஒவ்வொரு கிலோவுக்கும் 1.15 ரூ. கூடுதல் வருமானமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் நூறு கிலோவை அநாயாசமாகத் தாண்டும் தொழிலாளர்கள் நிறைய சம்பாதிக்கக் கூடுமே என நீங்கள் கணிக்கலாம். ஆனால், எடுக்கப்படும் ஒவ்வொரு கிலோவும் அரசால் கணக்கிடப்படுகிறது. இதற்கு வரியாக நிறுவனம் காசு செலுத்தியாக வேண்டும். எனவே, மூன்றாவது ஸ்லாப்பான 69 கிலோவைத் தாண்டி எந்தத் தொழிலாளியின் கணக்கிலும் காட்டப்படுவதில்லை. கணக்கில் காட்டப்படாத எந்த ஒரு கிலோவுக்கும் கூலி பெயராது. இதைக் காட்டிலும், இதைக் கணக்கில் காட்டாமலிருப்பதற்காக தொழிலாளர்களிடம் தேயிலைகள் தரமற்றவைகளாக உள்ளன என்ற காரணம் கூறப்பட்டு அநியாயமாக தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு தொழிலாளியும் இரண்டு நபராக ஒரு நாளைக்கு உழைக்க வேண்டும். அதாவது இரண்டு பணி நேர வேலையை (ஷிப்ட்) ஒரு தொழிலாளி ஒரு நாளில் செய்ய வேண்டும். காலையும் மாலையுமாக இருநூறு கிலோக்களை பறிக்கும் ஒரு தொழிலாளி இதையே சராசரியாக ஆண்டு முழுவதும் எட்டுகிறார். இதற்கென அதிகாலை ஐந்து மணிக்கு நெற்றியில் கட்டிய ஹெட் லைட்டுடன் பெண்கள் உட்பட, வேலைக்குச் செல்பவர்கள் இரவில்தான் வீடு திரும்புகிறார்கள். மீண்டும் அதிகாலையில் ஓட்டம்.

இடையில் உடல்நிலை சரியில்லாமற் போனால் அது அங்கீகரிக்கப்பட்டு வேலைக்கு வராத நாளைக்கு ரூ 72 சிறப்பூதியமாக வழங்க வேண்டும். ஆனால் உடல்நிலை எத்துணை மோசமானாலும் தொழிலாளிகள் நேரில் வந்து விடுப்புப் பெற வேண்டும். இதற்கென ஒவ்வொரு தொழிலாளர் குழுக்களுக்கும் ஒரு கங்காணி இருக்கிறார். இவர் சாட்டை வைத்திருக்கவில்லையே ஒழிய, மற்றபடி கொடூர முகம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். உடல்நிலை சரியில்லாத போது மருத்துவமனைக்கு நிறுவனத்தின் பரிந்துரையோடு சென்றால் அச்செலவை நிறுவனம் ஏற்க வேண்டும் என்பது அங்கே நியதி. ஆனால் மருத்துவமனையும் நிர்வாகமும் ஒருங்கே புறக்கணித்து சிறப்புக் கூலியும் இன்றி மருத்துவச் செலவும் இன்றி அல்லாடுகிறார்கள் தொழிலாளர்கள்.

சரி. கூலியாவது முறையாகக் கிடைக்கிறதா என்றால் சிறுநீர் கழிக்கச் சென்றால் ஒரு மணி நேர ஊதியம் கழிக்கப்படும். வெற்றிலை, பாக்கு, தேநீர் என எதற்கும் கங்காணிகள் அனுமதிப்பதில்லை. அதிலும், மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் படும் கொடுமைகள்… தாள முடியாதவை.

ஒரு மணி நேரத்திற்கு ரூ 22 கூலி வெட்டப்படும். இப்படிக் கழிக்கப்படும் கூலியை “ஷார்ட் பே” என்கின்றனர். ஒரு நியாயமான காரணத்துக்கு இந்த “ஷார்ட் பே”-யை பயன்படுத்திக் கொள்ளத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இடையே நிறுவனம்தான் தொழிலாளர்களை தண்டிக்கப் பயன்படுத்துகிறது.

“ஏதோ எங்க குழந்தைகளையாவது நல்லாப் படிக்க வெக்கலாம்னு பாத்தா… அதுக்கு இந்தக் கூலி போதவேயில்லை. கையில் மாசக்கடைசில 1000, 1500 ரூபாதான் நிக்கும். இதுல எதிர்பாராத செலவுகள் வேற வந்துட்டா அவ்வளவுதான்” என்கிறார் ஒரு தொழிலாளி. நெல்லை, சென்னை, திருச்சி, மதுரை என பல பகுதிகளிலிருந்து பிரித்தானிய ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட இத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் இன்றும் பெரிய வேறுபாடு இல்லை.

“மருந்தடிச்சிட்டு இருப்போம். சாப்பாட்டு நேரத்துக்கு கையைக் கழுவிட்டு போயித்தான் சாப்பிடுவோம். மிச்சம் சாப்பாடு வெச்சுட்டோம்னா அடுத்த அரை மணி நேரத்துல சாப்பாடு கெட்டுறும் பாத்தியலா” என்கிறார் ஒரு தொழிலாளி. இந்த 2,4D என்ற மருந்தானது டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்று.

தேயிலைச் செடிகளினடியில் கூடு கட்டியிருக்கும் தேனீக்கள், சிலந்திகள், குடியிருக்கும் பாம்புகள் மற்றும் விச ஜந்துக்குள் இவைகளனைத்தும் முதலாளித்துவம் பறித்த தங்களது வாழ்க்கைக்குத் தொழிலாளிகளையே காவு கேட்கின்றன. குறிப்பிட்ட செடியினடியில் தேன் கூடு இருக்கிறது. இதை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டாலும் கங்காணிகளில் இருந்து, நிர்வாகத்தின் உச்சம் வரை யாரும் கண்டு கொள்வதில்லை.

இப்படியான கொடுமைகள் தாளாமல் விருப்ப ஓய்வு பெற்றுத் தொழிலாளிகள் மலை விட்டுக் கீழிறங்கியதில் 30,000 பேர் இடம் பெயர்ந்ததாக தொழிலாளர்களால் சொல்லப்படுகிறது. மூணார் என்பது இருபதுக்கும் மேலான தேயிலைத் தோட்ட எஸ்டேட்டுகளைக் கொண்டது. இவையனைத்திற்கும் மொத்தமாக 12, 500 தொழிலாளர்கள் இப்போது இருக்கிறார்கள்.

கத்தரி கொண்டே தேயிலையை பறிக்கிறார்கள் தொழிலாளர்கள். இது வெறும் கத்தரியன்று. ஒரு வளையும் இதனுடன் இணைக்கபட்டிருக்கிறது. வெட்ட வெட்ட தேயிலை இதில் சேகரமாகிறது. எடை கீழிழுக்கும் அதே நேரம் கையை நீட்டி நீட்டி வெட்ட வேண்டும். போதாததற்கு, 30 கிலோ வரை தாங்கக் கூடிய பை ஒன்றும் முதுகில்.

“ஐம்பது கிலோ எடையுடன் ஓங்க (உச்சிக்கு) ஏறுவோம்” என்கிறார் ஒரு பெண் தொழிலாளி. இது ஆண் தொழிலாளர்களுடன் பெண் தொழிலாளர்களையும் கடுமையாகப் பாதிக்கிறது. சிறுநீர்த் தடத் தொற்று, எலும்பின் இணைப்புகள் தேய்மானம் எனப் பல்வேறு சீரழிவுக்கு உடலை ஆளாக்குகிறது.

“இங்கே 60% பெண்களுக்கு கருப்பை அகற்றப் பட்டிருப்பதற்கு இந்நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும்” என்றார் ஒரு தொழிலாளி.

கண்ணன் தேவனை பொறுத்த வரை தொழிலாளர்கள் தான் பங்குதாரர்களாயிற்றே?! பங்குகளின் ஈவுத் தொகை கிடைக்குமால்லாவா?

“வருடத்துக்கு 300 ரூவா வரும் என்ன? ஏ..இத வெச்சிட்டு என்ன செய்ய? நாங்க கேட்டமா இந்தப் பங்குகள? எங்க காஸா எங்க அனுமதி இல்லாம புடிச்சிட்டு பங்கு தந்திருக்காக. அவங்க பொருள கம்பெனியே வச்சிருக்க தந்திரம் பண்ணிட்டாங்க. நாங்க இந்தப் பங்குகள விக்க முடியாதுல? 3000 ரூபா இதுக்குனு எங்க காசப் புடிச்சுக்கிட்டாங்க,” என்றார் இன்னொரு தொழிலாளி.

தொழிலாளர்களுக்கு இத்தனை நெருக்கடி எனில் தொழிற்சங்கங்கள் என்ன செய்கின்றன? கேரளாவின் மிகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் இருப்பது ஐ‌.என்‌.டி‌.யு‌.சி, ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி, சி‌.ஐ‌.டி‌.யு சங்கங்களில் தான்.

மூணாரில் ஒவ்வொரு பகுதிகளிலும் (டிவிசன்ஸ்) இத்தொழிற்சங்கங்கள் ஐவர் கொண்ட கமிட்டிகளை உருவாக்கியிருக்கின்றன. இந்தப் பகுதிகளின் உப பகுதிகளிலும் ஒரு கமிட்டி உண்டு. ஒவ்வொரு பகுதியின் கீழும் இரண்டு அல்லது மூன்று எஸ்டேட்டுகள் வருகின்றன. இப்பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் இந்தக் கமிட்டிக்களால்தான் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள். சங்கச் சந்தாவிலிருந்து மாநாடு, பொதுக் கூட்டங்களுக்கு அணிதிரட்டுவது இந்தக் கமிட்டிதான் பொறுப்பு.

தொழிலாளர்களும் தங்களது தேவைகளை, குறைகளை இக்கமிட்டியின் மூலம் மேலே கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறிருக்க இக்கமிட்டிகள் கருங்காலிகளாலேயே பெரும்பாலும் உருவாகியிருக்கிறது. இவர்களின் கவனத்துக்குத் தப்பித் தவறியும் கூட இச்செய்தி எட்டிவிடாது என்ற உத்தரவாதத்தின் பேரில் தான் தொழிலாளர்கள் வெளிப்படையாகப் பேசுகின்றனர். இருப்பினும் தொழிலாளர்கள் மனத்தினுள் சிறு சந்தேகத்துடனேயே பேசுகின்றனர். சங்கங்களின் உள்ளூர்ப் பிரதிநிதிகள் பண்ணையார்கள் போல மேலே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களை மீறி ஓரணுவும் அசைவதில்லை.

தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை கட்டி 4 தலைமுறைகளான வீடுகள். பிளந்து நிற்கின்றன சுவர்கள். கழிவறைகளின் கதியும் இதுதான். இந்த வீடுகளை வெள்ளையடிக்க வருடா வருடம் 10 ரூபாய் தருகிறது நிறுவனம். இந்த ஒதுக்கபட்ட வீடுகள் தொழிலாளர்களுக்குச் சொந்தமில்லை. மேலும், ஒரே குடும்பத்தை இருவருக்கு வீடுகள் தரப்பட மாட்டாது. எனவே, நெருக்கியடித்துக் கொண்டு ஒரே வீட்டில் வாழ்கிறார்கள்.

இவை தொழிலாளர்களின் அன்றாட பிரச்சினைகளில் ஒரு வகை மாதிரி. இவற்றை மேற்கண்ட தொழிற்சங்கங்களின் கவனத்துக்கு கொண்டு செல்வதே ஆண்டையின் முன் பண்ணையடிமை நிற்பது போலத்தான் செய்ய இயலும். மீறி முனகல் வெளிப்பட்டாலும் கருங்காலிகள் மூலம் தகவல் போய்விடும். பிறகு யாதொரு விசயத்துக்கும் இவர்களை அண்டவே முடியாது. எனவே, தொழிலாளர்கள் சங்கத் தலைமைகளின் மீது ஒரு அச்சத்துடனே இருக்கின்றனர்.

இதையெல்லாம் விட, தொழிற்சங்கங்கள் நடத்தும் பைனான்ஸ் தொழில்தான் கொடி கட்டிப் பறக்கிறது. சொஸைட்டிகள் என்ற பெயரில் தொழிலாளர்களுக்கு இச்சங்கங்கள் வட்டிக்கு கடன் வழங்குகின்றன. இக்கடனை மாதாமாதம் நிறுவனமே சம்பளத்தில் பிடித்து சங்கங்களிடம் ஒப்படைக்கின்றன. இது போக எஞ்சியதைத்தான் தொழிலாளி சம்பளமாகப் பெறுகிறார். இருபது சதவீத போனசுக்கு 10 சதவீதத்தை மட்டும் தொழிலாளிகளுக்குத் தருவது. மீதியை முதலாளிகளிடம் சங்க நிர்வாகிகள் பெற்றுக் கொள்வது போக தொழிலாளர்கள் தங்கள் கைக்கு வந்த போனசில் சங்க கமிஷனை தர வேண்டும். சங்கங்கள் தரும் கடனுக்கே கூட உள்ளூர் கருங்காலிகளின் சிபாரிசு வேண்டும். அதற்கீடாக 10% சதவீத கடன் தொகை அந்தக் கருங்காலிக்கு அழ வேண்டும். இப்படியும் தொழிற்சங்கங்கள் இருக்கின்றன என்பதை நம்மால் ஜீரணிக்கவே இயலாது.

இந்த தொழிற்சங்கங்கள் தான் கூலி உயர்வைப் பற்றி பி‌.எல்‌.சி யில் பேசும் பேசும் என ஒன்பது மாதமாகக் காத்திருந்தனர், தொழிலாளிகள். இது நடைபெறாமல் போகவே போராட்டம் என்ற நிலைக்கு வந்தனர். நிலைமை கைமீறிப் போவதையுணர்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தங்கள் கையிலெடுத்துக் கொள்ள முயன்றன. அப்போது மூணாறில் பேசிய சி‌.பி‌.எம்-இன் ஏ.கே மணி, “கூலிக்கு மட்டும் உழையுங்கள்” (அதாவது, 232 ரூபாய்க்குரிய 21 கிலோவை மட்டும் பறிப்பது) என்றவர், ஓரிரு நாளில் கம்பெனியை நட்டமடைய வைக்கக் கூடாது. ஆகவே, வழக்கம் போல் பறியுங்கள், என்றார் பிறழ்நாக்குடையவராக.

அப்போது போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த தொழிலாளிகள் அவரிடமிருந்து ஒலிவாங்கியைப் பறித்து அவரை அம்பலப்படுத்த, அங்கே துவங்கியது துரோகத் தொழிற்சங்கங்களை புறக்கணிக்கும் போக்கு.

இந்தப் புறக்கணிப்பில் முன்னணி வகித்தது பெண் பிள்ளை உரிமை என்ற பெயரிலான பெண்கள் அணி. கண்ணன் தேவனில் பணிபுரியும் பெண் தொழிலாளிகள் இந்தத் துரோகத் தொழிற்சங்கங்களைப் புறக்கணித்து போனசுக்கான போராட்டத்தை தனியே நடத்தி 8.33% என்றிருந்த போனசை 20% பெற்றிருக்கிறார்கள். இப்போராட்டமே 15 நாள் நடந்திருக்கிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

போராட்டத்தில் பெண்களுக்கு உதவியவர்கள் இளைஞர்கள். உணவு சமைப்பதில் இருந்து தொழிலாளர்கள் ஒழுங்கில் உணவுண்டு போராட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பாக நடத்துவது வரை இவர்கள் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். துரோகத் தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து ஆண் தொழிலாளர்கள் விடுபட இயலவில்லை. இது மட்டுமல்ல… இம்மூன்று எதிரெதிரான தொழிற்சங்கங்களும் இப்பெண்பிள்ளை உரிமையை முறியடிக்கக் கூட்டாக இணைந்த கேலிக்கூத்தும் அரங்கேறியிருக்கிறது.

ஆயினும், பெண் பிள்ளை உரிமையின் விடாப்பிடியான போராட்டம் பெரும் கவன ஈர்ப்பை பெற்றது. இதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பும் ஒரு காரணம். இருப்பினும் ஊடகங்கள் அதன் டி‌.ஆர்‌.பி-யை வைத்தே இச்செய்திகளை ஒளிபரப்பின. உண்மையில் தொழிலாளர்களின் பிரச்சினை என்ன என்பது வெளிவரவே இல்லை. மாறாக, அவர்களது பிடிவாதமான போராட்டமும் அதன் வடிவங்களுமே கவனத்தை ஈர்த்திருக்கின்றன.; அவ்வாறுதான் ஊடகங்கள் அதைக் கொண்டு சேர்த்திருக்கின்றன.

சி‌.ஐ‌.டி‌.யு, ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி, ஐ‌.என்‌.டி‌.யு‌.சி ஆகியவை மதிப்பிழக்கத் தொடங்கியவுடன் பி‌.எம்‌.எஸ், எச்‌.எம்‌.எஸ், ஏ‌.ஏ‌.பி, பி‌.ஜெ‌.பி ஆகியவை ஓடோடி வந்திருக்கின்றன. வந்தவற்றை அப்படியே நிறுத்தி அம்பலப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள், தொழிலாளிகள். “ஆதரவு என வந்தால் அமர்ந்திருந்துவிட்டு செல்லுங்கள். மற்றபடி உங்கள் அடையாளங்கள் எதையும் இங்கே காட்டக் கூடாது” என அறிவித்து விட்டார்கள். கட்சிகளும் வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்திருக்கின்றன. எதிர்த் தொழிற்சங்கங்கள் பெண்கள் உரிமையின் போராட்டத்தில் கலகம் விளைவிக்க யத்தனித்த போதும் நிலைமையை காவல் துறை கட்டுக்குள் வைத்திருந்தது. இதற்கு புற நிலைமையும் ஒரு காரணம். பெண்கள் உரிமையின் போராட்டம் பரவலாகக் கேரளாவேங்கும் அறியப்பட்டிருந்தும் உள்ளாட்சித் தேர்தல்கள் நெருக்கத்தில் வந்துவிட்டமையும் இரண்டு பாரிய காரணங்கள்.

போனசுக்கான இந்தப் போராட்டம் வெற்றி என்பது கண்ணன் தேவன் நிறுவனத் தொழிலாளர்களுக்கு மட்டும் தான் பலனளித்தது. கூலி உயர்வுப் போராட்டமோ கேரளாவெங்கும் பரவியது.

மூணாறில் இந்தக் கூலி உயர்வுப் போராட்டமும் பெண் பிள்ளை உரிமையின் குரலாகவே பலமாக எதிரொலித்தது. போனசுக்கான போராட்டம் செப்டம்பர் மாத துவக்கத்தில் பதினைந்து நாள் நடந்தது. அதில் பல்வேறு தரப்பினர், என்‌.ஜி‌.ஓ.க்கள், கட்சிகள், வியாபாரிகள் சங்கத்தினர் என உதவிகள் குவிந்தன.

கூலி உயர்வுப் போராட்டத்தில் இவைகள் பின்வாங்கியது மட்டுமன்றி உதவ முன் வந்தவர்களையும் தடுத்திருக்கிறார்கள். இதற்கு காரணம், தொழிற்சங்கங்கள் அம்பலமாகத் தொடங்கியவுடன் அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கும் வியாபாரிகள், வணிகர்கள் எனப் பல சங்கங்கள் பின்வாங்கின. இருப்பினும் உறுதியுடன் நின்றிருக்கிறார்கள் பெண் பிள்ளை உரிமையணி. பெண் பிள்ளை உரிமைக்குப் பகிரங்கமாக வெளியேறி வரவியலாத பிற சங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் கூட ஒத்துக் கொள்கின்றனர். “பெண் பிள்ளை உரிமையின் போர்க்குணமான போராட்டம்தான் தங்களுக்குக் கூலி உயர்வையே பெற்றுத் தந்தது” என இதனை வெளிப்படையாகக் கூறும் துணிவு பெற்றிருக்கவில்லை. அவ்வளவே.

செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற்ற கூலி உயர்வுக்கான போராட்டம் பெரும் களேபரங்களை கேரளாவெங்கும் உருவாக்கிய பின்னர் முடிவுக்கு வந்த பொது 301 ரூபாயாகக் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் அறிவிப்பு மட்டுமே. நவம்பரில் கூடவிருக்கும் பி‌.எல்‌.சி பேச்சுவார்த்தையேலேயே அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் கூலி உயர்வு தருவது பற்றி முடிவெடுக்கப்படும், இறுதியாக்கபடும். அப்போது கேரள உள்ளாட்சி தேர்தல்கள் முடிந்திருக்கும். முடிவு எப்படியிருக்கும் என்பது எதிர்பார்க்கவியலாது. அதன்படியும், தொழிலாளர்கள் கேட்டது 500 ரூபாய். ஒத்துக்கொள்ளப்பட்டதோ 301 ரூபாய். ஒவ்வொரு தொழிலாளியின் மூலமும் ஒரு நிறுவனம் ஒரு நாளைக்கு மிகக் குறைந்த அளவு கணக்கிட்டாலும். 3000 ரூபாய் அள்ளுகிறது. ஆனால், பங்குதாரர் ஆண்டறிக்கையில் காட்டப்பட்டிருப்பதோ நட்டம். நட்டம். நட்டம். அதுவும் ஆங்கிலத்தில். தொழிலாளர்களின் அறியாமையை வெகு தந்திரமாக நிறுவனங்கள் காசாக மாற்றுகின்றன.

இதை எல்லாம் தாண்டி தொழிற்சங்கங்கள் தங்களது துரோகங்களை மறைக்கும் முகமாக, இந்த கூலி உயர்வுக்கு தாங்கள்தான் காரணம் என்று தொழிலாளர்களிடையே திணிக்கிறார்கள். பி‌.எல்‌.சி-யில் இத்துரோகிகளுக்கு மட்டுமே இடமிருக்கிறது என்பதைத் தாண்டி இவர்களால் தொழிலாளர்களுக்கு கிடைப்பது எல்லாம் துரோகமும், ஏமாற்றமும், சுரண்டலும் தான்.

துரோகத் தொழிற்சங்கங்களை முறியடிக்க பெண்கள் உரிமையில் சிலர் உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சைகளாக போட்டியிடுகிறார்கள். போராட்டம் நடைபெற்றபோது உதவியதாகக் கருத்தப்படும் காவல்துறை இப்போது இவர்களிடையே பிளவை மூடிவிட முழுவேகத்தில் சுழன்று வருகிறது. இதற்கு மத்திய உளவுத் துறை, உள்ளூர் காவல்துறை-உளவுத் துறை என ஏகமாக வல்லூறுகள் வட்டமிடுகின்றன. தேர்தல் நடைமுறைகளையே சவாலாக உருவாக்கி சுயேட்சைகளுக்கிடையே மோதலை உருவாக்கிறது காவல்துறை.

பெண்கள் உரிமையும் உம்மன் சாந்தியை நேரில் சந்தித்துப் பேசி போனஸ், கூலி உயர்வில் பெற்ற தற்காலிக வெற்றிகள் என்பனவற்றின் தொடர்ச்சியாக தேர்தலிலும் இறங்கியிருக்கிறது. ஆனால், தேர்தல், அதன் நடைமுறையில் பழம் தின்று கொட்டை போட்ட நரிகளையும் தின்று எலும்பையே செரித்த முதலைகளையும் எதிர்கொள்ளும் போது விஷச்சுழலில் சிக்கிக் கொள்வோம் என்பது அறியாதிருக்கிறார்கள். அறிவிக்கப்பட்டிருக்கும் கூலி உயர்வும் உறுதியாகாத இந்நிலையில், வாழ்நிலை படுமோசமாயிருக்கும் மூணாரில் இப்போது தேவைப்படுவதெல்லாம் சமரசத்துக்கு இடமற்ற, சரியான திசைவழியில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் புரட்சிகர தொழிற்சங்கம் ஒன்றே !!

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை.

  1. இந்த கொடுமைகளையும் காணொளி காட்சிகளாக (அம்மாவின் மரணதேசம் போல்) ஆவணபடுத்த வினவுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். இத்ற்கு களத்திற்கே நேரடியாக வந்து உதவ தயாராக உள்ளேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க