ரஷ்யா – உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனில் இருக்கும் கிளர்ச்சியாளர்களின் ஆதரவுடன் கொடூர தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலினால் பல இலட்சம் மக்கள் தனது வீட்டைவிட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உக்ரைன் நாட்டின் மரியுபோலில் உள்ள டொனெட்ஸ்க் அகடாமி நாடக அரங்கை ரஷ்ய இராணுவம் வேண்டுமென்றே தாக்கியதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இங்கு பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாக இருந்ததாகவும் இந்த தாக்குதலில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் அந்த ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த தாக்குதலுக்கு பிறகு ஊடங்களில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, குழந்தைகள் என ரஷ்ய மொழியில் எழுதப்பட்டு இருந்த தியேட்டரில் இந்த வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது என்றும், இதனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை “போர்க் குற்றவாளி” என அறிவிக்க வேண்டும் என்றும் உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், இந்த தாக்குதல் ரஷ்யாவுடன் அமெரிக்கா நேரடி இராணுவ மோதலுக்கு வழிவகுத்துள்தாகவும், அப்பாவி உக்ரைன் பொதுமக்களை படுகொலை செய்துவரும் புதின் ஒரு போர் குற்றவாளி என்றும் முத்திரை குத்தியுள்ளார்.
ரஷ்யா தாக்குதல் நடத்திய துறைமுக நகரமான மரியுபோல் 2014-ம் ஆண்டு முதல் தீவிர வலதுசாரி கொள்கையின் அடிப்படையில் செயல்படும் நவ-நாஜியான அசோவ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டின்கீழ் தான் உள்ளது. இவர்களை நோக்கிதான் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக ரஷ்ய இராணுவம் கூறிவருகிறது. தியேட்டர் மீது தாக்குதல் நடந்த (மார்ச் 16-ம் தேதிக்கு) சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு முன்னர் அங்கிருந்த அசோவ் பயங்கரவாதிகள், தியேட்டரையும் அதைச் சுற்றியுள்ள பகுதியையும் தங்களது முழுகட்டுபாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளனர் என்று மரியுபோல் உள்ளூர் வாசிகள் கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள், ரஷ்யா அமைத்த மனிதாபிமான தாழ்வாரங்கள் வழியாக அந்நகரைவிட்டு பொதுமக்களை வெளியேறவிடாமல் தடுத்து அவர்களை மனிதக் கேடயங்களாக அசோவ் பயங்கரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர். அந்த பகுதியைவிட்டு அசோவ் பயங்கரவாதிகள் பின்வாங்கும்போது தியேட்டரின் சில பகுதிகளை வெடிக்கச் செய்ததாகவும் சாட்சியமளித்துள்ளனர். தியேட்டர்மீது ரஷ்ய வான்வழித் தாக்குதல் நடத்தியபோதும் அங்கு இருந்த பொதுமக்கள் அனைவரும் உயிருடன் தப்பியதாகத் தெரிகிறது.
பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் இந்நகரம் மூர்க்கமான சண்டைகளின் தளமாக மாறியது. மார்ச் 7 அன்று, டெனிஸ் ப்ரோகோ பென்கோ என்ற அசோவ் பயங்கரவாதிகளின் தளபதி மரியுபோலில் இருந்து இணையதளம் வாயிலாக ரஷ்ய இராணுவம் மரியுபோல் மக்களுக்கு எதிராக “இனப்படுகொலை” செய்வதாக கூறினார்.
ரஷ்யா இராணுவம் கடந்த இரண்டு வாரமாக அசோவ் பயங்கரவாதிகளின் நிலைகள்மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இதனால் வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை தியேட்டரின் அலமாரி மண்டபத்திற்குள் பனைய கைதிகளாக அசோவ் பயங்கரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர். மார்ச் 11 அன்று மங்கலான கட்டிடத்திற்குள் எடுக்கப்பட்ட வீடியோவில் ஒரு உள்ளூர் மனிதர், என்னுடன் ஆயிரம் பொதுமக்கள் சிக்கியிருப்பதாகவும், நாங்கள் அங்கிருந்து தப்பிக்க ஒரு மனிதாபிமான நடைபாதை வேண்டும் என்றும் கூறினார். இந்த வீடியோவில் பொதுமக்களின் சிறிய குழுவை மட்டுமே காண முடிகிறது.
தாக்குதலுக்குப் பிறகு சேகரிக்கப்பட்ட உள்ளூர் சாட்சியங்கள் ஏதுமில்லை என்று தியேட்டர்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை கூறுகிறது.
மார்ச் 17 அன்று, அப்காஜியன் நெட்வொர்க் நியூஸ் ஏஜென்சியான ANNA-க்கு ஒரு இளம் பெண் பேட்டியளித்தார். அதில் “அசோவ் பயங்கரவாதிகள் எங்கள் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தனர். அவர்கள் எங்களை மனிதக் கேடயமாக வைத்து இருந்தனர். எங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் உடைத்தனர். அங்கு இருந்தப் பொருட்களை எரித்தனர். குழந்தைகளுடன் ஒரு அடித்தளத்தில் 15 நாட்கள் கழித்தோம்… அவர்கள் எங்களுக்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை” என்று கூறி நவ-நாஜியான அசோவ் பயங்கரவாதிகளின் கொடூரத்தை வெளிபடுத்தியுள்ளார் அந்த இளம் பெண். இந்த பெண்ணின் கருத்தையே அங்கிருந்த பலரும் வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் “நாங்கள் மனிதாபிமான தாழ்வாரங்கள் வழியாக தப்பித்தபோது அசோவ் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காணோம்’’ என்று ஒரு வயதான பெண் ரஷ்ய ஊடகங்களில் கூறியுள்ளார். “நாங்கள் மரியுபோலில் இருந்து தப்பிச் சென்றபோது உக்ரைனிய இராணுவம் பொதுமக்களை நோக்கி சுட்டுக் கொண்டிருந்தது” என்று மற்றொரு நபரும் கூறியுள்ளார்.
அசோவ் பயங்கரவாத அமைப்பு உக்ரைனிய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய காவல்படையின் ஒரு பகுதியாக உள்ளது. தேசிய இன அரசியல் பேசி சொந்த நாட்டு மக்களுக்கு தேசிய வெறியூட்டும் நவ-நாஜிப்படையான, அசோவ் பாயங்கரவாதிகள் உக்ரைனிய இராணுவத்துடன் இணைந்து சொந்த நாட்டு மக்களை மனித கேடயமாக பயன்படுத்தியும், சுட்டுப் படுகொலை செய்தும் வருகின்றனர்.
அசோவ் பயங்கரவாத அமைப்பு சர்வதேச அளவில் வலதுசாரி பிரிவினரால் ஆதரித்து வளர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகளின் பல்வேறு வகையான உதவிகளை இந்த அசோவ் பயங்கரவாத அமைப்பு பெறுகிறது.
அண்டை நாடுகளின்மீது இனவெறியை தூண்டிவிட்டு கலவரங்களை ஏற்படுத்தவும், உரிமைக்காகப் போராடும் சமூக ஜனநாயகவாதிகள், இடதுசாரிகள் பற்றி உக்ரைன் மக்களிடம் வெறுப்பு பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.
உக்ரைன் மீதான அமெரிக்காவின் தேவையை பூர்த்தி செய்யும் ஏவல் நாயாக இந்த பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர். ரஷ்ய – உக்ரைன் போரை பயன்படுத்திக் கொண்டு நேட்டோ படைகளை உக்ரைனில் களமிறக்க அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறார்கள் இந்த அசோவ் பயங்ரவாதிகள். இவர்களை ஆதரித்து வருவதன்மூலம் உக்ரைன் மீதான தனது பிடியை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது.
தனது ஏகாதிபத்திய கட்டுப்பாட்டின்கீழ் உலகைக் கொண்டு வருவதற்காக பெயரளவிலான ஜனநாயக ஆட்சி செய்யும் நாடுகளின் அரசுக்கு எதிராக பயங்கரவாதிகள் பிரிவை உருவாக்கி தனது அடிமைகளை ஆட்சியதிகாரத்தில் அமர்த்தும் வகையில் அமெரிக்கா வேலை செய்து வருகிறது. பல்வேறு நாடுகளில் தீவிர வலதுசாரி பயங்கரவாத குழுக்கைளை உருவாக்கியும், வேறு சில நாடுகளில் ஏற்கனவே இருக்கும் வலது சாரி குழுக்களை ஆதாரிக்கும் வேலையையும் அமெரிக்கா செய்கிறது. இந்த நோக்கத்திற்காகதான் அமெரிக்கா அசோவ் பயங்கரவாதிகளை உக்ரைனிலும் வளர்த்து வருகிறது.
ஏழை நாடுகளின்மீது ஏகாதிபத்திய நாடுகள் ஏறி தாக்கும் இந்த சூழ்நிலையில் உலக பாட்டாளி வர்க்கமாக உழைக்கும் மக்களாகிய நாம் ஒன்றினைந்துப் போராடுவதே முதல் பணி.