privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சுகாதாரத்தை சீர்கெடுக்கும் PKP கோழிப்பண்ணையை இழுத்து மூடு!

சுகாதாரத்தை சீர்கெடுக்கும் PKP கோழிப்பண்ணையை இழுத்து மூடு!

-

“திறந்த வெளியில் மலம் கழித்தால் சீச்சீ சொல்லப்பா” என்று சுகாதரத்துறை மூலம் பிரச்சாரம் செய்து வருகிறது அரசு. ஆனால், சீச்சீ… இப்படியும் ஒரு அரசு நிர்வாகமா என மக்கள் சிந்திக்ககூடிய அளவிற்கு PKP கோழிப்பண்ணையின் சுகாதார சீர்கேட்டை வேடிக்கை பார்த்து வருகிறது அரசு.

தருமபுரி மாவட்டம், நாய்க்கன் கொட்டாய் அருகில் உள்ள வன்னியகுளம் பஞ்சாயத்தில், PKP பவுல்ட்ரி ஃபார்ம் எனும் பெயரில் 18 ஏக்கரில் ஏழு ஷெட்டுகளில் கோழிப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார் P K பவுன்ராஜ் என்ற முதலாளி. இந்த கோழிப் பண்ணைக்கு சுகாதாரத் துறையிடமோ, கால்நடைத் துறையிடமோ மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமோ அனுமதி பெறவில்லை.

இக்கோழிப்பண்ணையில் உள்ள கோழிக்கழிவுகளில் ஈக்கள் முட்டையிட்டு கோடிக்கணக்கான ஈக்கள் உருவாகி வருகின்றன. இவை வன்னிய குளம், A முருக்கம்பட்டி, கிருஷ்ணாபுரம் ஆகிய பஞ்சாயத்துகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவி மக்கள் வாழ முடியாத அளவிற்கு, அவர்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

வீடுகளில் எங்கெங்கு பார்த்தாலும் ஆயிரக்கணக்கான ஈக்கள், அண்டா, குண்டா, பண்ட பாத்திரங்கள், துணிமணிகள், சுவர்கள் என எங்கெங்கும் ஈக்கள். இதனால் “நிம்மதியாக ஒரு வேளை சாப்பிடக் கூட முடியவில்லை, உறங்க முடியவில்லை” என்று புலம்பித் தவிக்கிறார்கள் பகுதி மக்கள். கால்நடைகளை பராமரிக்க முடியவில்லை.

மாடுகளுக்கு புண் ஏற்பட்டு அதில் ஈக்கள் மொய்ப்பதால் அது மேலும் புண் அதிகமாகி சீழ் வடிகிறது. முகத்தில் நூற்றுக் கணக்கில் ஈக்கள் அமர்வதால் தலையை இருபுறமும் ஆட்டி ஆட்டி நோய்வாய்ப்படுகின்றன மாடுகள். கண்ணில் நீர் வடிகிறது. பால் கறக்கலாம் என்று மாட்டின் மடியில் கை வைத்தால் தேன் அடையில்  தேனீக்கள் போல மடியில் அமர்ந்திருக்கும் ஈக்கள் பால் கறக்கும் போதே நூற்றுக் கணக்கில் பால் பாத்திரத்தில் விழுகின்றன. இவ்வாறு பால், தண்ணீர், பாத்திரம் என எங்கும் ஈக்கள் மொய்த்து கிராமங்களே சுகாதாரச் சீர்கேட்டால் அவதிப்படுகின்றன. கடி, அரிப்பு, காய்ச்சல், பேதி என பல்வேறு நோய்கள் பரவுகின்றன. குறிப்பாக பல குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவதிப்பட்டு வருகின்றன.

இது குறித்து கோழிப்பண்ணை நிர்வாகத்திடம் கூறினால், பண்ணை நிர்வாகி மதி என்பவன், “நாங்கள் கோழி பண்ணைதான் நடத்துகிறோம். ஈ பண்ணை நடத்தவில்லை. ஈ வருகிறதென்றால் ஈயைப் போய்க் கேளுங்கள்” என்று திமிராகப் பதில் அளிக்கிறான். அதிகாரிகளிடம் கடந்த ஆறு மாதமாக மக்கள் முறையிட்டு வருகின்றனர். ஆனால், இன்று வரை கண்டு கொள்ளாமல்தான் உள்ளனர். எந்த ஓட்டுக் கட்சியும் இப்பிரச்சினையின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை. ஏனென்றால் PJP என்ற அந்த முதலாளியின் செல்வாக்குதான். பல கட்சிக்காரர்களையும், அதிகாரிகளையும், பணத்தால் வளைத்து போடும் வல்லமை படைத்தவர் அவர். இதனால் பகுதி மக்களைத் தவிர வேறு யாரும் இப்பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை.

பணத்திற்கு சோரம் போகாதவர்களும், முதலாளிகளை எதிர்க்கும் வல்லமை படைத்தவர்களும் புரட்சிகர அமைப்புகள்தான் என்பது தருமபுரி மக்களுக்கு நனகு தெரியும். எனவே, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் புரட்சிகர அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணிக்கு தகவல் கொடுத்தனர். உடனே இதில் தலையிட்டு ஆய்வு செய்த பின் 2000 பிரதிகள் அச்சிட்டு மக்கள் மத்தியிலும் நகரப் பகுதியிலும் வினியோகம் செய்தனர் தோழர்கள். கடந்த ஆறு மாத காலமாக நொந்து போய் உள்ள மக்கள், பிரசுரத்தை தமது சொந்த கட்சி பிரசுரத்தை போல பெற்று அவர்களே வினியோகம் செய்தனர்.

வன்னியகுளம் கிராமசபை கூட்டத்திற்கு விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களை மக்கள் அழைத்தனர்.  நமது பிரசுரத்தை வினியோகம் செய்து கிராமசபை கூட்டத்திற்கு மக்களைத் திரட்டினர் பகுதி இளைஞர்கள். மக்களுக்கு நமது பிரசுரமே விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருந்தது.தோழர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஈக்களால் பரவும் நோய்கள் பற்றியும், மனு கொடுத்தால் மட்டும் போதாது, போராட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேசினர்.

கூட்டம் முடிந்த நேரத்தில் வந்த தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச் செல்வன், பிரசுரத்தை பெற்று முழுமையாக படித்து முடித்தார். அவர் “இங்குள்ள நாடாளு மன்ற உறுப்பினர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று நோட்டிஸில் போட்டு என்னைப் பற்றியும் கூறியுள்ளீர்கள். இந்த கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களே இப்படித்தான்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

இதைக் கேட்ட பெரியவர் ஒருவர், “நீங்க இப்பத்தான் வந்தீர்கள். ஆனால், இப்பிரச்சனை 6 மாத காலமாக நடக்கிறது” என்று பதில்கூறினார்.

பகுதி பஞ்சாயத்து தலைவர், “உங்களை மட்டுமா? என்னைப் பற்றியும்தான் போட்டுள்ளார்கள்” என்று கூறினார்.

பஞ்சாயத்து தலைவருடன் இருந்த திமுக பிரமுகர் ஒருவர்,”நோட்டிஸில்உள்ளது 90% சரி” என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட பிரமுகர் ஒருவர், “ஏன் 10% குறைக்கிறீங்க, எம்பியையும் தலைவரையும் பற்றி போட்டிருப்பதாலா? நூற்றுக்கு நூறு சரி என்று சொல்லுங்கள்” என்றார்.

கூட்டத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை மக்கள் பிரசுரத்தை கையில் வைத்துக் கொண்டு பேசினர்.கூட்டத்திற்கு பல்வேறு துறை சார்ந்து வந்திருந்த ஊழியர்கள், பிடிஓ, ஏஓ, விஏஓ உள்ளிட்ட அதிகாரிகள் பிரசுரத்தை படித்தனர்.

பெரியவர் ஒருவர் அதிகாரிகளைப் பார்த்து, “எங்க கிராமத்தில் ஒரு நாள் தங்குங்கள். அப்பத்தான் ஈக்களின் தொல்லை பற்றி புரியும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து 500 சுவரொட்டிகள் வி.வி.மு. பெயரில் அச்சடித்து அப்பகுதி கிராம இளைஞர்களின் உதவியோடு நகரம், கிராமம் என பரவலாக ஒட்டினோம். இது பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பகுதி மக்களின் உணர்வுகளுக்கு இணங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது என முடிவு செய்து சுமார் 150 பேரை திரட்டி மனு அளித்து அதிகாரிகளிடம் பேசினோம்.

PKP கோழிப்பண்ணையை இழுத்து மூடியே தீருவது என்று அடுத்தக் கட்ட போராட்டத்திற்கு மக்களை தயார் படுத்தி வருகின்றனர் வி.வி.மு. தோழர்கள்.

தமிழக அரசே!

  • ஈக்கள் பெருகி பரவ காரணமான கோழிப் பண்ணையை இழுத்து மூடு!
  • ஈக்களால் வன்னியகுளம், ஏ.முருக்கம்பட்டி, கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்துகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கை எடு! மருத்துவ முகாம் நடத்து!
  • ஈக்களால் மன உளைச்சலுக்கும் பொருளாதார இழப்பிற்கும் ஆளான மக்களுக்கு, கோழிப்பண்ணை முதலாளியிடமிருந்து நட்ட ஈடு பெற்றுக் கொடு!

உழைக்கும் மக்களே

  • நமது வாழ்வுரிமையை பாதுகாக்க உழைக்கும் வர்க்கமாக ஒன்றுபடுவோம்!
  • தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராடுவோம்

நோட்டிஸ்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்

விவசாயிகள் விடுதலை முன்னணி,
பென்னாகரம், தருமபுரி மாவட்டம்.
தொடர்புக்கு : 9943312467