கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதான வாக்காளர்களின் நம்பிக்கை குறைந்துள்ளது என்று சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி என்ற நிறுவனம் நடத்திய கருத்துகணிப்பு கூறுகிறது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மார்ச் 28 முதல் ஏப்ரல் 8 வரை கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, அசாம், பீகார், குஜராத், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பில் 10,019 பேர் கலந்து கொண்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கையிழந்தவர்களின் சதவிகிதம் ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக முடிவுகள் கூறுகின்றன. இந்த கருத்துக்கணிப்பு எடுக்க மேற்கொண்ட ஆய்வு முறையானது இந்திய வாக்காளர்களின் குறுக்குவெட்டு தோற்றத்தை முழுமையாகப் பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை குறித்து கடந்த 2019-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவிற்கும் இப்போது நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவிற்கும் பாரிய அளவில் மாற்றம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2019-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், இந்திய வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் மீது பெரிதளவு நம்பிக்கை வைத்திருந்தனர். இப்போது நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் நம்பிக்கை என்பது 51 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதேபோல், தேர்தல் ஆணையத்தின்மீது நம்பிக்கையில்லாதவர்களின் சதவிகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 7 சதவிகிதத்தில் இருந்து 14 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
படிக்க: நயினார் (நாலுகோடி) நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம் | தோழர் ரவி
தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை இழப்பு என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து சேகரிக்கப்பட்ட வாக்காளர்களின் கருத்துகளிலும் பிரதிபலித்தன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
கருத்து கணிப்பு நடத்திய லோக்நிதியின் தேசிய இயக்குநனரான சந்தீப் சாஸ்திரி, தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை இழப்பும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பிக்கை இழப்பும் ஒன்றோடு ஒன்று “இணைக்கப்பட்ட காரணிகள்” என்று தெரிவிக்கிறார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து “ஆளும் கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை தனக்கு சாதகமாக கையாள்வது சாத்தியமா” என்ற கேள்விக்கு பதிலளித்த ஆறில் ஒரு நபர் “அதிகளவு சாத்தியம்” என்றே பதிலளித்தனர்.
தேர்தல் ஆணையம் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் மீதான நம்பிக்கை இழப்பு என்பது ஏதோ ஒரு நிறுவன அமைப்பின் மீதான நம்பிக்கை இழப்பு என்று சுருக்கிப் பார்க்கக் கூடாது. ஆனால் இப்போது அந்த பிம்பம் உடைந்துவருகிறது. சி.பி.ஐ., என்.ஐ.ஏ., வருவாய் துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு இயந்திரங்களையும் பாசிசமயமாக்கிவருவதை போல தேர்தல் ஆணையமும் பாசிசத்தின் கைப்பாவையாக மாற்றப்பட்டுவருவதை பத்தாண்டுகால பாசிச மோடி ஆட்சியில் இந்திய உழைக்கும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். ஆக, தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை இழப்பு என்பது நிலவுகின்ற அரசு கட்டமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்பதையே துலக்கமாக எடுத்து காட்டுகிறது.
ஆதினி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,
சரி தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை சரிதான் ஆனால் நமக்கு இருக்கும் வழி தேர்தல் முறை தானே அதைப்பற்றி பேச வேண்டும் அல்லவா தேர்தலே நடக்க கூடாதா மக்கள் எழுச்சியில் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றால் இங்கு மக்கள் எழுச்சிக்கான சாத்திய கூறுகள் இல்லையே நீங்கள் கூறுவது பகல் கனவாக உள்ளது