Deepfaking (தமிழ்ச்சொல் உருவாக்கப்படவேண்டும்) நுட்பம் பற்றி நாம் உரையாடவேண்டியுள்ளது. “உண்மை”க்கு வந்துள்ள புதிய நெருக்கடி பற்றியும் கதைக்க வேண்டியுள்ளது.

செயற்கை நுண்ணுணறிவு (AI), முகம் உணரும் தொழில்நுட்பம், விழியப் பகுப்பாய்வுத் தொழிநுட்பம் (Image analysis), குரல்தொகுப்பு எல்லாம் படுவேகமாக வளர்ந்து செல்கின்றன. இவற்றின் துணையோடு எந்தவொரு வீடியோவிலும் எந்தவொருவரையும் பொருத்திவிடக்கூடிய வல்லமையை மென்பொருட்கள் எட்டியுள்ளன.

இதனை உங்கள் கைப்பேசியிலேயே செய்துவிடக்கூடிய Deepfaking Apps பாவனைக்கும் வந்தன. அச்செயலிகளைப் பயன்படுத்தி பெண்கள் மீது பாலியல் தொந்தரவினைச் செய்ய முடியும் என்ற அடிப்படையில் சட்டத்தின் துணையோடு அவை தடை செய்யப்பட்டன. இந்தத்தடைகள் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது.

ரஜினிகாந்த் இனி இதையும் பயன்படுத்தி இளமைத் தோற்றத்தோடு படம் வெளியிட ஆசைப்படுவார் என்பதை விடவும் ஆபத்தான விடயங்கள் இதில் நிறையவே உள்ளன.

இனிமேல் நாம் எண்ணிம வடிவில் (Digital Format) காண்கின்ற எந்தவொரு ஆவணமும் வீடியோவும் படமும் உறுதியான / உண்மையான ஒன்றாக இருக்கப்போவதில்லை. வாழ்நாள் முழுதும் ஆய்வு செய்து சான்றுகளோடு உருவாக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள், ஆவணப்படங்கள் எல்லாம் பொருளற்றுப் போகப்போகின்றன.

Photoshop பண்ணி போலிசெய்ததெல்லாம் பாலர் பாடசாலைப் பிள்ளைகளின் விளையாட்டு. இப்போது வந்திருப்பது அதிதுல்லியமானது.

“சான்றுகள்”, “உண்மை” என்பதன் பொருள் இனிவரும் உலகில் தீவிர மாற்றத்துக்கு உள்ளாகப்போகிறது.

ஏற்கனவே “உண்மைத்தன்மை” என்பது பாரிய நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். போலிச்செய்திகளும் வதந்திகளும் பரப்புரைகளும் எம்மை ஆளும் சூழலுக்குள் சிக்குண்டு திணறுகிறோம். இப்போது “போலி உண்மை”க்கு செயற்கை நுண்ணறிவு நுட்பம் துணைசெய்யப்போகிறது.

பின்வரும் வீடியோவில் பேசுவது ஒபாமா அல்ல. ஆனால், அதை யாருமே நம்பமாட்டார்கள்.

இனி எல்லாமே இப்படித்தான்.

இதிலுள்ள நன்மை என்னவென்றால், எம்முடைய வீடியோவோ ஒலிப்பதிவோ படமோ வெளியானால், அதிலிருப்பது நானல்ல, போலியே என்று எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். இவற்றை வைத்து எம்மை மிரட்ட முடியாது.

ஆனால் “உண்மைத்தன்மைக்கு” ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடிதான் பெரும் சவாலாக மாறப் போகிறது.

படிக்க:
அமித்ஷா பேசிய கூட்டத்தில் CAA எதிர்ப்பு முழக்கம் – இளைஞரின் துணிச்சல் !
மிரட்டுகிறாரா பொன்னார் ? தமிழக மக்களே உஷார் !

அதிகார வர்க்கம் இப்போதிருப்பதை விட எளிதாக எம்மை மாங்காய் மடையர்களாக்கப்போகிறது. மக்களுக்கு “உண்மையை” வெளிப்படுத்த ஓயாது உழைக்கும் இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் பெரும் நெருக்கடிக்குள்ளாகப்போகிறார்கள்.

இந்தப் புதிய நிலவரத்தின் புதிய வாய்ப்புகளை, உழைக்கும் மக்கள் எப்படி தமக்கு நன்மையாக மாற்றப்போகிறார்கள் என்பது தான் கேட்கவேண்டியிருக்கும் கேள்வி.

முகநூலில் :Muralitharan Mayuran Mauran

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க