Tuesday, December 10, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்எதிர்க்கட்சிகள் இல்லாமல் தேர்தல் நடத்த மோடி திட்டமா?

எதிர்க்கட்சிகள் இல்லாமல் தேர்தல் நடத்த மோடி திட்டமா?

-

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த மார்ச் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் என இரண்டு மாநில முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். காங்கிரஸ் கட்சி வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. மோடி அரசு மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகள் இல்லாமல் தேர்தலை நடத்துவதற்கான முயற்சியா? என்ற கேள்வியை எழுப்புகிறது. இதைப் எப்படி பார்ப்பது?

திர்க்கட்சிகளை வேட்டையாடிவரும் பா.ஜ.க-வின் பாசிசத் தாக்குதல்கள் தேர்தல் முடியும்வரை ஓயப்போவதில்லை என்பதையே பா.ஜ.க. கும்பல் அடுத்தடுத்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. மோடிக் கும்பலால் பொய் குற்றச்சாட்டில் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹூவா மொய்த்ரா-விற்கு தற்போது அந்நியச் செலவாணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் அமலாக்கத்துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக  கொல்கத்தாவின் அலிபூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில், பண மோசடி வழக்கில் சி.பி.ஐ. சோதனை நடத்தியிருந்தது. இதிலிருந்து, மஹுவாவையும் கைது செய்து சிறையில் அடைப்பதற்கு மோடிக் கும்பல் தீவிரமாக வேலை செய்து வருகிறது என்பது தெளிவாகிறது.

பஞ்சாப் மாநிலத்தில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு பிறகு பாஞ்சாப் அரசின் ‘‘கலால் கொள்கை’‘ முறைக்கேட்டை அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என பா.ஜ.க. கும்பல் பிரச்சாரம் செய்து வருகிறது. இன்னொருபுறம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தில்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, அடுத்தடுத்து எதிர்க்கட்சியினர் யாரை வேண்டுமானலும் கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்ற புதிய நிலையை உருவாக்கி வருகிறது, மோடி கும்பல்.

அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மத்திய புலனாய்வு அமைப்பு, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை தனது ஏவல் படையாக பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை செயலிழக்க வைத்து, எதிர்க்கட்சிகள் இல்லா தேர்தலை நடத்துவதற்கான முயற்சியில் பா.ஜ.க. கும்பல் ஈடுபட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. இவற்றையெல்லாம் மீறி எதிர்க்கட்சிகள் தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும் என்றாலே வீதியில் இறங்கி போராட வேண்டும் என்ற நிலைக்கு பா.ஜ.க. கும்பல் எதிர்க்கட்சிகளை தள்ளியிருக்கிறது என்பதே எதார்த்தம்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க