27.05.2026

பத்திரிகைச் செய்தி

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!

மக்கள் அதிகாரக் கழகம், கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு கூட்டம் மே15, 2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தோழர் ரஞ்சித் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் தோழர் அருண், பொருளாளர் அர்ஷத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த மூன்று மாதங்களின் வேலைகள், நிறைவேறிய அனுபவம் பற்றி விவாதிக்கப்பட்டது. சமகால அரசியல் நிலைமை குறித்தும் மக்கள் பணிகளின் சிறப்பான அனுபவங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டக் குழுவின் ஓராண்டு வெற்றிப் பயணம்:

கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் மக்கள் அதிகாரக் கழகம் கிருஷ்ணகிரி மாவட்டக் குழு என்கிற அடிப்படையில் தனது ஓராண்டு செயல்பாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்த மகிழ்ச்சிகரமான செய்தியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் புதிய மாவட்டமாக செயல்படத் தொடங்கிய எமது மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் இந்த ஓராண்டில், மாவட்ட அளவில் மக்கள் பிரச்சினைகளில் தலையிட்டு, மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு துணை நின்றது.

விவசாயிகள் பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை, சிறுதொழில்கள் அழிவு,  ஆதிக்கசாதிவெறித் தாக்குதல்கள், தலித் மக்கள் மீதான அடக்குமுறைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், டாஸ்மாக், கஞ்சா போதை சீரழிவு, கார்ப்பரேட்டுகளுக்காகவும், குவாரி மாஃபியாக்களாலும் இயற்கை வளங்கள் அழிப்பு, வனவிலங்குகள் மனிதர்களைக் கொல்வது, பயிர்களை நாசம் செய்வது,  உழைக்கும் மக்கள் மீதான அரசின் அடக்குமுறைகள், அதிகார வர்க்கத்தின் ஊழல்கள், மக்களின் அடிப்படை வசதி தொடர்பான பிரச்சினைகள் என நூற்றுக்கணக்கான பிரச்சினைகளில் தலையிட்டு உண்மையை வெளிக் கொணர்ந்தோம். அரசின் தவறுகளை அம்பலப்படுத்தினோம். அரசின் கவனத்துக்கு மக்களின் பிரச்சினைகளை கொண்டு சென்றோம்.

நேரடியாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாய்ப்புள்ள வகையில் மக்கள் பக்கம் நின்று குரல் கொடுத்து வருகிறோம். சில பிரச்சினைகள் எமது தலையீட்டால் அரசால் தீர்வு காணப்பட்டன. ஆனால் இவை போதாது என்பதை யாம் அறிவோம். தொடர்ந்து மக்கள் உரிமைகளுக்காக வலிமையான குரலை எடுத்து வைக்க, எமது கழகம் உறுதி பூண்டுள்ளது.

நம் நாட்டின், உழைக்கும் மக்களின் முதன்மை எதிரியான ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி – அம்பானி, அதானி பாசிசத்தை வீழ்த்தும் மாபெரும் கடமையை நிறைவேற்றுவதை நோக்கி வீறுகொண்டு செயல்படவும் எமது கழகம் உறுதியேற்கிறது.

எனவே, இந்தப் பணிகளுக்கு ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் பேராதரவு தர வேண்டும் என உரிமையுடன் கோருகிறோம்.

இதன் அடிப்படையில் எமது மாவட்டத்தின் மையமான பிரச்சினைகளை அடையாளப்படுத்தி, கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களின் அடிப்படையில் செயல்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் அதிகாரக் கழகத்தில் உறுப்பினராவீர்!

***

மக்கள் அதிகாரக் கழகம் – கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு தீர்மானங்கள் மே 2026

கிருஷ்ணகிரி மாவட்டம் :

  1. கிருஷ்ணகிரி நகராட்சியின் 33 வார்டுகளிலும், குழு அமைத்து ஆய்வு செய்து போதுமான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்ற விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தை மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது. பல சமயங்களில் மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைபாடுகள் பல நாட்களாக நிறைவேற்றப்படாமல் இருப்பதை கழகம் கண்டிக்கிறது. குறிப்பாக, பயன்பாட்டுக்கான தண்ணீர் பற்றாக்குறையினால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அதிகபட்ச கவனம் கொடுக்க வேண்டும்.
  2. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறைபாடு, போதுமான உபரகரணங்கள் இன்மை, ஆட்பற்றாக்குறை, அவசர சிகிச்சைகளுக்கான கட்டமைப்பு வசதிகள் முறையாக இல்லாதது ஆகிய பிரச்சினைகளால் நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், விபத்துக்களுக்கான அவசர சிகிச்சை போதுமானதாக இல்லை. இதனால் மரண விகிதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அவசரகால நடவடிக்கையாக மேற்கண்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என கழகம் வலியுறுத்துகிறது.
  3. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சின்ன ஏரியானது, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திறந்துவிடப்படும் கழிவுநீரால் தொடர்ச்சியாக மாசுபடுத்தப்படுகிறது. இதனால் நகரின் நிலத்தடிநீர் பெருமளவில் மாசடையும். மாசடைந்த ஏரிநீரால் சுற்றுப்புறப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஆகாயத்தாமரை ஏரி முழுவதும் படர்ந்து காணப்படுகிறது. எனவே, கழிவுநீர் கலப்பதைத் தடுப்பது, ஆகாயத்தாமரைகளை அகற்றுவது ஆகிய நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் விரைந்து மேற்கொள்ள வேண்டும். மேலும், ஏரியை புனரமைத்து, அழகுபடுத்தி, படகுகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நீண்டநாள் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும்.
  4. கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனப்பள்ளியில் உள்ள பூம்பூம் மாட்டுக்காரன் கொட்டாய் கிராமத்தில் வசிக்கும் ஆதியன் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். பிற மாவட்டங்களில் வசிக்கும் இப்பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் வழங்கப்படவில்லை. எனவே, உடனடியாக அம்மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
  5. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அண்மை ஆண்டுகளாக, சாதி ஆணவப்படுகொலைகள், சாதி மறுப்பு இணையர்கள் மீதான தாக்குதல்கள், தலித் மக்கள் மீதான சாதியத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனை மக்கள் அதிகாரக் கழக கிருஷ்ணகிரி மாவட்டக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, சாதிய வன்கொடுமைக் குற்றங்களில் ஈடுபடும் சாதிவெறியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், சாதி ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை விரைவாக இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
  6. அண்மை ஆண்டுகளாக, குழந்தைத் திருமணம் நடைபெறுவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. இது குறித்த அரசியல், பொருளாதார, சமூகக் காரணங்களை ஆய்வு செய்து அதனடிப்படையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
  7. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி பயிரிடும் விவசாயிகளுக்கு தக்காளி வரத்தைப் பொறுத்து, விலை குறைக்கப்படும் காலங்களில் பெருத்த நட்டம் ஏற்படுகிறது. எனவே, தக்காளி விலை வீழ்ச்சியடையும்போது, தக்காளியை மதிப்புக் கூட்டுப் பொருட்களாக மாற்றும் வகையில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தக்காளிகளை பாதுகாக்க குளிர்சாதனக் கிடங்குகளை ஏற்படுத்த வேண்டும். மாவட்டப் பகுதியில் தக்காளி பழச்சாறு தொழிற்சாலை தொடங்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  8. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 100 க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்திற்கு முன்னரே வறட்சி நிலவி வருகிறது. இதனால், மேய்ச்சல் நிலங்களில் பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே, டெல்டா மாவட்டங்களில் இருந்து உலர் தீவனங்களை அரசே கொள்முதல் செய்து, மானிய விலையில் இம் மலைக்கிராம மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைக்கிராம மக்களுக்கு மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். வனப்பகுதிகளில் குவாரிகள், ரியல் எஸ்டேட் தொழில்களை தடை செய்ய வேண்டும்.
  9. கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் பல ஆண்டுக் கோரிக்கையான ஒசூர் – ஜோலார்பேட்டை ரயில் பாதை திட்டத்தை கிருஷ்ணகிரி வழியாக அமைக்க வேண்டும். கிருஷ்ணகிரியில் ரயில் நிலையம் அமைக்கப்பட வேண்டும். இதனால் கிராமப்புற தொழில்கள் மற்றும் சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி அடையும். மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். எனவே, தமிழ்நாடு அரசானது, ஒன்றிய அரசிடம் இதுகுறித்து அழுத்தம் கொடுத்து இத்திட்டத்தை நிறைவேற்றப் போராட வேண்டும். ஒசூர் – பெங்களூரு இடையே கூடுதல் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும்.
  10. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 30,000 டன்னுக்கும் மேல் புளி உற்பத்தியாகிறது. புளி மகசூல் அதிகரிக்கும்போது விலை குறைந்து விடுவதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் புளியை சேமித்து வைக்க கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, இராயக்கோட்டை ஆகிய பகுதிகளில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கிருஷ்ணகிரியை மையமாகக் கொண்டு அதிநவீன வசதிகளுடன் கூடிய சேமிப்புக் கிடங்கு அமைத்துத் தர வேண்டும். புளிக்கு குறைந்தபட்ச ஆதார விலை தீர்மானிக்கப்பட வேண்டும்.
  11. கிருஷ்ணகிரியில் மா ஏற்றுமதி மண்டலத்தை அமைக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் செயல்படாமல் இருக்கும் மாங்கூழ் தொழிற்சாலைகளை அரசு உடனடியாக ஆய்வு செய்து மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  12. அரசின் புறக்கணிப்பாலும், உரிய விலை கிடைக்காத காரணத்தாலும் மா விவசாயம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எனவே, மா விவசாயிகளுக்கு உடனடியாக குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து வகையிலும் மா விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். சிண்டிகேட் முறை ஒழித்துக் கட்டப்பட வேண்டும்.
  13. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனைமரங்கள் உள்ளன. இந்தப் பனைமரங்களில் இருந்து கருப்பட்டி தயாரிக்கப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தமிழ்நாடு அரசு இப்பனை தொழிலாளர்களுக்கான மானியத்துடன் கடனுதவி மற்றும் மரம் ஏறுவதற்கான கருவி, பனைத் தொழிலாளிகளுக்கு மரம் ஏறும்போது விபத்து ஏற்பட்டால் நிவாரண உதவி ஆகியவற்றை வழங்கிட வேண்டும். மேலும் ரேசன் கடைகளில் பனைவெல்லம் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். நிலத்தடிநீரைப் பாதுகாக்கவும், மண் அரிப்பைத் தடுக்கவும், இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கிலும் பனைமர வளர்ப்பு அரசால் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
  14. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் நகைப்பட்டறை தொழிலில் பாரம்பரிய பொற்கொல்லர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளி, தங்கம் விலை உயர்வால் இத்தொழில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே, பொற்கொல்லர்களுக்கு நிவாரண உதவி, குறைந்த வட்டியில் கடன், சமூக பாதுகாப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
  15. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் சிக்கலப்பள்ளி அருகே வாணிஒட்டு என்னுமிடத்தில் சாமல்பள்ளம், சின்னாறு ஆறுகள் தென்பெண்ணையுடன் கலக்கிறது. அப்பகுதியில் புதிய அணைகட்டி, ஓட்டுப்பட்டி, காட்டூர் வழியாக தர்மபுரி மாவட்டத்தில் எரசீகலஹள்ளி, அண்ணாமலைப்பட்டி வழியாக தும்பலஹள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எனவே வாணிஒட்டு அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற அரசு ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  16. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.233.34 கோடி மதிப்பில் எண்ணேகொள் அணைக் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தென்பெண்ணை ஆற்றில் வெள்ளக் காலங்களில் வரும் உபரிநீரை, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளுக்கு கொண்டு சென்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெறும் வகையிலான இத்திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் திட்டப்பணிகளுக்கு ஏற்பட்டுள்ள தேக்கத்தை, அரசு பொறுப்புணர்வுடன் செயல்பட்டு நிறைவேற்ற வேண்டுமென மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
  17. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். தூர்வாரி கிடைக்கும் மண்ணை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும்.
  18. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அணைக்கட்டுகள், ஆற்றுப் பாசனம் மூலம் பெரும் நிலப்பரப்பில் முப்போக விவசாயம் நடைபெறுகிறது. குறிப்பாக, நெல், ராகி, சோளம், கம்பு, துவரை, அவரை, கொள்ளு, கீரை வகைகள், நிலக்கடலை, காய்கறிகள், தென்னை உள்ளிட்ட உணவு தானிய உற்பத்தி, மல்லி, செண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட மலர் உற்பத்தி ஆகியவை நடைபெற்று வருகிறது. மேலும் கால்நடை விவசாயம் சாரந்து பால் பொருட்கள் உற்பத்தியும் முதன்மை வகிக்கிறது. அந்த அடிப்படையில் இவை சார்ந்து தொழிற்சாலைகளின் தேவையும் முக்கியமானதாக உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு மேற்கண்ட அடிப்படையில் ஆய்வினை மேற்கொண்டு, இம்மாவட்டப்பகுதியை வேளாண்மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
  19. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் தீக்குச்சி உற்பத்தியானது, மூலப்பொருட்கள் தட்டுப்பாடு, விலை ஏற்றம் காரணமாக முடங்கும் நிலையில் உள்ளது. தீக்குச்சி உற்பத்தி 30% வீழ்ச்சியடைந்துள்ளது. இத்தொழிற்சாலைகளில் 90% பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, அரசு உடனடியாக, இத்தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்து, அதற்கேற்ற உதவிகள், மானியங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  20. கிருஷ்ணகிரி மாவட்டம் பாரடைஸ், பிளாக் கிரானைட், குவார்ட்ஸ், சுண்ணாம்புக்கல் போன்ற கனிமங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. அரசின் விதிமுறைகளை மீறி கனிமவளக் கொள்ளை வரைமுறையின்றி நடந்து வருகின்றது. மலைக்குன்றுகள், வனங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள், விவசாயம், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் நாசமாக்கப்படுகிறது. எனவே, தமிழ்நாடு அரசு, சட்டவிரோதமாக இயங்கி வருகின்ற மற்றும் அளவுக்கு மீறி கனிமங்களை வெட்டி எடுக்கின்ற நிறுவனங்களை ஆய்வு செய்து அவற்றைத் தடை செய்ய வேண்டும்.
  21. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் விவசாயப் பயிர்களை அழிப்பதும், வனவிலங்குகள் தாக்கி மனித உயிர்கள் பறிபோவதும் தொடர்ந்து நடக்கும் துயரநிகழ்வாக உள்ளது. இதைத் தடுப்பதற்கான முறையான நடவடிக்கைகள் என்ற வகையில், வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர், உணவு ஆகியவற்றை காடுகளுக்குள்ளேயே கிடைக்கும் வகையிலான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.
  22. கர்நாடக மாநிலம் நந்திமலையில் உருவாகும் தென்பெண்ணை ஆறு, பெங்களூரு ஊரகம் மற்றும் நகரம் வழியாக ஒசூர் கெலவரப்பள்ளி அணையை வந்தடைகிறது. வரும் வழியில் தொழிற்சாலை ரசாயன கழிவுநீர் மற்றும் குடியிருப்புகளின் கழிவுநீர் ஆகியவற்றால் அசுத்தமடைந்த நிலையில்தான் கெலவரப்பள்ளி அணையை வந்தடைகிறது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் வெளியேறும்போது, துர்நாற்றத்துடன் வெண்நுரை பொங்கியபடி தென்பெண்ணை ஆற்றில் ஓடுகிறது. இந்நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது. எனவே, மக்களின் உடல்நலத்தைக் கணக்கில் கொண்டு, தென்பெண்ணை ஆற்றுநீரை சுத்திகரித்து, தூய்மையான குடிநீராக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  23. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கு இரவு நேர பேருந்து சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வெளியூர் செல்லும் அரசுப் பேருந்துகள் எண்ணிக்கையை மக்கள் தேவைக்கேற்ற வகையில் அதிகரிக்க வேண்டும்.
  24. மாபெரும் தொழில்நகரமான ஒசூரில் பணிபுரியும் இலட்சக்கணக்கான இளம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்க்கை துயரத்திற்குரியதாக உள்ளது. அவர்கள் ஒப்பந்த நிறுவனங்களால் கடுமையான சுரண்டலுக்கும், அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். ஒப்பந்தத்தில் முடிவான அடிப்படையில் ஊதியத்தை முறையாக வழங்காமல் TCFM என்ற நிறுவனம் ஏமாற்றி வருவதைக் கண்டித்து அண்மையில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஒப்பந்த நிறுவனங்களை அரசு தடை செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு உரிய பலன்களை பெற்றுத் தருவதற்கேற்ப கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
  25. ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுக்க வேண்டும் என அனைத்து ஜனநாயக இயக்கங்களையும், தொழிற்சங்கங்களையும் மக்கள் அதிகாரக் கழகம் அறைகூவி அழைக்கிறது.
  26. ஒசூர் -காரப்பள்ளியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை அருகில் முறையான பேருந்து நிறுத்தம் இல்லை. அங்கு நிழற்குடையுடன் கூடிய பேருந்து நிறுத்தம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
  27. ஒசூர்ப் பகுதியில் நடக்கும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேம்பாலப் பணிகளின் காரணமாக ஏற்படும் வாகன நெரிசல், கால விரயம் மற்றும் விபத்துக்களைத் தடுக்கும் வகையில் உடனடித் தீர்வாக மாற்றுப் பாதை ஏற்படுத்தித் தர வேண்டும். இம்மாற்றுப் பாதையானது பயணிகள் பேருந்து, தொழிற்சாலைகளுக்கு செல்வதற்கான பேருந்து ஆகியவற்றிற்கு தனியாகவும் பிற கனரக வாகனங்களுக்கு தனியாகவும் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேம்பாலப் பணிகளுக்காக அகற்றப்படும் மரங்களை மீண்டும் அருகிலேயே நடவு செய்யும் வகையில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.
  28. ஒசூர் பகுதியில் டி.எவி.எஸ் நகர் மற்றும் விகாஸ் நகர் இணையும் இடத்தில் உள்ள ரயில்வே கேட் காரணமாக பள்ளி, வேலைக்கு உரிய நேரத்தில் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே ரயில்வே கேட்டை அகற்றி விட்டு அந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
  29. தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவை உடனடியாக திறக்க வேண்டும். அங்கு கூடுதல் மருத்துவர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும். அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், படுக்கை வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை தேவையான அளவுக்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டம் :

  1. தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகேயுள்ள கும்பனப்பாடி பகுதியில் விவசாய நிலங்களுக்கு இடையே கல்குவாரி அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. இதனால் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் பாதிப்படையும். எனவே அப்பகுதியில் கல்குவாரி அமைக்க தடைவிதிக்க வேண்டும்.
  2. தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஈச்சம்பாடி அணை உள்ளது. இந்த அணையின் மூலமாக 6650 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கிருஷ்ணகிரி அணையில் இருந்து ஜூன் முதல் டிசம்பர் காலங்களில் வெளியேறும் உபரிநீரை கே.ஈச்சம்பாடி அணைக்கு செல்லும் வகையில் நீரேற்று திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் புதிய கால்வாய்கள் அமைத்து அரூர், கம்பைநல்லூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 66 ஏரிகளை நிரப்பி விவசாயத்திற்கு பயனளிக்க முடியும்.
  3. தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அணை ஒவ்வொரு ஆண்டும் நிரம்பும்போதும் வெளியேறும் உபரிநீரை தும்பலஅள்ளி அணைக்கு அனுப்ப வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.

சேலம் மாவட்டம் :

  1. சேலம் நெய்க்காரப்பட்டியில், மக்களின் 40 ஆண்டுகாலக் கோரிக்கையான, ரயில்வே சுரங்கப்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும். இந்த ரயில்பாதையின் இருபுறங்களிலும் உள்ள நெய்க்காரப்பட்டி, மலங்காடு கிராமங்களில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு உடனடியாக இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  2. சேலம் மாவட்டம், ஜாகீர் அம்மாபாளையத்தில் 100 ஏக்கரில் ஜவுளிப்பூங்கா அமைக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. 60 சாயப்பட்டறைகள், 30 சலவையகங்கள் அமைக்கப்படும் இத்திட்டத்தினால் நிலத்தடிநீர் பெரும்பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, இப்பகுதியில் ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
  3. சேலம் மாநகர் வழியாக செல்லும் திருமணிமுத்தாறில், சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் விடப்படுகிறது. ஜாதி கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் வழியாக செல்லும் இக்கழிவுநீரால் விவசாய நிலங்கள், பயிர்கள், கால்நடைகள் பாதிக்கும் அவலம் தொடர்கிறது. எனவே உடனடியாக ராஜவாய்க்காலில் சாயப்பட்டறைக் கழிவுநீர் செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். விதிமுறைகளை மீறும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  4. சேலம், தர்மபுரி மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இம்மாவட்டங்களில் அரசு கூட்டுறவு அரவை ஆலைகளை அமைத்துத் தர வேண்டும். மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு உற்பத்திக்கேற்ப, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
  5. சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தேக்கம்பட்டி ஊராட்சி, தே.கொல்லம்பட்டி, ஒண்டிவீரன் நகர்ப்பகுதி மக்களின் குடிநீர்த்தேவைக்கான புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை தாமதப்படுத்தாமல் உடனடியாகக் கட்டித் தருமாறு மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது. குடிநீர்ப் பிரச்சினைக்காகப் போராடிய அம்மக்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

(மக்கள் அதிகாரக் கழகத்தில் உறுப்பினராவீர்!)


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.

8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads