1990-களுக்கு பிறகு மீண்டும் காஷ்மீரில் பயங்கரவாதக் குழுக்களால், பண்டிட்டுகள், புலம்பெயர் தொழிலாளர்கள் குறிவைத்து கொல்லப்படுவதும்; பாதுகாப்பான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கக்கோரி அச்சுறுத்தலுக்கு ஆளாகும் பண்டிட்டுகள் நடத்திவரும் போராட்டங்களும், “காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டிவிட்டோம்” என்ற மோடி-அமித்ஷாவின் மோசடிப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்திவருகிறது.

“ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தாலும், காஷ்மீரி இந்துக்கள் நாள்தோறும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஆகையால், அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சிறிது காலமாகவே, கிரிக்கெட்டில் அவர் அதிக ஆர்வம் காட்டுவதால் அமித்ஷாவுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கலாம்” என பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணிய சாமியே காரி உமிழுமளவுக்கு விஷயம் நாரியுள்ளது.

***

கடந்த ஏப்ரல் மாதம் தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த பால் கிரிஷன் பட் என்ற காஷ்மீர் பண்டிட்டும், சதீஷ் குமார் சிங் என்ற புலம்பெயர் தொழிலாளரும் பயங்கரவாதக் குழுக்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இப்படுகொலைகளுக்கு பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் லஷ்கர்-இ-இஸ்லாம் என்ற பயங்கரவாதக் குழு, ‘கஃபிர்களுக்கு கடிதம்’ (கஃபிர் என்பது முஸ்லிம் அல்லாதவர்களை குறிக்கும் சொல்) என்ற பெயரில் அச்சுறுத்தும் கடிதம் ஒன்றை வெளியிட்டது. அதில், “பள்ளத்தாக்கைவிட்டு வெளியேறுங்கள் அல்லது மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எங்கள் கட்டளைக்கு கீழ்ப்படியாத காஷ்மீரி இந்துக்கள் கொல்லப்படுவார்கள். அவர்களை மோடி அமித்ஷா வந்தாலும் காப்பாற்ற முடியாது” என்று தெரிவித்திருந்தது.


படிக்க : தி கேரவன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடும் காஷ்மீர் போலீசு !


மே மாதத்தில், புத்காம் மாவட்ட வருவாய் துறையில் எழுத்தாளராகப் பணிப்புரிந்துவந்த ராகுல் பட், ஜம்மு காஷ்மீர் கான்ஸ்டபிளாக இருந்த ரியாஸ் அகமது தோகர், பள்ளி ஆசிரியையான ரஜ்னி பாலா ஆகியோர் பயங்கரவாதிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.

அதே மாதத்தில், ரஞ்சித் சிங் என்ற வியாபாரி தீவிரவாதிகளால் வீசப்பட்ட கையெறி குண்டால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

ஜூன் மாத தொடக்கத்தில் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த வங்கி ஊழியரான விஜய் குமார் கொல்லப்பட்டார். விஜய் குமாரின் கொலைக்கு பொறுப்பேற்ற ‘சுதந்திர போராளிகள்’ என்ற பயங்கரவாதக் குழு, “காஷ்மீரின் மக்கள் தொகை விகிதத்தில் மாற்றம் செய்ய முயற்சிக்கும் எவருக்கும் இதுபோன்ற நிலைமையே ஏற்படும். இங்கு வசிக்கும் உள்ளூர்வாசிகள் அல்லாத அனைவருக்கும் இதுவொரு பாடமாக இருக்கும்” என தெரிவித்தது.

பாதுகாப்பான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தக் கோரி, அரசிடம் முறையிட்டு பேரணியாக செல்லும் காஷ்மீர் பண்டிட்கள்.

காஷ்மீரி பண்டிட்டுகள் மட்டுமல்லாது நாட்டின் பிற பகுதிகளிலிருந்து காஷ்மீருக்கு பிழைப்பு நடத்த வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், பணியிடமாற்றமாகி வந்த அரசு அதிகாரிகள், முஸ்லீம்கள் உட்பட காஷ்மீரி அல்லாத அனைவரும் அடுத்தடுத்து பயங்கரவாதக் குழுக்களால் படுகொலை செய்யப்படுகிறார்கள். இந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் வரை மட்டும் 19 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த ஐந்தாண்டுகளில், 34 பேர் பயங்கரவாதக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர். 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டாண்டுகளில் மட்டும் சுமார் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1990 களில் 2 லட்சம் காஷ்மீரி பண்டிட்டுகள் உயிருக்கு பயந்து பள்ளத்தாக்கைவிட்டு வெளியேறினார்கள். பண்டிட்டுகள், புலம்பெயர்ந்தோர்கள்மீது தற்போது நடத்தப்பட்டு வரும் படுகொலைகள், அத்தகைய சம்பவத்தை மீண்டும் நினைவுப்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள் காஷ்மீரிகள்.

“நாங்கள் ஒவ்வொருவராக சாவதை விரும்பவில்லை. பண்டிட்டுகள் குறிவைத்து கொல்லப்படுவது 2021 முதல் அதிகளவில் நடந்தேறிவருகிறது. ஒவ்வொரு முறையும் நாங்கள் கொல்லப்படும்போதும் அரசாங்கம் பாதுகாப்பு தருவதாக உத்தரவாதங்களை மட்டுமே அளிக்கிறது. எங்களுக்கு வேலையைவிட வாழ்க்கைதான் முக்கியம். இனியும் இந்த கொடுமைகளை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது” என்கிறார் காஷ்மீர் பண்டிட் சஞ்சய். இனி அரசாங்கத்தை நம்பி பயனில்லை என்று வாடகை லாரிகளை ஏற்பாடு செய்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறிவருகிறார்கள் பண்டிட்டுகள்.

***

2019-ஆம் ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு நீக்கிய பிறகுதான் பயங்கரவாதக் குழுக்களின் தாக்குதல்கள் 90-களை போல மூர்க்கமாக மாறியது. சுதந்திர போராளிகள் குழு, எதிர்ப்பு முன்னணி, அல்லா டைகர்ஸ், லஷ்கர்-இ-இஸ்லாம் என்று புதுப்புது பெயர்களில் உருவாகிற பயங்கரவாதக் குழுக்களால், பண்டிட்டுகளும் காஷ்மீரி அல்லாதவர்களும் குறிவைத்துக் கொல்லப்படுவது அதிகரித்தது.


படிக்க : காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !


இத்தகைய பயங்கரவாதக் குழுக்கள் உருவாகுவதற்கான அடித்தளத்தை மோடி அரசு இந்த இரண்டாண்டுகளில் பல்வேறு சட்டங்கள் மூலம் அடித்தளமிட்டிருக்கிறது. காஷ்மீரில் சிறப்பு சட்டம் இரத்து செய்யப்பட்டதும், அதைத்தொடர்ந்து காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பல்வேறு சட்டங்களும் திருத்தியமைக்கப்பட்டன.

குறிப்பாக, 15 ஆண்டுகள் காஷ்மீரில் வசிக்கும் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கலாம், அவர்களில் மத்திய அல்லது பொதுத்துறை ஊழியர்களாக இருப்பவர்களுக்கு 10 ஆண்டுகளிலேயே குடியுரிமை வழங்கலாம் என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்றும், அரசு வேலைகளில் காஷ்மீரிகளுக்கு இருந்த 50 சதவிகித பிரதிநிதித்துவத்தை 33 சதவிகிதமாக குறைத்தும் சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. காஷ்மீரி மக்களின் உரிமைக்கு எதிரான இத்தகைய தொடர் தாக்குதல்கள் மக்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தின. இன்னொருபுறம் மேற்சொன்னதைப் போன்று பயங்கரவாதக் குழுக்களின் தாக்குதல்களை அதிகரித்தன.

ஆக, மோடி-அமித்ஷா கும்பல்தான் காஷ்மீரில் பயங்கரவாதிகளையும் பயங்கரவாதத்தையும் உருவாக்கிய குற்றவாளிகள். பாசிச ஒடுக்குமுறைகளால் காஷ்மீரில் பயங்கரவாதம் மென்மேலும் அதிகரிக்குமே ஒழிய, என்றுமே அமைதியை நிலைநாட்டமுடியாது.


வெண்பா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க