நண்பர்களே….

பொ.வேல்சாமி
டந்த சில நாட்களாக சோழர்கால சமூகம் பற்றியும் இராஜராஜ சோழனைப் பற்றியும் பல்வேறு வகையான விவாதங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இந்த விவாதங்களில் பங்குபெற்ற பெருவாரியானவர்கள் தங்கள் கருத்துக்களுக்கு ஆதரவான சான்றுகளை முன் வைக்கவில்லை. தாங்கள் கொண்டுள்ள அபிப்பிராயங்களைப் பொதுக்கருத்துகள் போல பொத்தாம் பொதுவாகப் பேசுகின்றார்கள்.

இதனால் அவர்களுடைய பேச்சைக் கேட்கின்றவர்களை, அவர்கள் சிந்தனையற்ற ஆட்டுமந்தைகள் என்று கருதுவது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. ஒரு சமூகத்தில் எல்லா மக்களும் மந்தைகளாக இருப்பதில்லை. சிலர் சிந்திக்கும் மனிதர்களாகவும் இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் இத்தகைய விவாதங்களில் பேசுகின்றவர்களின் உள்ளத்தின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். அத்தகையவர்கள், தங்களுக்குப் புரிந்ததை மற்றவர்களுக்கு ஆதாரத்துடன் விளக்கும் பண்புடையவர்களாகவும் இருப்பார்கள்.

1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களைப் பற்றி போகிற போக்கில் கருத்துக் கூறுவது தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. அண்மையில் நடந்த, இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கின்ற பல்வேறுவிதமான அரசியல் பொருளாதார நடவடிக்கைகளின் உண்மைகள் என்னவென்பதை விளக்க முற்படாத ஊடகங்கள் பழங்காலத்தைப் பற்றிய விவாதங்களை எந்த அடிப்படையில் நடத்துகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இராஜராஜ சோழனை தமிழர்களின் குறியீடு என்று சிலர் குறிப்பிட்டனர். நாம் அவர்களை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும். “கி.பி. 1013 -ல் அல்லது 14 -இல் தஞ்சை பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அன்றிலிருந்து 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இராஜராஜ சோழனால் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது என்பதை தமிழர்கள் முற்றிலும் மறந்துவிட்டனர். அடுத்து வந்த 900 ஆண்டுகளில் எழுதப்பட்ட எந்தவொரு தமிழ் நூலிலும் இராஜராஜ சோழன்தான் பெரிய கோவிலைக் கட்டியவன் என்ற செய்தி பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “ஹீல்ஸ்” என்ற ஆங்கில நாட்டு அறிஞர்தான் பெரிய கோவிலைக் கட்டியது இராஜராஜசோழன் என்பதை உலகிற்கு அறிவிக்கின்றார். அதுவரை தஞ்சையில் வாழ்ந்த மிகப்பெரும் தமிழறிஞர் ஜி.யு.போப்-க்கும் கும்பகோணத்தில் வாழ்ந்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யருக்கும் கூட பெரிய கோவிலை இராஜராஜ சோழன்தான் கட்டினான் என்பது தெரியாது. இப்படி இருக்கும் போது இராஜராஜ சோழனை தமிழனின் குறியீடு என்பது எந்த வகையில் சரியானது..? கேப்பையில் நெய் வடிகின்றது என்று கூறுவதை ஒருவன் கேட்கிறான் என்றால் அவன் கேனையனாகத்தான் இருப்பான் என்ற சொலவடை உங்கள் நினைவுக்கு வரவில்லையா?

படிக்க:
இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?
♦ இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

சோழர்காலத்திய தமிழ்ச் சமூகம் சார்ந்த மக்கள் பல்வேறு வகையாகப் (சாதிகளாக) பிரிந்துகிடந்தனர். எடுத்துக்காட்டாக பறையர்களின் குடியிருப்புகளை மற்றவர்களிடமிருந்து ஒதுக்கி “பறைச்சேரி” என்று கூறுகின்ற கல்வெட்டுகளும் அவரவர்களுக்கு தனித்தனி சுடுகாடு அமைத்துக் கொடுத்த கல்வெட்டுகளும் ஆதாரமாகக் கொடுக்கப்பட்டும், சோழர்கால வாழ்க்கை முறைகளின் வேறுபாடுகளைக் கூறுகின்ற செய்திகளை ஆதாரங்களுடன் விளக்கியும் வரலாற்று அறிஞர்கள் கரசிமா, ஒய்.சுப்பராயலு அவர்களால் எழுதப்பட்ட “தென்னக சமூகம் ஒரு வரலாற்றுப் புரிதலை நோக்கி” (சோழர் காலம்) என்ற நூலும், வரலாற்றுப் பேரறிஞர் நீலகண்ட சாஸ்திரியார் தென்னிந்திய வரலாறு பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய நூல்களையும் நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் சோழர் காலம் ( 850 – 1300) – நொபொரு கராஷிமா
தென்னிந்திய வரலாறு – மு.ரா. பெருமாள்
தென்னிந்திய வரலாறு – கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி
சோழர்கள் – கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி

இந்த நூல்கள் இல்லாமல் சோழர்காலம் பற்றி மிகவும் சிறப்பாக எழுதப்பட்ட “சோழப் பெருவேந்தர் காலம்” என்ற நூல் இரண்டு பாகங்களாக தமிழ் வளர்ச்சித் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இவை நூலகங்களில் கிடைக்கும். இதில் இரண்டாம் பாகம் மிக முக்கியமான செய்திகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று அறிஞர் நீலகண்ட சாஸ்திரியாரால் சோழர்கள் “இரண்டாம் பாகமும்” இந்த காலம் பற்றிய பல்வேறு அரிய தகவல்களை அள்ளித் தருகின்றது. இந்த நூல்கள் மின்னூல் வடிவில் இல்லை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

குறிப்பு…… “சோழர்கள் முதல் பாகம்” மட்டும் மின்னூல் வடிவில் கிடைக்கின்றது. இதன் இணைப்பையும் தந்துள்ளேன்.

வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் சோழர் காலம் ( 850 – 1300) – நொபொரு கராஷிமா
தென்னிந்திய வரலாறு – மு.ரா. பெருமாள்
தென்னிந்திய வரலாறு – கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி
சோழர்கள் – கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி