“மாடு மேய்க்கும் நிலம்தான் முதலில் வேலியாகும்” என்பார்கள். அதாவது மக்களுக்குச் சொந்தமான சொத்து ஏகாதிபத்தியங்களின் பார்வையில் பட்டால், ஏகபோக தரகு முதலாளிகளை வைத்து அதைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்; சந்தையாக மாற்றி மூலதனத்தை அதிகரிக்கும்.
இதற்கான சமீபத்திய உதாரணம், “தி கிரேட் நிகோபார் திட்டம்”.
பல்லாயிரம் ஆண்டுகளாக பழங்குடி மக்களுக்குச் சொந்தமான காட்டில் ஆழ்கடல் துறைமுகம் (Transshipment Port), பன்னாட்டு விமான நிலையம், மின்நிலையம், புதிய நகரம் (Township) ஆகியவற்றை உருவாக்குவதுதான் “தி கிரேட் நிகோபார் திட்டம்” ஆகும். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த “ஏஇகாம்” (Aecom) என்ற பன்னாட்டு உள்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில், நிதி ஆயோக் ஆணையிட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்து, ஏகபோக தரகு முதலாளிகளான அம்பானி – அதானியின் வளர்ச்சிக்காக, ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசு “தி கிரேட் நிகோபார் திட்ட”த்தை செயல்படுத்தப் போகிறது.
பிப்ரவரி 2026-இல் ஆறு பேர் கொண்ட அமர்வால் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் 2022-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியில் தலையிடவும் மறுத்துள்ளது.
இந்தியாவின் தென்கோடி முனையான – கன்னியாகுமரியை விடவும் தாழ்வான – அந்தமான் மற்றும் நிகோபார் தீவுக்கூட்டத்தின் கடைசியில் அமைந்துள்ள ஒரு மிகச்சிறிய நிலப்பரப்புதான் கிரேட் நிகோபார்.
தெற்கு அந்தமான், வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மற்றும் நிகோபார் என மூன்று மாவட்டங்களாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. கிரேட் நிகோபார் தீவில் (Great Nicobar Island) வருவாய் நிலமாக ஒதுக்கப்பட்ட பகுதியைத் தவிர, மற்ற பெரும்பான்மையான காடுகள் மற்றும் கடலோரப் பகுதிகள் “பழங்குடியினர் காப்பகமாக” (Tribal Reserve) அறிவிக்கப்பட்டுள்ளன.
கிழக்குக் கடற்கரையில் உள்ள ஏழு வருவாய் கிராமங்களைத் தவிர, கிரேட் நிகோபார் தீவின் கிட்டத்தட்ட முழுப் பகுதியும் இரண்டு பழங்குடி சமூகங்களுக்கான காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வெறும் 229 பேரை மட்டுமே கொண்ட, மிகவும் நலிவடைந்த பழங்குடிக் குழுவான (PVTG) ஷோம்பென் (Shompen) மக்களும்; சுமார் 200 – 300 பேரைக் கொண்ட பட்டியல் பழங்குடியினரான தெற்கு நிகோபரேஸ் (Nicobarese) மக்களும் அங்கு வசிக்கின்றனர்.
பாசிச பா.ஜ.க. இந்தப் பகுதியைத்தான் கார்ப்பரேட்களின் வேட்டைக்காடாக மாற்றி அங்குள்ள பழங்குடியினரின் வாழ்வாதாரங்களைப் பறித்து அவர்களை பலியிடப் போகிறது.
கிரேட் நிகோபர் மேம்பாட்டுத் திட்டம்
கிரேட் நிகோபார் மேம்பாட்டுத் திட்டமானது, அந்தத் தீவை ஒரு முக்கிய உத்திசார், தளவாட மற்றும் பொருளாதார மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ரூ.81,000 கோடி மதிப்பிலான ஓர் உள்கட்டமைப்பு முன்னெடுப்பாகும்.
தீவின் மொத்தப் பரப்பளவு 92,100 ஹெக்டேர் என்பதைக் கருத்தில் கொண்டால், இந்தத் திட்டத்துக்காக தீவின் 14 சதவிகிதத்திற்கும் அதிகமான பகுதி கையகப்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.
ரூ. 81,000 கோடி மதிப்பிலான ஒரு மாபெரும் திட்டமாகச் சந்தைப்படுத்தப்படும் இந்தத் திட்டம், கலாத்தியா வளைகுடாவில் ஒரு சரக்கு மாற்றுத் துறைமுகம், ஒரு சர்வதேச விமான நிலையம், ஒரு மின் உற்பத்தி நிலையம் மற்றும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வசிப்பிடமாக அமையவிருக்கும் ஒரு பரந்த குடியிருப்புப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
கிரேட் நிகோபார் மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கம்
மலாக்கா நீரிணையின் மேற்குப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள கிரேட் நிகோபார், உலகின் மிகவும் பரபரப்பான கடல்வழிப் பாதைகளில் ஒன்றின் ஓரத்தில் அமைந்துள்ளது.
இந்தப் பாதையின் வழியாக, மேற்காசியாவிலிருந்து கிழக்கு ஆசியாவுக்கு அத்தியாவசிய எரிசக்தி உட்பட உலகளாவிய வர்த்தகத்தின் கணிசமான பங்கு செல்கிறது.
அமெரிக்க அடிவருடிகளான அம்பானி – அதானி தலைமையிலான ஏகபோக தரகு முதலாளித்துவ வர்க்கத்துக்கு இது வெறும் அருகாமை மட்டுமல்ல. மூலதனத்தைக் குட்டிப் போட்டு குட்டிப் போட்டு அதிகரிக்கச் செய்யும் ஒரு மூலோபாய வாய்ப்பு.
அதாவது, வெளிப்படையாக மோதல்கள் இன்றி, சீனாவின் கடல் ஆதிக்கத்தை, கடல் கட்டுப்பாட்டைக் கவனிக்கவும், கண்காணிக்கவும், சாத்தியமானால் செல்வாக்கு செலுத்தவும் வாய்ப்பளிக்கும் பகுதி இதுவாகும்.
சீனாவின் கடல் விரிவாக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பதிலளிக்கும் விதமாக இந்தியாவின் கிரேட் நிகோபார் பகுதி அமையப் போகிறது. இது இந்தியா தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கையாகும். அதேபோல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்தியப் பெருங்கடல் மேலாதிக்கத்துக்கும் இத்திட்டம் வழிவகை செய்யும்.
மறுகாலனிக்கச் சூழலில் இந்தோ-பசிபிக் கடற்பகுதிகள் புவிசார் அரசியல் கட்டமைப்பின் இலக்குகளாக மாறி வருகின்றன. சரக்கு போக்குவரத்துகள் நிலம், வான்வழி ஆகியவற்றின் வழியாக நடைபெறுவதை விட கடல் வழியாக நடைபெறும் போதே பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலாபம் இரட்டிப்பாகி, மும்மடங்காகி, ஆறுமடங்காக அதிகரிக்கும்.
இதனால்தான் முக்கியமான துறைமுகப் பகுதிகளை ஏகாதிபத்தியங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றன.
கடந்த சில பத்தாண்டுகளில் பாகிஸ்தானின் குவாதர் முதல் இலங்கையின் ஹம்பாந்தோட்டா, மியான்மரின் கியாங்பியூ மற்றும் ஜிபூட்டியில் உள்ள ஒரு வெளிநாட்டு இராணுவத் தளம் வரை இந்தியப் பெருங்கடல் முழுவதும் துறைமுகங்கள் மற்றும் தளவாட மையங்களின் வலையமைப்பை சீனா சீராகக் கட்டமைத்துள்ளது.
இந்த வலையமைப்பு, முக்கிய எரிசக்தி கடல்வழிப் பாதைகளைப் பாதுகாப்பதற்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது புவிசார் அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்குமான சீனாவின் “முத்துக்களின் சரம்” (String of Pearls) முயற்சியின் ஓர் அங்கம்.
சீனாவில் தொடங்கி சூடான் வரையிலான கடல் வழித்தடங்களைப் பாதுகாக்கும் ஒரு புவிசார் அரசியல் கோட்பாடே “முத்துக்களின் சரம்”. மலாக்கா நீரிணை போன்ற முக்கிய வழிகளில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த சீனாவுக்கு இது பயன்படுகிறது.
2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, சீனாவின் எண்ணெய் இறக்குமதியில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமானவை, அதாவது ஆண்டுக்கு சுமார் 312 பில்லியன் டாலர் மதிப்புள்ளவை, மலாக்கா நீரிணை வழியாகவே செல்கின்றன. இந்த நீரிணை அதன் குறுகிய இடத்தில் வெறும் 2.8 கி.மீ. அகலம் மட்டுமே கொண்டது.
ஆண்டுதோறும் சுமார் 3.5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய வணிகம் – அதாவது சீனாவின் மொத்த கடல்வழிப் போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்கு – இந்த நீர்வழிகள் வழியாகவே பயணிக்கிறது.
ஒவ்வொரு நாளும், சீனா 15 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் எண்ணெய்யைப் பயன்படுத்துகிறது, அதில் 3.7 மில்லியன் பீப்பாய்கள் மட்டுமே தரைவழி குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.
தனக்குப் போட்டியாக வளர்ந்து வரும் சீனாவிற்கு எதிரான, குறிப்பாக தெற்காசியப் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகத்தான் அமெரிக்க அடிவருடியான பாசிச பா.ஜ.க. அரசு அமல்படுத்தும் இத்திட்டத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் பார்க்கிறது.
இந்திய தரகு கும்பலின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியா?
18 முதல் 20 மீட்டர் வரையிலான இயற்கையான ஆழமுள்ள துறைமுகத்தில் கட்டப்படவிருக்கும், கலாத்தியா வளைகுடாவில் அமையவுள்ள இந்தச் சரக்கு மாற்றுத் துறைமுகம், 2028-ஆம் ஆண்டுக்குள் 4 மில்லியன் டி.இ.யு-க்களையும் (TEU – Twenty-foot Equivalent Unit), 2058-ஆம் ஆண்டுக்குள் 16 மில்லியன் டி.இ.யு-க்களையும் கையாளும் நோக்கம் கொண்டது.
இந்தவகையில்தான் கலாத்தியா வளைகுடா துறைமுகம், சிங்கப்பூருக்குப் போட்டியாக ஒரு சரக்குப் போக்குவரத்து மையமாக நிலைநிறுத்தப்படுகிறது.
மலாக்கா நீரிணையின் தெற்கு முகப்பில் சிங்கப்பூர் அமைந்துள்ளதுடன், உலகின் மிக முக்கியமான சரக்கு மாற்று மையங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது
தற்போது, இந்தியாவின் சரக்குகளில் 25 சதவிகிதம் வெளிநாட்டுத் துறைமுகங்கள் வழியாகவே செல்கின்றன. இந்தியாவின் கடல்வழிப் போக்குவரத்து அமைப்பில் ஒரு கட்டமைப்பு இடைவெளி உள்ளது. நவீன உலக வர்த்தகத்தின் முதுகெலும்பாக விளங்கும் “மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களை” கையாளுவதற்கு பெரும்பாலான முக்கிய இந்தியத் துறைமுகங்களுக்குத் தொடர்ச்சியான, அதிக மூலதனம் தேவைப்படும் தூர்வாரும் பணிகள் தேவைப்படுகின்றன.
இந்தியத் துறைமுகங்களால் இந்தக் கப்பல்களை நேரடியாகக் கையாள முடியாததால் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் பொருட்களுக்கு அடிக்கடி இடமாற்றம் தேவைப்படுகிறது. அவை முதலில் ஒரு சிறிய இந்தியத் துறைமுகத்திற்குச் சென்று, பின்னர் அங்கிருந்து ஒரு பெரிய மையத்திற்கு மாற்றப்படுகின்றன – பெரும்பாலும் கொழும்பு, சிங்கப்பூர் அல்லது மலேசியாவின் போர்ட் கிளாங் போன்ற வெளிநாடுகளில் உள்ள இடங்களுக்கு மாற்றப்படுகின்றன.
இப்படி இரு இடங்களுக்கு மேல் சரக்குகளை ஏற்றி இறக்குவதால் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு லாபத்தின் அளவு குறைகிறது. எனவே, இது ஒரு தேசியப் பலவீனமாகவும், சரக்குப் போக்குவரத்துத் திறமையின்மையாகவும் உள்ளதாக தரகு முதலாளித்துவ வர்க்கம் வருத்தப்படுகிறது.
இந்நிலை மாறி சரக்குகள் கலாத்தியா வளைகுடாவுக்கு மாற்றப்படும் போது, இந்தியத் தரகு முதலாளிகள் வளம் பெறுவதோடு, தங்கள் இலாபத்தின் அளவையும் மும்மடங்காகப் பெருக்க முடியும்.
ஏனெனில், கலத்தியா வளைகுடா, 20 மீட்டருக்கும் அதிகமான இயற்கையான மிதப்பு ஆழத்தைக் கொண்டுள்ளது. இது, எந்தவிதமான தூர்வாரும் பணியுமின்றி, கடலில் மிதக்கும் மிகப்பெரிய கப்பல்கள் செல்வதற்குப் போதுமான ஆழமாகும்.
இப்படி தரகு முதலாளிகளான அம்பானிக்கும் அதானிக்கும் ஆதரவாக இருக்கும் இத்திட்டத்தை பாசிச மோடி அரசாங்கம் முன்னேற்றத்தின் சின்னமாக முன்னிறுத்துகிறது.
நாட்டின் வளர்ச்சி என்ற
போலித்தனத்திற்கு பின்னிருக்கும் பேரழிவு
உண்மையில், இந்த முன்னேற்றத்திற்குப் பின்னால் ஏற்படும் சூழலியல் தாக்கம் மிகவும் ஆபத்தானது. தெற்காசியாவில் எஞ்சியிருக்கும் கடைசி, சிதைக்கப்படாத வெப்பமண்டல மழைக்காடுகளில் கிரேட் நிகோபார் தீவும் ஒன்று. பூமியில் எஞ்சியிருக்கும் பல முக்கியமான பகுதிகளில் ஒன்றான இந்த இடத்தில், ‘வளர்ச்சி’ என்ற பெயரில், ஒரு மாபெரும் சூழலியல் அழிவைத்தான் பாசிச பா.ஜ.க அரங்கேற்றத் துடிக்கிறது.
நிகோபார் என்பது ஏதோவொரு சாதாரண “காட்டு நிலம்” அல்ல. அது, அசாதாரணமான செழுமையும் அரிதான தன்மையும் கொண்ட, உயிருள்ள, சுவாசிக்கும் ஒரு சூழலியல் அதிசயம். இந்தோ – பர்மா பல்லுயிர் பெருக்கப் பகுதிக்குள் அமைந்துள்ள இத்தீவில், முதன்மை (பழங்கால) மழைக்காடுகள் உள்ளன. அதாவது, பெரிய அளவிலான மனித இடையூறுகள் இன்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பரிணமித்து வந்த சுற்றுச்சூழல் மண்டலங்கள் அவை. இந்தக் காடுகள் மிகப்பெரிய கார்பன் சேமிப்புக் கிடங்குகளாகவும் உள்ளன.
இது போன்ற அடர்ந்த வெப்பமண்டல மழைக்காடுகள், தரைக்கு மேலுள்ள உயிர்மப் பொருளிலும் மண்ணிலும் பெருமளவிலான கார்பனைச் சேமித்து வைக்கும். காலநிலை மாற்றத்துக்கு எதிரான இயற்கை அரண்களாகச் செயல்படும். அவற்றின் அழிவு, ஒட்டுமொத்த மனித குலத்தின் அழிவுக்கும் வழிவகுக்கும் பேராபத்து கொண்டது.
அப்படியிருந்தும் அம்பானி – அதானியின் கொள்ளைக்காகவும், இந்தியப் பெருங்கடலில் உள்ள மற்ற மாபெரும் துறைமுகங்களுடன் போட்டியிடுவதற்காகவும் ஓர் உலகளாவிய சரக்கு மாற்று மையத்தை உருவாக்க “இந்தத் தியாகம் அவசியம்” என்று நமக்கு பாசிச பா.ஜ.க பாடம் நடத்துகிறது.
இந்த ‘தியாகப் பாடம்’ புதிதல்ல. ஏகாதிபத்தியங்கள் தொடர்ச்சியாகச் செய்து வருபவைதான்.
சான்றாக, பனாமா கால்வாய் உலக வர்த்தகத்தை மாற்றியமைத்தது. ஆனால், அதன் கட்டுமானத்தின் போது பெரும் சூழலியல் மற்றும் மனித இழப்புகளை ஏற்படுத்தியது. அதேபோல், சிங்கப்பூர் உலகளாவிய துறைமுக மையமாக உருமாறியதில், விரிவான நில மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை கடற்கரைகளையும் கடல்சார் சூழல் அமைப்புகளையும் மாற்றியமைத்தன.
இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளம், உள்ளூர் மக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயர வைத்து உருவாக்கப்பட்டதுதான்.
மிகச் சமீபத்தில் தென் சீனக் கடலின் தென்பகுதியில் உள்ள ஸ்ப்ராட்லி தீவுகளில் (Spratly Islands) தனக்குச் சொந்தமான ஏழு பவளப் பாறைகளின் மீது, சீனா கிட்டத்தட்ட 3,000 ஏக்கர் மொத்தப் பரப்பளவில் செயற்கைத் தீவுகளைக் கட்டியுள்ளது. மேலும், பாரசெல் தீவுகளின் படிப்படியான வளர்ச்சியும் நடைபெற்று வருகின்றன. இவை 3,000 மீட்டர் நீள ஓடுபாதைகள், ஏவுகணை அமைப்புகள் மற்றும் மேம்பட்ட ரேடார் மற்றும் கண்காணிப்பு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய செயல்பாட்டு இராணுவ மையங்களாகும்.
எனவே, புவிசார் அரசியலில், ஒரேயொரு உள்கட்டமைப்புத் திட்டம் ஒரு முழுப் பிராந்தியத்தின் கணக்கீடுகளையே மாற்றிவிடும். மாபெரும் நிகோபார் தீவு மேம்பாட்டுத் திட்டம் அத்தகைய ஒரு தருணம். இந்தியாவின் தென்கோடித் தீவை ஒரு வர்த்தக மற்றும் இராணுவ மையமாக மாற்றுவதற்கான, 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த பிரம்மாண்டமான முயற்சி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகாரச் சமநிலையை அடியோடு மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
இதை அமெரிக்க ஏகாதிபத்தியம் உணர்ந்திருப்பதால்தான் தனது அடிவருடியான பாசிச மோடியை வைத்து, அம்பானி – அதானியை வைத்து கிரேட் நிகோபார் தீவை அபகரிக்க முயல்கிறது.
படிக்க: பழங்குடிகள், சுற்றுச்சூழலை காவு கொடுக்கும் ‘கிரேட் நிகோபார் திட்டம்’
எனவேதான் 13 நாடுகளைச் சேர்ந்த இனப்படுகொலை நிபுணர்கள், பிப்ரவரி 2024-இல், இத்திட்டம் “ஷோம்பென் மக்களுக்கு ஒரு மரண தண்டனையாக மாறக்கூடும்” என்று எச்சரித்துள்ளனர்.
முதலாளித்துவ அறிவுஜீவிகள் மற்றும் முதலாளித்துவ ஆதரவாளர்களைப் பொறுத்தவரை, காடுகள் மற்றும் சூழல் மண்டலங்களின் இழப்பில் கட்டப்படும் தீவிரமான தொழில்மயமாக்கல், விரைவுச்சாலைகள், புல்லட் ரயில்கள், அணைகள் மற்றும் பிரம்மாண்டமான உள்கட்டமைப்புத் திட்டங்கள் மட்டுமே வளர்ச்சிக்கான அறிகுறிகள். எனவே ஊடகங்கள் வழியாக இக்கருத்தியலையே விதைக்கின்றனர்.
இந்த அயோக்கியத்தனத்துக்கு பித்தளை முலாம் பூசும் விதமாக கிரேட்டர் நிகோபாரில் அழிக்கப்படும் பகுதிக்கு ஈடாக ஹரியானா போன்ற தொலைதூர மாநிலத்தில் காடுகளை வளர்க்க மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MEFCC) முன்மொழிந்ததை, மக்கள் மீதுள்ள மோடி அரசின் அன்பு என பிதற்றுகிறார்கள்.
மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் கூட இக்கூற்றை நம்பமாட்டான். ஏனெனில் இந்த ‘ஈடு செய்யும் நடவடிக்கை’ சாத்தியமற்றது.
ஒருவேளை ஹரியானாவின் சில நிலங்களில் காடுகள் வளர்க்கப்பட்டாலும்கூட, கிரேட் நிகோபார் காடுகளில் உள்ள வளமான பல்லுயிர் இழப்பை அவற்றால் ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது.
அனைத்துக்கும் மேலாக இத்தகைய சாத்தியமற்ற அளவில் ஈடுசெய்யும் காடு வளர்ப்பை முன்மொழிந்த ஹரியானாவில், தற்போதுள்ள ஆரவல்லி காடுகள், கொள்ளைக்கார ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கைக்கு ஏற்கெனவே இரையாகிவிட்டன என்பது வெட்டவெளிச்சமானதுதான்.
கடந்த 15 ஆண்டுகளில் உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல், ஏகபோக தரகு முதலாளிகளின் இலாபத்துக்காக இந்தியா முழுக்க 3,00,000 ஹெக்டேருக்கும் அதிகமான வன நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலும் இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் நாடாளுமன்றத்துக்கு வழங்கிய தரவுகள்தான். இவை ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
கிரேட் நிகோபர் என்பது ஒரு நிலம் அல்ல, அது பூமிப்பந்திற்கான உயிர் இருப்பின் அங்கம், அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை – பண்பாட்டின் பிண்ணிப்பிணைந்த ஒரு பகுதி. இதனை ஏகபோக போட்டிக்காகவும், அம்பானி – அதானிகளின் வேட்டைக்காகவும் அழிக்கத் துடிக்கும் பா.ஜ.க. பாசிச கும்பலுக்கு எதிராக அனைத்து தரப்பிலும் இருந்து குரலெழுப்ப வேண்டும்.
![]()
கவின்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads










