பிறக்கப் போகும் குழந்தை குறித்த இனிய கனவுகளுடன் பிரணய் தனது காதல் மனைவியுடன் மருத்துவமனை சென்றார். மாதாந்திர உடல்நலப் பரிசோதனையை முடித்துவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளிவந்த போது மனைவியின் கண்முன்னேயே வெட்டிச் சாய்க்கப்பட்டார் பிரணய்.
இச்சம்பவம் தெலுங்கானாவில் கடந்த செப்டம்பர் 14 அன்று பட்டப் பகலில் நடந்தது. மனைவியின் கண்முன்னேயே வெட்டி சாய்க்கப்படும் அளவுக்கு பிரணய் செய்த ’குற்ற’மென்ன?
சாதி மாறி திருமணம் செய்து கொண்டதுதான் அது. அம்ருத வர்ஷினி, ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு பெண். அவரது கணவர் பிரணய் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இருவரும் பால்யகால சிநேகிதர்கள். நெடுநாட்களாக காதலித்து வந்து கடந்த ஜனவரி மாதம் அம்ருதா வீட்டினரின் எதிர்ப்பையும் மீறி முறையாக திருமணம் செய்து கொண்டனர்.

இது அம்ருத வர்ஷினியின் வீட்டாருக்கு கடும் ஆத்திரத்தை ஊட்டியது. அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், பலமுறை உறவினர்கள் மூலம் பெண்ணிற்கு தூது விட்டு, பிரணயை விட்டு வந்து விடுமாறு வற்புறுத்தியிருக்கிறார்.
ஆனால் அம்ருதாவோ தமக்கு ஒரு குழந்தை பிறந்தால் தந்தையின் இந்த மனக் கசப்புகள் அனைத்தும் ஒழிந்துவிடும் என எண்ணியிருக்கிறார். பிரணாய் இறந்த பின்னர் பிபிசி இணையதள பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் “குழந்தை என்ற புது உறவு எங்கள் இருவருக்கும் இடையில் மலர்வது, என் பெற்றோரை சமாளிக்க உதவும் என்று நான் நம்பினேன்” என கூறியிருக்கிறார் அம்ருதா.
பல்வேறு வழிகளிலும் நைச்சியமாக தமது மகளை பிரணயிடமிருந்து பிரிக்க முயற்சித்தும் வெற்றி பெற முடியாத மாருதி ராவ், பிரணயைக் கொன்று விட்டால் தனது மகள் தன்னிடம் வந்து விடுவாள் என ஒரு கணக்கு போட்டார்.
அம்ருதாவின் தாயார் உட்பட அவரது உறவினர்களும் தம்பதியினர் இருக்குமிடம் மற்றும் அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் போன்றவற்றை அம்ருதாவிடம் நைச்சியமாகப் பேசி அதனை மாருதி ராவிற்கு தகவல் கொடுத்துக் கொண்டிருந்தனர். இது குறித்து அம்ருதா பிபிசியிடம் கூறுகையில், “பிரணய் இறந்த பிறகு என் வீட்டில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பே வரவில்லை. வழக்கமாக என் அம்மா என்னுடன் தொலைபேசியில் பேசுவார். அது என்னுடைய உடல்நலனை விசாரிப்பதற்காக என்று நினைத்தேன், ஆனால் சந்தர்ப்பம் பார்த்து எங்களை பிரிப்பதற்காக என்னிடமிருந்தே தகவலை கறந்தவழி அது என்பதை நான் தெரியாமல் இருந்திருக்கிறேன்” என்கிறார்.

செல்வாக்குமிக்க ரியல் எஸ்டேட் அதிபரான மாருதி ராவ், மிர்யாளகுடா நகர காங்கிரஸ் தலைவரான அப்துல் கரீமைத் தொடர்பு கொண்டு பிரணயைக் கொல்ல ஒரு கூலிப்படை கொலைகாரன் தேவை எனக் கேட்டிருக்கிறார். போலீசின் தகவலின் படி கரீம்தான், மாருதி ராவிற்கு அஸ்கர் அலி என்ற தொழில்முறைக் கொலைகாரனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். யார் இந்த அஸ்கர் அலி?
குஜராத்தில் மோடிக்கு எதிராக குரல் கொடுத்ததால் கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் 26 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட குஜராத் அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் அஸ்கர் அலி. இவரின் மேல் நல்கொண்டா மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உண்டு. அதன் பின்னர் சிறப்பு நீதிமன்றம் அஸ்கர் அலி உள்ளிட்டு 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. ஆனால் கடந்த ஆகஸ்ட் 29, 2011 அன்று உயர்நீதிமன்றம் இவரை இவ்வழக்கிலிருந்து விடுவித்தது.
போலீசு கொடுத்த தகவலின் படி, அஸ்கர் அலி, முகமது பரி என்ற தனது பால்ய நண்பனை மாருதி ராவிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். முகமது பரி தன்னுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் பழக்கமான சுபாஷ் சர்மாவைத் தொடர்பு கொண்டு இந்த வேலையை அவரிடம் கொடுத்திருக்கிறார்.
இந்த கொலைக்கு ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாக போலீசு தரப்பில் கூறப்படுகிறது. மாருதி ராவ், முகமது பரியிடம் முன்பணமாக 16 இலட்ச ரூபாயை கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொடுத்துள்ளார். பின்னர் கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் சுபாஷ் சர்மா தனது முதல் கொலை முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். அம்ருதா பிரணயுடன் ஒரு அழகு நிலையத்திலிருந்து வெளிவரும் போது கொலை செய்யத் திட்டமிட்டிருந்திருக்கிறார். ஆனால் பிரணயின் நண்பர் ஒருவரும் அவர்களுடன் இருந்த காரணத்தினால் யார் பிரணய் என்பதில் குழப்பம் ஏற்பட்டு கொலை முயற்சியை நிறுத்திவிட்டு சென்றிருக்கிறார் சர்மா.
- படிக்க:
- கௌரவக் கொலைகள் – விடாது வரும் இந்திய சாதனை!
- காதலர்கள் அடித்துக் கொலை ! இரத்தம் குடிக்கும் பார்ப்பனியம் !!
- காலில் விழுந்தால் கௌரவம் – காதலில் விழுந்தால் குற்றமா ?
கடந்த செப்டம்பர் 14 அன்று பிரணய் அம்ருதாவுடன் மருத்துவமனைக்கு செல்லவிருப்பதை தமது உறவினர்கள் மூலமாக அறிந்து கொண்ட மாருதி ராவ், தகவலை முகமது பரியிடம் தெரிவித்திருக்கிறார். இதனை சர்மாவிடம் பரி தெரிவிக்கிறார். செப்டம்பர் 14 அன்று மருத்துவமனைக்கு வெளியே பிரணயைக் கொன்று விட்டு பெங்களூரு தப்பிச் சென்று விட்டார் சுபாஷ். பின்னர் பீஹாருக்கு தப்பிச் சென்றிருக்கிறார்.
நடந்த சம்பவத்தை உடனிருந்து பார்த்த அம்ருதா, “மருத்துவமனையில் இருந்து நாங்கள் வெளியே வரும்போதும் பேசிக்கொண்டே வந்தோம். நான் ஏதோ ஒரு கேள்வி கேட்க, அதற்கு பதில் வரவில்லையே என்று பார்த்தால், பிரனாய் கீழே விழுந்து கிடந்தார், ஒருவன் அவருடைய தொண்டையை அறுத்துக் கொண்டிருந்தான்” என்று தான் உறைந்து போன அந்த கணத்தைக் கூறுகிறார்.
”எனக்கு 21 வயதுதான் ஆகிறது, பிரணய்க்கு 24தான் ஆகிறது. எங்களது அழகிய வாழ்வு குறுகிய காலத்திலேயே கொடூரமாக சிதைக்கப்பட்டுவிட்டது.” என்று குமுறுகிறார் அம்ருதா. பிரணயின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என ”Justice for Pranoy” (https://www.facebook.com/Amruthapranayperumalla/) ஒரு முகநூல் பக்கத்தையும் தொடங்கியுள்ளார்.
♠♠♠
பிரணாயின் கொலை நடந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே தெலுங்கானா மாநிலம் மற்றுமொரு சாதிவெறி ஆணவக் கொலையை சந்தித்திருக்கிறது.
கடந்த 19-09-2018 அன்று பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் மிக்க ஒரு கடைத்தெருவில் புதுமண ஜோடியின் மீது மற்றுமொரு கொலை வெறித்தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. இங்கு ஒரு சிறிய வித்தியாசம் என்னவெனில் இங்கு கூலிப்படை அமர்த்தப்படாமல் பெண்ணின் தந்தையே கையில் அரிவாள் எடுத்து தனது மகளின் கணவனை வெட்டியுள்ளார். தடுக்க முயன்ற தனது மகளையும் வெட்டியுள்ளார்.
ஹைதராபாத்தில் பொற்கொல்லர் தொழில் செய்யும் சாதிய பின்னணியைச் சேர்ந்தவர் மாதவி. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாதவியும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சந்தீப்பும் காதலித்துள்ளனர். மாதவியின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் காதலர்கள் இருவரும் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி போலீசில் தஞ்சமடைந்திருக்கின்றனர். இருவீட்டாரையும் அழைத்துப் பேசியது போலீசு. பேச்சுவார்த்தையின் போதே மாதவியின் தாயார், சந்தீப்பின் குடும்பத்தினரை கடுமையாக சாதி ரீதியாக திட்டியுள்ளார்.

மாதவியின் தந்தை மனோகராச்சாரியால், இத்திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திருமணத்தில் மாதவியின் குடும்பத்தார் பங்கேற்கவில்லை. சந்தீப், மாதவி திருமணம் முடிந்த பின்னர், இருவரும் சந்தீப்பின் வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் மனோகராச்சாரி, சந்தீப் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் இணக்கமாகப் பேசியுள்ளார். தனது மகளிடமும் பேசிய மனோகராச்சாரி, இருவருக்கும் தாம் துணி எடுத்துத்தர விரும்புவதாகவும், அதனால் இருவரையும் நகரின் முக்கிய கடைத்தெரு பகுதிக்கு வருமாறும் கூறியிருக்கிறார்.
இதனை நம்பி இருவரும் அங்கு சென்றுள்ளனர். அதன்பிறகு அங்கு நடந்தவை அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன.
சந்தீப்பும், மாதவியும் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் சூழலில் அங்கு வந்து வண்டியை நிறுத்திய மனோகராச்சாரி, தனது பையிலிருந்து அரிவாளை எடுத்துக் கொண்டே அவர்களது வாகனத்திற்கு அருகே சென்று சந்தீப்பை வெட்டத் தொடங்குகிறார். உடனடியாக பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாதவி தனது தந்தையை கீழே தள்ளி விடுகிறார்.
தனது கோபத்தை தனது மகளின் மீது திருப்புகிறார் மனோகராச்சாரி. மாதவியை சரமாரியாக வெட்டித் தள்ளுகிறார். உடனேயே ஒருவர் இதனைத் தடுக்க ஓடி வருகிறார். அவரை அரிவாளைக் காட்டி மிரட்டி விரட்டுகிறார் மனோகர். பின்னர் மற்றொரு இளைஞர் ஓடி வந்து மனோகரின் முதுகில் ஓங்கி உதைக்கிறார். எனினும் மீண்டும் வெட்டுகிறார் மனோகர். அந்த சி.சி.டி.வி. காணொளிக் காட்சி இவ்வாறு முடிவடைகிறது.

வெட்டுப்பட்ட இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் கூடியிருந்த பொதுமக்கள். சந்தீப்புக்கும் மாதவிக்கும் விழுந்த அரிவாள் வெட்டில், அதிகமாக பாதிக்கப்பட்டது மாதவிதான். அவருக்கு தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
♠♠♠
பிரணாய் கொலைக்குப் பின்னர் இரண்டு நாட்களுக்கு அரசுத் தரப்பு இது குறித்து கண்டனமோ அறிக்கையோ எதுவும் அளிக்கவில்லை. இப்படுகொலை குறித்து எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் குரல் எழுப்பிய பின்னர்தான் பாதிக்கப்பட்ட அம்ருதாவிற்கு 4 இலட்சம் நிவாரண நிதியும் அரசு வேலை வழங்குவதாக அறிவித்துள்ளது. இன்று வரையிலும் இச்சம்பவம் குறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வாயைத் திறக்கவில்லை.

மாருதி ராவால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படை நிகழ்த்திய பிரணய் படுகொலையையும், மாதவி மற்றும் சந்தீப்பின் மீதான மனோகராச்சாரியின் நேரடி கொலை முயற்சியையும், அதீதப் பாசத்தால் செய்யப்பட்ட கொலைகள் என்பதாக சமூக வலைத்தளங்களில் சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு பலரும் விவாதித்து வருகின்றனர். தங்களை யோக்கியர்களாக காட்டிக்கொள்ள, ”கொலை தவறுதான், இருந்தாலும்… இங்கு ஒரு தகப்பனின் அதீத பாசம்தான் அவரது அறிவை மறைத்துவிட்டது என்று நாம் பார்க்கவேண்டும்” என்ற அடிப்படையில் பேசி வருகின்றனர்.
சாதியின் மீதும் போலி கவுரவத்தின் மீதுமான அந்தக் கிரிமினல்களின் அதீதப் பாசத்தை, பெற்ற மகளின் மீதான அதீதப் பாசமாக சித்தரிக்கின்றனர் இந்த ’யோக்கிய சிகாமணிகள்’.
பெற்ற மகளை உணர்ச்சியுள்ள ஒரு உயிராகப் பார்க்காமல் ஒரு அடிமையாகப் பார்ப்பவர்கள்தான் இத்தகைய கொலைகளைச் செய்யும் கிரிமினல்கள். பெண்ணின் உயிரும் உடலும்தான் இந்தியாவில் சாதி மற்றும் மதவெறியர்களின் இனத் தூய்மைக்கான புனிதச் சின்னமாகப் பராமரிக்கப்படுகிறது.

அந்தக் கொலைகாரக் கிரிமினல்களுக்கு இத்தகைய நெஞ்சு பதறும் கொடூரத்தை செய்யும் பலத்தை அளிப்பவர்கள் “பாசமுள்ள தந்தை” என பட்டமளிக்கும் இந்த ’யோக்கியர்கள்’ தான். சாதிவெறியின் வன்முறை வடிவம் என்பதே மௌனமாக இருப்பதாக நம்பப்படும் சாதி செல்வாக்கு, ‘கௌரவத்தின’ அடிப்படையிலேயே உருவாகிறது.
உடுமலை சங்கர் கொலையில், தனது தந்தைக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை குறித்த கேள்விக்கு பதிலளித்த கவுசல்யா என்ன பதில் கூறினாரோ, அதையேதான் கொல்லப்பட்ட பிரணயின் மனைவி அம்ருதவர்ஷினி கூறியிருக்கிறார்.
“பிரணயின் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய என் தந்தைக்கும் சித்தப்பாவுக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்” என்கிறார் அம்ருதா.
இது வெறும் பழிவாங்கல் உணர்ச்சியிலிருந்து வந்ததல்ல என்பதை பின்வரும் வாசகங்களால் உணர்த்துகிறார் அம்ருதா.
“நாங்கள் எங்கள் குழந்தையை சாதிய அடையாளம் இல்லாமல் வளர்க்க கனவு கண்டிருந்தோம். சாதிய அடையாளமற்ற ஒரு சமூகத்திற்காக நான் பிரணாயின் சார்பாக போராடுவேன். பிரணாய் எனக்கு விட்டுச் சென்ற பரிசு என்னுள் வளர்ந்து கொண்டிருக்கிறது. என் குழந்தையையும் சாதியத்திற்கு எதிரான போராளியாக வளர்ப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறுகிறார் அம்ருத வர்ஷினி.
– வினவு செய்திப் பிரிவு
//“நாங்கள் எங்கள் குழந்தையை சாதிய அடையாளம் இல்லாமல் வளர்க்க கனவு கண்டிருந்தோம். சாதிய அடையாளமற்ற ஒரு சமூகத்திற்காக நான் பிரணாயின் சார்பாக போராடுவேன். பிரணாய் எனக்கு விட்டுச் சென்ற பரிசு என்னுள் வளர்ந்து கொண்டிருக்கிறது. என் குழந்தையையும் சாதியத்திற்கு எதிரான போராளியாக வளர்ப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறுகிறார் அம்ருத வர்ஷினி.//
உண்மையான வார்த்தைகள்!
ராவ் மீது ராவ் நடவடிக்கை எடுக்காததற்கு சாதி ‘பாசம்’ தான் காரணம்.
//“பிரணயின் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய என் தந்தைக்கும் சித்தப்பாவுக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்” என்கிறார் அம்ருதா.//
எப்போது தான் தாய், தந்தையின் அன்பினை புரிந்து கொள்ள போகிறார்களோ. தயவு செய்து காதல் செய்வதற்கு முன் இந்த காதல் திருமணத்தில் முடிவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்று தெரிந்துக் கொள்ளுங்கள் . உங்களின் காதலுக்காக உங்களை வளர்த்து ஆளாக்கி உங்களுக்கு சமூகத்தில் கவுரவமான இடத்தை தேடி தந்த உங்கள் பெற்றோர்களை இப்படி பாவம் செய்து தலை குனிய வைக்காதீர்கள் ..
You Please think before giving a birth to a baby ( at the time of bedding ) … it will like or not the casteism…
காதல் என்பது சாதி பார்த்து மதம் பார்த்து வருவதல்ல. 18 வயது அடைந்த வுடன் ஒட்டு போடும் உரிமை உள்ளது போல யாரையும் காதலிக்க உரிமை உள்ளது. சாதி, மதவெறியை உருவாக்கியவர்கள் அதை பாதுகாப்பவர்களும் தான் குற்றவாளிகள் …
இவை தீண்டாமை வெறி கொலைகள், சாதி வெறி கொலை என்று திரித்துப் பேசாதீர்கள்.