உலக சுகாதார நிறுவனத்தின் நடவடிக்கைகளின் பின்னால் மறைந்துள்ள நோக்கங்களையும், அதனைக் கட்டுப்படுத்தும் உண்மையான சக்திகளையும் குறித்ததொரு புலனாய்வு ஆவணப்படம்.
(இந்த ஆவணப்படம் இணையத்தில் கிடைக்கப் பெறுவதில்லை)
உலக சுகாதார நிறுவனம், கடந்த 1948-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. எங்கும் எல்லோருக்கும் சுகாதாரமான எதிர்காலம் கட்டமைக்கப்படவேண்டும் என்ற இலக்கோடு உருவாக்கப்பட்டது இந்நிறுவனம்.
சுவிச்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவா-வில் தனது தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தில் தற்போது சுமார் 7000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். உலகம் முழுவதிலும் 6 மண்டல அலுவலகங்களையும் 150 நாடுகளில் அலுவலகங்களையும், கொண்டுள்ளது இவ்வமைப்பு. மேலும், ஐக்கிய நாடுகள் சபைக்கு ஏற்றவகையிலான ஒழுங்குமுறை விதிகளை ஏற்றுக் கொண்ட 194 -க்கும் மேற்பட்ட நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
படிக்க:
♦ பில்கேட்ஸ் பவுண்டேஷன் : அதிர்ச்சியூட்டும் உண்மைகள் !
♦ SICKO – மைக்கேல் மூரின் ஆவணப்படம்
புகைப்பிடித்தலின் பாதிப்பாக இருக்கட்டும், பன்றிக் காய்ச்சல் பாதிப்பாக இருக்கட்டும் அல்லது ஒரு அணு விபத்தாக இருக்கட்டும், நாம் அறிவுரைக்காகவோ அல்லது ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையைத் தீர்க்கவோ சார்ந்திருக்கும் ஒரே அமைப்பு உலக சுகாதார நிறுவனம் மட்டும்தான். ஆனால், அது நம்பத்தகுந்ததாக இருக்கிறதா? உலக சுகாதார நிறுவனம் தனது பரிந்துரைகளை எவ்வாறு முடிவெடுக்கிறது? அந்தப் பரிந்துரைகள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை?
உலகளாவிய சுகாதார விவகாரங்களை பாரபட்சமின்றி கையாளும் அதன் திறனின் மீதான நம்பிக்கை, உலக சுகாதார நிறுவனத்தின் தொடக்க காலங்களில் இருந்ததைப் போல இப்போது உறுதியாக இல்லை. இந்நிறுவனத்திற்கான நிதி மற்றும் அதில் பங்களிப்பு செலுத்தும், தனிப்பட்டவர்களின் ஆதிக்கம் குறித்த கவலையும், கடந்த 1950-களிலிருந்தே இருந்து வருகிறது.
ஆவணப்படத்தின் முன்னோட்டம் (ட்ரெய்லர்)
இக்காலகட்டங்களில் எவ்வித செயல்பாடுகளும் இல்லாத சில ஆண்டுகளுக்குப் பின்னர், புகையிலை தொழில்துறையின் முக்கிய நிறுவனங்களுடனான இந்நிறுவனத்தின் உறவு வெளிச்சத்துக்கு வந்தது.
“புகையிலை தொழில்துறையினர், சில நிறுவனங்களை உருவாக்கி, அதில் தமது நிலைப்பாட்டை முன் வைக்கக் கூடிய அறிவியலாளர்களை பணிக்கு அமர்த்தினர். மேலும் தமது பெயர் எங்கும் வெளிவராதபடிக்கு அவர்கள் பார்த்துக் கொண்டனர். அந்த நிறுவனங்கள் உண்மையில் புகையிலை தொழில்துறையின் நலனை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனவோ என நீங்கள் சந்தேகிக்கக் கூடாது என்பதற்காகவே அவர்கள் தங்கள் பெயர் வெளியே வராதபடி செய்தனர்.” என்கிறார் ‘சுவிச்சர்லாந்தின் சுகாதாரம்’ என்ற அமைப்பின் முன்னாள் செயலாளர் தாமஸ் செல்ட்னர்.
இந்த நிறுவனங்களில் இருக்கும் அறிவியலாளர்களும், முக்கியப் புள்ளிகளும், பெரும் புகையிலை ஜாம்பவான்களுடனும், உலக சுகாதார நிறுவனத்தினுடனும் ஒரே சமயத்தில் தொடர்பை வைத்துள்ளனர். இதற்கு ஒரு உதாரணத்தையும் பார்க்கலாம்.
புகையிலை (எதிர்ப்பு) இயக்கம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகராக பணியாற்றிய விச(முறி)வியல்துறை நிபுணர் ஒருவர், பன்னாட்டு புகையிலை மற்றும் சிகரெட் தயாரிப்பு நிறுவனமான பிலிப் மோரிஸ் நிறுவனத்தால் நிதி பங்களிப்பு செய்யப்படும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது பலதரப்பட்ட தொடர்புகள் அம்பலமான பின்னும், அவர் உலக சுகாதார நிறுவனத்தில் ஆலோசகராகத் தொடர்ந்தார்.
அதன் பின்னரும் இதுபோன்ற நிறுவனங்கள், தங்களது திட்டமிட்ட நலனுக்காக உலக சுகாதார நிறுவனத்துடன் இயற்கை நியதிக்கு எதிரான உறவுகளைக் கொண்டிருந்த பல்வேறு தருணங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்களின் உச்சத்தில்தான் நிகழ்ந்திருக்கின்றன.
முழு ஆவணப்படத்தை பணம் செலுத்திப் பார்க்க : TrustWHO
இதுபோன்ற தொடர்புகளுல் ஒன்றுதான், மருந்து தயாரிப்பு நிறுவனங்களான க்ளாக்சோ, நோவார்டிஸ் ஆகிய நிறுவனங்கள், உலக சுகாதார நிறுவனம், பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நாடுகள் ஆகிய முத்தரப்பிற்கும் இடையிலான தொடர்பு. இந்நாடுகள் நோவார்ட்டிஸ், க்ளாக்சோ ஆகிய நிறுவனங்களில் இருந்து பன்றிக் காய்ச்சல் மருந்துகளைப் பெறுவதற்குத்தான் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தன.
கடந்த 2009-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தொற்று அபாய எச்சரிக்கைதான், இத்தகைய ஒப்பந்தங்கள் போடப்படுவதற்கான தூண்டுதல் புள்ளியாக இருந்தது.
அந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கு அடுத்த முதல் மூன்றுமாத காலத்தில், பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய மருந்து நிறுவனம், வருடாந்திர கூடுதல் லாபமாக 1.95 பில்லியன் டாலரை ஈட்டியது. ஆனால் பன்றிக் காய்ச்சல், அதற்குக் கொடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கையின் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஜெர்மனியில் மொத்தம் 258 பேர் இந்தக் காய்ச்சலுக்கு பலியாகினர். இது சாதாரணக் காய்ச்சலால் ஏற்படும் பலியைவிட வெகு அதிகமாக இல்லை.
உலக சுகாதார நிறுவனம், பன்றிக் காய்ச்சலுக்காக அதீத முன்னெச்சரிக்கையாக இருந்து, சுமார் 18 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியதாக பழிசுமத்தப்பட்டது. “பன்றிக்காய்ச்சல் பரவும் சமயத்தில், நான் உலக சுகாதார மையத்தின் பொது சுகாதாரத் துறை, மருந்து மற்றும் அறிவுசார் சொத்துடைமைப் பிரிவின் பொதுச் செயலாளராக இருந்தேன். அங்கிருக்கும் யாரும் பன்றிக் காய்ச்சல் குறித்து அச்சப்படவில்லை” என்கிறார் ஜெர்மன் வெலஸ்க்யஸ். இவர் தற்போது பசுமை பருவநிலை நிதியம் எனும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
“எனக்குத் தெரிந்து உலக சுகாதார நிறுவனத்தில், அதன் பொது இயக்குனர் உள்ளிட்டு அங்கு பணியாற்றும் யாரும் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதில்லை. இது குறித்து அதன் பொது இயக்குனரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தனக்கு நேரமில்லை என்றும், பிறிதொரு நேரத்தில் அந்த தடுப்பு மருந்தை போட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார் அந்தப் பெண்மணி.” என்கிறார் வெலஸ்க்யஸ்
ஐரோப்பிய கவுன்சிலின் முன்னாள் பிரதிநிதி வோல்ஃப்கேங் வோடார்க், இத்தகைய உறுதியற்ற மற்றும் உண்மை மறைக்கப்பட்ட சூழ்நிலைமைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறார். உலக சுகாதார நிறுவனத்தினர், நிதி திரட்டலுக்குக் கைமாறாக குறிப்பான நிலைமைகளின் யதார்த்தத்திற்கு அடிக்கடி பாராமுகமாய் இருந்து விடுகின்றனர் என்கிறார்.
“உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் இவ்விவகாரங்கள் குறித்து எதுவும் அறியாதவர்களாக இருக்கின்றனர். அவர்கள் அறிவியலாளர்களைத்தான் சார்ந்திருக்க வேண்டும். அனைத்து அறிவியலாளர்களும் பல்வேறு நாடுகளாலும், உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதி அளிக்கும் அமைப்புகளாலும் நியமிக்கப்படுபவர்களே. அவர்களில் பெரும்பாலானவர்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆதாயம் தரும் முடிவுகளையும், அவர்களுக்கு ஆதரவான ஆலோசனைகளையுமே வழங்கிவந்தனர்” என்கிறார் வோடார்க்.
படிக்க:
♦ எபோலா வைரசால் வேட்டையாடப்படும் ஆப்ரிக்கா !
♦ பன்றிக் காய்ச்சல்: முதலாளிகளின் பயங்கரவாதத்தை முகமூடிகள் தடுக்குமா?
பல ஆண்டுகளாக, உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபை, குறிப்பான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு மத்தியிலான உறவில் இது போன்ற நிலைமைகளே வளர்ந்து வருகின்றன. செர்னோபில் பேரழிவு உட்பட நடக்கக்கூடாத, மோசமான சூழ்நிலைமைகளிலும் இத்தகைய போக்கு வளர்ந்துள்ளது.
அணு உலை வெடிப்பின் காரணமாகவும், அதற்குப் பிந்தைய விளைவுகளின் காரணமாகவும் நேரடியாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையைக் குறைத்ததாக உலக சுகாதார நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்நிறுவனம் நெருக்கமாகப் பணியாற்றி வந்ததும், அப்போது உறுதியாகத் தெரிந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் குடையின் கீழ் “அமைதிக்கான அணுக்கள்” முகமை என்றுதான் முதன்முதலில் சர்வதேச அணுசக்தி முகமை உறுவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு நிறுவனங்களும், – ஒன்று உலக சுகாதாரத்திற்காகவும், மற்றொன்று ‘பாதுகாப்பான’ அணு சக்தி பயன்பாட்டிற்காகவும் என – ஒட்டுமொத்தமாக இரு வேறு நோக்கங்களைக் கொண்டதாக இருக்கும் அதே வேளையில், செர்னோபில்லில் மட்டுமல்லாது, புகுஷிமாவிலும் அதனால் ஏற்பட்ட இழப்பின் அளவு குறைவாகக் காட்டியது உலக சுகாதார நிறுவனம்.
உலக சுகாதார நிறுவனத்தினுள் எவ்வாறு தொழிலக லாபிக்கள் உள் நுழைகின்றனர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவது மட்டுமல்லாமல், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணிக் காக்க இந்நிறுவனத்தை நம்ப முடியுமா ? என்ற கேள்வியையும் எழுப்புகிறது இந்த ஆவணப்படம்.
தமிழாக்கம் : நந்தன்
நன்றி : அல்ஜசீரா