Saturday, July 20, 2024
முகப்புசெய்திஇந்தியா” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் !

” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் !

மனித குலத்திற்குத் தெரிந்த அனைத்து அறிவின் மூலமும் இந்தியாவே என நிறுவுவதில் ஆளும் அரசு எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வார்கள்.

-

ண்மையில் ஐஐடி மும்பை பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலின் போலி அறிவியல் பேச்சுக்கு எதிர்வினையாற்றாமல், ‘அமைதி’யை கடைப்பிடிக்கும் அதன் இயக்குனர் பேராசிரியர் சுபாசிஸ் சாதுரிக்கு எழுதப்பட்ட கடிதத்தின் தமிழாக்கம்…

***

”மதிப்பிற்குரிய பேரா. சாதுரிக்கு,

ஐடி மும்பையில் அண்மையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் உதிர்க்கப்பட்ட ஒரு முட்டாள்தனமான கூற்று குறித்து தாங்களும் தங்களுடைய மதிப்பிற்குரிய நிறுவனமும் அமைதியாக இருப்பது எங்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

கல்வியில் சாதித்தவர்களை கொண்டாடும் மேடை மீண்டும் ஒருமுறை புனையப்பட்ட கடந்த காலம் பற்றிய பொய்க்கூற்றுகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தன்னுடைய பேச்சில் சொன்ன இரண்டு முக்கியமான கூற்றுகள் குறித்து எங்களுடைய விளக்கத்தை அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Union HRD minister Ramesh Pokhriyal
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால்.

அமைச்சர் சொன்னார், “பேச்சுமொழியை பயன்படுத்தும் கனிணி, சமஸ்கிருதத்தால் மட்டுமே இயங்க முடிகிறது என நாசா சொல்கிறது”. இதுபோன்ற கூற்றுகள் எந்த அடிப்படையில் சொல்லப்படுகின்றன? நாசாவிடமிருந்து இதுகுறித்த அறிக்கை ஏதேனும் வெளியிடப்பட்டிருக்கிறதா? அல்லது தனிப்பட்ட முறையில் அமைச்சருக்கு நாசா சொன்னதா? இதுகுறித்து மற்றவர்களைக் காட்டிலும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

மனித குலத்திற்குத் தெரிந்த அனைத்து அறிவின் மூலமும் இந்தியாவே என நிறுவுவதில் ஆளும் அரசு எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என்பதையே இது காட்டுகிறது. இந்த முறை கலிபோர்னியாவின் நாசா அமெஸ் ஆய்வு மையத்தில் பணியாற்றிய ரிக் பிரிக்ஸ் 1985-ம் ஆண்டு எழுதிய ஆய்வுக் கட்டுரை அவர்களுக்குப் பயன்பட்டிருக்கிறது. அந்த ஆய்வுக் கட்டுரையில் இயற்கையான மொழி, செயற்கை மொழிக்கு அதாவது கனிணியில் பயன்படுத்தப்படும் மொழி எப்படி உதவுகிறது என்பதை அவர் விவாதித்திருப்பார். அமைச்சர் சொன்னதுபோல, சமஸ்கிருதம் குறித்து எந்த இடத்திலும் அவர் சொல்லியிருக்கவில்லை.

படிக்க:
போலி ‘டாக்டர்’ பட்டம் பெற்ற மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் !
♦ காஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் !

ரத்னேஷ் திவேதி என்பவர் இந்த ஆய்வுக்கட்டுரையிலிருந்து உருவி 2010-ல் எழுதிய கட்டுரையிலிருந்து அமைச்சர் தன்னுடைய கூற்றை எடுத்திருக்கலாம். மேலதிக தகவல்களுக்கு இணையமே புதையல் போல இருக்கிறது. பிரிக்ஸின் கட்டுரையை வெட்டி ஒட்டி, திரித்து சமஸ்கிருதத்தை புகழ்வது போன்ற கட்டுரைகளும்கூட இணையத்தில் கிடைக்கின்றன. “sanskritdocuments.org” என்ற ஒரு இணைய பக்கத்தில் எழுதியவர் பெயர், எப்போது எழுதியது என எந்த விவரமும் எழுதப்படாமல் ஏராளமான கட்டுரைகள் உள்ளன. சில திவேதியின் எழுத்துக்களை ஒத்துள்ளன.

NASA Sanskrit
கூகுள் தேடுதலில் முதலில் வந்து நிற்கும் பொய் செய்திகள்.

கூகுளில் ‘சமஸ்கிருதம்’, ‘நாசா’ என ஆங்கிலத்தில் தேடினால் மேலே சொன்னதன் இணைப்புகள் முதல் பக்கத்தில் வந்து விழுகின்றன. உங்கள் மேடையிலேயே பொய் உமிழப்பட்டதைப் போல, அனைவரையும் எளிதாக இவை நம்பவைத்துவிடும். எப்படியாயினும், மதிப்பிற்குரிய அறிவியலாளர் உங்களிடமிருந்து சிறந்ததை எதிர்பார்க்கிறோம். இட்டுக்கட்டப்பட்ட இணைய கட்டுரை குறித்து அல்லாமல் உண்மையான ஆய்விலிருக்கும் பொருள் குறித்து நீங்கள் பேச வேண்டும் என நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.

இரண்டாவதாக, அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளை கண்டறிந்த பெருமைக்குரியவர்கள் பழங்கால மருத்துவர்கள் என்றார் அமைச்சர். ஆதாரமற்ற வினோதமான கூற்று இது. அணுக்கள் மிகச்சிறிய கட்டுமானத் தொகுதிகளாகும். அவற்றை மேலும் பிரிக்க முடியாது என்பது அணுவியல் கோட்பாடு. பண்டைய கிரேக்கத்தைப் போலவே, பண்டைய இந்தியாவிலும் அணுவியலாளர்கள் இருந்தபோதிலும், இவர்களில் எவரும் உண்மையில் அணுவைக் கண்டுபிடிக்கவில்லை.

ஒரு பொருளை தொடர்ச்சியாகப் பிரிக்கும்போது, ஒரு கட்டத்தில் பிரிக்க முடியாத நிலை ஏற்படும் என அவர்கள் அனுமானித்தனர். அத்தகைய நிலையை அனுமானிப்பதும் அணுவைக் கண்டுபிடிப்பது ஒன்றல்ல.

படிக்க:
மோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு : பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம் !
♦ இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் | பேராசிரியர் முருகன்

பல அறிவியலாளர்கள் பல நாடுகளில் அறிவியலுக்காக பணியாற்றி, பல நூற்றாண்டுகள் கழித்து அணுக்களின் இருப்புக்கான முதல் ஆதாரத்தை உருவாக்கினார்கள். இதுபோன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளின் செயல்முறையை ஒரு அரசியல்வாதி அறியவில்லை என்பதற்காக அவரை மன்னிக்கலாம். ஆனால், உங்களைப் போன்ற அறிவியலாளர்களை அதைக் கேட்டுவிட்டு அப்படியே போகக்கூடாது.

ஆமாம், இதுபோன்ற கூற்றுக்களுக்கு எதிர்வினையாற்றுவது பிற்போக்குத்தனமானது என தோற்றமளிக்கலாம். ஆனால், இதுபோன்ற கற்பனைக்கதைகளை கேட்டுக்கொண்டு, அதற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக அமைதியாக கடப்பதற்கு பெரிய விலையை தர வேண்டியிருக்கிறது.

இங்கே ஒரு பொருத்தமான உதாரணம் அரசியல் வர்க்கமும் அறிவியல் சமூகமும் தென் ஆப்பிரிக்காவில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் -ஐ புறக்கணித்தது 3,00,000 தவிர்க்கக்கூடிய மரணங்களையும் 35,000-க்கும் அதிகமான புதிய நோயாளிகளையும் உருவாக்கியது.

உங்களுடைய இன்றைய அமைதிக்கு இந்தியா எத்தகைய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்?

அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் இதழ்களில் தங்களுடைய ஆய்வுகளை வெளியிடுவதில் அறிவியலாளர்களே தங்களுக்குள் கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்ளும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அறிவியலும் அறிவியலாளர்களும் வெற்றிடத்தில் வாழ முடியாது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். இதற்கு ஒரே வழி மக்களிடமும் கொள்கை வகுப்பாளர்களிடமும் நாம் பேசுவதன் மூலமே இதைச் செய்ய முடியும். உண்மைகளுக்கும் கருத்துக்களுக்கும் இடையேயான கோடுகளை வரையறுத்து, ஆதாரங்களை வைத்து பேசுவதும் ஆதாரங்களை முதன்மைப்படுத்துவதுமே நாம் செய்ய வேண்டும்.

போலி அறிவியல் என வரும்போது, ‘பாதிப்பில்லாதது’ என்று எதுவுமே இல்லை. அறிவியலாளர்கள் இன்று பேசவில்லை என்றால், நாளை அறிவியலை பாதுகாக்க எந்தவிதமான தெளிவான குரல்களும் இருக்காது!”

ரீத்திகா சூட் என்பவர் எழுதிய இக்கடிதத்தில் பல அறிவியலாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்தக் கடிதம் கடந்த வாரம் வெளியான நிலையில், சனிக்கிழமை ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணைத்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் போக்கிரியால், நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே வேதங்களில் அதுகுறித்து சொல்லிவிட்டதாகக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பல ஐஐடி மற்றும் நிட்-களின் இயக்குனர்கள், பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர்கள், அனைத்திந்திய தொழிற்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், பண்டைய வேதகால அறிவு குறித்து அதிக அளவில் ஆய்வு நடத்த வேண்டும் என நிட் மற்றும் ஐஐடி இயக்குனர்களை கேட்பதாகக் கூறினார். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த தாக்கத்தின் அடிப்படையிலேயே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் பேசினார். வழக்கம்போல, அனைத்து ‘அறிவியலாளர்களும்’ மவுனமாகவே அதற்கு தலையசைத்திருக்கின்றனர்.

அறிவியலாளர்களின் கடிதம் எச்சரிப்பதுபோல, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் முன்வைக்கும் போலி அறிவியலுக்கான அதிகப்படியான விலையை இந்தியா கொடுக்க வேண்டியிருக்கும் என்பது மட்டும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

கலைமதி
நன்றி: த வயர், த பிரிண்ட் 

 1. நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த
  நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
  அஞ்சி யஞ்சி சாவார் – இவர்
  அஞ்சாத பொருளில்லை அவனியிலே
  வஞ்சக பெய்க லென்பார் – இந்த
  மரத்தில் பார், அந்த குளத்திலென்பார்
  துஞ்சுது முகட்டி லென்பார் – மிகத்
  துயரப் படுவார்எண்ணிப் பயப்படுவார்…பாரதியின் பாடலின்படி மா.மூ.கூறுவதை ” எதிர்த்து கருத்து கூற ” அஞ்சி அமர்ந்திருந்த இவர்களை …இவர்கள் கற்ற கல்வி மன்னிக்காது ….!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க