“இந்த நிலம் பயன்பாட்டில் இல்லை என்றும், அரசுக்கு சொந்தமென்றும் யார் சொல்வது? இது எங்கள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலம். எங்கள் வாழ்வாதாரமே இந்த நிலத்தை நம்பித்தான் இருக்கிறது. இந்த நிலம் யாருக்கும் உடைமையானதல்ல; அதே நேரம் எல்லோருக்கும் சொந்தமானது” என்கிறார் ராக்கு பென்.

வடமேற்கு குஜராத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோட்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சரன்கா கிராமத்தைச் சேர்ந்த ராக்கு பென், ஒரு மால்தாரி. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்க்கும் நாடோடி இடையர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் மால்தாரிகள். இவர்களில் சிலர் இன்னமும் நாடோடி வாழ்கை முறையில் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் நிரந்தரக் குடியிறுப்புகளை ஏற்படுத்தி அக்கம் பக்கத்தில் உள்ள மேய்ச்சல் நிலத்தை நம்பி வாழ்கின்றனர்.

Neeru-Bai
நீரு பாய் மால்தாரி இன பெண்மணி. (படம் : நன்றி – ஸ்க்ரால்)

சரான்காவில் எல்லையின்றிப் பரந்து கிடக்கும் தரிசு நிலத்தில் அங்குமிங்குமாக புதர்கள் வளர்ந்து நிற்கின்றது. அந்த பெரும் நிலப்பரப்பைக் இரண்டாய்க் கிழித்துச் செல்லும் நெடுஞ்சாலையின் ஒரு புறம் கொஞ்சம் பசுமையாக இருக்கிறது; இன்னொரு புறமோ புதர் மண்டிய தரிசு நிலம். பசுமையாக இருக்கும் பகுதிகள் வனத்துறைக்குச் சொந்தமாந்து. தரிசு நிலத்தை காலம் காலமாக மால்தாரிகள் தங்கள் மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வந்தனர். தற்போது சரான்காவில் அரசால் தரிசு நிலம் எனக் குறிக்கப்பட்ட இடத்தில் சுமார் 5,417 ஏக்கரில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமது பாரம்பரிய மேய்ச்சல் நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் மால்தாரிகள்.

படிக்க:
கோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் !
♦ வேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை ! நியூட்டனெல்லாம் லேட்டு !

மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 2,000 ஏக்கரை சாகுபடி பரப்பு எனவும், எஞ்சியவை அரசுக்குச் சொந்தமான தரிசு நிலம் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2010-ல் துவங்கப்பட்ட சூரிய மின் உற்பத்தி நிலையம் 2012 ஏப்ரலில் இருந்து தனது உற்பத்தியைத் துவங்கியது. குஜராத் மாநில மின் சக்திக் கொள்கை (2015) மற்றும் குஜராத் காற்று-சூர்யசக்தி இணை மின் சக்திக் கொள்கை (2018) ஆகியவற்றில் “வாழ்வாதாரம்” மற்றும் “நட்ட ஈடு” போன்ற வார்த்தைகள் இல்லை.

வனத்துறை தனக்குச் சொந்தமான நிலத்தை மேய்ச்சலுக்கு வழங்க மறுக்கும் நிலையில் ஏற்கனவே இருந்த மேய்ச்சல் நிலமும் பறிபோயுள்ளதால் முன்பு தற்சார்புடனும் பொருளாதார சுதந்திரத்துடனும் வாழ்ந்து வந்த மால்தாரிகள் இப்போது துப்புறவுத் தொழிலாளிகளாகவும், தினக்கூலிகளாகவும் மாறியுள்ளனர். பலர் கால்நடை வளர்ப்பை கைவிட்டு விட்டனர்.

***

புவி வெப்பமடைதலைக் கட்டுக்குள் கொண்டு வர புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு (renewable energy) இந்தியா படிப்படியாக மாறிச் செல்வது என 2015 பாரிஸ் ஒப்பந்தத்தில் முடிவானது. இதற்கு 2030-ம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தில் 40 சதவீத அளவுக்கு புதுப்பிக்கத்தக்க மூலங்களில் இருந்து மின்னுற்பத்தியை எட்டுவது அவசியம். இதனடிப்படையில் சூரியமின்சக்தியின் உற்பத்தி இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது. 2014-15 ஆண்டு வாக்கில் 3,744 மெகாவாட்டாக இருந்த சூரிய மின்னுற்பத்தி, மார்ச் 2019-ல் 28,181 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக இந்திய மின் கட்டுப்பாட்டு மையத்தின் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.

Solar-Park-In-Gujarat
படம் : நன்றி – ஸ்க்ரால்

பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா ஒப்புக் கொண்ட இலக்கை பத்தாண்டுகளுக்கு முன்பாக (2020 -லேயே) அடைந்து விடும் என்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த சிந்தனைக் குழாம் ஒன்று. இந்தியாவில் சூரிய மின்சக்தி பரவலாகாத 2011 காலகட்டத்தில் ஒரு கிலோவாட்டின் விலை 12.76 வரை இருந்தது தற்போது 2.44 ரூபாயாக சரிந்துள்ளது. எனினும், இந்த விலைக் கணக்கீட்டில் மின்னுற்பத்திக்கான உண்மையான செலவினங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என சூழலியல் செயல்பாட்டாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, மின்கலன்கள் அமைக்கத் தேவைப்படும் ஏராளமான நிலத்தின் உண்மையான மதிப்பானது மின்னுற்பத்தியின் உற்பத்திச் செலவுகளில் குறைத்துக் காட்டப்படுகிறது என்கின்றனர்.

படிக்க:
கேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன ?
♦ சூரிய மின்சக்தியிலும் சுயசார்பை அழிக்கும் அமெரிக்கா !

மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான அமைச்சகம் (Ministry of New and Renewable Energy) வெளியிட்டுள்ள ஒரு வரைவு அறிக்கையின் படி, ஒரு மெகாவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய 4 – 5 ஏக்கர் நிலம் தேவை. அதே போல் காற்றாலை மூலம் ஒரு மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்ய ஒரு ஹெக்டேர் (2.47 ஏக்கர்) தேவை. இந்நிலையில் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தின் விலையை ஒரு மெகாவாட் மின்சாரத்தின் விலையால் வகுப்பதன் மூலம் இறுதி விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த முறையில் விவசாய நிலத்தின் விலையைக் குறைத்துக் காட்டுவதன் மூலம் (அல்லது விவசாயிகளை ஏமாற்றியோ அடித்து பறிப்பதன் மூலமோ) சூரிய மின்சக்தியின் உற்பத்தி விலையை குறைவாக கணக்கீடு செய்கின்றனர்.

இதற்கு அரசின் நிலக் கொள்முதல் கொள்கையும் ஓரளவு துணை போகிறது. எது விவசாய நிலம், எது தரிசு நிலம் என்பதை அரசு முன்வைக்கும் ஆவணங்களின் மூலமே இறுதி செய்யப்படுகிறது. சரான்கா விசயத்தை எடுத்துக் கொண்டால், அது அரசின் ஆவணங்களின் படி பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலம் – ஆனால், அதை பல கிராமங்களைச் சேர்ந்த இடையர்கள் தங்களது மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வந்துள்ளனர். அடுத்து, விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது அதற்கான குறைந்தபட்ச நட்ட ஈடு வழங்கப்படுகிறதே தவிர அந்த நிலம் கைவிட்டுப் போவதால் ஏற்படும் வாழ்வாதார இழப்பு குறித்து அக்கறை கொள்வதில்லை.

சூரிய மின்சக்தி உற்பத்தியில் இவ்வாறான நடைமுறைச் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் சூழலியல் நோக்கிலும் சில அம்சங்களைக் கருத்தில் கொள்ளவில்லை. முதலில் மிகப் பரந்த நிலப்பரப்பில் நீண்ட காலத்திற்கு சூரிய மின்கலன்களை நிறுவுவதால் நிலத்தின் மீது நேரடியாக சூரிய வெளிச்சம் பாய்வது தடுக்கப்படுகின்றது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன, அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைக் குறித்த ஆய்வுகள் இன்னும் முழுமை பெறவில்லை. அடுத்து, பயன்பாட்டுக் காலம் முடிந்த மின்கலன்களை எப்படி சூழலியல் பாதிப்பின்றி அழிப்பது அல்லது மறுசுழற்சி செய்வது என்பதைக் குறித்தும் இந்திய அரசு அக்கறை கொள்ளவில்லை.

***

ற்கெனவே அதிகரித்துவரும் மின்தேவை ஒருபுறம் இருக்க, தற்போது பெட்ரோலிய பொருட்களால் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விரைவில் மின்சாரத்தில் இயங்கும் நிலை உருவாகி வருகின்றது. பெரும் கார்ப்பரேட்டுகள் மின்சக்தி வாகன உற்பத்தியில் மும்முரம் காட்டி வருகின்றன. இதன் விளைவாக எதிர்காலத்தில் மின்சக்தியின் தேவை பன்மடங்கு அதிகரிக்கவுள்ளது. ஆனால், இன்றளவும் நாட்டின் மின் தேவையை அனல் மின்சாரமே பூர்த்தி செய்து வருகின்றது. அனல் மின்நிலையத்தால் உண்டாகும் சூழலியல் சீர்கேடுகள் ஒருபுறம் என்றால், மாற்று மின்சக்தி என முன் வைக்கப்படும் அணுமின் சக்தியின் அபாயங்கள் இன்னொரு புறம்.

solar-Powerஇந்நிலையில் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியாக அறியப்பட்டுள்ள புனல், காற்று மற்றும் சூரியசக்தி ஆகியவை சூழலுக்கு பாதிப்பேற்படுத்தாத மாற்று ஏற்பாடுகளாக இருக்கும். இதில் அரசு கவனம் செலுத்துவதும் ஏற்புடையது தான். ஆனால், இதற்காக நிறுவப்படும் பெரும் திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களைத் தங்களது வாழிடங்களில் இருந்து அந்நியப்படுத்தி அவர்களை விரட்டியடித்துவிட்டு நிறுவப்படும் இதுபோன்ற திட்டங்கள் அடிப்படையில் யாருக்கானது என்கிற கேள்வியை எழுப்பும்.

ஒரு மனசாட்சியுள்ள அரசாக இருக்கும்பட்சத்தில் அதன் செயல்பாடு மக்களை முதன்மைப்படுத்தியதாகவும், இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் போதுமான மாற்று ஏற்பாடுகளை செய்வதாகவும் இருக்கும். ஆனால், நடந்து கொண்டிருப்பது மோடி சர்கார் என்பதும் அது அதானி, அம்பானிகளுக்கானது என்பதும் ஒரு எதார்த்த உண்மையாக இருக்கும்போது மக்களின் நிலையைப்பற்றி அது எந்தளவுக்குக் கவலைப்படும் என்பதை விளக்கத் தேவையில்லை.


கட்டுரையாளர் : Karthikeyan Hemalatha
தமிழாக்கம் :
சாக்கியன்
நன்றி : ஸ்க்ரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க