28.05.2026

கிருஷ்ணகிரி: டாடா நிறுவனத்தின் கழிவுநீரால்
அழிவுக்குள்ளாகும் விவசாய நிலங்கள்

பத்திரிகைச் செய்தி

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுக்காவில் உள்ள திம்ஜேப்பள்ளி பஞ்சாயத்தில் உள்ள கிராமம் உல்லுகுருக்கை. இக்கிராமத்தின் அருகேதான் டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (TEPL) நிறுவனம் அமைந்துள்ளது.

டாடா ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர், உல்லுகுருக்கை கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் திறந்து விடப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தங்களது விவசாய நிலங்களும், நீர் ஆதாரங்களும் பயன்படுத்த முடியாததாக ஆகிவிட்டதாக, ஆலைக்கு அருகில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இப்பிரச்சினை குறித்து விளக்கமளித்துள்ள மாவட்ட ஆட்சியர் சி.தினேஷ்குமார் “இதுதொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே அந்த நிறுவனத்திற்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளது, இது தொடர்பாக டாடா நிர்வாகத்திடம் வாரியம் விசாரணை நடத்தும்” என்று “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” (TNIE) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

விவசாய நிலங்களின் நிலைமை குறித்து TNIE ஆய்வு நடத்தியுள்ளது. ஸ்மார்ட்போன்கள், மின்னணுப் பொருட்கள் மற்றும் துணைக்கருவிகளைத் தயாரித்து ஒருங்கிணைக்கும் ஆலையிலிருந்து சுத்திகரிக்கப்படும் கழிவுநீர் விவசாய நிலங்களில் கொட்டப்படுவதைத் தனது ஆய்வில் கண்டறிந்தது.

இந்தக் கழிவுகள் மற்றும் கழிவுநீரால் விவசாய நிலத்தில் நீர் தேங்கி, தனது 5.5 ஏக்கர் விவசாய நிலம் தற்போது முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதாகவும், இது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் டாடா நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் புஷ்பராஜ் என்ற விவசாயி கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்தப் பிரச்சினை குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, விவசாய நிலங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில் தண்ணீர் மாசுபட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஓசூரில் உள்ள தனியார் ஆய்வகத்தின் ஆய்விலும் அப்பகுதியில் நிலத்தடிநீர் குடிக்கத் தகுதியற்றதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கோடைக் காலங்களில் முழுதாக வற்றிவிடும் தனது கிணறு, தற்போது துர்நாற்றம் வீசும் நீரால் நிரம்பியுள்ளதாகவும், சாகுபடிக்கு முற்றிலும் கிணறு பயனற்றுப் போனதாகவும் ரமேஷ் என்ற விவசாயி கூறுகிறார்.

மேற்கண்ட செய்திகளின் அடிப்படையில் சுகாதாரத் துறை அதிகாரிகளால், கெலமங்கலம் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை (மே 26) மீண்டும் பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அப்பகுதியில் நீர் மாசுபாடு குறித்து இதற்கு முன்பு தங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை என்று கெலமங்கலம் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சி.ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல.

டாடா நிறுவனம் விவசாய நிலங்களை மாசுபடுத்துவது நீண்டகாலமாக நடந்து வருகிறது என்பதைச் செய்திகள் உணர்த்துகின்றன. அப்போதே நடவடிக்கை எடுக்காமல், அரசு நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. மக்கள் அதிகாரக் கழகம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.

மாவட்ட நிர்வாகமே! மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே!

  • சட்டவிரோதமாகக் கழிவுநீரை விவசாய நிலங்களில் திறந்துவிட்டு, விவசாயத்தையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய டாடா நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடு!
  • பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மீட்டு, மீண்டும் விவசாயம் செய்வதற்கேற்ற உதவிகளை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கு!
  • பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய நிவாரணம் உடனே வழங்கு!


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.

8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க