குற்ற கும்பலின் பிடியில் நீட் தேர்வு!

மே 1ஆம் தேதியே ராஜஸ்தானின் சிகார் பகுதியில் இந்த வினாத்தாள் சுழற்சிக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இது மாணவர்களிடம் 25,000 ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில், 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் தேர்வுக்கு முன்னரே கசிந்துள்ளன.

நாடு முழுவதும் மே 3ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் (NEET UG) நுழைவுத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வினை நடத்திய தேசிய தேர்வு முகமை (NTA) இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இது ஆண்டு முழுவதும் இதற்காக மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல துயரங்களுக்கு ஆளாகி தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் (NEET) நுழைவுத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2026-27ஆம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3ஆம் தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

மிகக்கடுமையான கட்டுப்பாடுகள், சோதனைக்குப் பின்னர் நடைபெற்ற இந்த தேர்வில் முறைகேடு நடந்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகின. அதன் அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ‘கெஸ் பேப்பர்’ என்ற பெயரில் வினாத்தாள் கசிந்ததும், அதிலிருந்து சுமார் 600 மதிப்பெண்களுக்கு மேல் வினாக்கள் ஒத்துப்போனதும் பேசுபொருளானது.

இது தொடர்பான விசாரணையில் மே 1ஆம் தேதியே ராஜஸ்தானின் சிகார் பகுதியில் இந்த வினாத்தாள் சுழற்சிக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இது மாணவர்களிடம் 25,000 ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கையால் எழுதப்பட்ட இந்த மாதிரி வினாத்தாளில் மொத்தம் 281 கேள்விகள் இருந்தன. மே 3 அன்று நடந்த அசல் நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 135 கேள்விகள் இந்த மாதிரி தாளில் இருந்தவற்றுடன் அப்படியே ஒத்துப்போகின்றன. அதாவது 90 உயிரியல் கேள்விகளும், 45 வேதியியல் கேள்விகளும் அப்படியே அதில் இடம்பெற்றிருந்தன.

இவ்வாறு மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில், 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் தேர்வுக்கு முன்னரே கசிந்துள்ளன.

இந்த குற்றத்திற்கு முழுக் காரணம் தேர்வு முகமை தான். இந்த முறைகேடு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை (NTA), தேர்வு முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகுதான் முறைகேடு குறித்த தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து விசாரணை அமைப்புகளின் ஆதாரங்களின் அடிப்படையில், வெளிப்படையான முறையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்துள்ளது. 10 நாட்களுக்குள் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த கேடுகெட்ட அலட்சியப் போக்கின் காரணமாக 23 லட்ச மாணவர்களின் உழைப்பு கேள்விக்குறியாக நிற்கிறது. இந்தக் குற்றத்திற்கு முழு பொறுப்பு அரசுதான். ஆனால் இதற்கான தண்டனையை அனுபவிப்பது நாடு முழுவதிலும் இத்தேர்வை எழுதிய மாணவர்கள். எப்படி இதனை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும்…


படிக்க: நீட் தேர்வு: மாணவர்கள் பலியும், தி.மு.க அரசின் துரோகமும்!


நீட் தேர்வுக்குத் தயாராவதற்காக மாணவர்கள் ஆண்டு முழுவதும் பல்வேறு துயரங்களை எதிர்கொள்கின்றனர். ஒருமுறை வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால் திரும்பத் திரும்ப இந்த தேர்வுகளை எழுதி மன உளைச்சலுக்குள் செல்கின்ற அவலப் போக்குதான் நடைமுறையில் உள்ளது. ஒரு வழியாக தேர்வு முடிந்தது என்று மன நிம்மதி அடையும்போது மறுபடியும் மீண்டும் தேர்வு எழுதுவது என்பது எப்படிச் சாத்தியமாகும்? அவர்களின் மனநிலை எப்படி இதனை ஏற்றுக் கொள்ளும்? மாணவர்களை அலட்சியமாகக் கையாண்டு வருகிறது இந்த கேடுகெட்ட பாசிச மோடி அரசு நிர்வாகம்.

“தொடர்ந்து நீட் எழுதி வருகிறேன், இது எனது கடைசி முயற்சி. நிச்சயம் மருத்துவராகிவிடுவேன்” என்று சொல்லும் மாணவர்களுக்கும், “நகை, நிலம் அடகு வைத்தால்கூட நீட் கோச்சிங்குக்கு கட்டிய கட்டணம் வீணாகாது. நம் வீட்டிலும் ஒரு மருத்துவர் உருவாகிறார்” என்ற நம்பிக்கையிலிருந்த நடுத்தர வர்க்க பெற்றோருக்கும் இது நிச்சயமாக வெறும் செய்தியல்ல; பேரிடி தான்.

நீட் தேர்வு எழுதுவது என்பது சாதாரணமான செயல் அல்ல அதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தாக வேண்டும். ஒரு மாணவன் நீட் தேர்வுக்குத் தயாராகிறான் என்றால் அவனோடு சேர்ந்து அவனது குடும்பமும் தயாராக வேண்டும். இன்றைய இந்த சூழல் பெரும் துயரத்தைத் தந்துள்ளது.

பாசிச பா.ஜ.க அரசு ஆளும் பிஹார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநில அரசின் தேர்வாணையங்களின் தேர்வு வினாத்தாள்கள் கசிவது ஆண்டுதோறும் நடக்கிறது. தேர்வை முறையாக நடத்தாமல் பாசிச மோடி அரசு மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி வருகிறது.

மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு என்பது தேவையற்றது. இத்தனை ஆண்டுகளாகத் தேர்வு நடத்தியும் வெளிப்படைத் தன்மை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் ஏதேனும் ஒரு முறைகேடு நடைபெறுகிறது. இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும். நீட் நுழைவுத் தேர்வு என்பதே ரத்து செய்யப்பட வேண்டும். மாணவர்களை இந்த மன உளைச்சலிலிருந்து விடுவிக்க வேண்டும்.

கடந்த தி.மு.க அரசு நீட் விலக்கு கோரி கொண்டு வந்த தீர்மானத்தில் அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர். அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்த ஒரு தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொள்ளாமல் இன்று வரை இழுத்து அடித்து வந்துள்ளார். நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் தரமான மருத்துவத்தைப் பெற விரும்பும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மிகப்பெரிய ஒரு போராட்டத்தை இந்த குற்றங்களுக்கு எதிராகவும் இந்த குற்ற கும்பலைப் பாதுகாக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் கட்டியமைக்க வேண்டிய தேவையுள்ளது.


சைரா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க