முகப்புஉலகம்அமெரிக்காபாஜக ஆசியுடன் இந்தியனைக் கொல்ல வரும் பில்கேட்ஸ் !

பாஜக ஆசியுடன் இந்தியனைக் கொல்ல வரும் பில்கேட்ஸ் !

-

கேட்ஸ் பவுண்டேசன்: மனிதநேய வடிவில் வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!

ணினி உலகின் முடிசூடா மன்னர், உலகின் மிகப் பெரும் பணக்காரர் என அறியப்பட்ட பில்கேட்ஸ்தான் இன்று உலகின் மிகப் பெரிய தர்மகர்த்தா. அமெரிக்காவிலுள்ள சியாட்டல் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு அவர் நடத்திவரும் அறக்கட்டளை நிறுவனமான “பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை” அளவிலும் செயல்பாட்டிலும் தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்கு இணையானது. இந்திய அரசின் போலியோ ஒழிப்புத் திட்டம் உள்பட பல்வேறு சுகாதாரத் திட்டங்களின் மூளையாக இருப்பது கேட்ஸ் அறக்கட்டளைதான். கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்த அவர், மைய அரசுடன் இணைந்து பச்சிளங் குழந்தைகள் உயிரிழப்பைத் தடுப்பதற்கான திட்டத்தைத் தனது அறக்கட்டளையின் சார்பாகத் தொடங்கி வைத்தார்.

பில் கேட்ஸ், மெலிந்தா கேட்ஸ், ஹர்ஷவர்தன்
பச்சிளங்குழந்தைகளின் உடல்நலக் கவனிப்பு தொடர்பான திட்டம் மற்றும் வழிகாட்டும் கொள்கைகளை மைய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுடன் (நடுவில்) இணைந்து வெளியிடும் பில்கேட்ஸ் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவர் பில் கேட்ஸ் (வலது) மற்றும் அவரது மனைவி மெலிந்தா கேட்ஸ்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பு பற்றிக் கதைக்கப்படும் இத்தருணத்தில் பில்கேட்ஸின் வருகையை இந்தியாவைச் சேர்ந்த தரகு முதலாளிகளும் ஆரவாரமாக வரவேற்றுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, விப்ரோ அதிபர் அசிம் பிரேம்ஜி ஏற்பாடு செய்திருந்ததொரு கூட்டத்திற்கு பில் கேட்ஸ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். இக்கூட்டத்தில் டாடா குழுமத்தின் சைரஸ் மிஸ்திரி, ஜி.எம்.ஆர் அதிபர் ஜி.எம்.ராவ், இன்போசிஸ் நந்தன் நீலகேனி மற்றும் கோபாலகிருஷ்ணன், ஜிண்டால் குழுமத்தின் நவீன் ஜிண்டால், ஏர்டெல்லின் சுனில் மிட்டல், பயோகான் கிரண் மஜூம்தார் ஷா உள்ளிட்ட இந்தியாவின் தரகு முதலாளிகள் கலந்துகொண்டு, அறக்கட்டளைகளை வெற்றிகரமாக நடத்துவது குறித்து பில் கேட்ஸுடன் விவாதித்தனர்.

கணினித் துறையில் ஏகபோக முதலாளியான பில் கேட்ஸ், தனது தாயார் சாகும் தருவாயில், “யாருக்கு மிக அதிகமாகக் கொடுக்கப்பட்டதோ அவர்களிடமிருந்து மிக அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது” எனக் கூறியதால், எஞ்சியுள்ள தனது வாழ்க்கை முழுவதிலும், தனது அறிவையும், திறமையையும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் நோக்கில்தான் அறக்கட்டளைகளைத் தொடங்கி நடத்துவதாகக் கூறியிருக்கிறார்.

தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச கூலியை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதையே நீக்க வேண்டும் என வாதாடி வரும் இந்தக் கனவான்கள் அனைவரும் சமூக பொறுப்பு பற்றி பேசுவதும் அதற்காக தமது இலாபத்தின் ஒரு பகுதியை ஒதுக்குவதும் ஒன்றுக்கொன்று முரண்பாடானதல்ல. இரண்டிலுமே அவர்களின் நலன் ஒளிந்திருப்பது மட்டுமல்ல, அறக்கட்டளைகள், குறிப்பாக பில் கேட்ஸின் அறக்கட்டளை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல, போட்ட முதலுக்கு ஏற்ற பலன் இருக்க வேண்டும் என்றவாறு இலாப நோக்குடன் இயங்கி வருகிறது என்பதே உண்மை.

டேவிட் ராக்ஃபெல்லர்
அமெரிக்க நவீன அறக்கட்டளை முதலாளி டேவிட் ராக்ஃபெல்லர்

இதற்கு உதராணமாக 2008-ல் ஏற்பட்ட உலக முதலாளித்துவ நெருக்கடி நிலையைக் குறிப்பிடலாம். அந்நெருக்கடியால் ஏற்பட்ட சமூகக் கொந்தளிப்புகளை ஒருங்கிணைந்த முறையில் சமாளிப்பது எப்படி என விவாதிக்க பில் கேட்ஸ், வாரன் பஃபெட், டேவிட் ராக்பெல்லர் உள்ளிட்ட உலகின் மிகப்பெரும் ஏகபோக முதலாளிகள் நியூயார்க் நகரில் ஒன்று கூடினர். தம்மை “நல்லவர்களின் சங்கம்” என்று அழைத்துக் கொண்ட இம்முதலாளிகள், ஏழை நாடுகளின் மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்திக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை களைவதற்கான திட்டங்கள் பற்றி விவாதித்து, அந்நாடுகளில் காணப்படும் “மக்கள் தொகை பெருக்கம்”, “தொற்று நோய்கள்” போன்ற பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை முதலில் தீர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். அந்த நாட்டு அரசுகள் முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள்/பிரச்சினைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, தமக்கு விருப்பமான அல்லது தாம் முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களில் மட்டுமே அறக்கட்டளைகள் செயல்படுவது என்றும், இதற்கேற்ப ஏழை நாட்டு அரசுகளின் கொள்கை மற்றும் சமூகங்களை மாற்ற வேண்டும் என முடிவு செய்தனர்.

வாரன் பஃபெட்
அமெரிக்க நவீன அறக்கட்டளை முதலாளி வாரன் பஃபெட்

ஏகபோக நிறுவனங்கள் அறக்கட்டளைகளை உருவாக்குவதும், அவை ஏழை நாடுகளில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமூகத் தளங்களில் செயல்படுவதும் புதிய விசயமல்ல. 19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஏகாதிபத்தியங்கள் தங்களது காலனிகளில் உள்ள தொழிலாளர்களின் உழைப்புத் திறனை அதிகரிக்கவும், வெள்ளை மேற்பார்வையாளர்கள், இராணுவச் சிப்பாகளை நோய் தொற்றிலிருந்து காக்கவும் அறக்கட்டளைகளைத் தொடங்கிவிட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் கம்யூனிச அலையை வீழ்த்தும் நோக்கத்தோடு அறக்கட்டளைகள் செயல்பட்டு வந்தன. ஏகாதிபத்திய அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தமது மேலாதிக்கத்தை ஏழை நாடுகளில் நிறுவிக்கொள்வதற்குப் பயன்படுத்திய பல உத்திகளில் ஒன்றாக பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல், மனிதவள மேம்பாடு ஆகிய தளங்களில் அறக்கட்டளைகளைச் செயல்பட வைத்தன. வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தால் அணுக முடியாத பகுதிகளில் கூட மலேரியா ஒழிப்பு என்ற பெயரில் அறக்கட்டளைகளால் நெருங்க முடிந்தது. பிலிப்பைன்ஸில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த “ஹக் போராளிகளை” ஒடுக்க அறக்கட்டளைகள் பெரிதும் உதவின.

தற்பொழுது, அதாவது உலகமய காலக் கட்டத்தில் இந்த அறக்கட்டளைகள், தொழிற்துறைகளைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகங்களைப் போன்ற அமைப்பு வடிவத்துடனும், இலாப நோக்கத்துடனும் இயங்குவது மட்டுமின்றி, உலகில் நிலவும் பிரச்சனைகளைத் தங்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்றும் அரசுகளாலோ, அல்லது மக்கள் நலனை முன்னிறுத்திப் போராடும் வேறு பிற அமைப்புகளாலோ இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும் வாதிடுவதோடு, அதனைக் கொள்கை பிரகடனம் போன்று அறிவித்துள்ளன. மக்கள் நலன் சார்ந்த கொள்கை முடிவுகளை எடுப்பதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விலக்கிவிட்டு, அந்த இடத்தில் இந்த அறக்கட்டளைகள் வந்தமர்ந்து கொள்கின்றன. இதன் மூலம் ஏழை நாடுகளின் அரசுகளை ஏகாதிபத்திய நிறுவனங்களின் விருப்பத்தை, நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொடுக்கும் கருவியாக மாற்றியமைக்கின்றன. இதற்கு ஐ.நா., உலகவங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மற்றும் ஏழை நாடுகளின் அரசாங்கங்களில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கு ஆகிய அனைத்தையும் பயன்படுத்திக் கொள்கின்றன.

பில் கேட்ஸ், அசீம் பிரேம்ஜி
உலகமய காலக் கட்டத்தில் அறக்கட்டளைகளை இலாபம் தரும் கார்ப்பரேட் நிறுவனம் போல நடத்துவது எப்படி என்பதை பில் கேட்ஸிடம் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டும் இந்தியத் தரகு முதலாளியும் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை தலைவருமான அசிம் பிரேம்ஜி (வலது).

கேட்ஸ் அறக்கட்டளையால் திட்டமிடப்பட்டு, இந்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போலியோ ஒழிப்புத் திட்டம் இதற்கொரு நல்ல உதாரணமாகும். தனது பிற சுகாதாரத் திட்டங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, கேட்ஸ் அறக்கட்டளையின் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்த இந்திய அரசு, தனது மொத்த அரசு இயந்திரத்தையும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தி வருகிறது.

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகான உலகமய காலக்கட்டத்தில், ஏழை நாடுகளில் செயல்படுத்தப்படும் பொது சுகாதாரத் திட்டங்களை சர்வதேச நிறுவனங்களின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதுதான் ஏகாதிபத்தியங்களின் நோக்கமாகும். பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் இன்று உலகெங்கும் பரவிவரும் நிலையில், அதனைக் காட்டித் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றன. இந்த உலகமயமான நோய்களைக் காட்டியோ அல்லது ஆந்த்ராக்ஸ் பீதி போன்றவற்றை கிளப்பிவிட்டோ ஏழை நாடுகளின் மருத்துவ ஆராய்ச்சி, பொது சுகாதாரத் திட்டங்களில் தலையீடு செய்வதற்கான முகாந்திரத்தை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கிக் கொள்வதோடு, இப்படி தலையீடு செய்வது தங்களது உரிமை என்றும் வாதிடுகின்றன. “ஜனநாயகம்”, “மனித உரிமை” என்ற போர்வையில் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் லிபியா, சிரியா போன்ற நாடுகளில் தலையிட்டு அவற்றை ஆக்கிரமிப்பது போல, அறக்கட்டளைகள் சுகாதாரம், மக்கள் நலன் என்ற பெயரில் ஏழை நாடுகளுக்குள் ஊடுருவி அவற்றைத் தங்களது பிடிக்குள் கொண்டுவருகின்றன. ஏழை நாடுகளின் ஆளுங்கும்பல் தமது வர்க்க நலனை முன்னிறுத்தி ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புப் போர்களை ஆதரித்து நிற்பது போலவே, அறக்கட்டளைகளின் தலையீடுகளுக்கும் ஆதரவு அளிக்கின்றன.

***

பில் கேட்ஸ் நைஜீரியாவில்
நைஜீரியாவில் கேட்ஸ் அறக்கட்டளையின் சார்பாக, போலியோ ஒழிப்புத் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதை அறிவிக்கும் பதாகையுடன் பில் கேட்ஸ் (கோப்புப் படம்)

ழை நாடுகளின் பொது சுகாதாரத் திட்டங்களில் தலையீடு செய்து, அவற்றை ஏகாதிபத்திய அரசுகள் மற்றும் ஏகபோக மருந்து நிறுவனங்களின் நலனுக்கு ஏற்ப மாற்றியமைப்பதில் இன்று பில்கேட்ஸின் “பில்-மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை”தான், அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு, ராக்பெல்லர் உள்ளிட்ட மற்ற அறக்கட்டளைகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஏகபோகமாக வளர்ந்து நிற்கிறது. 3600 கோடி அமெரிக்க டாலர் மூலதனத்தைக் கொண்டுள்ள கேட்ஸ் அறக்கட்டளைதான் இன்றைக்கு உலக அளவில் இயங்கிவரும் முதலாளித்துவ அறக்கட்டளைகளிலேயே மிகவும் பெரியது; ஐ.நா.வின் உலக சுகாதார மையத்தின் நன்கொடையாளர்களில் மூன்றாவது மிகப்பெரிய கொடையாளராக கேட்ஸ் அறக்கட்டளை உள்ளது. இதன் மூலம் உலக சுகாதார கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. 2009-ம் ஆண்டில் மட்டும் சர்வதேச அளவில் பல்வேறு சுகாதார திட்டங்களுக்கு கேட்ஸ் அறக்கட்டளை ஒதுக்கிய நிதி 180 கோடி அமெரிக்க டாலர் என்பதிலிருந்து, அதன் வீச்சு மற்றும் செல்வாக்கைப் புரிந்துகொள்ளலாம்.

அமெரிக்காவில் பொதுப்பள்ளிகளைத் தனியார்மயமாக்குவதையும் ஆசிரியர் சங்கங்களின் முதுகெலும்பை உடைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கேட்ஸ் அறக்கட்டளை, ஏழை நாடுகளில் “தொற்றுநோய்கள்”, “விவசாயக் கொள்கை”, “மக்கள்தொகைக் கட்டுப்பாடு” ஆகிய தளங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

பில்கேட்ஸ் அறக்கட்டளையின் செல்வாக்கிற்கு அதன் கையில் இருக்கும் மூலதனமும், நிதி ஒதுக்கீடும் மட்டும் காரணமில்லை. அதுவொரு ஆக்டோபஸ் போல, ஐ.நா., உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள், ஏழை நாடுகளின் அரசுகள், பன்னாட்டு நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள் என விரிந்த வலைப்பின்னலை அமைத்துக் கொண்டு வேலை செய்து வருவதன் மூலம், அது தனது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் ஏழை நாடுகள் அனைத்திலும் நிறுவிக் கொண்டுள்ளது. குறிப்பாக, பில் கேட்ஸ் அறக்கட்டளை 2012-ம் ஆண்டு அறிவித்த புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்கான திட்டம், யு.எஸ்.எய்டு, உலக வங்கி ஆகியவற்றுடன் பிரேசில், வங்காளதேசம், ஐக்கிய அரேபிய அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் அரசாங்கங்களையும், மெர்க், கிளாக்சோ ஸ்மித் கிளைன், ஃபைசர் உள்ளிட்ட 13 பன்னாட்டு மருந்து நிறுவனங்களையும் கூட்டாளிகளாகக் கொண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

கேட்ஸ் அறக்கட்டளைதரம் குறைந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை மலிவான விளம்பர உத்திகளின் மூலம் கணினித் துறையில் ஏகபோகமாக மாற்றிவிட்டதைப் போல, தனது அறக்கட்டளையையும் வளர்த்து வருகிறார், பில்கேட்ஸ். “நாங்கள் ஐ.நா.-விற்கு மாற்று அல்ல. ஆனால், சிலர் எங்களை அதற்கு நிகரான நிறுவனமாக பார்க்கின்றனர்” என பில் கேட்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் ரேக்ஸ் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் அளவிற்கு அதனின் செல்வாக்கும் ஆதிக்கமும் சர்வதேச அளவில் பரந்து விரிந்ததாக உள்ளது. இதனால் இந்த அறக்கட்டளை எவ்வாறு செயல்படுகிறது, யாருடைய நலனை, எப்படி பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்ள அதன் உலகளாவிய தடுப்பூசித் திட்டங்களைக் கூர்ந்து நோக்குவது அவசியமாகிறது.

பில் கேட்ஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரதான பங்குதாரர் மட்டுமல்ல; “பிக் பார்மா” என்றழைக்கப்படும் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களான மெர்க், ஃபைசர், கிளாக்சோ ஸ்மித் கிளைன் ஆகியவற்றில் பில் கேட்ஸ் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளார்.

மேற்கத்திய ஏகபோக மருந்து நிறுவனங்களின் இலாப சதவீதம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், அது குறித்து ஆய்வு செய்த மெக்கன்சி நிறுவனம், “மேற்கத்திய நாடுகளில் அமலில் உள்ள தரக் கட்டுப்பாடு சட்டங்கள் புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கும் அதனைச் சந்தைப்படுத்துவதற்குமான செலவுகளை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக”க் கூறி, “இந்தச் செலவைக் குறைப்பதற்கு வேறு புதுமையான வழிகளை மருந்து கம்பெனிகள் கண்டுபிடிக்க வேண்டும்” என ஆலோசனை வழங்கியது.

இதனடிப்படையில் புதிய மருந்துகளை ஐரோப்பா மற்றும் அமெரிக்க குடிமகன்களுக்குக் கொடுத்து பரிசோதித்துப் பார்ப்பதைவிட, ஏழை நாடுகளைச் சேர்ந்த ஏழைகளின் உடம்பில் செலுத்திப் பரிசோதித்துப் பார்ப்பதை இலாபகரமானதாகவும், மேற்கத்திய தரக் கட்டுப்பாட்டு சட்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழியாகவும் ஏகபோக மருந்து கம்பெனிகள் கண்டு கொண்டன.

இதற்கு அப்பால், “நம்மை எப்போதும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் மக்களைச் சாந்தப்படுத்துவதற்கு ஆயுதங்களை விட மருந்தே சாதகமானது” என்பதை அமெரிக்க ஏகபோக முதலாளியான ராக்பெல்லர் பல பத்தாண்டுகளுக்கு முன்பே தமது சோந்த அனுபவத்தில் கண்டுணர்ந்து, அதனை தனது அறக்கட்டளையின் செயல்திட்டமாக நடைமுறைப்படுத்தியும் வந்திருந்தார்.

gates-foundation-2கேட்ஸ் அறக்கட்டளை பொது சுகாதார தளத்தில் இயங்குவதைத் தனது முக்கிய இலக்காகக் கொண்டிருப்பதை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். இந்த அடிப்படையில் தனது அறக்கட்டளையின் மூலமாக சுகாதாரத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதோடு மட்டும் கேட்ஸ் ஒதுங்கிக் கொள்ளவில்லை. ஏழை நாடுகளின் அரசு நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொண்டு புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்காக பி.டி.பி. (Product Development Projects)) என்ற பெயரில் மருந்துப் பொருள் அபிவிருத்திக்கான திட்டங்களையும், (இந்தத் திட்டம் பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு வசதியாகச் செயல்படுத்தப்படும் பி.பி.பி. திட்டம் போன்றது) ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்களைச் சோதனைச்சாலை எலிகளாகப் பயன்படுத்தி மருந்துகளைப் பரிசோதனை செய்யும் அமைப்புகளையும் உருவாக்கி இருக்கிறது. மேலும், ஏழை நாடுகளின் அரசுகளின் சுகாதார கொள்கைகளைத் தமக்குச் சாதகமாக உருவாக்குவதற்கு அல்லது மாற்றுவதற்கு ஏற்ப, அதிகார வரக்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய அளவிற்குப் பலமிக்க அரசுசாரா நிறுவனங்களையும் களத்தில் இறக்கியிருக்கிறார். பில் கேட்ஸின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு படையெடுப்புக்கு நிகரானது எனச் சொல்லத் தேவையில்லை.

2000-ம் ஆண்டுகளின் மத்தியில் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் புதிய மருந்துகளுக்கான சோதனைகளை பில்கேட்ஸ் அறக்கட்டளை நடத்த ஆரம்பித்தது. 2010-ம் ஆண்டு கிளாக்சோ ஸ்மித் கிளைன் நிறுவனத்தின் மலேரியா தடுப்பூசியை 7 ஆப்பிரிக்க நாடுகளில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் மீது சோதித்தது. இந்தச் சோதனையின் விளைவாக 151 குழந்தைகள் இறந்ததுடன், 1,048 குழந்தைகள் முடக்குவாதம், வலிப்பு நோய் போன்ற கடுமையான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டன. எனினும், இவ்வுண்மைகளை மறைத்து மருந்துப் பரிசோதனை பெரும் வெற்றி பெற்றதாகப் பிரச்சாரம் செய்து, உலகம் முழுவதும் அம்மருந்தை விநியோகம் செய்யும் உரிமத்தை கிளாக்சோ ஸ்மித் கிளைன் நிறுவனத்திற்கு வாங்கித்தந்தது.

அதே போன்று ஆப்பிரிக்க நாடான சாட்-இல், குழந்தைகளின் மூளையையும் தண்டுவடத்தையும் பாதிக்கும் “மெனின்ஜெட்டிஸ்” (Meningitis) என்ற நோய்க்கு எதிரான தடுப்பூசியை அறிமுகம் செய்து, அதனைச் சந்தைப்படுத்துவதற்காக ‘மென் ஆஃப்ரி வாக்’ (MenAfriVac) என்ற இயக்கத்தையும் எடுத்தது, கேட்ஸ் அறக்கட்டளை. இத்தடுப்பூசி செலுத்தப்பட்டுப் பரிசோதிக்கப்பட்ட 500 குழந்தைகளில் 50 குழந்தைகள் முடக்குவாதத்தில் வீழ்ந்தனர்.

gates-foundation-immunizationகேட்ஸ் அறக்கட்டளை, ஏழை நாட்டு மக்களைப் புதிய மருந்துகளைப் பரிசோதித்துப் பார்க்கும் சோதனைச்சாலை எலிகளாக மட்டும் பயன்படுத்தவில்லை. மேற்கத்திய நாடுகளில் கடும் பக்கவிளைவுகளின் காரணமாக போணியாகாமல் தேங்கிக் கிடக்கும் மருந்துகளைக் கொண்டுவந்து கொட்டும் சந்தையாவும் ஏழை நாடுகளைப் பயன்படுத்தி வருகிறது. கடும் பக்கவிளைவுகளின் காரணமாக நார்பிளாண்ட் என்ற கருத்தடை சாதனத்திற்கு (contraceptive) எதிராக அமெரிக்காவில் 36,000 வழக்குகள் தொடரப்பட்டதையடுத்து, நார்பிளாண்ட் அமெரிக்கச் சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. இக்கருத்தடை சாதனத்தின் பெயரை ஜேடல் என மாற்றி, ஆப்பிரிக்காவில் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் உதவியுடன் கேட்ஸ் அறக்கட்டளை சந்தைப்படுத்தி வருகிறது. “ஆப்பிரிக்க ஆண்கள் கருத்தடை சாதனங்கள் குறித்து அக்கறைப்படாததால், ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் தங்களுக்கு இந்த மருந்து நிச்சயம் தேவை என விரும்பிக்கேட்பதாக”க் கூறி பில் கேட்ஸின் மனைவி மெலின்டா கேட்ஸ் இந்த விற்பனையை நியாயப்படுத்தியிருக்கிறார். நார்பிளாண்டைப் போன்றே கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஃபைசர் நிறுவனத்தின் டிப்போ புரோவேரா மருந்தையும், மெர்க் நிறுவனத்தின் இம்ப்ளானோன் மருந்தையும் கேட்ஸ் அறக்கட்டளை தெற்காசிய, ஆப்பிரிக்க பெண்களிடையே விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

gates-foundation-3கருப்பை புற்றுநோயிலிருந்து பெண்களைக் காக்கக்கூடிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்த அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் நிறுவனம், கர்டாஸில் எனப் பெயரிடப்பட்ட அம்மருந்தை 2006-ல் அமெரிக்காவில் விற்பனைக் கொண்டு வந்தது. இம்மருந்தின் பக்கவிளைவுகள் அடுத்த மூன்றே ஆண்டுகளில் தெரியவந்த பிறகு, வருடத்திற்கு 150 கோடி அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்த அம்மருந்தின் விற்பனை தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த மருந்தை யுனிசெப், உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கான சர்வதேச கூட்டணி ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது, கேட்ஸ் அறக்கட்டளை.

முதலாளித்துவ விமர்சகர்கள்கூட பில் கேட்ஸ் உள்ளிட்டு ஏகபோக முதலாளிகள் நடத்தும் அறக்கட்டளைகளை, அவற்றின் இலாபவெறி மற்றும் வர்க்கச் சார்பு ஆகியவற்றின் காரணமாக “அறக்கட்டளை முதலாளித்துவம்” (Philanthro Capitalism) என அழைக்கிறார்கள். ஆனால், மோடி அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், அபாயகரமான மருந்துகளை இந்திய உள்ளிட்ட ஏழை நாடுகளில் விற்பனை செய்யும் ஏஜெண்டாகச் செயல்பட்டுவரும் கேட்ஸ் அறக்கட்டளையை, “நோய்களுக்கும், மரணத்திற்கும் எதிரான போராட்டத்தில் அரசிற்குக் கிடைத்த மிக முக்கியமான கூட்டாளியாக”க் குறிப்பிட்டுப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இத்தகைய புகழ்ச்சிக்குப் பின்னே கர்டாஸில் மருந்தின் பக்கவிளைவுகளால் ஆந்திராவின் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏழு சிறுமிகள் இறந்துபோனார்கள் என்ற உண்மை திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. இந்தச் சாவுகள் கேட்ஸ் அறக்கட்டளை நடத்திய படுகொலைகள். இது போன்று, மருத்துவ உதவி என்ற போர்வையில் இந்திய மக்களைச் சோதனைச்சாலை எலிகளாகப் பயன்படுத்திவரும் கேட்ஸ் அறக்கட்டளையின் சட்டவிரோத, சமூக விரோத, மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களை வருமிதழில் காண்போம்.

(தொடரும்)
__________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
__________________________________

 1. Vinavu anne, sooper point, besha jamaingo!

  ஏங்க நம்ம குசுப்பு அக்கா ராமர் படத்த சீலைல போட்டா போராட்டம் பண்ணுவோம், கேசு போடுவோம், இப்போ அம்பானி அக்கா கிஸ்னர் படத்த ஜாகேட்ல போட்டா லைக் போடனுமா? எடு வெளக்கமாற, பிரஞ்சு நாட்ல பஞ்சம் வந்தப்போ மக்களுக்கு ரொட்டிக்கே வழி இல்லைன்னு மன்னன் கிட்ட போனா, மவாரணி கேக் துன்ன சொல்லிச்சாம், அதுமாதிரி இந்திய பொருளாதரத்தை சுரண்டி பிழைக்கும் தரகு மொதலாளிகள் ஏன் 40 கோடில சேலை தேச்சு போட மாட்டாவனு கேக்கறேன்! ஒழவன் இலச்சா மாடு மச்சான் உறவு கொண்டாடுமா! அந்த அம்மா ஏதோ வளர்ப்பு மவன் கல்யாணத்துல தங்க சீல கட்டுனதுக்கே கலி திங்கின்னா, நம்ம அம்பானி குடும்பம் என்ன தின்கோனும்னு ஜட்ஜ் குன்ஹா சார கேட்டு சொல்லுங்கப்பு!

  http://www.fashionscandal.com/2014/03/nita-ambanis-rs-4-million-sari/

 2. பாஜக ஆசியுடன்
  இந்தியனைக் கொல்ல
  வரும் பில்கேட்ஸ்
  //////

  கண்டுபிடிச்சு சொன்ன வினவுக்கு சிபிஐ’ல சிஐடி வேலை காத்திருக்காம். போலியா.

 3. […] (சென்ற இதழின் தொடர்ச்சி) – கதிர் இக்கட்டுரை, மும்பையிலிருந்து வெளிவரும் “இந்தியப் பொருளாதாரத்தின் கூறுகள்” என்ற ஆங்கில காலாண்டு இதழில் (எண்.57) வெளியான “கேட்ஸ் அறக்கட்டளையின் உண்மை நிகழ்ச்சி நிரல்” மற்றும் “இந்தியாவில் கேட்ஸ் அறக்கட்டளை: அரிச்சுவடி” என்ற இரு கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. _______________________________ புதிய ஜனநாயகம், நவம்பர் 2014 _______________________________ […]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க