இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலம் கங்கல்லூரில் 12 ஆதிவாசி கிராம மக்கள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதை கண்டிக்றோம்: நிறுவனமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு எதிரான கருத்துக்களம் (FACAM)
2024 மே 11-ஆம் தேதி, இந்திய அரசின் பாராமிலிட்டரி படையினரால் நடைபெற்ற போலி மோதலில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் தடைசெய்யப்பட்ட சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) அமைப்பினர் என்று சொல்லபட்ட நிலையில் இம்மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், FACAM-க்கு கிடைத்த தகவலின்படி, அவர்கள் அருகிலுள்ள பேடியா கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசி விவசாயிகள். இந்தப் பருவத்தில் மூலிகைத் தழை திரட்டும் பாரம்பரிய வேளாண்மை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். கிராம மக்கள், கொல்லப்பட்ட விவசாயிகளின் மனைவிகள், குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதன்படி, தழை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை பாராமிலிட்டரி படையினர் இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். ஆனால், அரசாங்கம் இதனை மாவோயிஸ்டுகளின் ஆயுதப் படைகளுடனான மோதலில் நடந்த கொலைகள் என அறிவித்தது.
கொல்லப்பட்டவர்களின் சடலங்களைத் தேடுவதற்கும் இந்த போலி மோதலுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கும் ஜனநாயக உரிமை செயற்பாட்டாளர்கள், கொல்லப்பட்ட கிராமத்தவர்களின் மனைவிகள், குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் முற்பட்டபோது அவர்கள் பிஜாபூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தடுக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 ஆதிவாசி விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 25 பேர் மட்டுமே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பிஜாபூர் மாவட்ட ஆட்சியர், கொல்லப்பட்ட விவசாயிகளின் சடலங்களை ஒப்படைக்கவில்லை, இது ஒன்றிய அரசின் கூற்றுகளில் மேலும் சந்தேகங்களை எழுப்புகிறது.
படிக்க : கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் | மத்திய ஆப்கானிஸ்தான்
இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. மாறாக, ஜனவரி 1, 2024 அன்று அபுஜ்மர் பகுதியில் தொடங்கப்பட்ட ஆபரேஷன் ககர் மற்றும் பாசிச “சூரஜ்குண்ட்” திட்டத்தின் ஆபரேஷன் சமதன்-பிரஹார் பாய்ச்சலின் ஒரு பகுதியாகும். இதேபோன்றதொரு சம்பவம் 2024 ஜனவரி 19-ஆம் தேதி நடந்தது. நென்றா கிராமத்தைச் சேர்ந்த மத்கம் சோனி, புனெம் நங்கி மற்றும் கோட்டும் கிராமத்தைச் சேர்ந்த காரேம் கோசா ஆகியோர், அவர்களின் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாராமிலிட்டரி முகாம்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். அரசு இவர்களை எல்லாம் மாவோயிஸ்ட் போராளிகள் என்று கூறியது. இதேபோல், 2024 ஜனவரி 27-ஆம் தேதி, பெட்கா கிராமத்தைச் சேர்ந்த போடியா மண்டவி, 10 போலீசுத்துறை மற்றும் பாராமிலிட்டரி படையினரை கொன்ற மாவோயிஸ்ட் ஐ.இ.டி. வெடிப்பில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் போலீசாரால் தவறாக கைது செய்யப்பட்டு காவலில் செல்லப்பட்டார். அவரது உடலில் கத்தியால் குத்தப்பட்ட அடையாளங்கள் உள்ளன. இது அவர் காவலில் சித்திரவதை செய்யப்பட்டதைக் காட்டுகிறது. ஜனநாயக உரிமைகள் செயற்பாட்டாளர்கள் எஃ.ஐ.ஆர் பதிவு செய்ய முயன்றும், இதுவரை எஃ.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை.
2024-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே மாவோயிஸ்ட் போராளிகளுக்கு எதிராக வெற்றி பெற்றதாக இந்திய அரசின் அதிகாரிகள் மார்த்தட்டிக் கொள்கின்றனர். ஆனால், அவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் மனித உரிமை மீறல்களாகவே பதிவாகியுள்ளன. 2024 ஏப்ரல் 16-ஆம் தேதி கண்டாரில் ஆயுதம் இல்லாமல் காயமடைந்த 17 போராளிகளை ஜெனீவா உடன்படிக்கையை மீறி சுட்டுக்கொன்றது; 2024 ஏப்ரல் 30-ஆம் தேதி 10 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டதாகக் கூறி, பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டது; 6 மாவோயிஸ்ட்கள் 4 ஆதிவாசி விவசாயிகள் என்று அம்பலமான தற்போதைய சம்பவம் ஆகியவை அத்தகையதே.
படிக்க : நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா கைது சட்டவிரோதமானது
இந்திய அரசின் “நக்சலிசத்திற்கு எதிரான போர்” என்பது நடைமுறையில் மக்கள் மீதான இனப்படுகொலைப் போராகும். குறிப்பாக, இந்தியாவின் இயற்கை வளங்களை கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பதையும், ஏகாதிபத்திய மற்றும் பெரிய இந்திய கார்ப்பரேட் நலன்களுக்காக தங்களது நிலங்கள் அபகரிக்கப்படுவதையும், கார்ப்பரேட்மயமாக்கத்திற்கு எதிரான ஆயுதம் ஏந்திய அல்லது நிராயுதபாணியாக என அனைத்து விதமான எதிர்ப்பையும் துடைத்தெறியும் நோக்கத்தில் பஸ்தர் மற்றும் இந்தியாவின் பிற வளங்கள் நிறைந்த பிராந்தியங்களில் மேற்கொள்ளப்படும் தீவிர இராணுவமயமாக்கலையும் எதிர்க்கின்ற ஆதிவாசி விவசாயிகள் மீதான இன அழிப்பு போராகும். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் தொடர்ந்து நடைபெறும் போலி என்கவுண்டர்களை FACAM கண்டிக்கிறது.
நன்றி: countercurrents
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube