அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 18

சூரியன் பிரகாசிக்கும் பகல் பொழுதையோ தனியான மரத்தையோ வரையும்படி குழந்தையிடம் சொல்லும்போது நான் அவனுக்கு என்ன சொல்லித் தருகிறேன்? “சூரியன் எப்போதும் ஒளிரட்டும்” என்ற பாடலைப் பாடும்படி சொல்லும் போது, அல்லது இதே தலைப்பில் வரையும் படியும் நடனமாடும்படியும் சொல்லும் போது குழந்தையின் கற்பனை உணர்ச்சியை எத்திசையில் செலுத்துகிறேன்? யதார்த்தம் என்பது எப்போதுமே ஒன்றுதான், ஆனால் இந்த யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் மொழிதான் வெவ்வேறானது என்று குழந்தை புரிந்து கொள்ளுமாறு செய்யவே நான் எல்லா சந்தர்ப்பங்களிலும் பாடுபடுகிறேன். இந்த மொழி வேறுபாடுதான் வெவ்வேறு கலைப் பிரிவுகளைத் தோற்றுவிக்கிறது.

குழந்தைகள் இன்றில்லாவிட்டாலும் நாளை இந்த யதார்த்தத்தைக் கண்டுபிடித்து, இதை வெவ்வேறு விதமாகப் பிரதிபலிக்கும் மொழிகளை கிரகிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அப்போது அவர்கள் தம்மை நன்கு புரிந்து கொள்வார்கள், இசையில், படங்களில், நடனத்தில் தம்மை வெளிப்படுத்துவது அவர்களுக்கு அழகியல் இன்பத்தைத் தரும், அவர்கள் உலகை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். எனவே, என் வகுப்புக் குழந்தைகளுடன் கூடுதல் பள்ளி நேரத்தில் கலந்து பழக இருப்பவர்கள் கலையின் இந்த முழுமையையும் ஒவ்வொரு குழந்தையின் மனநிலையின் முழுமையையும் மறந்துவிட வேண்டாமென வேண்டிக் கேட்டுக் கொள்வேன். மகிழ்ச்சி (துக்கம்) வெவ்வேறு ஒலிகளாலும் மலர்களாலும் இயக்கங்களாலும் அழுத்தந்திருத்தமான பேச்சுகளாலும் வெளிப்படுத்தப்பட்டாலும் இது ஒன்றேதான் என்பது குழந்தைகளுக்குப் புரியட்டும்.

எனது வகுப்புக் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது … விஷயம் அதுவல்ல. கலையினால் மகிழ்ச்சி உண்டாக, கலையினால் வளர்க்கப்பட மனித இதயத்தின், மனதின் எல்லாக் கதவுகளும் இதை ஏற்பதற்காக அகலத் திறக்கப்பட வேண்டும்.

நீங்கள் யாரை வளர்க்க விரும்புகின்றீர்கள், பாடகர்களையா, ஓவியர்களையா, பாலே கலைஞர்களையா, நாடக, பொம்மலாட்டக் கலைஞர்களையா என்று என்னிடம் கேட்கக் கூடும். எனது வகுப்புக் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது; இசையமைப்பாளர்களாவார்களா, பாடகர்களாக மாறுவார்களா, ஓவியர்களாகத் திகழுவார்களா, நடிகர்களாவார்களா என்று தெரியாது. விஷயம் அதுவல்ல. கலையினால் மகிழ்ச்சி உண்டாக, கலையினால் வளர்க்கப்பட மனித இதயத்தின், மனதின் எல்லாக் கதவுகளும் இதை ஏற்பதற்காக அகலத் திறக்கப்பட வேண்டும். மானுட உணர்வு, உணர்வுகளின் மனிதாபிமானம் அந்தந்த சூழ்நிலையில் தான், மானுடமயமாக்கப்பட்ட இயற்கையின் பயனாய் தோன்றும் என்று கார்ல் மார்க்ஸ் எழுதினார். இந்த ஆழ்ந்த சிந்தனையில் எனது குழந்தைகளின் கலைக் கல்வியையும் அழகியல் வளர்ப்பையும் எப்படி அணுக வேண்டுமென்பது தெரிகிறது.

பாலே வகுப்புகளும் நாடக வகுப்புகளும் எதற்கு என்று என்னைக் கேட்கக் கூடும். ஆனால் இக்கேள்வியைப் புரிந்து கொள்வது எனக்குக் கடினம். பெரும்பாலும் ஏன் குழந்தைகள் பாடலையும் சித்திரக் கலையையும் மட்டும் பயிலுகின்றனர், கலையின் மற்ற வகைகள் நிராகரிக்கப்படுகின்றன என்று நான் ஆச்சரியப்படுகிறேன். நடனம், நாடகத்தைக் கற்றுக்கொள்வதை விட பாடல், ஓவியத்தைக் கற்றுக்கொள்வது எளிதா என்ன? நாட்டியக் கலையும் நாடகமும் குழந்தையின் அழகியல் வளர்ச்சிக்கு அவ்வளவு முக்கியமானவையில்லையா என்ன? வெவ்வேறு கலை வகைகளை எடை போடும் சாதனம் ஒன்றிருந்தால் எல்லாம் சமமானவையாக இருப்பது தெரியுமென நான் உறுதியாக நம்புகிறேன்.

படிக்க:
காஷ்மீரா ? குஜராத்தா ? எது வளர்ச்சியடைந்த மாநிலம் ? | ஜீன் ட்ரீஸ்
காஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் !

இவையெல்லாம் ஒரே மரத்தின் கிளைகள். குழந்தைகளுக்கு முழுமையான கலைக் கல்வியை அளித்து, இவர்களிடம் அழகியல் உணர்வுகளை வளர்க்க நான் விரும்பினால் இந்த மரத்தை இவர்கள் அடி முதல் உச்சி வரை பார்க்கவும் இதில் இவர்கள் ஏறவும் ஒரு கிளையிலிருந்து வேறு கிளைக்குச் செல்லும் மகிழ்ச்சியை இவர்கள் பெறவும் நான் உதவ வேண்டும். எனவே தான் கூடுதல் பள்ளி நேரத்தின்போது குழந்தைகள் இசை, பாலே நடனம், வரைதல், நாடகம் ஆகிய எல்லாவற்றிலும் ஈடுபாடு கொள்ள வேண்டுமெனக் கனவு காண்கிறேன். கலையின் வெவ்வேறு மொழிகளில் தம்மைத் தாமே வெளிப் படுத்திக் கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். இதனால் குழந்தை வளர்ப்பில் கலையின் முழுமைக்கு வழிகோலப்படும்.

பாடங்கள் முடிந்தபின் என் வகுப்புக் குழந்தைகளின் பள்ளி வாழ்க்கை நான் மேலே கூறியவற்றுடன் முடிந்து விடுவதில்லை. வேறு காட்சிகளும் என் மனக் கண்ணில் தோன்றுகின்றன.

“யார் ’பிரதான படைத்தளபதியாக’ இருந்து துருப்புகளை வழிநடத்த விரும்புகின்றனர்?” சிறுவர்களும் சிறுமியரும் இரு சாராருமே “பிரதான படைத்தளபதியாக” இருக்க விரும்புகின்றனர்.

சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொள்வது இப்படித்தான் ஆரம்பமாகிறது. இந்த சுவாரசியமான விளையாட்டு எப்படி ஆரம்பமானது என்பது பற்றிய கதையை குழந்தைகளுக்குச் சொல்வேன். ஒவ்வொரு காயையும் எப்படி நகர்த்த வேண்டும், எளிய முறையில் எப்படி விளையாடுவது என்று விளையாடிக் காட்டுவேன். பின்னர் குழுக்களில் தீவிர சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்.

என்ன இது? தோற்றுவிட்டதற்காக தாத்தோ வருந்துகின்றானா? அழுகின்றானா? அவனை சமாதானப்படுத்த வேண்டும், நன்றாக விளையாட விரைவிலேயே அவன் கற்றுக்கொள்வான், கவனமாயும், பொறுமையாயும் விளையாடுவான் என்று சொல்ல வேண்டும். தனது எதிரியிடம் கை நீட்டி, வெற்றி பெற்றதற்காகப் பாராட்ட மறக்கவில்லையே என்று கேட்க வேண்டும். பாராட்டினாயா? மிக நல்லது!

ஏக்கா ஏன் இப்படி சந்தோஷப்படுகிறாள்? ஜெயித்து விட்டாளா? தோற்றுப்போன லாலி எப்படி மனம் சோர்ந்திருக்கிறாள் என்பதை கவனித்தாளா? அவளை நெருங்கி ஏதாவது அன்பாகப் பேசட்டும்.

“சதுரங்கத்திற்கு யாரைப் பிடிக்கும், குழந்தைகளே?” என்று ஒவ்வொரு முறை விளையாடத் துவங்கும் முன்னரும் இக்கேள்வியைக் குழந்தைகளிடம் கேட்க வேண்டும். அவர்கள் பின்வருமாறு பதில் சொல்வார்கள்:

“மனவுறுதி உள்ளவர்களை, பொறுமையானவர்களை!”

“வீரம் மிக்கவர்களை, துணிவானவர்களை!”

“முன்கூட்டியே கண்டு பிடிக்க வல்லவர்களை, கற்பனை செய்யக் கூடியவர்களை!”

“நேர்மையானவர்களை, நாசூக்கானவர்களை!”

“அழகை உணரக் கூடியவர்களை!”

“சதுரங்கம் உங்களை நேசிக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?”

ஆம், எல்லோருக்கும் விருப்பம் தான்.

“அப்போது வாருங்கள், விளையாடுவோம்!” தனது மகன் அல்லது மகளோடு சதுரங்கம் விளையாட சில தந்தையரும் தாய்மார்களும் நேரம் கண்டுபிடித்தாக வேண்டும். சில பெற்றோர்கள் தாமே சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொள்ள வேண்டும் (ஒருவேளை தம் குழந்தைகளிடமே கூட கற்றுக் கொள்ள நேரலாம்). அப்போது தான் தன் ஆறு வயதுக் குழந்தையுடன் சதுரங்கப் பலகையின் முன் அமர்ந்து ஒரு மணி நேரம் கடுமையாகப் போராட முடியும்.

இவையெல்லாம் வெறும் கற்பனையல்ல. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ஆறு வயதுக் குழந்தைகளுக்கு முதன் முதலாக சதுரங்கம் சொல்லித் தந்த போதே இவற்றை நான் நடைமுறையில் சந்தித்தேன். அப்போது நான் ஒரு சில சதுரங்கப் பலகைகளையும் காய்களையும் மேசைகளில் வைத்தேன். குழந்தைகள் இந்த சதுரங்கக் காய்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்தனர், இவற்றின் பெயர்களைப் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர். சில சமயங்களில் யானை எப்படி நகரும், ராணிக்கும் சிப்பாய்க்கும் என்ன வித்தியாசம் என்று விவாதித்தனர், அடிக்கடி கேள்விகளோடு என்னிடம் ஓடி வந்தனர்.

மூன்று மாதங்களுக்குப் பின் கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளும் சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொண்டதைத் தெரிந்து கொண்டேன். ஒத்திவைத்த ஆட்டங்களை இடைவேளைகளில் தொடர்ந்தனர், என்னோடும் விளையாடினார்கள், கடுமையான போராட்டத்தில் என்னைத் தோற்கடித்து விட்டாலோ ஆனந்தக் கூத்தாடினார்கள். சதுரங்கம் ஒரு சுவாரசியமான விளையாட்டு, குழந்தைகளுக்கு ஏற்றது என்பதை நான் அப்போதே புரிந்து கொண்டேன். இந்த விவேகமான, அழகான, வீரமான விளையாட்டை விளையாட அவர்கள் கற்றுக் கொண்டால் எப்படிப்பட்ட முக்கிய தனிக்குண நலன்கள் அவர்களிடம் உருவாகும் என்று நிரூபிக்க வேண்டிய அவசியமேயில்லை.

….சமுதாய ரீதியாகச் சுறுசுறுப்பானவனாக எப்படி மாறுவது? வகுப்புகளில் குழந்தைகள் இதையும் கற்றுக் கொள்வார்கள். நர்சரிப்பள்ளியில் உள்ள சிறுவயதுக் குழந்தைகளுக்கு எடுத்துச் சென்று பரிசளிப்பதற்காக என் வகுப்புச் சிறுவர் சிறுமியர் விளையாட்டு சாமான்களைத் தயார்படுத்துவார்கள். சுவர் பத்திரிகைகளைத் தயாரிக்கக் கற்றுக்கொள்வார்கள், பின்னர் இவற்றை மற்ற வகுப்பு மாணவர்களுக்கு அனுப்புவார்கள். பத்திரிகையின் நோக்கமே மற்றவர்கள் படிக்க வேண்டும் என்பது தானே. பட அட்டைகளைத் தயார்படுத்துவார்கள். வகுப்பிற்கு விருந்தினர்கள் வரும் போது அவர்களுக்கு நினைவாகப் பரிசளிக்க வேண்டுமல்லவா! பல்வேறு உலக நாடுகளில் குழந்தைகளின் வாழ்க்கையைப் பற்றி வந்துள்ள படங்களைச் சேகரித்து ஆல்பம் தயாரிக்கலாம். தமது விழாக்களுக்கு அழைப்பிதழ்களையும் அறிவிப்புகளையும் தயார் செய்யலாம்.

ஒவ்வொரு குழந்தையும் தனது சொந்த படைப்புகளின் தொகுதியைத் தயாரிக்கலாம். இதில் முதல் வார்த்தைகள், வாக்கியங்களடங்கிய தாள்கள், முதல் கட்டுரை, கணக்குகள், வரைகணிதப் படங்கள், சித்திரங்கள், களிமண் வடிவங்கள், குறுக்கெழுத்துப் புதிர்கள் முதலியன இருக்கும்.

சித்திரக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்வது, புத்தாண்டு விழாக் கொண்டாடுவது, சுற்றுலாச் செல்வது, பள்ளிக்கருகே ஒவ்வொருவரும் ஒரு மரம் நடுவது போன்ற கருத்துகள் இந்தக் கூடுதல் பள்ளி நேரத்தின் போது பிறக்கும். அன்பை எப்படி வெளிப்படுத்துவது, எப்படி நட்புக்கொள்வது, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்வது, பெற்றோர்கள் மீது மரியாதை செலுத்துவது என்பதைப் பற்றியெல்லாம் இங்கு விவாதங்கள் நடைபெறும். நான் அவர்களுக்கு சுவாரசியமான கதைகளைச் சொல்வேன், ஸ்லைடுகளையும் கார்ட்டூன் படங்களையும் காட்டுவேன்.

தம்மைப் பற்றி, தம் குழந்தைப்பருவம், வேலை பற்றிச் சொல்லவும் குழந்தைகளுடன் விளையாடவும் உலாவவும் பெற்றோர்களை அழைப்பேன். அடிக்கடி வருமாறு அழைக்கும் அழகிய அழைப்பிதழ்களைக் குழந்தைகள் அவர்களுக்கு வழங்குவார்கள். இவர்களைக் கௌரவிக்கும் முகமாக பத்திரிகையை வெளியிடுவார்கள், பரிசுகளை (படங்களுடன் கூடிய ஆல்பத்தை) தயார்படுத்துவார்கள்….

…இவையெல்லாம் நம்மை மிக முக்கியமானதற்கு, அதாவது ஒவ்வொரு குழந்தையின் மனநிலையையும் பன்முக ரீதியாக வளர்க்கும் நோக்கத்தோடு குடும்பத்திலும் பள்ளியிலும் குழந்தை வளர்ப்பின் முழுமைக்கு இட்டு வரும்.

கூடுதல் பள்ளி நேரம் எப்படியிருக்கும் என்று எனக்குத் தோன்றுவதை பெற்றோர்களுக்கு விளக்குவேன், என் அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன், விவாதத்தின் போது நமது கூட்டு குழந்தை வளர்ப்புத் திட்ட நிறைவேற்றத்திற்குப் பொறுப்பானவர்களைப் பற்றி முடிவு செய்வோம். இரண்டு நாட்களுக்குப் பின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இது சம்பந்தமான டைப் செய்யப்பட்ட பிரதி அளிக்கப்படும்.

கூட்டத்தின் இறுதியில் நான் அவர்களுக்குப் பின்வருமாறு கூறுவேன்:

“அன்புசால் பெற்றோர்களே! நமது குழந்தை வளர்ப்புத் திட்டங்களின் நிறைவேற்றத்தில் பங்கேற்றதற்கும் உதவியதற்கும் நன்றி! ‘வளர்ப்பு வண்டியை’ எப்படி, எத்திசையில் இழுப்பதென நாம் முடிவு செய்துள்ளோம். இறுதிவரை இந்த விஷயத்தில் கருத்தொருமித்துச் செயல்படுவோம்!”

படிக்க:
NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்
மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா ? | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல்

குழந்தைகள் எப்படி நடந்து கொள்வார்கள்? இப்படிப்பட்ட பள்ளி நாட்கள் அவர்களுடைய வாழ்வின் உட்பொருளாகுமா? ஒவ்வொரு குழந்தைக்கும் எல்லா வகுப்புகளுக்கும் வர வேண்டும், எல்லா விஷயங்களிலும் பங்கேற்க வேண்டுமென விருப்பமிருக்குமென நான் உறுதியாக நம்புகிறேன். ஏதாவது காரணங்களால் பள்ளிக்குச் செல்லாமலிருக்க நேரிட்டால் குழந்தைக்கு ஏமாற்றமாயிருக்கும். “அப்படித் தானே, குழந்தைகளே? தாத்தோ, நீ என்ன சொன்னாய்? பெரியவர்கள் தம் வார்த்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிறாயா? ஆம், நீ சொல்வது சரி! மாயா, நீ இன்னமும் ஏதாவது சொல்ல விரும்புகிறாயா? அப்படியெனில், உன் கருத்துப்படி எல்லாமே, பெரியவர்கள் உங்களுடன் எப்படிக் கலந்து பழகுவார்கள் என்பதைப் பொறுத்துள்ளதா? அதுதான் மிக முக்கியம்!”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க