ரஷ்யா: போர் வேண்டாம் என்றால் 8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஏகாதிபத்திய ரசியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், இதன் உடன்நிகழ்வாக நடக்கும் உள்நாட்டு மக்கள் மீதான புதின் தலைமையிலான ரசிய அரசின் கொடூரமான அடக்குமுறைகளையும் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணத்தைக் கொண்டு ஆதரிக்கும் அல்லது கண்டும் காணாமல் அமைதியாக இருக்கும் யாரும் ஜனநாயகவாதிகளாக இருக்க முடியாது.

போர் வேண்டாம் என்றால் 8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை
ரசிய ஏகாதிபத்திய அரசின் அடக்குமுறையை கண்டிப்போம்!

க்ரைன் மீதான ஏகாதிபத்திய ரசியாவின் போரைக் கண்டித்து “போர் வேண்டாம்”, ”போரை நிறுத்துங்கள்” என்று பதாகை ஏந்திய ஒரே காரணத்திற்காக ரசியாவைச் சார்ந்த 45 வயதான பத்திரிகையாளர் மரினா ஓவ்சியானிகோவாவுக்கு மாஸ்கோ நீதிமன்றம் 8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அரசு நடத்தும் சேனல் ஒன் செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றும் அவர் கடந்த மார்ச் 2022-இல் செய்தி வாசிப்பாளருக்கு பின்னால் இருந்து ”போர் வேண்டாம், போரை நிறுத்துங்கள், அவர்களின் பிரச்சாரத்தை நம்பாதீர்கள், அவர்கள் பொய் சொல்கிறார்கள்” என்று குறிப்பிடப்படும் வாசகங்கள் அடங்கிய பதாகையை உயர்த்திப் பிடித்திருந்தார். அரசுக்கு எதிராக தவறான தகவலைப் பரப்பினார் என்று கூறி இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார்.

”இந்தத் தீர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது. நிச்சயமாக குற்றத்தை நான் ஒப்புக் கொள்ளவில்லை” என்று மரினா தீர்ப்பு குறித்து கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 2022-இல் உக்ரைன் மீது ரசிய ஏகாதிபத்தியம் முழு அளவிலான ஆக்கிரமிப்புப் போரைத் துவக்கியது. இதைத் தொடர்ந்து ரசியாவில் போரை நிறுத்தக் கோரிய போராட்டங்கள் பரவலாக நடைபெற்றன.


படிக்க: ரஷ்யா: ஒரு நாளைக்குள் முடிந்த பிரிகோஜினின் ‘ஆட்சிக்கவிழ்ப்பு சதி’!


போரை விமர்சிப்பதை புதின் தலைமையிலான ரசிய ஏகாதிபத்தியக் கும்பல் சட்டரீதியாகவே தடை செய்து வைத்துள்ளது. படையெடுப்பு என்று கூறுவதையே சட்டவிரோதம் என்கிறது ரசிய அரசு. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனங்கள் இந்தப் போரை சிறப்பு இராணுவ நடவடிக்கை என்றுதான் குறிப்பிட வேண்டும் என்கிற அளவுக்கு மிக மோசமான ஒடுக்குமுறை அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

போரை எதிர்த்து போராடிய ரசிய மக்கள் நூற்றுக்கணக்கானோர் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான போட்டாபோட்டியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ரசிய ஏகாதிபத்திய கும்பலும் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான நாடு பிடிக்கும் போட்டியில் வெறிகொண்டு ஈடுபட்டு வருகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும், ஆப்பிரிக்க நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சியில் ரசிய ஏகாதிபத்திய கும்பல் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

இன்று உலகு தழுவிய அளவில் உழைக்கும் மக்களின் முதன்மையான எதிரியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் அம்பலப்பட்டுப் போயுள்ளது. அதன் உலகளாவிய சுரண்டல், பல்வேறு நாடுகளின் மீதான ஆக்கிரமிப்புப் போர், ஒடுக்குமுறைகள் அனைத்தும் ஜனநாயக சக்திகள் மத்தியிலும், உழைக்கும் மக்கள் மத்தியிலும் அம்பலப்பட்டுப் போயுள்ளன.


படிக்க: உக்ரைன் மரியுபோல் : அமெரிக்காவின் அடியாள்படையாக செயல்படும் அசோவ் பயங்கரவாதிகள் !


ஆனால் அதே சமயம் ஏகாதிபத்திய ரசியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், இதன் உடன்நிகழ்வாக நடக்கும் உள்நாட்டு மக்கள் மீதான புதின் தலைமையிலான ரசிய அரசின் கொடூரமான அடக்குமுறைகளையும் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணத்தைக் கொண்டு ஆதரிக்கும் அல்லது கண்டும் காணாமல் அமைதியாக இருக்கும் யாரும் ஜனநாயகவாதிகளாக இருக்க முடியாது.

ஏகாதிபத்தியங்கள் என்றாலே லாபவெறி, போர், ஆக்கிரமிப்பு, உள்நாட்டில் கொடூரமான அடக்குமுறைகள் என்ற அடிப்படையில் இருந்துதான் பார்க்க வேண்டும். உக்ரைன் மீதான போரின் மூலம் உள்நாட்டில் உழைக்கும் மக்கள் மத்தியில் ரசிய ஏகாதிபத்திய கும்பலானது அம்பலப்பட்டுப் போயுள்ளது. இந்தப் போரின் பாதிப்புகளை ரசிய மக்கள் மீது திணிக்கிறது. இதனால் அரசியல் பொருளாதார ரீதியாக அழுத்தப்படும் ரசிய மக்கள் போரை எதிர்த்துப் போராடுகின்றனர். எனவே சொந்த நாட்டு மக்கள் மீது அடக்குமுறைகளை ஏவிவிட்டு வருகின்றது ஏகாதிபத்திய ரசிய அரசு. தவறான தகவலைப் பரப்பினார் என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து மரினா ஓவ்சியானிகோவாவுக்கு 8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பது மிகவும் அநீதியானது. ரசிய ஏகாதிபத்திய கும்பலின் இந்த நடவடிக்கையை அனைவரும் கண்டிக்க வேண்டும். அனைத்து ஏகாதிபத்தியக் கும்பல்களின் போர்வெறியை எதிர்த்து ”போர் வேண்டாம்” என்ற குரலை நாம் அனைவரும் ஓங்கி ஒலிக்க வேண்டும். அதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.


சிவக்குமார்விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க