கேள்வி : //ISO தரச்சான்றிதழ் என்பது என்ன காரணத்திற்காக? அதை வழங்குவது தனியார் நிறுவனமா? அதை அரசுத்துறையால் கொடுக்க இயலாதா? இத்தரச்சான்றிதழ் என்பது எந்த மாதிரியான தொழிற்சாலைகளுக்கு? இதுகுறித்து, முழுவதுமான விவரங்களைத் தாருங்கள்.//

-மா.பேச்சிமுத்து

ரு தொழிற்சாலை, ஒரு நாடு என்று ஆரம்பத்தில் இருந்த முதலாளித்துவத்தின் வளர்ச்சி – செயல்பாடு இன்று வல்லரசு நாடுகளின் கால கட்டத்தில் உலகளாவிய முறையில் பரவியிருக்கிறது. உற்பத்தி உலகமயமான பிறகு அதை ஒரே மாதிரி தரப்படுத்துவதன் தேவை எழுகிறது. இல்லையெனில் நுகர்வோர் வாங்கும் பொருள் ஒரே தரத்திலானதாக இருக்காது.

Iphoneசந்தையில் விளம்பரம் செய்யும் போது இந்த ஆப்பிள் ஃபோன் சீனாவில் தயாராகி அமெரிக்காவில் விற்பனையாகிறது என்று செய்ய மாட்டார்கள். மாறாக அதன் தரத்தை மட்டுமே பகிர்வார்கள். உலகமய காலகட்டத்தில் வல்லரசு நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது பொருளியல் உற்பத்தி (அதாவது சுரண்டல்) தரமானதாக இருக்கிறது என்று காட்டுவதற்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் உதவுகிறது.

மேலும் பொறியியல், மின்னியல், மின்னணுவியல், தானியங்கி, கனிமவளம், கணினி மென்பொருள் போன்ற பல்வேறு துறைகளில் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான முறைகள் – அளவுகளை பின்பற்ற வேண்டிய தேவையும் இருக்கிறது. அதே போன்று நிதி, வங்கி, பங்குச் சந்தை போன்றவற்றிலும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான செயல்பாட்டு முறைகளை பின்பற்ற தேவை இருக்கிறது. இவற்றை விரிவாக பார்ப்போம்.

பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஒரே பொருள் அளவிலும், தரத்திலும், சொல்லப்போனால் அதன் பெயரிலும் கூட வெவ்வேறாக இருப்பதால் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள் மற்றொரு நாட்டில் பயன்படுத்தும் போது பல சிக்கல்களை உருவாக்கியது. உதாரணமாக, பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பற்சக்கரங்கள் (Gear) வெவ்வேறு பெயர்கள் மற்றும் அளவீட்டு அலகுகள் (units) கொண்டதாக இருந்ததால், ஒரு நாட்டில் தயாரிக்கப்படும் இயந்திரத்தை மற்றொரு நாட்டில் பயன்படுத்தும் போது அங்குள்ள பற்சக்கரத்தோடு இணைக்க முடியவில்லை.

இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக, உலகம் முழுமைக்குமான பொதுவான நியமத்தை (standards) உருவாக்குவதற்கான தேவை உருவாகிறது. இதனடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் சுவிட்சர்லாந்து – ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ISO – சர்வதேச தரநியம நிறுவனம் (International Organization for Standardization). இந்நிறுவனத்தை 1947-ம் ஆண்டில் – முதன் முதலாக காட் (GATT) ஒப்பந்தம் போடப்பட்ட அதே ஆண்டில் – 25 நாடுகளின் பிரதிநிதிகள் குழு உருவாக்கியது.

படிக்க:
கேள்வி பதில் : மோடியின் காமராஜர் ஆட்சி , தனியார்-தாராள-உலகமயம் – சிலை வழிபாடு !
♦ டெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. !

ISO (ISO) என்பது உலக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு தர மேலாண்மை முறைமையாகும் (Quality Management System). முதன் முதலாக தர மேலாண்மை முறைமை, இரண்டாம் உலகப்போர் கால இங்கிலாந்தில்தான் உருவானது. அங்கு ஆயுத உற்பத்தியகங்களிலேயே வெடிகுண்டுகள் வெடிக்க ஆரம்பித்தன, போர்க்களத்திற்குச் சென்ற குண்டுகள் சில வெடிக்காமல் போயின. இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக, இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு தர மேலாண்மை செயல்முறையை (BSD 5750) வகுத்தளித்தது. அதன்படி ஆயுத உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்பிற்கான செயல்முறைகளை வகுத்து ஆவணப்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் அச்செயல்முறைகளை முறையாக பின்பற்றி உற்பத்தி செய்வதை இடையிடையே ஆய்வுசெய்வதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். இறுதியாக இந்த மொத்த நடைமுறையையும் ஒரு அரசு ஆய்வாளர் பரிசோதித்து உறுதியளிக்க வேண்டும். இதன் மூலம் குண்டுகள் தொழிலகத்திலேயே வெடிப்பது தடுக்கப்பட்டது.

ISO Certifiedதர மேலாண்மை முறைமையென்பது ஒரு நிறுவனத்தின் தரக் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை அடைவதற்கான உற்பத்தி செயல்முறைகள், நடைமுறைகள், ஒவ்வொருவருக்குமான பாத்திரம் மற்றும் பொறுப்புகளை முறையாக ஆவணப்படுத்தும் ஒரு அமைப்பாகும். இது இன்னின்ன பொருள், இன்னின்ன தரத்தில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற நியமங்களை (standards) நிர்ணயம் செய்வதில்லை. மாறாக, அந்தக் குறிப்பிட்ட உற்பத்தித்துறையில் பின்பற்ற வேண்டிய மொத்த நடைமுறைகள் பற்றிய ஆவணத் தொகுப்பு. இது ISO-வுக்கும் பொருந்தும்.

இந்நிறுவனம் எந்த தரச்சான்றிதழையும் வழங்குவதில்லை. ஒவ்வொரு தொழில் மற்றும் சேவைத்துறைக்குமான பொதுவான வழிகாட்டல்கள் மற்றும் நெறிமுறைகளையே வழங்குகிறது. அங்கீகரிக்கப்பட்ட சான்றளிக்கும் தனியார் நிறுவனங்களே (Certification Bodies) தரச்சான்றிதழை வழங்குகின்றன. Bureau Veritas, Tuv Nord, BSI, TuvSud போன்றவை இந்தியாவில் சான்றளிக்கும் நிறுவனங்களில் சில.

ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலை ISO சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் முன் உற்பத்தி செயல்முறைகள், நடைமுறைகள், ஒவ்வொருக்குமான பாத்திரம், பொறுப்புகள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்கள் (Check Lists) போன்றவற்றை முறையாக வகுத்து ஆவணப்படுத்தியிருக்க வேண்டும். சான்றிதழ் வழங்கும் நிறுவனம் தனது முதல் தணிக்கையில் (First Audit) இவற்றை ஆய்வு செய்து அங்கீகரிக்கும். அதாவது, ஒவ்வொரு தொழிற்சாலையும் தனக்கான தனிப்பட்ட செயல்முறைகள், நடைமுறைகளை (process and procedures) வகுத்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு, சென்னையில் இயங்கும் ஃபோர்ட், ஹுண்டாய், ரெனால்ட் நிஸ்ஸான் போன்ற கார் கம்பெனிகள் தனக்கான தனித் தனியான செயல்முறைகள், நடைமுறைகளை வகுத்துக் கொள்ள முடியும்.

படிக்க:
கேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா ? சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா ?
♦ கேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் !

அதுமட்டுமின்றி, தொழில் நிறுவனங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ISO உட்குழுவைக் கொண்டு உள் தணிக்கை செய்துகொள்ள வேண்டும். சான்றளிக்கும் நிறுவனமும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தணிக்கை செய்து ISO சான்றிதழை உறுதிப்படுத்தும். சில இரண்டாந்தர சான்றளிக்கும் நிறுவனங்கள் வெறுமனே காசு வாங்கிக்கொண்டு எந்த தணிக்கையும் செய்யாமல் சான்றிதழ்களை வழங்குவதும் இருக்கிறது.

ISO தர மேலாண்மை முறைமையில் செய்யக்கூடிய ஒவ்வொரு வேலையையும் ஆவணப்படுத்த வேண்டிய நடைமுறைகள் மிகமிக சலிப்பூட்டக் கூடியதாகும். உற்பத்தி பொருளுடைய அல்லது சேவையின் தரத்தையும், விவர வரையறையையும் (specification) அந்த குறிப்பிட்ட தொழிற்சாலையில் இருக்க கூடிய தர உத்திரவாதத்துறை (QA) தான் பரிசோதித்து உறுதிப்படுத்தும். அதாவது, ISO சான்றிதழ் நிறுவனத்திற்கு அளிக்கப்படுகிறதே அன்றி உற்பத்திப் பொருளின் தரத்திற்கு சான்றளிக்கப்படுவதில்லை.

1990-களில் காட் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின், உற்பத்தியும் சேவைகளும் குறுக்கும் நெடுக்குமாக உலகு தழுவிய அளவில் நடைபெறத் துவங்கியது. பல தொழில் மற்றும் சேவைத்துறைகள் அவுட்சோர்ஸிங் மூலம் மொத்தமாகவோ அல்லது பகுதியாக பிரித்தோ மலிவான கூலியுழைப்பு கிடைக்கும் நாடுகளை வந்தடைந்தன.

வளரும் நாடுகளில் இருந்து மேற்குலகிற்கு ஏற்றுமதியாகும் உற்பத்திப் பொருள் அல்லது சேவையின் தரத்தை நிர்ணயம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. வெவ்வேறு நாடுகளில் நடக்கும் பகுதியளவில் உற்பத்தியாகும் உதிரிப் பொருட்களை ஒருங்கிணைக்க அவற்றுக்குள் ஒரே அளவிலான தரம், உற்பத்திச் செயல்முறை, நடைமுறைகள் (process and procedures) இருக்க வேண்டியது மிக அவசியமாகிறது. இதுதான் ISO மட்டுமின்றி பல்வேறு நியமங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளதன் பின்னணி.

இந்த அடிப்படையில் தான் 1990-களுக்குப் பிறகு ISO தரச் சான்றிதழ் எல்லா இடங்களையும் வந்தடைந்தது. உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டுமின்றி, சேவை வழங்கும் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற எல்லா நிறுவனங்களும் தாங்கள் ISO தரச் சான்றிதழ் பெற்றுள்ளதாக விளம்பரப்படுத்திக் கொள்கின்றன.

உற்பத்தி உலகளாவியபடி மாறி விட்டதால் இந்திய அரசு நடத்தும் ISI ஐஎஸ்ஐ தர நிர்ணயம் போதுமானதாக இருப்பதில்லை. இந்நிறுவனம் இந்தியாவிற்கு மட்டுமே செல்லுபடியாகும். அதுவும் அதிகார வர்க்க ஊழலால் பெயருக்கு மட்டும் தரத்தை பேசுகிறது.

ISO தரச் சான்றிதழ் எப்படி பாகுபாட்டோடு இருக்கிறது என்பதற்கு தொழிலாளர் உரிமை பற்றி அது போதுமான அளவு பேசுவதில்லை என்பதே உதாரணம். ஹுண்டாய் நிறுவனம் கார்களை உற்பத்தி செய்யும் முறைகளை ISO படி செய்து கொண்டாலும் அங்கே தொழிற்சங்கம் இருக்கக் கூடாது என்பதையும் விதியாக வைத்திருக்கிறது. மற்றும் பல நிறுவனங்கள் நிரந்தரத் தொழிலாளிகளை குறைத்து ஒப்பந்த தொழிலாளர்களை அதிகம் வைத்து குறைந்த கூலி கொடுத்து செயல்படுகின்றன. அவ்வகையில் ISO-வின் செயல்பாட்டில் தொழிலாளர் நலன், உரிமை இல்லை என்றே சொல்லலாம். அல்லது தொழிலாளிகளுக்கு போதுமான அளவு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று மட்டும் தணிக்கையின் போது காட்டிக் கொள்வார்கள். அதே போன்று ISO ஒரு தனிப்பட்ட தொழிற்சாலை எப்படி செயல்படுகிறது என்பதை மட்டுமே பார்க்கிறது. அதனால் நாட்டளவில், சமூக அளவில் என்ன  பாதிப்பு என்பதை பார்ப்பதில்லை.

சான்றாக திருப்பூரில் ஒரு ஏற்றுமதி நிறுவனம் ISO தரச்சான்றிதழ் பெற்று தனது ஆயத்த ஆடைகளில் Eco Friendly என்று அச்சிட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்க வாடிக்கையாளரும் இந்த ஆடை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் தயாரானது என்று நம்பி வாங்குகிறார். ஆனால் சாயப்பட்டறை கழிவு நீரால் நொய்யல் ஆறு கழிவான சோகக் கதையை நாமறிவோம்.

முதலாளித்துவம் இருக்கும் வரை எதிலும் “தரம்” பார்ப்பது கடினம். சோசலிச உற்பத்தியில்தான் அனைத்தும் தழுவிய தரத்தை அடைய முடியும்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

1 மறுமொழி

  1. ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் தமிழ் பாடல்களை ” நாலாயிர திவ்ய பிரபந்தம் .” என்றும் ..பாசுரம் என்றும் சமஸ்கிருதத்திற்கு பெயர் மாற்றிய கும்பலைப் பற்றி வினவு என்ன நினைக்கிறது …?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க