ரஷ்யா: ஒரு நாளைக்குள் முடிந்த பிரிகோஜினின் ‘ஆட்சிக்கவிழ்ப்பு சதி’!

ரஷ்யா ராணுவ அதிகாரிகளுக்கும் பிரிகோஜினுக்கும் இடையிலான முரண்பாட்டின் காரணமாக, தனது எதிர்ப்பை ஒரு ராணுவக் கலகமாக வெளிப்படுத்தினான் பிரிகோஜின். இதை ஆட்சிக் கவிழ்ப்பு அளவிற்கு அகமகிழ்ந்து வரவேற்றன மேற்கத்திய-அமெரிக்க ஊடகங்கள்.

ஜூன் 24, மேற்கத்திய ஊடகங்கள் பெரும் ஆரவாரத்தில் இருந்தன. “வாக்னர் என்ற தனியார் ராணுவம், 25,000 படைவீரர்களைக் கொண்டது, அது ரஷ்யாவிற்கு எதிரான போரை அறிவித்துள்ளது!”, “ரஷ்யாவில் ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கப் போகிறது”, “மாஸ்கோவை நோக்கி கிளர்ச்சிப் படைகள் முன்னேறுகின்றன”, “வாக்னர் படையினர் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்”, “உக்ரைன் மீதான போர் முடிவுக்கு வந்துவிடுமா”, “ரஷ்யா மீளுமா” என்றெல்லாம் ஊகங்கள், கருத்துகள், செய்திகள் பலவாறாகப் பரவின.

ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய ஊடகங்களின் ஊதிப்பெருக்கப்பட்ட இதுபோன்ற பிரச்சாரங்களை இந்தியாவில் இருக்கும் அமெரிக்க அடிமை ஊடகங்களும் தங்கள் தரப்பிற்கு பரப்புவது முதல்முறை அல்ல. எனினும், எதிர்ப்பாராதவிதமாக, திடீரென, பரபரப்பாக, வெள்ளம் போல இவ்வாறான செய்திகள், அறிவிப்புகள் வந்தபோது, இவை ஊதிப்பெருக்கப்பட்ட வதந்திகள் என்று பலரால் புரிந்துகொள்ள இயலவில்லை.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் மக்களிடம் நேரடியாக உரையாற்றினார். வாக்னர் குழுவினரின் பெயரைக் குறிப்பிடாமல், “நாட்டிற்கு துரோகம் செய்பவர்களைத் துடைத்தொழிப்போம்” என்று அறிவித்தார். ஆனால், அடுத்து சில மணிநேரங்களில் வாக்னர் குழுவினர் பெலாரசிடம் சரணடைய இருப்பதாகவும், அதற்காக அந்நாட்டிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், வாக்னர் குழுவினர் பின்வாங்கப் போவதாகவும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுமென்றும் செய்திகள் வெளிவந்தன.

முக்கியமாக, ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனின் கருத்துகள் அமெரிக்காவின் போர் வெறியை அப்பட்டமாகக் காட்டியது. அவர், ரஷ்யாவில் ‘ஆட்சிக் கவிழ்ப்பு’ முயற்சியின் நிலைமை “இன்னும் வளர்ந்து வருகிறது… நான் ஊகிக்க விரும்பவில்லை, அவ்வளவு விரைவாக இறுதி அத்தியாயத்தைப் பார்ப்போம் என்று நான் நினைக்கவில்லை” என்று மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார். ஆனால், சில மணிநேரங்களில் அமெரிக்காவின் பிரச்சாரங்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை என்று தெரியவந்தன. இதனை அமெரிக்க ஊடகங்களே ஒப்புக்கொண்டன.

சாகசமும் பரப்பரப்பும் ஓய்ந்தாலும் பிரச்சினையை பலரும் புரிந்து கொள்ளவில்லை என்பதே எதார்த்தமாக உள்ளது.


படிக்க: இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !


ரஷ்ய மேல்நிலை வல்லரசு, இந்தப் போரில் தனக்கு ஆதரவாகப் போரிடுவதற்காக, தனியார் ராணுவம் என்று கௌரவமாக ஏகாதிபத்தியவாதிகளால் அழைக்கப்படும் கூலிப்படைகளைப் பயன்படுத்தி வருகிறது. இதுபோன்று போரில் கூலிப்படைகளைப் பயன்படுத்துவது ரஷ்யா மட்டும் மேற்கொள்ளும் நடவடிக்கை அல்ல. உலகத்தில் உள்ள எல்லா ஏகாதிபத்திய நாடுகளும் பல்வேறு வகைகளில் இந்தக் கூலிப்படைகளை உருவாக்கி வளர்த்து வருகின்றன. அமெரிக்க மேல்நிலை வல்லரசு பல நாடுகளில் தனக்கு ஆதரவான கூலிப்படைகளை வளர்த்ததும், அவை அமெரிக்காவிற்கு எதிராகவே திரும்பிய வரலாற்று உதாரணங்களும் பல உள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ., தாலிபான், அல்-கொய்தா போன்ற பல பயங்கரவாத அமைப்புகளும் இதற்கு சான்றுகள்.

தற்போது உக்ரைன் சார்பாக 60 நாடுகளில் இருக்கும் கூலிப்படைகள், பாசிச கூலிப்பட்டைகள் போரில் ஈடுபடுத்தப்படுகின்றன. ஆகையால், ரஷ்யா பயன்படுத்தியிருப்பதும் அதுபோன்ற ஒரு கூலிப்படைதான்.

அந்தவகையில், ரஷ்யா ராணுவ அதிகாரிகளுக்கும் பிரிகோஜினுக்கும் இடையிலான முரண்பாட்டின் காரணமாக, தனது எதிர்ப்பை ஒரு ராணுவக் கலகமாக வெளிப்படுத்தினான் பிரிகோஜின். இதை ஆட்சிக் கவிழ்ப்பு அளவிற்கு அகமகிழ்ந்து வரவேற்றன மேற்கத்திய-அமெரிக்க ஊடகங்கள்.

அந்த அடிப்படையில், வாக்னர் கூலிப்படையின் தலைவன் பிரிகோஜின் ரஷ்யாவிற்கு எதிராகப் போர் தொடுக்கப்போவதாகவும் மாஸ்கோ நோக்கி தனது படைகள் நகரும் என்றும் சனிக்கிழமை அறிவித்தான். ஆனால், இந்நிகழ்வில் அமெரிக்காவும் அதன் ஆதரவு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் எதிர்ப்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை. மாறாக, ஒட்டுமொத்த ரஷ்யாவின் ஊடகங்கள், உயரடுக்கு அதிகார வர்க்கத்தினர், ரஷ்ய நிதியாதிக்கக் கும்பல்கள், ரஷ்யக் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள், ரஷ்ய ராணுவம் என அனைத்தும் புடினுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்பதை இந்த சம்பவம் காட்டிவிட்டது.

ரஷ்யாவில் அரசியல் ஸ்திரத்தன்மையை இது வெளிப்படுத்துவதாகவும் புடின் மீதான நம்பிக்கை அதிகரிப்பதற்கு ஒரு வாய்ப்பாகவும் இந்த சம்பவம் அமைந்துவிட்டது. தனது நாட்டிற்கு எதிராக ஒரு கூலிப்படை தாக்குதல் நடத்தும், ‘ஆட்சிக் கவிழ்ப்பு’ செய்யும் என்பதை ரஷ்ய மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அமெரிக்க பொய்ச் செய்திகளை நம்பியவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.


படிக்க: இரஷ்ய-உக்ரைன் போர்: இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 2


இதுமட்டுமல்ல, ரஷ்யா போன்ற வலிமைமிக்க ஏகாதிபத்திய நாடுகள், முக்கியமான போரில் கூலிப்படைகளைப் பயன்படுத்துகின்றன எனில், அந்தக் கூலிப்படைக்குள்ளேயே அந்நாட்டின் உளவாளிகள் இருக்கமாட்டார்கள் என்று அமெரிக்கா கருதியிருப்பதுதான் வெட்கக்கேடான நிலையாகும். அமெரிக்க சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்திற்கு நிகராகவே ரஷ்ய உளவு நிறுவனம் இருப்பதையும் இந்த சம்பவம் உணர்த்திவிட்டது. மாறாக, வாக்னர் கூலிப்படையினரை மிகைமதிப்பீடு செய்து, ரஷ்யாவிற்கு நெருக்கடி ஏற்படும் என்ற அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நப்பாசையும் பொய்த்துப் போனது.

அதுமட்டுமல்ல, நாட்டிற்கு எதிராக போர் அறிவித்திருப்பதை ரஷ்ய அரசு எதிர்கொள்ளும் என்று அறிவித்த நிலையில், ரஷ்யாவில் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் எவையும் பாதிக்கப்படாமல் இருந்தன. வாக்னர் குழுவை பின்வாங்கவைத்து அவர்களது முகாம்களுக்குத் திரும்பச் செய்யப்பட்டது. கலகத்தில் பங்கேற்காதவர்களுக்கு ராணுவத்தில் இடமளிக்கப்படும் என்ற அறிவிப்பு வாக்னர் குழுவைப் பிளவுபடுத்திவிட்டது.

மொத்தத்தில், பிரிகோஜின் சதி ஒரு நாளைக்கூட தாங்கவில்லை. அமெரிக்கா எதிர்ப்பார்த்தது போல உக்ரைனை ஏவி ரஷ்யாவிற்கு கொடுத்த நெருக்கடிகள் எல்லாம் அது எதிர்ப்பார்த்த விளைவுகளை உருவாக்கவில்லை. ரஷ்ய ராணுவத்தில் இருக்கும் முரண்பாடுகள் மீது அதீத நம்பிக்கை வைக்கும் அளவிற்கு அமெரிக்காவின் நிலைமை பின்னடைந்துள்ளது. உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள அமெரிக்கா மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன. இனியும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் வேகமாக சரிவதற்கான வாய்ப்புகளே உள்ளன.

உலகத்தைப் பங்குப்போட்டுக் கொள்வதற்காக ஏகாதிபத்தியங்கள் நடத்தும் போரில் நாம் எந்தப் பக்கத்தையும் ஆதரிக்க முடியாது. அமெரிக்காவின் மேலாதிக்கத்தில் இருந்து தப்பிக்க, சீன-ரஷ்ய மேலாதிக்கத்தை ஏற்க முடியாது. ஏகாதிபத்தியங்களில் ஆதிக்கப் போர்களுக்கு எதிரான மக்களின் போராட்டங்களைத் திசைதிருப்பவதற்கு ஏகாதிபத்தியங்களின் ஊதுகுழல் ஊடகங்கள் மேற்கொள்ளும் பொய் செய்திகளையும் பரபரப்புகளையும் உடனுக்குடன் முறியடிக்க வேண்டியது நமது கடமையாகும்.


ராஜா
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க