கேள்வி: //பெர்முடா முக்கோணம் பற்றி? இதன் மர்மம் ஏதோ அங்க திரும்பி வரமுடியாது சொல்லுறங்க? இதை பற்றி விரிவாக உங்களுது பதிலுக்காக காத்திருக்கிறேன்…//

– பா.அருண்


அன்புள்ள அருண்,

பெர்முடா முக்கோணம் அல்லது நரகத்தின் முக்கோணம் என்று அழைக்கப்படும் இப்பகுதி வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் உள்ளது. இங்கே எண்ணிறந்த விமானங்களும் கப்பல்களும் மர்மமான முறையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மறைந்து போனதாகக் கூறப்படுகிறது. கூறப்படுகிறது என்பதிலிருந்தே அதற்கு ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை என்பதும் உண்மை. ஏனெனில் இப்பகுதியில் அப்படி மர்மமான முறையில் கப்பல்களும் விமானங்களும் மறைந்து போனதாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ செய்திகளும் தெரிவிக்கவில்லை. விபத்துக்கள் எனப்படுபவை என்ன காரணத்தால் நடக்கின்றன என தெரியும் சம்பவங்களாகும். மர்மம் என்றால் என்ன காரணம் என்று தெரியாது. பெர்முடா முக்கோணத்தில் அப்படி மர்மமான காரணங்கள் எவையும் வரலாற்றில் பதிந்திருக்கவில்லை.

பெர்முடா முக்கோணம் என்ற இந்தப் பகுதி மிகவும் அதிக அளவு கப்பல் மற்றும் விமான போக்குவரத்து நடக்கும் பகுதியாகும். இவ்வழி மூலமாக அமெரிக்கா ஐரோப்பா மற்றும் கரீபியன் தீவுகளில் இருக்கும் துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்கின்றன. கூடவே விமானங்களும் பறக்கின்றன.

பொதுப்புத்தியின் படி இங்கே அசாதாரணமான நடவடிக்கைகளின் மூலமாக விபத்துக்கள் ஏற்பட்டு கப்பல்களும் விமானங்களும் மறைந்து போவதாக நம்பப்படுகிறது. ஆனால் ஆவணப்படுத்தப்பட்ட தரவுகள் எவையும் இந்த அசாதாரணமான நம்பிக்கைகளை மறுக்கின்றன. அனேகமாக இவை தப்பும் தவறுமாக பதிவு செய்யப்பட்டதோடு மறைந்து போன சில எழுத்தாளர்களின் உபயத்தால் உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளாகும்.

1964இல் வின்சென்ட் காடிஸ் என்ற எழுத்தாளர் நம்மூர் தினமலர் போன்ற மலிவான பத்திரிகையான அர்கோசி-இல் (Vincent Gaddis wrote in the pulp magazine Argosy)  இந்த பெர்முடா முக்கோணத்தைப் பற்றி எல்லைகளோடு வரையறுக்கிறார். அவருக்குப் பிறகு பல எழுத்தாளர்கள் இந்த முக்கோணத்தின் பரப்பளவு குறித்து பல்வேறு அளவுகளைத் தருகிறார்கள். அவை 5 லட்சம் சதுர மைல் முதல் 15 லட்சம் சதுர மைல் வரை வேறுபடுகிறது.

1950 முதல் பல்வேறு எழுத்தாளர்கள் அமெரிக்கப் பத்திரிகைகளில் பெர்முடா முக்கோணத்தில் மறைந்து போன விமானங்கள் கப்பல்களை பற்றி பல்வேறு கதைகளை அடித்து விட்டிருருக்கிறார்கள். அப்படி சில ஹாலிவுட் படங்களும் வந்திருக்கின்றன. ஆனால் இவை எதற்கும் ஆதாரம் இல்லை.

லாரன்ஸ் டேவிட் குஷி (Lawrence David Kusche, author of The Bermuda Triangle Mystery: Solved (1975) )என்ற எழுத்தாளர் பெர்முடா முக்கோண மர்மம் தீர்க்கப்பட்டது என்ற நூலை 1975-ல் எழுதியிருக்கிறார். இவர் இந்த மூடநம்பிக்கை குறித்து பல்வேறு தரவுகளை மறுக்கிறார். அவரது வாதத்தின்படி இப்பகுதியில் மறைந்துபோன கப்பல்களும் விமானங்களும் மிகைப்படுத்தப்பட்டவை. ஒப்பீட்டு ரீதியாக இவற்றை விட அதிகமான எண்ணிக்கையில் உலகின் பல்வேறு கடல் பகுதிகளில் விமானங்களும் கப்பல்களும் மறைந்து போயிருக்கின்றன. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில் மறைந்து போனதைக் குறிப்பிடலாம். தற்போது அருணாச்சல் பிரதேசத்தில் (ஜூன் 2019) இந்திய விமானப்படையின் ஏ.என் 32 வகை சரக்கு விமானம் மறைந்து போயிருக்கிறது. அதை இன்று வரை தேடி வருகிறார்கள்.

பொதுவில் கடல் பகுதிகளின் பரப்பளவு என்பது மிகவும் பிரம்மாண்டமானது என்பதால் அங்கே விபத்திற்குள்ளாகும் விமானங்கள், கப்பல்களை கண்டுபிடிப்பது என்பது கடற்கரையில் குண்டூசி தேடும் செயலுக்கு நிகரானது என்றால் அது மிகையில்லை. சில விபத்துக்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. சில கண்டுபிடிக்க முடிவதில்லை.

பெர்முடா முக்கோணம் இருக்கும் அந்தக் கடல் பகுதி வெப்ப மண்டல சூறாவளிகள் அதிகம் வீசும் இடத்தில் இருப்பதால் நடைபெற்ற விபத்துக்கள் எவையும் மர்மமானவை அல்ல. புயலில் சிக்கி பல விபத்துக்கள் நடக்கின்றன.

மேலும் 2013-ம் ஆண்டில்  World Wide Fund for Nature எனும் தன்னார்வ அமைப்பின் மூலமாக உலகில் அதிக விபத்துக்கள் ஏற்படும் பத்து அபாயகரமான கடல் வழித்தடங்களில் பெர்முடா முக்கோணம் இல்லை.

அமெரிக்காவைப் பொறுத்தவரை பல்வேறு மூடநம்பிக்கைகள் அவை மதம் என்ற முறையிலும் அமானுஷ்யம் என்ற முறையிலும் நிறைய செல்வாக்குடன் இருக்கின்றன. வெளி கிரகத்திலிருந்து வந்த உயிர்கள் என்ற கதை குறித்து பல்வேறு நூல்கள், வீடியோக்கள் உள்ளன. அதே போன்று பனி மனிதன், கடுங்கோட்பாட்டுவாத கிறித்தவ பிரிவுகள் என பல மூட நம்பிக்கைகள் இருக்கின்றன.

அமெரிக்கா முன்னேறிய நாடாக இருந்தாலும் இத்தகைய மூடநம்பிக்கைகள் விடயத்திலும் முதல் நாடாக இருக்கிறது. நம்மூர் ஹீலர் பாஸ்கர், பாரி சாலன் வகையறாக்களின் குருநாதர்கள் பலர் அங்கேதான் குறுநில மன்னர்கள் போல ஆட்சி செலுத்தி வருகின்றனர். அவை வணிகத்திற்காக செய்யப்படும் மலிவான நடவடிக்கைகளே அன்றி அறிவுப்பூர்வமானவை அல்ல.

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

1 மறுமொழி

  1. arumaiyana vilakkam

    லாரன்ஸ் டேவிட் குஷி (Lawrence David Kusche, author of The Bermuda Triangle Mystery: Solved (1975) )என்ற எழுத்தாளர் பெர்முடா முக்கோண மர்மம் தீர்க்கப்பட்டது என்ற நூலை 1975-ல் எழுதியிருக்கிறார்.
    intha nool tamil mozhiyil kidakkuma?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க