நாட்றம்பாளையம் – அத்திமரத்தூர் தாழ்த்தப்பட்ட மக்களின் விடாப்பிடியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !
மயான வசதி கோரிக்கைக்கான போராட்டம் வெற்றி !

கேனக்கல் பகுதிலிருந்து அஞ்செட்டி பகுதிக்கு போகும் வழியில் உள்ள மலைக் கிராமம்தான் நாட்றாம்பாளையம் பஞ்சாயத்தில் உள்ள அத்திமத்தூர் கிராமம்.  இங்கு சுமார் 200 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பெங்களூர் சென்றுதான் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த பஞ்சாயத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு கொடுத்த ஒரு ஏக்கர், அரை ஏக்கர் புறம்போக்கு நிலம்தான் சோறுபோடுகிறது. இந்த புறம்போக்கு நிலத்தில் கடலை, சாமை, கேழ்வரகு போன்றவற்றை பயிரிட்டு உணவுத் தேவையை ஈடுசெய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

படிக்க :
♦ செஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி !
♦ உசிலை : ஆக்கிரமிப்பிற்கும் ஆதிக்கத்திற்கும்தான் சாதிவெறி || மக்கள் அதிகாரம்

இம்மக்கள் இன்றுவரை ஒரே வீட்டில் இரண்டு குடும்பம், மூன்று குடும்பம் வசித்து வருவது என்பது கொடுமையிலும் கொடுமை. மேலும், இந்த தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு இப்போராட்டத்திற்கு முன்னர் வரை மயானம் இல்லை. பல ஆண்டுகளாக மயான வசதி செய்து தரக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டு வந்துள்ளனர். எனினும் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்து ஊர் நுழைவுப் பகுதியில் பேனர் வைத்ததும் வட்டாட்சியர், போலிசு, வருவாய்துறையினர் என அதிகாரிகள் பட்டாளம் வந்து பேனரை அகற்றுமாறும் தேர்தலுக்கு பின்னர் நாங்கள் மயான வசதி செய்து தருகிறோம் என்று அதிகாரிகள் மன்றாடியும் மக்கள் ஏற்கவில்லை.

இந்நிலையில் பேனரை கிழித்து எடுத்துச் சென்றது போலிசு. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேனர் அந்த இடத்தில் திரும்ப வைக்கும் வரை மக்கள் போராடியதும், போலிசு அந்த பேனரை திரும்ப கொண்டு வந்து கொடுத்தது.

சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் மக்கள் மயான வசதி செய்துதரக் கோரி மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட துணை ஆட்சியர், வட்டாட்சியர், முதல்வர் செல், தேசிய மனித உரிமை ஆணையம் என புகார் அளித்தனர். ஆனால், அரசு அதிகாரிகள் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தை மயானத்திற்கு கையகப்படுத்தலாம் என்றனர். இதை மக்கள் ஏற்க மறுத்தனர்.

This slideshow requires JavaScript.

ஊரின் அருகில் நெடுஞ்சாலை அருகில் சர்வே எண் 112-ல் ஆதிக்க சாதியினர் இடுகாடாக பயன்படுத்தும் ஓடை புறம்போக்கு தரிசு நிலத்தில் தங்களுக்கும் மயான வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று உறுதியாக முடிவு எடுத்து அந்த கோரிக்கையை முன்வைத்து, 06-08-2021 அன்று காலை பத்துமணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த சர்வே எண்ணில் 15 சென்ட் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மயானம் வசதி செய்ய உத்தரவாதம் அளித்தனர். மக்களின் விடாப்பிடியான போராட்டம் வெற்றி பெற்றது. உறுதியாகவும், ஒற்றுமையோடும், விடாப்பிடியாகவும் போராடினால் மட்டுமே கோரிக்கை வெற்றிபெறும் என்பதற்கு இப்போராட்டம் ஓர் உதாரணம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நாட்றாம்பாளையம்
அஞ்செட்டி வட்டம்
கிருட்டிணகிரி மாவட்டம்.