ஒன்றிய அரசின் காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யும் எஸ்.எஸ்.சி (Staff Selection Commission) தேர்வில் மாஃபியா கும்பல் மூலம் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இது கடினமாகப் படித்து நம்பிக்கையோடு தேர்வு எழுதிய மாணவர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் மூலம் மத்திய ஆயுத போலீஸ் படை (CAPF), செயலக பாதுகாப்பு படை (SSF) மற்றும் அசாம் ரைபிள்ஸ் (AF) ஆகியவற்றுக்கான கான்ஸ்டபிள் ஜி.டி (Constable – General Duty) தேர்வு மற்றும் ரைபிள்மேன் தேர்வு 2026 ஆகியன ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தம் எடுக்விட்டி (Eduquity) என்ற கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள நாலெட்ஜ் பார்க் பகுதியில் “பாலாஜி டிஜிட்டல் சோன்” (Balaji Digital Zone) எனும் தேர்வு மையத்தில் முறைகேடுகள் நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் சிறப்பு படை போலீசார் மே 23 ஆம் தேதி அன்று மாலை தேர்வு மையத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.
அங்கு முறைகேடுகளுக்குப் பயன்படுத்திய 50 லட்சம் ரூபாய் பணம், 5 மடிக்கணினிகள், 10 கைப்பேசிகள், ஒரு இணைய ரவுட்டர் மற்றும் தேர்வர்களின் பெயர் பட்டியல், இரண்டு நுழைவு சீட்டுகள், எடுக்விட்டி நிறுவனத்தின் 4 போலி நுழைவு சீட்டு மற்றும் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் எஸ்.எஸ்.சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பிரதீப் சவுகான், அருண் குமார், சந்தீப் பதி, நிஷாந்த் ராகவ், அமித் ராணா, ஷாகிர் மாலிக், விவேக் குமார் ஆகிய மாஃபியா கும்பலைச் சேர்ந்த ஏழு பேரை பாரதிய நியாய சன்ஹிதா (BNS)-வின் கீழ் பிரிவு 111(3) மற்றும் 111(4) – ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், பிரிவு 318(2) – ஏமாற்றுதல் பிரிவு 61 – குற்றவியல் சதி, மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) பிரிவு 66 – கீழ் வழக்குப் பதிவு செய்து நாலேட்ஜ் பார்க் போலீசார் கைது செய்துள்ளனர்.
முதன்மைக் குற்றவாளியான பிரதீப் சவுகான் கிரேட்டர் நொய்டாவில் தேர்வு மையத்தை அமைத்து நீண்ட நாட்களாக ஆன்லைன் தேர்வு மோசடிகளில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் வெளிவந்துள்ளது.
குறிப்பாக இக்கும்பல் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்கு ஒவ்வொரு மாணவரிடமும் நான்கு லட்சம் ரூபாய் பெற்றுள்ளது . இதில் பணம் கொடுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற நினைக்கின்ற மாணவர்களைக் கூட்டி வருகின்ற நபருக்கு 50,000 ரூபாய், மீதமுள்ள 3,50,000 ரூபாய் பிரதீப் சவுகான், அமித் ரானா மற்றும் தேர்வர்களின் கேள்விகளுக்கு வெளியிலிருந்து பதில் அளிக்கின்ற சால்வர்களுக்கு (solvers) பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.
இக்கும்பல் தேர்வு மையத்திற்குள் ப்ராக்ஸி சர்வர்களை நிறுவி, திரை பகிர்வு மென்பொருள் மூலம் பணம் கொடுத்த மாணவர்களின் கணினித் திரைகளைத் தொலைதூரத்தில் இருக்கும் நபர்களுக்குப் பகிர்ந்துள்ளது. அவர்கள் கணினியை இயக்கி கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளனர். இதன் மூலமே முறைகேடாக தேர்வெழுதியவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதற்கு முன்னர் நடைபெற்ற பல்வேறு தேர்வுகள் மூலம் பலருக்கும் இந்த கும்பல் சட்டவிரோதமாக வேலை வாங்கித் தந்திருக்கலாம். எத்தனை தேர்வுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன, தேர்வு மையங்கள் அல்லது தனியார் ஏஜென்சிகளைச் சேர்ந்த மேலும் சிலருக்கு இதில் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக மே 3 ஆம் தேதி அன்று 23 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் – யு.ஜி தேர்வு, வினாத்தாள் கசிவின் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
ஆனால் இதற்கெல்லாம் பொறுப்பேற்காத ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வினாத்தாள் கசிவைத் தடுக்கும் நடவடிக்கையாக அடுத்த ஆண்டு முதல் ஓ.எம்.ஆர் முறைக்குப் பதிலாக நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால் ஆன்லைன் வழியில் நடத்தப்பட்ட எஸ்.எஸ்.சி தேர்வில் மோசடி கும்பல் மூலம் முறைகேடு நடந்திருப்பதானது ஆன்லைன் வாயிலாகத் தேர்வு நடத்தினாலும் முறைகேடு நடைபெறும் என்பதை நிரூபித்துள்ளது.
படிக்க: குற்ற கும்பலின் பிடியில் நீட் தேர்வு!
தேர்வு மையத்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமான தேர்வு நுழைவு சீட்டுகளை வழங்கியது மற்றும் இருக்கை ஒதுக்கீட்டில் குளறுபடி, தேர்வு மையத்திற்கு வந்த பின்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக வெளியிட்ட அறிவிப்பு போன்ற குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து பிரயாக்ராஜ், லக்னோ, கான்பூர், கோராக்பூர் மற்றும் பீகாரின் முசாபர்பூர் ஆகிய பகுதியில் உள்ள தேர்வு மையங்களின் வளாகங்களில் மே 25 ஆம் தேதி அன்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரயாக்ராஜ் உள்பட பல இடங்களில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
தன்னுடைய நிர்வாக முறைகேடுகளை மறைப்பதற்காக பணியாளர் தேர்வாணையம் குறிப்பிட்ட மையங்களில் மே 25 ஆம் தேதி மற்றும் அதற்குப் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து. மறு தேர்வு மே 31 ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று எஸ்.எஸ்.சி தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற எஸ்.எஸ்.சி தேர்வு, தேசிய தேர்வு முகமை நடத்துகின்ற நீட் – யுஜி தேர்வு போன்ற தேர்வுகள் தனியார் – கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக நடத்தப்படுகின்றன.
கடந்த ஆண்டு எஸ்.எஸ்.சி தேர்வில் நடைபெற்ற முறைகேடு அம்பலமானபோது எடுக்விட்டி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் மிகப்பெரிய போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் கார்ப்பரேட்களின் நலன்களுக்காகச் செயல்படுகின்ற மோடி அரசு தற்போது வரை அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் முறைகேடுகளுக்குத் துணைபோய்க் கொண்டிருக்கிறது. இனியும் ரத்து செய்யுமா என்பது கேள்விக்குறிதான்.
எனவே எடுக்விட்டி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து, ஒன்றிய அரசே எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மிகப்பெரிய மாணவர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு கல்வியாளர்கள், ஜனநாயகச்சக்திகள் என அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











