நெய்வேலி: நிலம் கையகப்படுத்துவதை என்.எல்.சி. நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் | ம.அ.க

மக்களுக்கு அதீத பாதிப்புகள் ஏற்படுவதை அரசே ஒப்புக்கொள்ளும் நிலையில், மீண்டும் நிலங்களைக் கையகப்படுத்தி என்.எல்.சி.க்கு கொடுப்பது மக்களுக்கு எதிரான செயலாகும். “எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நிலத்தை வழங்க மாட்டோம். எங்களின் பூர்வீக நிலங்களில் எங்களை வாழ விடுங்கள்” என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது சுரங்கங்களை விரிவாக்கம் செய்யும் நோக்கில் நெய்வேலி, விருத்தாசலம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் விளை நிலங்களைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான போலீசார் முன்னிலையில் சுரங்க விரிவாக்கப் பணிக்கான நிலம் கையகப்படுத்தும்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியதன் காரணமாகவே நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தென்குத்து கிராமத்தில் உள்ள கல்குவாரி இடத்தை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் அதன் உரிமையாளரிடமிருந்து வாங்கியதாகக் கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதன் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தைக் கையகப்படுத்த என்.எல்.சி. அதிகாரிகள் வந்தனர். மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இதற்கிடையே, தென்குத்து கிராமத்தில் போலீசு பாதுகாப்புடன் என்.எல்.சி. அதிகாரிகள் ஊருக்கு அருகில் 20 மீட்டர் தொலைவில் கனரக இயந்திரங்கள் மூலம் பள்ளம் வெட்டும் பணியைத் தொடங்கினர். இதற்கு தென்குத்து கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வடலூர் – ஆபத்தாரணபுரம் அருகே சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசு மறியலில் ஈடுபட்ட மக்களைக் கைது செய்தது.

தமிழர்களின் நிலங்களைப் பறித்து நடத்தப்படும் இந்த பொதுத்துறை நிறுவனத்தில் உள்ளூர் தமிழர்களுக்கு வேலை வழங்காமல் புறக்கணித்து வருகின்றனர்.

என்.எல்.சி. பணியின் பாதிப்பால் நெய்வேலி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் (கூழ்மப்பிரிப்பு) செய்து வருகின்றனர்.

தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) 2023-2025 ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வில், நெய்வேலி அருகே வடக்குவெள்ளூர் கிராமத்தில் குடிநீரில் பாதரசம் (Mercury) அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. என்.எல்.சி.யின் தெர்மல் பவர் ஸ்டேஷனில் நிலக்கரி எரிக்கும்போது வெளியேறும் பறக்கும் சாம்பல் மழைநீரில் கலந்து நீர் நிலைகளுக்குச் செல்வதாலும், சுரங்க நீர் வெளியேற்றத்தாலும் பாதரச மாசு ஏற்படுகிறது. இது நரம்பு மண்டலம், சிறுநீரகம், கல்லீரல், கருவுறுதல் ஆகியவற்றைப் பாதிக்கிறது. பார்வைக் கோளாறு, நினைவாற்றல் இழப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இது குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களுக்கு இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுவதை அரசே ஒப்புக்கொள்ளும் நிலையில், மீண்டும் நிலங்களைக் கையகப்படுத்தி என்.எல்.சி.க்கு கொடுப்பது மக்களுக்கு எதிரான செயலாகும். “எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நிலத்தை வழங்க மாட்டோம். எங்களின் பூர்வீக நிலங்களில் எங்களை வாழ விடுங்கள்” என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

போராடும் மக்களை போலீசைக் கொண்டு அச்சுறுத்துகின்றனர்; குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வதாக போலீசார் மிரட்டுகின்றனர். இதை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. என்.எல்.சி. நிர்வாகத்திற்கு ஆதரவாக நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்.

ஒன்றிய, மாநில அரசே!

  • ஒன்றிய அரசும், என்.எல்.சி. நிர்வாகமும் நிலம் கையகப்படுத்த முன்வரக் கூடாது.
  • என்.எல்.சி. நிர்வாகத்திற்கு ஆதரவாக நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,

கடலூர் மாவட்டம்.
9443849915

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க