வேலை வாய்ப்பின்மை குறித்து பரவலாக இந்தியாவில் பேசப்படுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலை வாய்ப்பின்மை 6.1 விழுக்காடு இருப்பதாக 2017-18-ம் ஆண்டிற்கான தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (NSSO) அறிக்கை கூறுகிறது. ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறிய மோடி அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் வைக்கின்றனர்.

வேலைவாய்ப்பின்மைக்கு கடந்த ஐந்து ஆண்டு கால பா.ஜ.க ஆட்சி காரணம் இல்லை என்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாக மைய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் வேலை வாய்ப்பு திறனை மேம்படுத்துவதும் முதன்மையான பணி என்று மோடி அரசாங்கம் கூறினாலும் 2018 குளிர் கால கூட்டத்தொடரில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் முன் வைத்த தகவல்கள் வேறு ஒன்றை கூறுகின்றன.

கிராம மற்றும் நகர்புறங்களில் குறைந்து போன வேலை வாய்ப்பு :

வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு முதன்மை அமைச்சர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிக்கும் திட்டம் (MGNREGS), தீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா (DDU–GKY), தீன் தயாள் அந்தியோதயா திட்டம் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (DAY–NULM) உள்ளிட்ட திட்டங்களை தொடங்கியிருந்தாலும் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும் போது 2017-க்கு பிறகு இத்திட்டங்களின் கீழ் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டன. கீழ்க்காணும் அட்டவணையை பார்க்கவும்:

திட்டம்/ஆண்டு


2015-16

2016-17 2017-18

2018-19 (03.12.18 வரை)

DDU-GKY பயிற்சிக்கு பிறகு வேலை கிடைத்தவர்கள் (இலட்சத்தில்) 1.09 1.48 0.76 0.96
PMEGP – மூலம் கிடைத்த வேலை (இலட்சத்தில்) 3.23 4.08 3.87 2.85
MGNREGS மூலம் கிடைத்த வேலை நாட்கள் (கோடியில்) 235.14 235.65 234.22 163.22
DAY- NULM பயிற்சிக்கு பிறகு வேலை கிடைத்தவர்கள் (இலட்சத்தில்) 3.37 1.52 1.15 0.95


அரசாங்க வேலை வாய்ப்புகளும் குறைந்து விட்டன :

மைய அரசாங்கத்தின் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி), ஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC), இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் போன்ற பல்வேறு நிறுவனங்கள் மூலம் பணி சேர்க்கை நடக்கிறது. மேலும் பல்வேறு அமைச்சரகங்கள் மற்றும் துறைகள் தங்களுக்கென தனியாக ஆட்சேர்ப்பு கட்டமைப்புகளையும் வைத்திருக்கின்றன.

ஆனாலும் இந்த தகவல்களை அனைத்தையும் சேகரிக்க தனி நிறுவனம் எதுவும் கிடையாது. இந்த தகவல்கள் மைய அரசாங்கத்தின் நிறுவனங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.  2016-17 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மைய அரசாங்க வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை ஒரு இலட்சம். அதுவே 2017-18 ஆம் ஆண்டில் 30 விழுக்காடு குறைந்து 70,000 வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டன.

இந்த நிறுவனங்களின் மூலம் உருவாக்கப்பட்ட வேலைகள் பற்றிய மைய தொழிலாளார் நலத்துறை அமைச்சகத்தின் தகவல்கள் கீழுள்ள அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டு யுபிஎஸ்சி பரிந்துரை SSC பரிந்துரை RRB/RRC கீழ் கிடைத்த வேலைகள் மொத்தம்
2016-17 5740 68880 26318 100938
2017-18 6314 45391 19100 70805


அரசாங்க போர்டலில் குறைந்த வேலை வாய்ப்புகள் :

வேலை தேடுபவர்களுக்கும் வேலை அளிப்பவர்களுக்குமான இடைவெளியை குறைக்க 2015 ஆம் ஆண்டில் தொழிலாளார் நலத்துறை அமைச்சகம் தொடங்கிய தேசிய வேலை வாய்ப்பு சேவை வேலையின்மை சிக்கலின் நோய் நாடி நோய் முதல் நாடவில்லை.

2015-16 ஆம் ஆண்டில், 37 இலட்சம் வேலைகள் தேவைப்பட்டதற்கு எதிராக 1.48 இலட்சம் வாய்ப்புகளும் 2017-18 ஆண்டில் 23 இலட்சம் வேலைகள் தேவைப்பட்டதற்கு எதிராக  9.21 இலட்சம் வாய்ப்புகளும் மட்டுமே உருவாக்கப்பட்டன. இது நம் நாட்டில் வேலையின்மை நெருக்கடியை சுட்டிக்காட்டுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய வேலை வாய்ப்பு சேவை போர்டலில் வேலை தேடி பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுவாரியாக வெளியிடப்பட்ட காலியிடங்களும் கீழுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

2015-16 2016-17 2017-18
தேவையான எண்ணிக்கை 3745331 1478146 2310241
காலியிடங்கள் 148075 1290264 921193

வேலை பரிமாற்ற அலுவலங்களின் தகவல்கள் படி 2015 க்கு பிறகு தகவல்கள் எதுவும் இல்லை. முந்தைய தகவல்கள் படி பார்த்தால் கூட வெறும் ஒரு விழுக்காட்டினருக்கு கூட வேலை கிடைக்கவில்லை (கீழுள்ள அட்டவணையை பார்க்கவும்).

ஆண்டு வேலை பரிமாற்ற அலுவலங்களில் பதிவானது (இலட்சத்தில்)

வேலை பரிமாற்ற அலுவலங்கள் மூலம் கிடைத்த வேலைகள்
(இலட்சத்தில்)

விழுக்காடு(%)
2013 468.03 3.49 0.75
2014 482.61 3.39 0.70
2015 435.03 3.95 0.91
மொத்தம் 1385.67 10.83 0.78


திறன் சார் பயிற்சிக்கும் குறைந்த வேலை வாய்ப்புகளே :

பல்வேறு அமைச்சகங்களும் துறைகளும் தொழில் முனைவோர்களை உருவாக்கவும் வேலைவாய்ப்புகளை கொடுப்பதற்கும் பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களை நடத்துகின்றன. சான்றாக, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் நடத்தும் முதன்மை அமைச்சர் திறன் மெம்பாட்டு திட்டத்தின் கீழ் குறுகிய கால பயிற்சி வழங்கப்பட்டு அதன் மூலம் வேலை வாய்ப்புகள் பெற்றவர்களின் தகவல்கள் 90 நாட்களுக்குள் வெளியிடப்படும்.

அதன்படி, பயிற்சி முடித்து தகுதி பெற்ற 18.42 இலட்சம் நபர்களில் (31.08.2018 ன் படி) 10.1 இலட்சம் நபர்களுக்கு (55 விழுக்காடு) மட்டுமே வேலை கிடைக்கலாம். கீழுள்ள அட்டவனையை பார்க்கவும்.

அமைச்சரகம்/துறை பயிற்சி பெற்றவர்கள் வேலை கிடைத்தவர்கள் விழுக்காடு
வேதிப்பொருள்கள் மற்றும் பெட்ரோலிய வேதி பொருள்கள் 70056 24400 34.8
உணவு பதப்படுத்தல் 13855 1818 13.1
விட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் 264512 115416 43.6
ஊரக வளர்ச்சி 487751 326792 67
DIPP 94232 72368 76.8
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் 54978 29458 53.6
MSME 212737 24689 11.6
சுற்றுலா 16576 1243 7.5
ஜவுளி 109077 81354 74.6
கனரக தொழில்துறை 112504 13191 11.7


இந்த தகவல்கள் என்ன சொல்கின்றன :

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் அறிக்கை வெளியான பிறகு அதை ஒரு தேசிய பேரிடர் என்று எதிர்கட்சி தலைவரான இராகுல் காந்தி அறிவித்தார். பண மதிப்பழிப்புக்கு பிறகு வேலை வாய்ப்பு – வேலையிழப்பு குறித்து தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் சொல்லாமல் வாய் மூடி கொண்டிருக்கிறது மோடி அரசு. பணமதிப்பழிப்புக்கு பிறகு வேலை வாய்ப்பின்மை குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கேங்வார் பாராளுமன்றத்தில் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

படிக்க:
மோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் !
தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை ?

சில ஆண்டுகளாகவே இந்தியாவின் பொருளாதாரம் ஆண்டுக்கு 7 விழுக்காடு வளர்வதாக கூறப்பட்டாலும் வேலை வாய்ப்பில் அது எதிரொலிக்கவில்லை. மேலும் வேலை தேடலுக்கும் வேலை கிடைப்பதற்குமான பாரிய அளவில் இடைவெளி அதிகரித்துவிட்டது. விளைவாக, 15 – 29 வயதான நகர இளைஞர்களில் ஆண்கள் 18.7 விழுக்காடும் பெண்கள் 27.2 விழுக்காடும் வேலையில்லாமல் உள்ளனர். மேற்கூறிய தகவல்கள் இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடிக்கு கட்டியங் கூறுகின்றன.

கட்டுரையாளர்: Shaguna Kanwar
தமிழாக்கம்: சுகுமார்
நன்றி: thewire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க