கேள்வி : //தனி மனித, சமூக, நல்ல –  கெட்ட நிகழ்வுகள் எல்லாவற்றிக்கும் உணர்ச்சி வசப்படுவதால் நிதானம் இழக்கிறேன். அறிவு பூர்வமாக யோசித்தால் யாரும் எப்படியோ போகட்டும் என்று தோன்றுகிறது. மனதுக்கும் அறிவிற்குமான இந்த போராட்டத்தை அடக்க முடியுமா? முடியுமெனில் விளக்கவும்.//

– ராதாகிருஷ்ணன் ரங்கராஜ்

ன்புள்ள ராதாகிருஷ்ணன் ரங்கராஜ்,

அறிவுப் பூர்வமாக யோசிக்கும் போது யாரும் எப்படியோ போகட்டும் என்று தோன்றுகிறதல்லவா? இது தொடரும் பட்சத்தில் காலப்போக்கில் சமூகரீதியான நிகழ்வுகளுக்கு உணர்ச்சிவசப்பட்டு நிதானம் இழப்பதே நின்று போகும். சுயநலமாய், காரியவாதியாகவும் உருப்பெறுவோம். அப்போது தன்னலம் சார்ந்து உணர்ச்சி வசப்படுவது மட்டும் இருக்கும்.

எனவே இப்போது நீங்கள் உணர்ச்சிவசப்படுவது உங்களிடம் இருக்கும் சமூக நலன்பாற்பட்ட சிந்தனைகளின் நல்ல அறிகுறி. அதே போன்று அறிவுப்பூர்வமாக யோசிக்கும் போது வழி ஒன்றுமில்லை என்று சிந்திப்பதன் காரணம் நீங்கள் இந்த இடத்தில் தனிநபராக சிந்திக்கிறீர்கள். இதை விடுத்து அதே இடத்தில் சக மனிதர்களோடு கூட்டாக கவலைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தெம்பாக யோசிக்க முடியுமல்லவா? மனித குலத்தின் வரலாறும் சரி, வளர்ச்சியும் சரி இத்தகைய கூட்டுத்துவமாய் சமூகமாய் செயல்பட்டதன் விளைவுகளே. அது அப்போது மட்டுமல்ல எப்போதும் பொருந்தக் கூடிய ஒன்று.

ஆய்வு ஒன்றின்படி தொழிற்சங்கம் இருக்கும் தொழிற்சாலை பகுதிகளில் தற்கொலை விகிதம் குறைவாகவும், தொழிற்சங்க நடவடிக்கைகள் இல்லாத பகுதிகளில் தற்கொலை விகிதம் அதிகமாகவும் இருக்கிறது. தனித் தொழிலாளியாக மட்டும் இருந்து, தன்னுடைய பணி சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாத போது  விரக்கியடைந்து; வேறு வழியில்லாமல் தற்கொலைக்கு இட்டுச் செல்கிறது. சங்கமாய் சேரும்போது நான் மட்டும் தனியாக இல்லை, இங்கே நாம் என்று பலரும் இருக்கிறோமென ஒரு கூட்டு மனப்பான்மை அந்த தனிப்பட்ட விரக்தியை ஒழிக்கிறது.

எனவே உங்களது உணர்ச்சிவசப்படல் சமூகநலன்பாற்பட்டும், உங்களது சிந்தனை தனிநபராக நின்று யோசிப்பதும் இருக்கிறது. இதன் முரண்பாட்டை களைய நீங்கள் ஏதாவது ஒரு முற்போக்கு அமைப்பு ஒன்றில் (ம.க.இ.க., மக்கள் அதிகாரம் போன்ற) இணைந்து கூட்டாய் சிந்திக்க முயலுங்கள். அப்போது உணர்ச்சிவசப்படல் குறைந்து சமூக அநீதிகளுக்கு நாம் இன்னதுதான் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்ச்சி தோன்றி உருப்பெறும்.

♦ ♦ ♦

கேள்வி : //சுபாஷ் சந்திர போஸ் (மற்றும் அவரின்) ராணுவத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து, ஒருவேளை இந்தியாவை வழிநடத்தி இருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஹிட்லரைச் சந்தித்த சந்திரபோஸ் ஃபாசிசத்தின் வழியில் இந்தியாவை ஆண்டிருப்பாரா அல்லது சோசலிச வழியில் ஆண்டிருப்பாரா?உண்மையில் அவர் இடதா அல்லது வலதா?//

-மா.பேச்சிமுத்து

சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய அச்சு நாடுகளின் கூட்டணி ஆதரவுடன் பிரிட்டனை எதிர்த்து போர் புரிந்து விடுதலை அடைய அவர் விரும்பினார்.

Subhas Chandra Boseஇரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் கூட்டணி தோற்று அச்சு நாடுகள் வெற்றி பெற்றிருந்தால் உலகமே பாசிச, நாஜிக்களின் வசம் அடிமைப்பட்டிருக்கும். சோவியத் யூனியனின் அளப்பரிய தியாகத்தால் பாசிச ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மனி வீழ்ந்தது. கிழக்கே ஜப்பானும் தோல்வியுற்றது. ஜப்பான் உதவியுடன் பர்மா வரை வந்த சுபாஷின் இந்திய தேசிய இராணுவம் பின்னர் பிரிட்டன் படைகளிடம் தோற்றுப் போனது.

எனவே சுபாஷின் வெற்றி தோல்வி என்பது பாசிச ஜெர்மனியோடு தொடர்புடையது. உள்நாட்டில் காந்தியின் அஹிம்சைப் போராட்ட முறையால் விடுதலை அடைய முடியாது, போர் புரிந்தே விடுதலை அடைய முடியும் என்ற அளவில் சுபாஷ் சந்திர போஸ் இடதாகவும், நாஜி – பாசிச ஜெர்மனி – ஜப்பானிடம் உதவி கேட்ட வகையில் அவர் வலதாகவும் இருக்கிறார்.

♦ ♦ ♦

கேள்வி : //நான் முதுகலை இதழியல் முதலாம் ஆண்டு படித்து வருகின்றேன். எனக்கு இம்மாதிரியான கட்டுரைகளை எழுதி என்னால் முடிந்தவற்றை; மாற்றங்களை செய்ய விரும்புகின்றேன். அதற்கு எனக்கு முறையான பயிற்சி தேவை என்பதை உணர்ந்துள்ளேன். அதற்கு வகுப்புகள் நீங்கள் நடத்துகிறீர்களா?//

-ராஜா

ன்புள்ள ராஜா,

வகுப்பு மற்றும் பயிற்சி அளித்து வருகிறோம். அது குறித்து மேலும் அறிய எங்களது மின்னஞ்சல் முகவரியில் ( vinavu@gmail.com ) தொடர்பு கொள்ளவும்.

♦ ♦ ♦

கேள்வி : //பல்வேறு திரைப்படங்களுக்கும் விமர்சனம் (நேர்மறை அல்லது எதிர்மறை) எழுதும் நீங்கள் அம்பேத்கர் படத்தை பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாதது ஏன்?//

-அம்பேத்கர் பிரியன்

ன்புள்ள அம்பேத்கர் பிரியன்,

பல திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுத நினைத்தாலும் உண்மையில் அப்படி எழுத முடியவில்லை. வினவு தளத்தின் ஆரம்ப வருடங்களில் அவ்வப்போது திரை விமர்சனங்கள் வரும். இப்போது வருவதில்லை. மற்றபடி அம்பேத்கர் படம் குறித்து விமர்சனம் எழுத தடையில்லை. அதை குறித்துக் கொள்கிறோம்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க