கேட்ஸ் பவுண்டேஷன்: மனிதநேய வடிவில் வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!
(சென்ற இதழின் தொடர்ச்சி)
ஏழை நாட்டு மக்களைச் சோதனைச்சாலை எலிகளாகப் பயன்படுத்திப் புதிய மருந்துகளை அவர்கள் மீது சோதிப்பதையும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தடைசெயப்பட்ட மருந்துகளை, மந்திர சக்திகள் கொண்ட அருமருந்தாகக் காட்டி அவற்றை ஏழை நாடுகளின் தலையில் கட்டுவதையும் நோக்கமாகக் கொண்ட பில் கேட்ஸ் அறக்கட்டளை, இந்தியாவில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. இந்தியாவில் தமது அறக்கட்டளையின் செயல்பாடுகளைப் பற்றிக் கூறும் போது, “தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியாவைப் போன்று சிறந்த இடம் வேறில்லை” எனக் குறிப்பிடுகிறார், பில் கேட்ஸ். இதன் பொருள், பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் புதிய தயாரிப்புகளை எவ்விதமான மருத்துவ அறம் மற்றும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படாமலும் மிகவும் மலிவான செலவிலும் மக்கள் மீது சோதித்துப் பார்ப்பதற்கு எளிமையானதொரு சோதனைக்கூடமாக இந்தியா விளங்குகிறது என்பதுதான்.
இந்தியாவில் பில் கேட்ஸ் அறக்கட்டளையின் செயல்பாடு எய்ட்ஸ் நோய் தடுப்பு, தொற்று நோய்களுக்கான தடுப்பூசிகள், தாய்-சேய் நலத் திட்டங்கள், குடும்பக் கட்டுப்பாடு, புதிய தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சிகள் – எனப் பல தளங்களில் விரிந்து செல்கிறது. உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஏறத்தாழ அம்மாநில அரசுகளின் அனைத்து சுகாதாரத் திட்டங்களிலும் பில் கேட்ஸ் அறக்கட்டளை மூக்கை நுழைத்துச் செயல்பட்டு வருகிறது.
அருணாச்சலப்பிரதேசம், ஜார்கண்ட், இராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் கேட்ஸ் அறக்கட்டளை முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் போலியோ, காசநோய், காலரா, ரொட்டாவைரஸ், நிமோனியா ஆகிய நோய்களுக்கான தடுப்பூசித் திட்டங்களை இந்திய அரசு கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்துதான் நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.
ரொட்டாவைரஸ் தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான சோதனைக் கூடத்தை வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சி.எம்.சி) ஏற்படுத்தியுள்ள கேட்ஸ் அறக்கட்டளை, ரொட்டாவைரஸ் தடுப்பூசி தொடர்பான மருந்துகளை மேலும் வளர்த்தெடுக்கவும், அம்மருந்துகளை 10,000 பச்சிளங் குழந்தைகளுக்குக் கொடுத்து பரிசோதிக்கும் மூன்றாம் கட்ட சோதனைகளை நடத்தவும் பாரத் பயோடெக் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறது. பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் தடுப்பூசிகளை இந்திய அரசின் குழந்தைகள் நலத்திட்டத்துடன் இணைப்பதன் மூலம் அம்மருந்துகளுக்கான சந்தையை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது, கேட்ஸ் அறக்கட்டளை.
இப்படிப்பட்ட வணிக நோக்கங்களைத் தாண்டி கேட்ஸ் அறக்கட்டளைக்கு வேறெந்த ‘நல்ல’ நோக்கமும் கிடையாது என்பதற்கு இன்னொரு உதாரணமாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் அதனின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் தாய்-சேய் நலத் திட்டத்தைக் குறிப்பிடலாம். கேட்ஸ் அறக்கட்டளை இந்தத் திட்டத்திற்கு 7.5 கோடி அமெரிக்க டாலர்களை நிதியாக அளித்து, “கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஏழைத் தாய்மார்களுக்கும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கம்” எனக் கூறியது. ஆனால், நடந்ததோ வேறு. சுகாதார விழிப்புணர்வு என்ற பெயரில் கிராமப்புற ஏழைகளை மருத்துவ காப்பீடு சந்தாதாரர்களாக மாற்றும் வேலைதான் தீவிரப்படுத்தப்பட்டது.
கடந்த 2010-11-ம் ஆண்டில் மட்டும் மருத்துவ மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கு இந்திய அரசு ஒதுக்கிய நிதி 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இந்த நிதியோடு ஒப்பிட்டால் பில் கேட்ஸ் அறக்கட்டளை கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் சுகாதராத் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியின் அளவு – 6,000 கோடி ரூபாய் என்ற சுண்டைக்காய்தான். ஆனாலும், கேட்ஸ் அறக்கட்டளை இந்திய அரசின் சுகாதாரத் திட்டங்களை, அவை செயல்படுத்தப்படும் விதத்தைத் தீர்மானிக்கும் செல்வாக்கைப் பெற்றிருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட்டு அவற்றை தங்களது நலனுக்கு ஏற்றாற்போல மாற்றுவது என்ற தனது ஆதிக்க நோக்கத்தை இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.
உமி கொண்டுவந்தவன் அவல் தின்பது எப்படி சாத்தியமானதென்றால், இது கேட்ஸ் அறக்கட்டளை இந்தியாவிற்கு எவ்வளவு நிதி தருகிறது என்பதோடு சம்பந்தப்பட்டதாக இல்லை. மாறாக, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, அரசின் மருத்துவ-சுகாதாரத் திட்டங்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்கு ஏற்ப நைச்சியமான முறைகளில் மாற்றியமைக்க வேண்டும். அத்திட்டங்களை உருவாக்குவதையும், செயல்படுத்துவதையும் மட்டுமல்ல, அதற்கான நிதியைச் செலவழிக்கும் உரிமையையும் கேட்ஸ் அறக்கட்டளை போன்ற கார்ப்பரேட் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற ஏகாதிபத்திய ஆதிக்கம்தான் இதன் பின்னுள்ள காரணம். அதனைச் செயல்படுத்தும் கைக்கூலிகளாக இந்திய ஆளும் வர்க்கமும் ஆட்சியாளர்களும் இருந்து வருகின்றனர். அரசு நிறுவனங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் கேட்ஸ் அறக்கட்டளையின் வேலைக்காரனாக மாற்றும் வேலையைச் செய்து வருகின்றனர்.
புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்காக பி.டி.பி. என்றழைக்கப்படும் “பொதுத் துறை-தனியார் கூட்டு” திட்டத்தை கேட்ஸ் அறக்கட்டளை முன்னிறுத்துகிறது. இதன் மூலம் ஏழை நாடுகளின் அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மாணவர்களைப் பன்னாட்டு ஏகபோக மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைத்து புதிய மருந்துகள், தடுப்பூசிகள், பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தயாரிக்கும் தமது நோக்கத்தை மிகவும் மலிவான செலவில் நிறைவேற்றி வருகிறது.
இந்த பி.டி.பி. திட்டத்தின்படி புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதுடன் கேட்ஸ் அறக்கட்டளை நின்றுவிடுவதில்லை, அவற்றை மக்கள் மீது சோதனை செய்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் வாங்குவதுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மருந்துகளுக்கான சந்தையை உருவாக்கிக் கொடுக்கும் தரகனாகவும் கேட்ஸ் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் அதன் கீழ் இயங்கும் உயிரி தொழில்நுட்பத் தொழிற்துறை ஆராய்ச்சி மற்றும் உதவி மையம் ஆகியவற்றுடன் இணைந்து பில் கேட்ஸ் அறக்கட்டளை உருவாக்கியுள்ள ‘கிராண்ட் சேலஞ்சஸ் இந்தியா‘ என்கிற அமைப்பு பி.டி.பி. திட்டத்திற்கு எடுப்பான உதாரணம். 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம், பில் கேட்ஸ் அறக்கட்டளையும், மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறையும், தலா 150 கோடி முதலீடு செய்து தொற்றுநோய்களுக்கான புதிய தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதுடன் பழையவற்றை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபடும் நிறுவனம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக அறிவிக்கிறது.
இவை போன்ற திட்டங்களுக்காக கேட்ஸ் அறக்கட்டளையுடன் இந்திய அரசு கைகோர்த்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும், நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஏகாதிபத்திய ஆதிக்கம் காரணமாகவே இந்தக் கூட்டுறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராண்ட் சேலஞ்சஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் பில் கேட்ஸ் அறக்கட்டளையைச் சேர்த்துக் கொண்டதன் மூலம், இனிவரும் காலங்களில் எந்தெந்த தடுப்பூசி மருந்துகள் தொடர்பாக ஆராய்சசி செய்ய வேண்டும், உற்பத்தி செய்ய வேண்டும், மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் உரிமையும் அதனிடம் தாரைவார்க்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று பில் கேட்ஸ் அறக்கட்டளையும், இந்திய அரசும் இணைந்து உருவாக்கியுள்ள “இந்திய பொது சுகாதார அறக்கட்டளை”, பொது சுகாதாரம் குறித்து ஆய்வு செய்வதற்கான கல்வி நிறுவனங்களை நாடு முழுவதும் தொடங்கவிருக்கிறது. இந்த அறக்கட்டளைக்கு 90 கோடி ரூபாய் நிதியளித்துவிட்டு இந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்தையும் தனது நோக்கத்திற்குப் பயன்படுத்தும் வாய்ப்பை இதன் மூலம் பில் கேட்ஸ் அறக்கட்டளை பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புக்களை சந்தித்தப் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் தடுப்பூசிகளை வேறு பெயர்களில் இந்தியா போன்ற ஏழை நாடுகளின் தலையில் கட்டும் கேட்ஸ் அறக்கட்டளையின் சதிச்செயல் ஏற்கெனவே அம்பலமான பிறகும் கூட இந்திய அரசு அதனுடனான தொடர்பைப் பேணுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு கேட்ஸ் அறக்கட்டளையும், “பாத்” என்ற அரசுசாரா நிறுவனமும் இணைந்து, குஜராத்திலும், ஆந்திராவிலும் நடத்திய தடுப்பூசி முகாம்களில், ஹெச்.பி.வீ. என்ற கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசியை 23,000 பழங்குடியினச் சிறுமிகளுக்குச் செலுத்தின. இந்த தடுப்பூசி நோயைத் தடுப்பதற்குப் பதிலாக பாரதூரமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியது. அத்தடுப்பூசியின் காரணமாக ஏழு பழங்குடியினச் சிறுமிகள் அநியாயமாக உயிரிழந்ததோடு, 1,200-க்கும் அதிகமான சிறுமிகள் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டனர். அமெரிக்க மக்களால் புறக்கணிக்கப்பட்ட கர்டாசில் என்ற மருந்தைத்தான், அதில் சில மாற்றங்களைச் செய்து, புதுப் பெயரையும் சூட்டி இந்தியச் சிறுமிகளுக்குச் செலுத்திய அயோக்கியத்தனம் பின்னர் விசாரணையில் அம்பலமானது.
இம்மரணங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கேட்ஸ் அறக்கட்டளையின் தொங்குதசையான பாத் நிறுவனம், பழங்குடியினச் சிறுமிகளை வலுக்கட்டாயமாக இம்முகாம்களுக்கு இழுத்து வந்ததும், இம்மருந்தின் விளைவுகள் குறித்துப் பல பொய்களைப் பிரச்சாரம் செய்ததும் மட்டுமின்றி, தடுப்பூசி போட்டுக் கொண்ட பல சிறுமிகளின் பெற்றோர்களின் கையெழுத்தை பாத் நிறுவன அதிகாரிகளே மோசடியாக போட்டிருப்பதும் நிரூபணமானது.
இம்மரணங்கள் குறித்து விசாரித்த நாடாளுமன்ற நிலைக்குழு, தனது அறிக்கையில், “மருத்துவ முகாம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இவை, அங்கீகாரமற்ற தடுப்பூசிகளை மனிதர்கள் மேல் சோதித்துப் பார்ப்பதற்காக நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனை நடவடிக்கைகளாகும்” என்பதை உறுதி செய்து, “இது சட்டவிரோதமான முறையில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறலாகும்” எனச் சுட்டிக் காட்டியது. “ஒருவேளை இந்த அறக்கட்டளையின் பரிந்துரையின் பேரில் இந்திய அரசின் தடுப்பூசித் திட்டத்தில் கர்டாசில் தடுப்பூசியைச் சேர்த்திருந்தால், அது அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனத்திற்கு மிகப் பெரும் இலாபத்தை, ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே செல்லும் அதிரடி இலாபத்தை, அள்ளித் தந்திருக்கும்” என்பதை அம்பலப்படுத்திய நாடாளுமன்ற நிலைக்குழு, “பொதுச் சேவை என்கிற பெயரில் தனியார் நிறுவனங்களின் வணிக நோக்கங்களுக்குச் சாதகமாக இயங்கிவரும் இந்த அறக்கட்டளை மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் பரிந்துரைத்தது.
ஆனால், இதுவரை கேட்ஸ் அறக்கட்டளை மீதோ, பாத் நிறுவனம் மீதோ எந்த கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கேட்ஸ் அறக்கட்டளையும் புதிய மருந்துகளைப் பரிசோதிக்கும் தனது கிரிமினல் நடவடிக்கைகளைக் கைவிட்டுவிடவில்லை. கேட்ஸ் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் இயங்கும் “குடும்ப சுகாதார அகிலம்” என்ற நிறுவனம், 2011-13-ம் ஆண்டுகளில் இந்தியாவில் 12,818 மருந்துப் பரிசோதனைகளைப் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் சார்பாக நடத்தியிருக்கிறது. இது போல கேட்ஸ் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் இயங்கும் ஏர்ராஸ் என்ற நிறுவனம் 2011-ம் ஆண்டில் பெங்களூரு நகரில் காச நோய்த் தடுப்பூசிக்கான மருந்துப் பரிசோதனைகளை நடத்தியது.
சமூகம் சார்ந்த ஆரம்ப சுகாதாரத் திட்டங்கள் மட்டுமே ஏழை நாட்டு மக்களுக்கு பலன் தரும் என்று 1978-ல் நடைபெற்ற ஆரம்ப சுகாதாரத்துக்கான அல்மா அட்டா மாநாட்டுத் தீர்மானம் கூறுகிறது. “தங்களது உடல் நலத்திற்கான சுகாதாரத் திட்டங்களை வகுக்கவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும், மக்கள் அனைவருக்கும் உரிமையும், கடமையும் உண்டு” என்ற கொள்கையின் அடிப்படையில் மாவோவின் மக்கள் சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘வெறுங்கால் மருத்துவர்கள்’ (Barefoot Doctors) என்ற திட்டம், பொது சுகாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை நாடுகள் அதிலிருந்து விடுபட மேற்குலக ஏகாதிபத்தியத்தின் தயவை நம்பியிருக்க வேண்டியதில்லை என்பதைத் தெளிவாகக் காட்டியது. அல்மா அட்டா மாநாடு சீன அனுபவத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து ஏழை நாடுகளும் சமூகம் சார்ந்த சுகாதார நலத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் எனக் கோரியது.
கேட்ஸ் அறக்கட்டளையோ அல்மா அட்டா தீர்மானத்திற்கு நேர்எதிராக, புதிய புதிய தடுப்பூசிகளை உருவாக்கி, அவற்றைச் சந்தையில் கொட்டுவதன் மூலம் மட்டுமே நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என வாதிடுவதோடு, அதனை முனைப்பாகச் செயல்படுத்தியும் வருகிறது. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், எபோலா – என உலகமயம் உருவாக்கித் தள்ளும் ஒவ்வொரு புதுப்புது தொற்று நோய்களையும் தனது திட்டங்களைச் செயல்படுத்துவதற்குக் கிடைத்த நல்வாயப்பாகவே ஏகாதிபத்தியங்கள் கருதுகின்றன. மேற்குலகின் அமைதியைச் சீர்குலைப்பதில் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு அடுத்தபடியாக இத்தொற்று நோய்கள் இருப்பதாக நியாயம் கற்பித்து, அதனை ஒழிப்பது என்ற பெயரில் ஏழை நாடுகள் மீது தமது ஆதிக்கத்தை மேலும்மேலும் தீவிரப்படுத்த முனைகின்றன. இந்த ஆதிக்கத்தைத் தொடுக்கும் கருவிகளாக கேட்ஸ் அறக்கட்டளை போன்ற தர்மகர்த்தாக்களும் அரசுசாரா நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
உலகிலேயே பொது மருத்துவமும், ஆரம்ப சுகாதாரமும் மிகத் தீவிரமாக தனியார்மயப்படுத்தப்பட்டுள்ள நாடு அமெரிக்காதான். அந்நாட்டில் ஆயிரம் டாலர் இல்லாமல் ஒரு பல்லைக்கூடப் பிடுங்கிவிட முடியாது. அந்தளவிற்கு அந்நாட்டில் மருத்துவச் செலவு உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு இல்லாதவர்கள் சிகிச்சை பெறுவது குதிரைக் கொம்புக்கு ஒப்பானது. செப்டம்பர் 2001-ல் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதலையடுத்து, அந்த இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொற்று நோய்க்கு ஆளாக நேர்ந்தது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அமெரிக்க அரசு மறுத்துவிட்ட நிலையில், 9/11 என்ற ஆவணப்படத்தை இயக்கிய மைக்கெல் மூர் என்ற இயக்குநர், அத்தொழிலாளர்களை கியூபாவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சைப் பெற வைத்தார். காத்ரினா புயல் தாக்கி தெருவிற்கு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பின ஏழை மக்களுக்கு கியூபாவிலிருந்து சென்ற மருத்துவர் குழுக்கள்தான் முதலுதவி உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தன.
இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட நாட்டைச் சேர்ந்த பில் கேட்ஸ் கணினித் துறையைச் சேர்ந்த ஏகபோக முதலாளி மட்டுமல்ல; பிக் பார்மா என்று அழைக்கப்படும் ஏகபோக மருந்து கம்பெனிகளிலும் பங்குதாரராக இருந்து வருகிறார். அவரது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமெரிக்க உளவுத் துறைக்காகச் செயல்பட்டு வருவதும் அம்பலமான உண்மை. தனியார்மயத்தை ஆராதிக்கும் நாட்டைச் சேர்ந்த ஏகபோக முதலாளி, அமெரிக்க அரசின் உளவாளி ஏழை நாட்டு மக்களுக்கு உதவ வந்திருக்கும் தர்மகர்த்தாவாக முன்னிறுத்தப்படுவது அயோக்கியத்தனமானது. ஒவ்வொரு வார்த்தையின் பின்னும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கிறது எனும்பொழுது, ஒரு தேசங்கடந்த தொழிற்கழகத்தின் முதலாளி நடத்தும் கேட்ஸ் அறக்கட்டளையின் செயல்பாடுகளின் பின்னே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனும் ஆதிக்கமும் மறைந்திருக்காதா?
(முற்றும்)
– கதிர்
இக்கட்டுரை, மும்பையிலிருந்து வெளிவரும் “இந்தியப் பொருளாதாரத்தின் கூறுகள்” என்ற ஆங்கில காலாண்டு இதழில் (எண்.57) வெளியான “கேட்ஸ் அறக்கட்டளையின் உண்மை நிகழ்ச்சி நிரல்” மற்றும் “இந்தியாவில் கேட்ஸ் அறக்கட்டளை: அரிச்சுவடி” என்ற இரு கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
_______________________________
தாகூர் எழுதிய “30 கோடி முட்டாள் மக்களை எப்படித்தான் மாற்ற” என்ற வரிகள்தான் சிந்தனையில் ஓடுகிறது.
Different perspective and well written article
[…] நன்றி: வினவு […]