
28.05.2026
கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளி வெங்கடேசன் தீக்குளித்து மரணம்.
யார் குற்றவாளி?
பத்திரிகைச் செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், மாதர்சனபள்ளி பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான வெங்கடேசன் என்பவர் கடந்த மே 18 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த துயர நிகழ்வு அரங்கேறியது.
தனது நிலத்தை அளவீடு செய்ய வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டிருந்த நிலையில், நிலத்தை அளந்த அதிகாரிகள், “உங்களது நிலத்தை அளவீடு செய்து விட்டோம். அந்த நிலம் வடமாநிலத்தைச் சேர்ந்தவருடைய பெயரில் இருக்கிறது” எனக் கூறியுள்ளனர். இதைக் கேட்டு மனம் உடைந்து வேதனையிலிருந்து உள்ளார்.
போலி ஆவணங்கள் மூலம் தனது நிலம் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் முறையான நடவடிக்கை இல்லாததால், மன உளைச்சலுக்கு உள்ளாகி, கடந்த மே 18 அன்று, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளித்தார். படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மே 20 அன்று இறந்தார்.
வெங்கடேசனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வெங்கடேசன் நிலத்தை வேறு ஒருவரின் பெயருக்கு போலி ஆவணங்கள் மூலம் மாற்றிய அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வெங்கடேசன் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மே 26 ஆம் தேதி இதுகுறித்து பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார், “மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஜனநாயக முறையில் கோரிக்கைகளைத் தெரிவிக்க வேண்டும். மனுதாரர்கள் அனைவரும் அமைதியான மற்றும் சட்டத்திற்கு உட்பட்ட முறையில் தங்களுடைய கோரிக்கையை முன் வைக்க வேண்டும். தற்கொலை மிரட்டல், உடலில் எரிபொருள் ஊற்றுதல், அதிகாரிகளை மிரட்டுதல், சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துதல் போன்ற செயல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
“இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் சட்டம் மற்றும் தொடர்புடைய சட்ட விதிகள் கொண்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என எச்சரித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்தக் கருத்து கண்டனத்துக்குரியது.
இதுவரை குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்காத அரசு நிர்வாகம் பாதிப்படையும் மக்களை குற்றவாளிகளாக்கி புத்திமதி சொல்லிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் மாவட்ட குறைதீர் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மனுக்கள் பெறப்படுகின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல், தொடர்ந்து அலையும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதே நாம் காணும் உண்மையாகும்.
தீக்குளித்து இறந்து போன வெங்கடேசன் தனக்கே தெரியாமல் தனது நிலம் போலி ஆவணம் மூலம் வேறு ஒருவரின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் மனம் உடைந்து தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது பிரச்சினையை அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலைத் தீர்ப்பதற்கான முயற்சிகளைப் பொறுப்புணர்வோடு எடுக்காமல் பாதிக்கப்பட்டவரையே குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்?
கடந்த 2017 ஆம் ஆண்டில், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து, மாவட்ட நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்காததால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீக்குளித்து மாண்டு போனார். இந்தத் துயரத்தை யாரும் மறக்கவியலாது.
அதனைத் தொடர்ந்தும் இது போன்ற தீக்குளிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தேறி வருகின்றன.
மக்களின் வாழ்வுரிமையை, உயிரைப் பாதுகாக்க இந்த அரசுக் கட்டமைப்பு தகுதி இழந்துவிட்டது என்பதையும், ஒரு அரசியல் பொருளாதார மாற்றுக் கட்டமைப்பின் தேவையையும் இந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. மக்களுக்கான அப்படிப்பட்ட ஒரு மாற்றை நோக்கி நாம் செயல்பட வேண்டியுள்ளது.
தமிழ்நாடு அரசே! மாவட்ட நிர்வாகமே!
தீக்குளித்து உயிரிழந்த வெங்கடேசனின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கு!
வெங்கடேசன் உயிரிழக்கக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!
![]()
இவண்,
தோழர் அருண்,
கிருஷ்ணகிரி மாவட்ட இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





