இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 1
இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும்
உலகப் போர் அபாயமும் ! – பாகம் 2
அமெரிக்கப் பதிலிப்போரின் நோக்கம்
பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியிலும் விநியோகத்திலும் மேலாதிக்கம் செலுத்திவரும் அமெரிக்காவுக்குப் போட்டியாக இரஷ்யா வளர்ந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் தனது எண்ணெய் இறக்குமதியில் கால்பங்கு அளவிற்கும் இயற்கை எரிவாயுவில் 40 சதவிகிதம் அளவிற்கும் இரஷ்யாவை நம்பியே உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரும் பொருளாதார பலத்தைக் கொண்ட ஜெர்மனி தனது இயற்கை எரிவாயுத் தேவையில் பாதிக்கு மேலானவற்றையும், கச்சா எண்ணெயில் 30 சதவிகிதத்திற்கு அதிகமாகவும் இரஷ்யாவையே சார்ந்திருக்கிறது.
2020-ல் ஜெர்மனியின் இயற்கை எரிவாயுத் தேவை 75 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. மின்சாரத் தேவையை அணு ஆற்றலின் மூலம் பூர்த்தி செய்து கொள்கிற பிரான்சும் தனக்குத் தேவையான பெட்ரோலுக்கும், நிலக்கரிக்கும், இயற்கை எரிவாயுவிற்கும் இரஷ்யாவையே சார்ந்திருக்கிறது.
மேலும், உக்ரைனில் ‘ஆரஞ்சு புரட்சி’ ஏற்பட்ட காலத்திற்கு முன்பு வரை, இயற்கை எரிவாயுவை மானிய விலையில் இரஷ்யாவிடமிருந்தே உக்ரைன் பெற்றுக் கொண்டிருந்தது.
000
இரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் எரிவாயுவானது உக்ரைன் மற்றும் போலந்து வழியாக குழாய்கள் மூலம் ஏற்றுமதியாகிறது. இது மட்டுமின்றி, வடக்கு இரஷ்யாவிலிருந்து பால்டிக் கடல் வழியாக, நேரடியாக ஜெர்மனிக்கு வடக்கு எரிவாயு குழாய் (Nord Stream pipeline) திட்டத்தின் மூலம் எரிவாயு அனுப்பப்படுகிறது.
படிக்க :
♦ உக்ரைன் : உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்கான கழுத்தறுப்பு போர்!
♦ உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்
2018-ம் ஆண்டு வடக்கு எரிவாயு குழாய்-2 திட்டம் தொடங்கப்பட்டு, 2021-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த எரிவாயு குழாய் திட்டம் செயல்படுத்தப்பட்டால் உக்ரைன், போலந்து போன்ற நாடுகள் வழியாக தரை மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு இரஷ்யா எரிவாயுவை அனுப்பத் தேவையில்லை. எரிவாயுவை ஐரோப்பாவுக்கு அனுப்புவதற்காக உக்ரைன், போலந்து நாடுகளுக்கு இரஷ்யா கப்பமும் கட்டத் தேவையில்லை.
இந்த எரிவாயுத் திட்டத்தால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தேவையான 13,500 கோடி கியூபிக் மீட்டர் எரிவாயுவை இரஷ்யா அனுப்ப முடியும் என்பதோடு வர்த்தகத்தையும் வலுவாகத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
அதேவேளையில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிவாயு சந்ததையை ஆக்கிரமிக்கத் துடிக்கிறது. உக்ரைன் மீதான இரஷ்யாவின் போரைக் காரணம் காட்டி இரஷ்யா மீது அமெரிக்காவும், ஜரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இரஷ்ய எதிர்ப்பு : ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே முரண்பாடுகள்
அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்க மறுத்து இரஷ்யா, சீனா தலைமையில் அணிதிரளும் நாடுகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் அமெரிக்காவின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் உறுதியான அணியாய் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் காட்சிப்படுத்தப்படுகிறது. உண்மை என்னவெனில், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் கட்டற்ற ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்வதில்லை. அக்கூட்டணிக்குள்ளேயே முரண்பாடுகள் தீவிரமாகிவருகிறது.
ஆஸ்திரியா, ஜெர்மனி, ஹங்கேரி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் இரஷ்யா மீதான எரிவாயு தடையை ஆதரிக்கவில்லை. இவற்றுள் ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகியவை நேட்டோ கோரியபடி உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க மறுத்துவிட்டன. ஜெர்மனியும் தொடக்கத்தில் ஆயுதங்கள் வழங்க தயக்கம் காட்டியது. அமெரிக்கா மற்றும் இதர நேட்டோ நாடுகளின் தொடர்ச்சியான விமர்சனத்திற்கு பிறகே ஆயுதங்களை வழங்க சம்மதித்தது.
பெரும்பான்மையான நாடுகள் இரஷ்யாவின் மீதான பொருளாதாரத் தடையை ஆதரித்தாலும் நீண்ட காலத்திற்கு அதைத் தொடர முடியாது. எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் (OPEC) “இரஷ்யாவின் மீதான பொருளாதாரத் தடை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு நல்லதல்ல” என்று விமர்சித்துள்ளது. உண்மையும் அதுதான். இரஷ்யாவின் எரிவாயுவிற்கு உறுதியான மாற்று எதுவும் பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகளிடம் இல்லை.
ஆற்றல் மற்றும் சுத்தமான காற்று பற்றிய ஆராய்ச்சி மையம் (CREA – Center For Research on Energy and Clean Air) என்ற அமைப்பு கடந்த மாத இறுதியில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உக்ரைன் போருக்கு பின்னரே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எரிவாயு விற்றதன் மூலம், இரஷ்யாவுக்கு கிடைத்துள்ள இலாபம் இருமடங்காக உயர்ந்துள்ளதாம். இதுவரை 4,600 கோடி ஈரோ இலாபம் ஈட்டியுள்ளது இரஷ்யா. இதுதான் சொல்லிக்கொள்ளப்படும் பொருளாதாரத் தடையின் இலட்சணம்.
இச்சூழலில் மற்றொரு புள்ளிவிவரமும் வெளியாகி நமக்கு நகைப்பை வழங்குகின்றது. 2014-ஆம் ஆண்டு இரஷ்யாவின் கிரிமிய இணைப்பு நடவடிக்கைக்காக ஐரோப்பிய யூனியன் இரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்க தடைவிதித்தது. ஆனால், இத்தடையை மதிக்காமல் அவ்வாண்டுக்குப் பிறகே ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் 23 கோடி ஈரோ அளவிற்கு இரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்றுள்ளனவாம். அது தற்போது உக்ரைனுக்கு எதிராக இரஷ்யாவால் பயன்படுத்தப்படலாம் என்று செய்திகள் உலாவருகின்றன.
சரிந்துவரும் பெட்ரோ-டாலரின் மேலாதிக்கமும் இரஷ்ய-சீனக் கூட்டணியும்
கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி, உலகின் 88 சதவிகிதம் வர்த்தகம் டாலரிலேயே நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு போட்டியாக வளர்ந்துள்ள இரஷ்யாவும் சீனாவும் டாலரின் இந்த மேலாதிக்கத்திற்கு முடிவு கட்ட எத்தனிக்கின்றன. குறிப்பாக இரஷ்யா எண்ணெய் வர்த்தகத்தில் டாலரின் மேலாதிக்கத்திற்கு சாவால்விட்டுக் கொண்டிருக்கிறது.
1970-களின் முற்பகுதியில், அமெரிக்கா எண்ணெய் வளம் மிக்க சவூதி அரேபியாவுடன் உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தை டாலரில் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டது. 50 ஆண்டுகாலம் பெட்ரோ-டாலரின் ஆதிக்கம் கேள்விக்கிடமற்ற முறையில் நிலைநாட்டப்பட்டது.
ஆனால், 2014-ஆம் ஆண்டு கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டதால் ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் விதித்த பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டபோது, இந்நிலை இரஷ்யாவால் கேள்விக்குட்படுத்தப்பட்டது. டாலர் வர்த்தகம் மேலாண்மை செலுத்தும் சர்வதேச பணப் பரிமாற்ற அமைப்பான ஸ்விஃப்ட்-க்கு (SWIFT) மாற்றாக எஸ்.பி.எஃப்.எஸ். (SPFS – System for Transfrer of Financial Messages) எனும் அமைப்பை இரஷ்யா உருவாக்கியது. இது ரூபிளில் வர்த்தகம் செய்வதற்கு பிறநாடுகளை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்டது.
இதேபோல 2015-ஆம் ஆண்டு ஸ்விஃப்ட்-க்கு (SWIFT) மாற்றாக சீனாவும் சி.ஐ.பி.எஸ் (CIPS – China’s Cross-Border Interbank Payment System) என்ற அமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறது. இது சீன நாணயமான யுவானில் வர்த்தகம் செய்ய முன்வரும் பிறநாடுகளை ஒருங்கிணைக்கிறது.
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை மீறி அந்நாட்டுடன் டாலர் அல்லாத வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இன்ஸ்டெக்ஸ் (INSTEX – Insrtument in Support of Trade Exchanges) என்ற பொறியமைவை உருவாக்கியுள்ளார்கள். 2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் உருவாகிய இந்த அணியில், அவ்வாண்டின் இறுதிக்குள்ளாகவே பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, பின்லாந்து, சுவீடன் ஆகிய இதர ஐந்து ஐரோப்பிய நாடுகள் இணைய விரும்புவதாக கூட்டாக அறிவித்தன. இரஷ்யாவும் இம்முயற்சியை வரவேற்றிருந்தது.
இவையன்றி இரஷ்யா தலைமையில், ஆர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்த்தான், கிரிகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கொண்ட யுரேசிய பொருளாதார ஒன்றியம் (EAEU – Eurasian Economic Union) என்ற கூட்டமைப்பு; பிரிட்டன், இரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு ஆகியவையும் டாலரின் மேலாதிக்கத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள கூட்டணிகளாக உள்ளன.
000
முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை டாலருக்கு மற்றாக இதர நாணயங்களிலும் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் உள்ளன. குறிப்பாக சவூதி அரேபியா சீனாவின் யுவானை அங்கீகரிக்கவிருப்பதாக ஊடகங்கள் எழுதுகின்றன. சமீபத்தில் இஸ்ரேலும் சீனாவின் யுவான் நாணயத்தில் வர்த்தகம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.
இந்நாடுகளெல்லாம் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை கேள்விக்கு இடமின்றி ஏற்றுக்கொண்டிருந்த நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் இரஷ்யாவின் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல், அந்நாட்டிடமிருந்து 30 சதவிகித தள்ளுபடியில் எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவின் நடவடிக்கையையும் இணைத்துப் பார்த்தால், பெட்ரோ-டாலரின் மேலாதிக்கம் எந்த அளவிற்கு கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது என்பது புரியும்.
இரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு பதிலடியாக, இனி ஐரோப்பிய நாடுகள் இரஷ்யாவிடமிருந்து பெறும் எண்ணெய், இயற்கை எரிவாயுவிற்கான தொகையை டாலருக்கு மாற்றாக ரூபிளில் செலுத்தும்படி கேட்கிறது இரஷ்யா.
ரூபிளில் வர்த்தகம் செய்ய வேண்டுமானால், அந்நாடுகளுக்கு ரூபிள் கையிருப்பில் இருக்க வேண்டும். அதற்கு இரஷ்யாவுடன் வர்த்தம் செய்ய வேண்டும். இரஷ்யாவின் இந்நிபந்தனை, ஐரோப்பிய நாடுகள் தங்களது பொருளாதாரத்தடைகளை தாங்களே கைவிடக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது. இதுவரை நான்கு ஐரோப்பிய நிறுவனங்கள் தங்களது கொள்முதலை ரூபிளில் செய்வதற்கு முன்வந்துள்ளன.
நேட்டோ: இரஷ்யா-சீனாவுக்கு எதிரான உலகு தழுவிய இராணுவக் கூட்டணி!
அமெரிக்காவானது சரிந்துவரும் தனது உலக மேலாதிக்கத்தை எப்படியாவது முட்டுக் கொடுத்து தக்கவைத்துக் கொள்ளப் போகிறதா அல்லது தோல்வியுற்று வீழப்போகிறதா என்பதை உக்ரைனில் நடக்கின்ற போரில், இரஷ்யாவின் வெற்றி-தோல்விதான் தீர்மானிக்கப்போகின்றது. அதனால்தான் “இரஷ்யாவை முடமாக்குவதே எங்கள் இலங்கு” என அறிவித்திருக்கிறது அமெரிக்கா.
இரஷ்யாவுக்கோ தனது எதிரியான அமெரிக்காவின் ஆதிக்கத்தை வீழ்த்தி தன் வளர்ச்சிக்கு சாதகமான உலக நிலைமையை உருவாக்கிக் கொள்வதற்கு இதுவொரு வாய்ப்பு. எனவே போர் உக்கிரமாக நடக்கிறது.
அமெரிக்காவுக்கு எதிரான அரசியல்-பொருளாதார மேலாதிக்கப் போட்டியில், இரஷ்யாவும் சீனாவும் கூட்டாகச் செயல்படுகின்றன. எனவே அமெரிக்கா இவ்விரு நாடுகளையும் ஒருசேர எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
தற்போது அமெரிக்காவை மதிக்காமல் இந்தியா இரஷ்யாவுடன் நெருக்கம் பேணுவதால், சீனாவுக்கு எதிராக இந்தியாவை உள்ளடக்கிய அமெரிக்கா தலைமையிலான குவாட் இராணுவக் கூட்டணி பலவீனமாகிவிட்டது. ஆகவே இரஷ்யா மட்டுமல்லாது சீனாவையும் சுற்றி வளைத்து வீழ்த்துவதற்காக நேட்டோவை பேரளவில் விரிவுபடுத்தும் திட்டத்தை வைத்துள்ளது அமெரிக்கா.
நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க் டெலிகிராப் இதழுக்கு அளித்த பேட்டியில், இரஷ்யா மட்டுமல்லாது சீனாவும் உலகின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் அதையும் கருத்தில் கொண்டு எங்கள் கொள்கையை வகுத்துக் கொள்ளவிருக்கிறோம் என்று கூறினார். இதுகுறித்து ஜீன் மாதம் நடக்கவுள்ள நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டில் அதிகாரப்பூர்வமாகவே முடிவுசெய்வோம் என்று கூறியுள்ளார்.
உக்ரைன் போருக்கு உதவுவதற்காக ஜெர்மனியில் நடைபெற்ற மாநாட்டில், நேட்டோ அல்லாத 13 நாடுகளை அழைத்திருந்தது அமெரிக்காவின் நேட்டோ விரிவாக்கத் திட்டத்திற்கு துலக்கமான சான்று.
அம்மாநாட்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்திலிருந்து ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரிலேயா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் மத்திய கிழக்கிலிருந்து இஸ்ரேல், கத்தார், ஜோர்டன் ஆகிய நாடுகளும் ஆப்பிரிக்காவிலிருந்து கென்யா, லைபீரியா, மொரோக்கோ மற்று துனிசியா ஆகிய நாடுகளும் கலந்துகொண்டிருந்தன.
வட அட்லாண்டிக் பிராந்தியத்தில் தொடங்கி கிழக்கு ஐரோப்பய நாடுகள் வரை இணைத்துக் கொண்டு இரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நேட்டோ கூட்டணி, சீனாவையும் இரஷ்ய-சீன செல்வாக்கு மண்டலங்களையும் சுற்றுவளைப்பதற்காக உலகம் முழுக்க விரிவடைய இருக்கிறது.
மேலாதிக்கத்துக்கான இழுபறியில் நாம் அணிசேர முடியாது
பனிப்போர் தோல்விக்கு பின் மீண்டும் பழைய வகையில் இரஷ்யா அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வலுப்படுத்திக் கொண்டு வருகிறது. சீனா அரசியல், பொருளாதாரம், இராணுவம் ஆகிய அனைத்திலும் ஏகாதிபத்தியங்களுடன் போட்டிப் போடும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
2008-இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார பெருமந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதாரம் எதிர்பார்த்த முன்னேற்றத்தைத் தரவில்லை. தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளின் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஒற்றைத்துருவ உலக ஒழுங்கு தளர்ந்துவரத் தொடங்கியது. அதற்கு மொத்தமாக முடிவுரை எழுதுவதற்கு இரஷ்யாவும் சீனாவும் கூட்டணி அமைத்துக் கொண்டு முன்னேறுகின்றன. இந்த இருபிரிவுகளுக்கு இடையிலான போராட்டம்தான் இன்றைய சர்வதேச அரசியல் நிகழ்வுப் போக்காக உள்ளது.
இருபிரிவிலும் இல்லாமல் தாங்கள் நடுநிலைவகிப்பதாகவும் சுயேட்சையாக நிற்ப்பதாகவும் கதையளக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கும் ஒரு நோக்கம் உள்ளது. மேற்ச்சொன்ன இழுபறியில் எந்த பிரிவு வலுப்பெறுகிறதோ அந்த கூட்டணியை தழுவிக்கொள்வதற்காக அவைகள் காத்துக்கிடக்கின்றன. முடிவான நிலை எதுவும் ஏற்பட்டுவிடாத காரணத்தால் தற்போது ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
பொருளாதாரத்தை மீட்க எந்த வழியும் தெரியாத அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், புரட்சியின் பக்கம் மக்கள் திரும்புவதைத் தடுப்பதற்கும், தமது உலக மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குமான கடைசி ஆயுதங்களாக பாசிசத்தையும் உலகப் போரையும் கருதுகின்றன.
இந்த உலகச் சூழலின் பின்னணியிலிருந்துதான் உக்ரைன் மீதான இரஷ்யாவின் போரைப் பார்க்க வேண்டும். ஆனால் பெரும்பான்மையான இடதுசாரி அணியிலும் ஜனநாயக சக்திகள் மத்தியிலும் அமெரிக்காவின் நேட்டோ விரிவாக்க அடாவடிகளை மட்டுமே கண்டிப்பதைப் பார்கிறோம். இரஷ்யா குறித்து விமர்சிப்பதில்லை.
படிக்க :
♦ உக்ரைன் : இடதுசாரிகளை ஒடுக்கும் ஜெலென்ஸ்கி அரசு !
♦ உக்ரைன் மரியுபோல் : அமெரிக்காவின் அடியாள்படையாக செயல்படும் அசோவ் பயங்கரவாதிகள் !
இரஷ்யாவின் போரை ‘தற்காப்புப் போர்’ என்று அவர்கள் வரையறுக்கின்றனர். அது ஒருவகையில் உண்மைதான் எனினும் போரிடும் இரண்டு நாடுகளும் ஏகாதிபத்தியங்கள் என்பதை நாம் மறந்தவிடக்கூடாது.
இப்போரில் வெற்றி பெறுவதன் மூலம் தான் சுற்றி வளைக்கப்படுவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், அமெரிக்க மேலாதிக்கத்தை கேள்விக்குள்ளாகுவதன் மூலம் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான வாய்ப்பாகவும் இப்போரைப் பயன்படுத்திக் கொள்ள எத்தனிக்கிறது இரஷ்யா. இதைத்தான் கட்டுரையில் விளக்கியிருக்கிறோம்.
ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போரில், அவைகள் பலவீனமடைவதை பாட்டாளி வர்க்கம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்; பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், ஒரு ஏகாதிபத்தியத்துக்கு (அமெரிக்கா) எதிராக மற்றொரு ஏகாதிபத்தியத்தை (இரஷ்யா) ஆதரிக்க முடியாது.
மாறாக ஆதிக்கத்துக்கான இப்போரில் ஏதோவொரு வகையில் தங்கள் நாடுகளையும் அணிசேர்க்க எண்ணி இரஷ்ய எதிர்ப்பு, நேட்டோ ஆதரவு, போர்வெறி-தேசவெறி பிரச்சாரத்தில் ஈடுபடும் மற்றும் போலியான நடுநிலை வகிக்கும் சொந்த நாட்டு ஆளும் வர்க்கங்களை புரட்சிகர சக்திகள் தோலுரிக்க வேண்டும்; உள்நாட்டுப் புரட்சிப் போருக்கு உழைக்கும் மக்களை அணிதிரட்ட வேண்டும்!

பால்ராஜ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க