ம்மு – காஷ்மீருக்கு சிறப்பு தகுதியை வழங்கிய 370 வது பிரிவை நீக்கியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘பட்டேல் 2.0’ என புகழப்படுகிறார்.

அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தடுத்ததன் காரணமாக, நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் முடிக்காமல் விட்ட காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் ஒருங்கிணைக்கும் பணியை அமித் ஷா முடித்துவிட்டார் என்பதே இந்த கூற்றின் பின்னால் சொல்லப்படும் காரணம்.

இந்திய ஒன்றியத்தில் 552 சுதேச மாநிலங்களை இணைத்த பெருமைக்குரியவரான பட்டேல், காஷ்மீர் குறித்த நிலைப்பாட்டில் நேருவுடன் ஒத்துப்போகவில்லை என பாஜக நீண்ட காலமாகக் கூறிவருகிறது.

பிரிவு 370-ஐ நீக்குவது குறித்து கடந்த திங்கள் கிழமை நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில், மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர குமார், “பட்டேல் ஜம்மு காஷ்மீரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார். பட்டேலைவிட தனக்குத்தான் ஜம்மு காஷ்மீர் குறித்து நன்றாகத் தெரியும் என நேரு நினைத்தார்” என பேசினார்.

Vallabhai Patel
வல்லபாய் பட்டேல்

ஜம்முவைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் ஜுகல் கிஷோர் சர்மா, “ஷேக் அப்துல்லாவின் தூண்டுதலின் பேரில் ஜவஹர்லால் நேரு பிரிவு 370 மற்றும் பிரிவு 35 ஏ -ஐ திணித்தார். பிரிவு 370 அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டபோது, சர்தார் வல்லபாய் பட்டேல், பி. ஆர். அம்பேத்கர், ஷியாமா பிரசாத் மூகர்ஜி அதை எதிர்த்தார்கள்” என்றார்.

ஆனால், வரலாற்று ஆதாரங்கள் பட்டேல் பிரிவு 370-ஐ முழுமையாக ஆதரித்தார் என சொல்கின்றன என்கிறார் ஸ்ரீநாத் ராகவன். அரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் சர்வதேச தொடர்புகள் மற்றும் வரலாற்று துறை பேராசிரியராக உள்ளார் இவர்.

“பிரிவு 370 என்பது முழுக்க முழுக்க பட்டேலின் உருவாக்கம். மற்றவர்களைவிட பட்டேலின் கருத்துக்கே இந்த விசயத்தில் முக்கியத்துவம் தரப்பட்டது” என்கிறார் ராகவன்.

“நேரு அதை திணித்தார் எனக் கூறுவது அபத்தமாகும். ஏனெனில் இது அரசின் கொள்கை முடிவு அல்ல; அரசியலமைப்பு சபையால் நிறைவேற்றப்பட்ட ஒன்று” என்கிறார் அவர்.

படிக்க:
காஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை !
♦ காஷ்மீர் : இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள் !

இந்தப் பிரிவின் முதல் வரைவு குறித்த சந்திப்பு 1949-ம் ஆண்டு மே 15 மற்றும் 16 தேதிகளில் பட்டேலின் இல்லத்தில் நடந்தது. அப்போது நேருவும் இருந்தார் என்கிற தகவலையும் அவர் கூறுகிறார்.

ஜம்மு – காஷ்மீரின் முதலமைச்சர் ஷேக் அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என். ஜி. அய்யங்கார். நேரு, அப்துல்லாவிடமிருந்து ஒப்பந்தத்தின் சுருக்கமான வரையறைகளை வரைவுக் கடிதமாகத் தயாரித்து பட்டேலுக்கு ஒரு குறிப்புடன் அனுப்பினார் அவர்.

“நீங்கள் ஒப்புதல் அளித்ததை ஜவஹர்லால்ஜிக்கு நேரடியாக தெரியப்படுத்த முடியுமா? உங்கள் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அவர் ஷேக் அப்துல்லாவுக்கு கடிதம் அனுப்புவார்” எனக் கூறுகிறது அய்யங்கார் எழுதிய ஒரு குறிப்பு.

மேலும், நேரு வெளிநாட்டில் இருந்தபோது, இந்திய அரசியலமைப்பின் உரிமைகள் மற்றும் உத்தரவு கோட்பாடுகளை தகவமைத்து கொள்வதற்கான கேள்விகளை ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு சபைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை அப்துல்லா வலியுறுத்தினார். இதன் பிறகு அப்துல்லாவுடன் பேச்சு வார்த்தையை தொடருமாறு அய்யங்காரிடம் படேல் கேட்டுக்கொண்டார்.

அப்துல்லாவின் நிலைப்பாட்டில் தனக்கு உடன்பாடு இல்லாதபோதும் பட்டேல் இதைச் செய்தார். நேரு திரும்பியபோது, இந்த நிலைப்பாட்டை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வைப்பதில் தான் வெற்றியடைந்துவிட்டதாகவும் அவரிடம் பட்டேல் தெரிவித்தார்.

பிரச்சினையை தீர்ப்பதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் விவகாரம் ஐநா வரை செல்ல நேருவே காரணம் என பாஜக கூறுகிறது.

ஷியாமா பிரசாத் முகர்ஜி

பாஜகவின் பிறப்பிடமான ஜன சங்கத்தின் நிறுவனர் முகர்ஜி, காஷ்மீர் பிரச்சினையை ஐநா தீர்க்க வேண்டும் என ஒப்புக்கொண்டதாகத்தான் ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால், பாஜகவோ காஷ்மீரின் சிறப்பு தகுதியை நீக்குவதற்குத்தான் அவர் கனவு கண்டார் எனக் கூறிவருகிறது.

முகர்ஜி, 1952 ஆகஸ்ட் 7-ம் தேதி மக்களவையில் இப்படி பேசினார், “காஷ்மீர் பிரச்சினையை ஐநாவிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றவர்களில் நானும் ஒருவன் எனக் கூறப்படுகிறது. அது உண்மைதான். அந்த முடிவு எடுக்கப்பட்ட அசாதாரண சூழ்நிலைகளையும் அந்த சூழ்நிலையில் இந்திய அரசு கொண்டிருந்த பெரும் எதிர்பார்ப்புகளையும் வெளியிட எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், ஐநாவிடமிருந்து நாங்கள் எதிர்ப்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை”.

காஷ்மீரில் குடியேற விரும்பும் காஷ்மீர் அல்லாதவர்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற முகர்ஜி, 1953-ம் ஆண்டு ஸ்ரீநகரில் தடுப்புக் காவலில் இறந்தார். மாரடைப்பு காரணமாக இறந்ததாக மருத்துவ அறிக்கை கூறினாலும், முன்னாள் பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய், நேருவின் சதித்திட்டம்தான் காரணம் என பழிபோட்டார்.

வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப், காஷ்மீருக்கான சிறப்பு தகுதியை, வெளியாரை அனுமதிப்பது உள்ளிட்ட உண்மையான காரணங்களின் அடிப்படையில் பட்டேல் ஆதரித்தார். ஆனால், முகர்ஜி அதை எதிர்த்தார்.

“சங்க உறுப்பினர்கள் உள்ளூர் முசுலீம்களை துன்புறுத்துவதையும் அவர்களுடைய நிலங்களை பறிப்பதையும் செய்து வந்தனர். இதன் காரணமாகத்தான் சர்தார் பட்டேல், உள்ளூர் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை தடுக்க, காஷ்மீரில் நுழைவதை தடை செய்தார்” என்கிறார் அவர்.

படிக்க:
வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து !
♦ ஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை ! என்ன நடக்கிறது ?

பட்டேல் ஒரு கட்டத்தில் ஹைதராபாத்துக்காக காஷ்மீரை பாகிஸ்தானுடன் பரிமாறிக்கொள்ளத் தயாராக இருந்தார் என்பதையும் வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த ஜுனாகாத்தின் முசுலீம் தலைவர் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார். அப்போது ஒரு உரையின்போது பட்டேல் இந்த கருத்தை முன்வைத்தார்.

1947 நவம்பர் 14 இந்துஸ்தான் டைம்ஸில் பட்டேல் சொன்னதாக, “ஜுனாகாத்துக்கு பதிலாக காஷ்மீரை அடைய பாகிஸ்தான் நினைத்தது. ஜனநாயக வழியில் தீர்வு பற்றிய கேள்வி எழுப்பியபோது, அவர்கள் ஒருமுறை இந்தக் கொள்கையை காஷ்மீரில் பயன்படுத்தினால் அவர்கள் அதைக் கருத்தில் கொள்வதாக சொன்னார்கள். எங்களுடைய பதில், அவர்கள் ஹைதராபாத்துக்கு ஒப்புக்கொண்டால் நாங்கள் காஷ்மீருக்கு ஒப்புக்கொள்வோம் என்பதாக இருந்தது” செய்தியாகியுள்ளது.

இருப்பினும், 370-வது பிரிவு குறித்து பட்டேல், நேருவுடன் உடன்பட்டிருந்தாலும் காஷ்மீர் விவகாரத்தின் மற்ற அம்சங்கள் மற்றும் புது டெல்லி அதைக் கையாண்ட விதம் குறித்தும் இருவருக்கும் வேறுபாடுகள் இருந்தன.

nehru sheikh abdullah
ஷேக் அப்துல்லா – ஜவஹர்லால் நேரு.

பட்டேல் குறித்த வாழ்க்கை வரலாற்று நூலில் ராஜ்மோகன் காந்தி இப்படிச் சொல்கிறார்: “காஷ்மீரின் மீதான இந்தியாவின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பட்டேல் மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்தார். பொது வாக்கெடுப்பு, ஐநாவிடம் சென்றது, போர் நிறுத்தம் காரணமாக மாநிலத்தில் ஒரு பெரும்பகுதி பாகிஸ்தானின் கைகளுக்குச் சென்றது, மகாராஜாவை அகற்றுவது உள்ளிட்டவையும் அதில் அடங்கும். ஆனாலும் எப்போதாவது கருத்து சொல்வது அல்லது ஒரு குறிப்பை சொல்வது என்றிருந்தாலும் அவர் ஒருபோதும் தனது சுய தீர்வை சொல்லவில்லை”.

நேஷனல் புக் டிரஸ்ட் 2010-ம் ஆண்டு வெளியிட்ட Nehru-Patel: Agreement Within Differences, Select Documents and Correspondences, 1933-1950, என்ற நூலில் இதுபோன்ற ஏராளமான கூற்றுக்கள் உள்ளன.

1948-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி கல்கத்தாவில் பேசிய பட்டேல், “காஷ்மீரைப் பொறுத்தவரை, மறைமுகமான யுத்தத்தில் ஈடுபடுவதைக் காட்டிலும் நேரிடையாகப் போரிடுவதை விரும்புகிறோம். அதனால்தான் நாங்கள் ஐநாவிடம் சென்றோம். காஷ்மீர் வாளின் மூலம் காப்பாற்றப்படுமெனில், அங்கே பொது வாக்கெடுப்பு எடுப்பதன் தேவைதான் என்ன? காஷ்மீர் பிரதேசத்தின் ஒரு அங்குலத்தைக்கூட நாங்கள் ஒப்படைக்க மாட்டோம்”.

“காந்திக்குப் பிறகு இந்தியா: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் வரலாறு” என்ற ராமச்சந்திர குஹாவின் நூலில், தொழிலதிபர் ஜி. டி. பிர்லாவிடம் 1949 மே மாதம் பட்டேல் சொன்னதாக ஒரு கூற்று சொல்லப்பட்டுள்ளது. “இப்போது நாம் ஒரு பழிவாங்கும் நேரத்தில் இருக்கிறோம். வானிலையும் காஷ்மீர் பிரச்சினையும் நமக்கு மோசமான தலைவலியை கொடுத்துக் கொண்டிருக்கின்றன”.

“Agreement Within Differences” நூலில் இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்திடம் 1949, ஜூன் 29-ம் தேதி டேராடூனில் பட்டேல் இப்படிச் சொல்கிறார்…“காஷ்மீர் பிரச்சினையும்கூட தீர்ந்திருக்கும். ஆனால் ஜவஹர்லால் பாராமுல்லாவிலிருந்து டொமெல்லுக்கு (1947-48 போரின்போது) படைகளை அனுப்பவில்லை. அவர் பூன்ச்-க்கு படைகளை அனுப்பினார்”

ஆனாலும், ராகவனின் “நவீன இந்தியாவில் போரும் அமைதியும்” என்ற நூலில் பட்டேல் இந்தியா, பாகிஸ்தான் இடையே காஷ்மீரை இரண்டாக பகிர்ந்துகொள்ள சமரசம் செய்துகொண்டார் என்றும் கூறுகிறது.

1948-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ம் தேதி இந்தியாவுக்கான இங்கிலாந்தின் தூதரிடம் பட்டேல், “ஜம்மு காஷ்மீர் பிரிவினை நிரந்தர, உடனடி மற்றும் யதார்த்தமான தீர்வை வழங்கும்” என சொல்லியிருக்கிறார்.

இந்தியாவின் இறுதி பிரிட்டீஷ் கவர்னர் ஜனரலாக இருந்த லூயிஸ் மவுண்பேட்டனுக்கு 1950 மார்ச் 16-ம் தேதி எழுதிய கடிதத்தில் பட்டேல், “1947 டிசம்பரில் நீங்கள் பரிந்துரைத்தது எத்தனை தீர்க்கதரிசனமானது என்பதை காஷ்மீரில் நடக்கும் விசயங்கள் எடுத்துரைக்கின்றன. ஆனால், நீங்கள் அறிந்த காரணத்துக்காக நாங்கள் அதை ஏற்கவில்லை” என குறிப்பிட்டிருக்கிறார்.

மவுண்ட்பேட்டன் அப்போது, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கியிருந்தார்.

சங்கிகளின் வாயில் பொய்யையும் புரட்டையும் தவிர வேறெதுவும் வராது என்பது நம்மனைவருக்கும் தெரியும் எனினும், இது போன்ற வரலாற்றாதாரங்களை அவ்வப் போது எடுத்துக்காட்டவும் வேண்டியிருக்கிறது. பொய்களைப் பலமுறை கூறி உண்மையாக்கும் சங்கிகளின் சதியை தகவல்கள்தான் முறியடிக்கவல்லவை.


கட்டுரை : பெரோஸ் எல். வின்செண்ட்
தமிழாக்கம் :
அனிதா
நன்றி
: டெலிகிராப் இந்தியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க