Saturday, May 25, 2024
முகப்புசெய்திஇந்தியாஎதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயகமின்றி நடந்து கொண்டிருக்கும் தேர்தல்

எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயகமின்றி நடந்து கொண்டிருக்கும் தேர்தல்

ஒப்புகைச்சீட்டை எண்ணி அதனை வாக்கு இயந்திரத்துடன் ஒப்பிட்டு காட்ட வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களின் கோரிக்கை. இதை செய்வதில் என்ன சிக்கல்?

-

பாசிச மோடி கும்பலின் தேர்தல் நலனுக்காக ஏழு வாரங்களுக்கும் மேலாக நடத்தப்படும் மக்களவை தேர்தலின் முதல் கட்டம் நேற்று (19.04.2024) முடிவடைந்துள்ளது. மீதமுள்ள ஆறு கட்ட தேர்தல் ஜூன் மாதம் முதல் நாள் வரை நடக்க உள்ளது. தேர்தல் நடந்துகொண்டிருக்கும் அதேவேளையில், வேறெங்கும் காண முடியாதக் காட்சியாக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி “வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுடன் முழுமையாக ஒப்பிட்டு சரிபாா்க்க உத்தரவிடக்கோரி” உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) என்பது கட்டுப்பாட்டு அலகு மற்றும் வாக்குப்பதிவு அலகு என்ற இரண்டு அலகுகளை கொண்ட இயந்திரம். இந்த இயந்திரத்தில் உள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்துவர். வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை பாதை எனப்படும் விவிபேட் (VVPAT) என்பது வாக்காளர் வாக்கு செலுத்தி முடிந்தவுடன், அவர் வாக்களித்த வேட்பாளரின் பெயர், வரிசை எண், கட்சியின் சின்னம் ஆகியவற்றைக் கொண்ட காகிதச் சீட்டை அச்சிடும் இயந்திரமாகும். சுருக்கமாக சொல்வதெனில் இது ஒரு அச்சுப்பொறி (printer) போன்றது.

தற்போது மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அதேவேளையில், ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஐந்து சராசரியாக விவிபேட்களின் ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்பட்டு வாக்கு இயந்திரங்களின் எண்ணிக்கையோடு ஒத்துப்போகிறதா என்று சோதிக்கப்பட வேண்டும். இது பெரும்பாலும் முறையாக பின்பற்றப்படுவதில்லை. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மோசடியாக பயன்படுத்த முடியும், ஆனால் விவிபேட்-களில் மோசடி செய்ய முடியாது என்பது பெரும்பான்மையினரின் வாதம்.

அதிலும், தேர்தல் ஆணையம் மோடி அரசின் அடிமையாகியுள்ளது; மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் “பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்” நிறுவனத்தில் நான்கு பா.ஜ.க. வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டது; தனியார் கம்பெனிகளை வாக்குப்பதிவு இயந்திரங்களையும் விவிபேட்-களையும் கையாள அனுமதித்தது; 2019 மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பா.ஜ.க. மோசடி செய்தது அம்பலமானது போன்ற காரணங்களால், விவிபேட்-களில் உள்ள வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்பது பல்வேறு ஜனநாயக சக்திகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது.


படிக்க: எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் தொடுக்கும் பாசிச மோடி அரசு!


இந்த வாதத்தை முன்வைத்தே தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால், இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்தியாவில் தோ்தல் என்பது மாபெரும் பணி என்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வைப்பதன் மூலம் இந்த தேர்தல்முறை வீழ்ச்சியடைய முயற்சிக்க வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளது. அதாவது, எந்தவித அச்சமும் தடையுமின்றி ஒட்டுமொத்த தேர்தல் கட்டமைப்பையும் பாசிசமயமாக்கிவரும் பா.ஜ.க-வால் இந்தியாவின் தேர்தல் முறை வீழ்ச்சி அடையவில்லையாம். அதில் உடனடியாக சில சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரும் எதிர்க்கட்சிகளால்தான் இந்த முறை வீழ்ச்சியடையப் போகிறதாம்.

இதுகுறித்து புதியதலைமுறை தொலைக்காட்சியில் விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்துகொண்ட ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரனிடம் நூறு சதவிகிதம் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற கோரிக்கை சரியானதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பாலச்சந்திரன், “விவிபேட் ஒப்புகைச்சீட்டுகள் நூறு சதவிகிதம் எண்ணப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என்று கோரியதற்கு தேர்தல் ஆணையம், மாதிரி ஆய்வு (Sampling Survey) என்ற முறையை கொண்டு வந்தது. அதன்பிறகு, வாக்கு இயந்திரத்தில் வாக்குகளை எண்ணி முடிவு அறிவித்த பிறகுதான் விவிபேட்-இன் ஒப்புகைச்சீட்டுகளை எண்ணுவோம் என்றது. அதன்பிறகு, இனி வாக்கு இயந்திரம் குறித்து யாரேனும் குறை சொன்னால் அதனை குற்ற நடவடிக்கையாக கருத வேண்டும் என்கிறது. இதனையெல்லாம் சமூக உலகில் பொருத்தக்கூடாது. ஜனநாயகத்தில், தான் யாருக்கு ஓட்ட போட்டோம் என்று தெரிந்துகொள்வதும் அதற்கான ஆதாரம் இருக்க வேண்டும் என்பதும் அடிப்படை உரிமை” என்றார்.

மேலும், “100 சதவிகிதம் அனைத்து தேர்தலிலும் ஒப்புகைச் சீட்டை எண்ண வேண்டும். இதனை எண்ணுவதற்கு பல நாட்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. சக்தர் என்று ஒரு தலைமை தேர்தல் அதிகாரி இருந்தார். அவர் இந்தியா முழுக்க ஒரே நாளில் தேர்தலை நடத்திக் காட்டினார். இவர்கள் (தற்போதைய தேர்தல் ஆணையம்) ஏழு வாரத்திற்கு தேர்தலை நடத்துகின்றனர். ஏழு வாரம் தேர்தலை நடத்திவிட்டு (ஒப்புகைச் சீட்டை எண்ணும்) ஒரு நாளில்தான் குடி முழுகப்போகிறதா? மூன்று நாள் ஆனாலும் எந்த குடி முழுகப்போகிறது? எந்த குடியும் முழுகாது. ஜனநாயகம் என்ற குடி உயிரோடு இருக்கும். தேர்தல் ஆணையத்தின் மீதும் அவர்களின் நேர்மையின் மீதும் எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. ஜனநாயகத்தின் ஆணி வேரே தேர்தல்கள் வெளிப்படத் தன்மையுடன் நடத்தப்படுகிறதா என்பதில்தான் உள்ளது. இந்த வெளிப்படைத் தன்மைக்கு எதிராக எத்தனை காரியம் செய்ய முடியுமோ அதனையெல்லாம் தேர்தல் ஆணையம் செய்துவிட்டது” என்றார்.

பாலச்சந்திரனை தொடர்ந்து பேசிய அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், வழக்கு விசாரணையின்போது “வாக்குச்சீட்டு முறைக்கு திரும்புவது பிற்போக்கானது” என்ற உச்சந்நீதிமன்றத்தின் கருத்தை கடுமையாக எதிர்த்தார். “இங்கு யாரும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பும்படி சொல்லவில்லை. ஒப்புகைச்சீட்டை எண்ண வேண்டும் என்பதுதான் கோரிக்கை. கேட்காத கோரிக்கையை சொல்லி இது பிற்போக்கானது என்பது காற்றில் கம்பு சுற்றுவது போல் உள்ளது. கேட்பதை விட்டுவிட்டு கேட்காததை பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஒப்புகைச்சீட்டை எண்ணி அதனை வாக்கு இயந்திரத்துடன் ஒப்பிட்டு காட்ட வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களின் கோரிக்கை. இதை செய்வதில் என்ன சிக்கல்? 10.5 லட்சம் வாக்குச் சாவடிகளும் 17 லட்சத்து 30 ஆயிரம் விவிபேட் இயந்திரங்களும் உள்ளன. இதனை ஹேக் செய்ய முடியாதுதான். ஆனால் மாற்றியமைக்க (manipulate) முடியும் என்பதை எத்தனையோ பேர் நிரூபித்து, சந்தேகத்தை கிளப்பி இருக்கிறோம். அந்த சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கான நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கிறது. பி.ஏ. கணினி அறிவியல் படித்த மாணவனால் கூட வாக்கு இயந்திரத்தை மாற்றியமைக்க முடியும்” என்றார்.


படிக்க: எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் தொடுக்கும் பாசிச மோடி அரசு!


பாலச்சந்திரன், பொன்ராஜ் போன்றோர் மட்டுமின்றி இந்தியாவில் பல பிரிவினரும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது அவநம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனையெல்லாம்விட இத்தேர்தலில் போட்டியிடும் இந்தியாவின் ஆகப் பெரும்பான்மையான கட்சிகளும் மின்னணு வாக்கு இயந்திரங்களின் மீது தங்களின் அவநம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால், இந்திய தேர்தல் ஆணையமோ பா.ஜ.க-வின் எடுபிடியாக இருந்துகொண்டு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுக்கிறது. உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையத்திற்கும் பாசிச பா.ஜ.க-விற்கும் துணைப்போகிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை இந்தியா கூட்டணி ஆதாரவாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆனால் சுயமுரண்பாடாக, இந்தியா கூட்டணி ஆதரவாளர்களும் இந்தியா கூட்டணி கட்சியினரும் தேர்தல் ஆணையத்தின் மீதும் வாக்கு இயந்திரத்தின் மீதும் நம்பிக்கை இல்லை என்று சொல்லும் அதேவேளையில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு போடுங்கள் என்றும் மக்களை பார்த்து கேட்கிறனர். இதன் பொருள் என்ன?

இந்த அணுகுமுறையை தேர்தல் ஆணையம், மின்னணு வாக்கு இயந்திரம் குறித்தான தனித்த விசயமாக பார்க்கக் கூடாது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா, பாகிஸ்தானில் நவாஸ் ஷெரிஃப், ரஷ்யாவில் புதின் போன்றோர் அந்தந்த நாடுகளின் தேர்தல்களின்போது செய்ததை போல, இந்திய பிரதமர் மோடியும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி தேர்தலை நடத்திக் கொண்டிருக்கிறார். பாரத ராஷ்டிரிய சமீதி கட்சியின் தலைவர் கவிதா, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என அடுத்தடுது எதிர்க்கட்சிகளை சிறையிலடைத்து வருகிறார். மஹூவா மொய்த்ரா, ஆ.ராசா உள்ளிட்டோரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வங்கிக் கணக்கை முடக்கி தேர்தலில் போட்டியிடவிடாமல் முடக்குகிறது பாசிச மோடி அரசு.

மொத்தத்தில், எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயகமே வழங்காத ஒரு தேர்தலை நடத்தி கொண்டிருக்கிறது மோடி-அமித்ஷா கும்பல். தேர்தல் என்பதே அனைத்து கட்சிகளும் போட்டியிடுவதற்கு சமமான வாய்ப்புகளையும் ஜனநாயகத்தையும் வழங்குவதுதான். ஆனால், தற்போது நடந்துகொண்டிருப்பதை தேர்தல் என்று சொல்லுவதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது? அப்படி சொல்வதற்கான அனைத்து முகாந்திரங்களும் தகர்ந்துவிட்டது. இதனை நன்கு அறிந்து வைத்திருந்தாலும், பாசிச கும்பலை அவ்வபோது அம்பலப்படுத்துவதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்காமல், எதுவுமே நடக்காதது போல மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்.


சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க