தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்!

வட ஆற்காடு மாவட்டங்களில் இன்னும் நடைமுறையில் இருக்கும் கொத்தடிமை முறை இதுபோன்ற குழந்தை திருமணங்களுக்கு காரணமாக இருக்கின்றது. கொத்தடிமைகளாக இருக்கும் பெற்றோர்கள், 15 வயதான பெண் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

டி மாதம் முடிவடைந்து வெறும் 5 நாட்களே ஆன நிலையில், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய தமிழ்நாட்டின் வட ஆற்காடு மாவட்டங்களில் நடக்கவிருந்த 41 குழந்தை திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த எண்ணிக்கை கூட அதிகாரிகளின் கவனத்திற்கு வந்த புகார்களின் அடிப்படையிலானது தான். வெளிவராத புகார்களையும் சேர்த்தால், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.

குழந்தை திருமணம் என்னும் இந்த அவலத்திற்குள் தள்ளப்பட இருந்த இந்த 41 பெண் குழந்தைகளுள் பெரும்பாலானோருக்கு 14 முதல் 16 வயது தான் ஆகிறது. இதில் ராணிப்பேட்டையில் தடுத்து நிறுத்தப்பட்ட 11 குழந்தை திருமணங்களில் இரண்டு பெண் குழந்தைகள் கருவுற்றிருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதில் அனைத்து குழந்தை திருமணங்களும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவை. குறிப்பாக குழந்தை திருமணங்கள் நடப்பதற்கான காரணங்களாக வறுமை, படிப்பறிவின்மை ஆகியவைதான் சொல்லப்படுகிறது. ஆனால் இந்திய நிலைமையில் இதன் பின்னணியில் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சிந்தனையும், வெட்டி கௌரவமும் இணைந்தே இருக்கிறது. ‘தங்களது குழந்தை காதல் வயப்பட்டுவிடும்; அதனால் தங்களது குடும்ப மானம் போய்விடும்’ என்ற அச்சத்தால் தான் தாங்கள் இவ்வாறு செய்ததாக பெற்றோர்கள் கூறுகின்றனர். இப்படி தங்களது ‘குடும்ப கௌரவ’த்திற்காக பெண் குழந்தைகளை அவர்களை விட பல ஆண்டுகள் வயது மூப்பான ஆண்களுக்குத் திருமணம் செய்து வைத்து குழந்தைகளின் வாழ்க்கையை நாசம் செய்கின்றனர்.


படிக்க: இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !


மேலும், இந்த மாவட்டங்களில் இன்னும் நடைமுறையில் இருக்கும் கொத்தடிமை முறை இதுபோன்ற குழந்தை திருமணங்களுக்கு காரணமாக இருக்கின்றது. கொத்தடிமைகளாக இருக்கும் பெற்றோர்கள், 15 வயதான பெண் குழந்தைகளை தங்களது உறவினர்கள் வீட்டில் நீண்ட காலத்திற்கு தங்க வைக்க முடியாது என்பதால் அவர்களுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

கொத்தடிமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளாக யாரும் தமிழ்நாட்டில் தண்டிக்கப்படவில்லை. கொத்தடிமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் நிவாரணமாவது  கிடைக்கும்.

2019-ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் குழந்தை திருமணங்கள் கணிசமான எண்ணிக்கையில் நடந்து வருகின்றன. ஆனால் பெரும்பாலான சம்பவங்களில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படுவதில்லை. “இனிமேல் குழந்தைக்கு 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்து வைக்க மாட்டோம்” என்று வாக்குறுதி அளிக்கும் பெற்றோர்களிடமே அந்த பெண் குழந்தைகள் ஒப்படைக்கப் படுகின்றனர்.

குழந்தை பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதால் அவர்கள் சமூக வாழ்க்கை மட்டுமல்ல அடிப்படை உடலியல் ஆரோக்கியமும் கெட்டுப் போகிறது. ஒரு குழந்தையே இன்னொரு குழந்தையை பெற்றெடுப்பதால் பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளாகப் பிறக்கின்றன. மேலும் கருவுற்ற குழந்தையும் உடலளவில் கடும் பாதிப்புக்களுக்கு உள்ளாகிறது.


படிக்க: குழந்தைத் திருமண ஒழிப்பு: சிறுபான்மையினரை ஒடுக்கும் கருவி!


வெறும் நான்கு மாவட்டங்களில் ஐந்து நாட்களில் 41 குழந்தை திருமணங்கள் நடத்த முயற்சித்திருக்கிறார்கள் என்றால் தமிழ்நாடு முழுவதும் எண்ணிக்கை எவ்வளவு அதிகமாக இருக்கும் என்றும் அந்த அவலத்தின் தாக்கம் எத்தனை பெரியதாக இருக்கும் என்றும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். “முன்னேறிய மாநிலம்”, “சமூக நீதி மண்” என்று கூறிக் கொள்ளும் தமிழ்நாட்டில் தான் இன்னும் குழந்தை திருமணங்களும் மலக்குழி மரணங்களும் கணிசமான அளவில் நடைபெற்றுவருகின்றன.

சமூகத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை யதார்த்தத்தில் இருந்து உண்மையைக்  கண்டறிய வேண்டும். குழந்தை திருமணம் என்பது ஒரு‌ சமூக குற்றம். அந்த குற்றம் நடப்பதற்கான காரணங்களைக் கிள்ளியெறியாமல், வெறும் அதிகாரிகளின் தலையீட்டின் மூலமாக மட்டுமே அதை தடுக்கமுடியாது. குழந்தை திருமணத்திற்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் வறுமை, படிப்பறிவின்மை, நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சிந்தனை, மதவாதம், சாதியவாதம் என அனைத்து பிரச்சினைகளையும் ஒழிக்காமல் குழந்தை திருமணங்களை ஒழிக்க முடியாது. அதற்கு நாம் உழைக்கும் மக்களாக ஒன்றிணைந்து இந்த சமூகத்தை வேர்மட்ட அளவில் ஜனநாயகப்படுத்தும் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.


சீனிச்சாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க