பூமி தட்டையானது என்று நம்புபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு கூகுள் காணொளி தளமான யூ-டியூப் முதன்மையான காரணங்களுள் ஒன்றாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வட கரோலினாவின் ரலாய் நகரில் 2017-ம் ஆண்டிலும் பின்னர் சென்ற ஆண்டில் கொலராடோவின் டென்வெர் நகரத்திலும் ஆண்டுதோறும் நடக்கும் “தட்டையான பூமி” கோட்பாட்டு நம்பிக்கையாளர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட போதுதான் ஆய்வாளர்களுக்கு இந்த சந்தேகம் எழுந்தது.

மாநாட்டில் கலந்து கொண்ட 30 நபர்களிடம் நேர்காணல் எடுக்கப்பட்டது. வானில் சுற்றிக்கொண்டிருக்கும் பெரிய கோள வடிவிலானது அல்ல மாறாக பூமி பெரிய தட்டை வடிவிலானதும், அதே சமயத்தில் வானில் சுற்றியும் வருகிறது என்பதை அவர்கள் எவ்வாறு நம்ப வைக்கப்பட்டார்கள் என்பதை அவர்கள் விளக்கினார்கள். அவர்களது விளக்கங்கள் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருந்தன.

பூமி தட்டையானது என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்பவில்லை என்றும் யூ-டியூப் தளத்தில் வெளியான சதிக்கோட்பாடுகள் பற்றிய காணொளிகளை பார்த்த பிறகே தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டதாகவும் 29 நபர்கள் கூறினார்கள். “மகள் மற்றும் மருமகனுடன் வந்திருந்த ஒருவர் மட்டும் மேற்சொன்ன கருத்தை கூறவில்லை. மாறாக, அவரது மகளும் மருமகனும் கூறக் கேட்டிருக்கிறார்” என்று டெக்சாஸ் தொழில்நுட்ப பல்கலையில் (Texas Tech University) இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஆஸ்லே லேண்ரம் (Asheley Landrum) கூறினார்.

படிக்க:
யூ டியூப் வீடியோ வைரலாவதற்கு சாக வேண்டுமா ?
அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!

நேர்காணலில் பேசியவர்களில் பெரும்பாலானோர் 9/11 தாக்குதல், சாண்டி ஹூக் பள்ளி துப்பாக்கிச்சூடு மற்றும் நாசா உண்மையிலேயே நிலவுக்கு சென்றதா என்பது குறித்த சதிக்கோட்பாடுகளை யூ-டியூப்பில் பார்த்திருக்கின்றனர். தொடர்ந்து அதற்கு இணைப்பாக “தட்டையான பூமி” பற்றிய சதிக்கோட்பாடு காணொளிகளை யூ-டியூப் அவர்களுக்கு காட்டியுள்ளது.

அவர்களை அம்பலப்படுத்துவதற்காகவே காணொளிகளை பார்த்ததாகவும் ஆனால், விரைவில் அதில் கிடைத்த தர்க்க முறைகளால் தங்களது எண்ணம் மாறியதாகவும் சிலர் கூறினர்.

பூமி தட்டையானது எனக்கூறும் காணொளிகளில் “பூமி சுழலும் கோள் அல்ல என்பதற்கு 200 நிரூபணங்கள் (200 proofs Earth is not a spinning ball)” என்பது மிகவும் பிரபலமானது. விவிலிய இலக்கியவாதிகள், சதிக்கோட்பாட்டுவாதிகள் முதல் அறிவியல் புரட்டுவாதிகள் வரை அனைவருக்கும் அறிவியலை எதிர்த்து தர்க்கம் செய்வதற்கான வாய்ப்புகளை அது கொடுக்கிறது.

ஏதோ ஒரு வழியில் நேர்காணல் கொடுத்தவர்கள் இதில் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். முன்னதாகவே “எங்கே அந்த வளைவு?” மற்றும் “தொடுவானம் ஏன் கண்ணுக்கு அருகிலேயே இருக்கிறது?” போன்ற கேள்விகளையும் அவர்கள் கேட்டிருக்கின்றனர்.

வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க அறிவியல் முன்னேற்ற சங்க (American Association for the Advancement of Science) ஆண்டு மாநாட்டில் தன்னுடைய ஆய்வினை லேண்ரம் முன் வைத்துள்ளார். யூ-டியூப் தவறு எதுவும் செய்திருக்கும் என்று தான் நம்பவில்லை. ஆனால், அதனுடைய படிமுறைத்தேர்வு அல்லது அல்காரிதத்தில் மாற்றங்கள் செய்து இன்னும் துல்லியமான விவரங்களை தங்களால் கொடுக்க இயலும் என்று அவர் கூறினார்.

“தேவையான தகவல்கள் ஏராளமாக உள்ளது போல தவறான தகவல்களும் ஏராளமாக யூ-டியூப்பில் உள்ளன” என்று அவர் கூறினார். “முயல் வலைக்குள்ளே செல்வது போன்ற கடினமான விசயங்களை யூ-டியூப்பின் அல்காரிதம் எளிதில் வயப்படக்கூடிய நபர்களுக்கு எளிமையாக்குகிறது.” என்று அவர் கூறினார்.

“பூமி தட்டையானது என்று நம்புவது ஒன்றும் பெரிய பிரச்சினை அல்ல. ஆனால், நிறுவனங்களை கேள்விக்குள்ளாக்குவதும் அதில் சேர்ந்தே வருகிறது” என்று அவர் கூறினார். மக்களுக்கு கிடைக்கும் தகவல் மீது அவர்களுக்கு விமர்சனப் பார்வை வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும், அதில் ஒரு சமநிலை இருக்க வேண்டும்” என்றார்.

இது போன்ற சதிக்கோட்பாட்டு காணொளிகளுக்கு தக்கப் பதிலடி கொடுக்க அறிவியலாளர்களும் ஏனையவர்களும் சொந்தமாக யூ-டியூப் காணொளிகளை தயாரிக்க வேண்டும் எனறு லேண்ரம் கேட்டுக்கொண்டுள்ளார். “இன்னின்ன காரணங்களால் பூமி தட்டையானது” எனக்கூறும் காணொளிகள் மட்டும் யூ-டியூப்பில் நிறைந்திருக்கக் கூடாது. ”இன்னின்ன காரணங்களால் பூமி தட்டையானது அல்ல” என்று சொல்வதற்கும் நமக்கு நிறைய காணொளிகள் வேண்டும். சொந்தமாக ஆய்வினை செய்வதற்கான வழிமுறைகளை கொடுப்பதற்கான ஏராளமான காணொளிகளும் நமக்கு வேண்டும்” என்று மேலும் கூறினார்.

ஆனால், பூமி தட்டையானது என்று நம்புபவர்களில் சிலரை விஞ்ஞானிகளின் விளக்கங்கள் மாற்றிவிடாது என்பதையும் அவர் ஒப்புக் கொள்கிறார். ஊர்ந்து செல்லும் உயிர்களுக்கு மிகப்பெரிய வளைவின் மேற்பரப்பின் ஒரு சிறிய பகுதி எப்படி தட்டையாக தெரிகிறது என்பதை அமெரிக்க வானியல் ஆய்வாளர் நீல் டெகிரீஸ் டைசன் (Neil deGrasse Tyson) விளக்கிய போது தட்டையான பூமி நம்பிக்கையாளர்களின் சிலர் அதை ஆதரித்தனர் சிலர் எதிர்த்தனர் என்று லேண்ரம் கூறினார்.

“விஞ்ஞானிகள் முன் வைக்கும் எதையும் நிராகரிப்பதற்கு என்றே ஒரு சிறு விழுக்காட்டினர் எப்போதுமே இருந்து கொண்டே இருப்பார்கள். ஆனால், அதில் ஒரு சிறு பகுதியினர் அதை எதிர்க்காமல் இருக்கக்கூடும். சிறந்த தகவல்களை கொடுக்க முயற்சிப்பதுதான் தவறான தகவலுக்கு பதிலடி கொடுப்பதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம்” என்று அவர் கூறினார்.

இதுக்குறித்து கூகுளிடம் கேட்டதற்கு அந்நிறுவனம் பதிலேதும் அளிக்கவில்லை. வெறும் இலாப நோக்கம் மட்டுமே கொண்ட முதலாளித்துவ நிறுவனங்கள் அறிவியல்பூர்வமான தர்க்கவியலை மக்களுக்கு பயிற்றுவிப்பதிலிருந்து என்றோ தம்மை துண்டித்துக் கொண்டன.

நிரூபணங்கள் ஏதுமற்ற சதிக்கோட்பாடுகளுக்கு காதுகளும் கண்களும் மட்டுமே போதுமானது. ஏனெனில், அங்கே அவற்றுக்கு கட்டளை கொடுக்க மட்டுமே மூளை இயங்கினால் போதும். ஆனால், எதற்கும் நிரூபணங்கள் கோரும் அறிவியலுக்கு வெறும் கண்களும் காதுகளும் மட்டும் போதாது. தீர விசாரிப்பதுதான் நடைமுறை. அதற்கு நம்முடைய மூளையை நாம் சற்று கசக்கதான் வேண்டியிருக்கும்.

மார்க்ஸ் கூறுவது போல, “அறிவியலுக்கு இராஜபாட்டை ஏதுமில்லை: கடும் களைப்பினை ஏற்படுத்தும் அந்த செங்குத்தான பாதைகளில் துணிச்சலுடன் தீர்க்கமாக பயணிக்கிறவர்களுக்குத்தான், அதன் ஒளிமிகுந்த சிகரங்களை எட்ட முடியும்”.


நன்றி : தி கார்டியன்
கட்டுரையாளர் : Ian Sample
தமிழாக்கம் : சுகுமார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க