ஆக்கிரமிப்பிற்கும் ஆதிக்கத்திற்கும்தான் சாதிவெறி !
உசிலையில் நிகழ்ந்த இரு சம்பவங்களே சாட்சி !

சாதி ஆதிக்க மனோபாவம் எந்த அளவிற்கு வேரூன்றி இருக்கிறது என்பதையும் அதன் தாக்கமும் கொடூரமும் எந்த அளவிற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வெளிப்படும் என்பதையும் பாதிக்கப்படும் மக்களாலும் ஜனநாயக சக்திகளாலும் மட்டுமே உணர முடியும்.

நம்மை சுற்றியுள்ள பகுதிகளில் அன்றாடம் நிகழும் பல்வேறு சாதிய வன்முறைகள் ஊடக வெளிச்சத்திற்கு வருவதில்லை. நாமும் அதனை இயல்பாக கடந்து செல்லப் பழகி விட்டோம். அவற்றை கண்டிக்க வேண்டும் என்றோ எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று கூட நமக்குத் தோன்றுவதில்லை. அப்படி கடந்த 2 மாதங்களில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

***

படிக்க :
♦ #JusticeForSaraswathi : நீலிக் கண்ணீர் வடிக்கும் சாதி வெறியர்கள் !
♦ குடிக்கும் தண்ணீரில் மண்ணெண்ணையை ஊற்றிய சாதி வெறி !

சம்பவம் 1 :

மதுரை, உசிலம்பட்டி மேலச்செம்பட்டி கிராமத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் காலணியில் தேவர் சமூகத்தை சேர்ந்த சகாதேவன் என்பவர் வீடு வாங்கி குடியேறுகிறார். இது அனேகமாக எல்லா கிராமங்களிலும் நடப்பதுதான். தாழ்த்தப்பட்டவர்களின் பெண்ணையும், மண்ணையும் அடைவதில் ஆதிக்க சாதியினர் தூய்மைப் பார்ப்பதில்லை என்பது நமக்குத் தெரிந்ததுதான்.

அங்கு குடியேறிய சகாதேவன் தன் வீட்டு வாசலின் அருகில் உள்ள பொது குடிநீர் தொட்டியை பஞ்சாயத்து தலைவரின் ஆதரவோடு இடித்து அந்த இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டுகிறார். புதிதாகக் கட்டப்படும் தொட்டி அவரது வீட்டிற்கு எதிரே இருப்பதால் அத்தனையும் தன் மகனை விட்டு இடித்து கட்டவிடாமல் செய்கிறார். அது தாழ்த்தப்பட்ட மக்கள் புழங்கும் தண்ணீர் தொட்டி என்பதால் அவர்கள் உபயோகித்த தண்ணீர் அவர் வீட்டு வாசலில் பட்டால் தீட்டாகி விடும் என்று தண்ணீர் தொட்டியை தூரமாக நகர்த்திக் கொண்டு கட்டச் சொல்கிறார்.

பாதிக்கப்பட்ட மக்கள் புதிதாக கட்டப்படும் தண்ணீர் தொட்டி தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. அது நிரந்தரமானது அல்ல. எனவே காலனிக்கு சொந்தமான சகாதேவனால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் ஏற்கனவே தண்ணீர் தொட்டி இருந்த இடத்தில் கட்டப்பட வேண்டும் என ஆர்.டி.ஓ தாசில்தாரிடம் மனு செய்துள்ளனர்.

மனு விசாரணையில் இருக்கும்போதே சாதி பலத்தைப் பயன்படுத்தி காலனிக்குள் வந்து “எங்களை மீறி எப்படி வாழ்வீர்கள்; ஆடு, மாடுகளை எங்கள் வயலில் எப்படி மேய்க்கப் போகிறீர்கள் என்று பார்ப்போம்” என்று மிரட்டுவது ; காலனிக்குள் சில கருங்காலி விட்டு போலீஸ் கேஸ் போடுவது ; காலனியை அழித்து விடுவோம் என்று சவால் விடுவது என காலனியையே அச்சுறுத்தி இருக்கிறார்கள்.

சிந்துபட்டி காவல்துறை ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை வந்து பார்வையிட்டு ஆக்கிரமிப்பாளருக்கே நிலம் சொந்தம் என்று கூறி விட்டது.

ஆர்.டி.ஓ அலுவலர் வந்து சர்வே செய்து விட்டு இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் தானென்றும் இதற்கு பட்டா கொடுத்ததே தவறு என்றும் கூறிவிட்டு, அடையாளம் போட்டுவிட்டு, ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் கட்டப்பட்ட சுவரை இடிக்க சொல்லி சென்றுவிட்டனர். இதனால் சகாதேவன், ஆக்கிரமித்த இடம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் விஷம் குடித்து நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இப்போது அவரது சாதிக்காரர்கள் ஆர்.டி.ஓ இடம் ஆக்கிரமிப்பு நிலத்தை கையகப்படுத்தி தண்ணீர் தொட்டி கட்டிதர சொல்லி மனு கொடுத்த காலனியைச் சேர்ந்த எட்டுப் பேரை கைது செய்யச் சொல்லி காவல் நிலையத்தில் தர்ணா செய்து வருகின்றனர். புகாரை எடுக்க மறுக்கவே, மதுரை நெடுஞ்சாலையில் தன் சாதிக்காரர்களை திரட்டி மறியல் செய்ததால், எந்த தவறும் செய்யாத தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறை பணிந்ததால் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

பொறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததே தவறு. இதனைத் தட்டிக் கேட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையிடமே புகார் செய்வது எத்தகைய குரூர மனநிலையைக் காட்டுகிறது. ஆக்கிரமிப்பு நிலத்தை கையகப் படுத்த வேண்டியது அரசு அதிகாரிகளின் பொறுப்பு. எந்த சட்டத் திட்டத்தையும் அதிகாரிகள் பின்பற்றுவது கிடையாது. அவர்களின் அலட்சியப்போக்கால் சாதி கலவரம் மூண்டு விடுமோ என்ற அச்சத்தில் அந்த காலனி மக்கள் உள்ளனர்.

***

சம்பவம் 2 :

இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே காலனியை சேர்ந்த கல்லூரி பயிலும் மாணவர் பாரதி என்பவர் உசிலம்பட்டியில் உள்ள முடி வெட்டும் கடைக்கு சென்றுள்ளார். அங்கு முடிவெட்ட காத்திருக்கும் போது அம்பட்டையன் பட்டியைச் சேர்ந்த தேவர் சமூகத்தைச் சேர்ந்த ராமன் என்பவர் குடிபோதையில் கடைக்கு வருகிறார். அப்போது அவர் அங்கே இருந்த பாரதியிடம் எந்த ஊர் என விசாரித்து, அந்த ஊரில் இன்னாரை தெரியுமா? இவர் உனக்கு என்ன உறவுமுறை வேண்டும் என கேட்டுள்ளார்.

இடது : மாணவரை இழிவாக பேசி அடித்து துன்புறுத்திய சாதிவெறியன் ராமன்.
வலது : பாதிக்கப்பட்ட மாணவர் பாரதி

பாரதியின் சாதியை தெரிந்து கொள்ள பலவிதமான கேள்விகளை கேட்டுள்ளார். பாரதி சொல்ல தயங்கவே பாரதி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் எனத் தெரிந்துக் கொண்டு, “ஏன்டா (சாதிப் பெயரைச் சொல்லி) இட ஒதுக்கீட்டில் சாதியை சொல்லி சலுகை பெறுவீங்க, பொது வெளியில சாதிய கேட்டா சொல்ல மாட்டீங்களா?” என்ன திமிராகப் பேசி பாரதியை அடித்து கடையை விட்டு வெளியேறியுள்ளார்.

உசிலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றால் புகாரை எடுக்காமல் காலம் தாழ்த்தி மிரட்டி கேஸை வாபஸ் வாங்க துணை நிற்கின்றார் உசிலம்பட்டி டி.எஸ்.பி ராஜா. இவரும் தேவர் சமூகத்தை சேர்ந்தவர். மேல்அதிகாரியிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இவர்தான் முந்தைய சம்பவத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எட்டு அப்பாவிகள் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாக உறுதியளித்துள்ளார்.

இவை ஒரு பகுதியில் கடந்த 2 மாதங்களில் நடந்த சம்பவங்கள். இன்னும் உசிலை முழுவதும், மதுரை முழுவதும், தமிழகம் முழுவதும், இந்தியா முழுவதும் தினசரி ஆயிரக்கணக்கான சாதிய வன்முறைகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.

ஆர்.எஸ்.எஸ் இந்து மதவெறி கும்பல் வளர்வதற்கு இந்தியாவில் சாதி ஒரு விளைநிலமாக இருக்கிறது என்பதற்கு உசிலையே சான்று. ஆர்.எஸ்.எஸ் காவி கும்பல் கொரோனாவை விட வேகமாக பரவி வருகிறது. சாதி வேறு, காவி வேறு அல்ல. மக்களை சாதி மதவெறியர்களாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் காவி கும்பலை ஒழிக்காமல் ஜனநாயகத்தைப் பற்றி பேசுவது வீண்வேலை. உழைக்கும் மக்களே ஒன்றுபடுவோம். சாதியையும் காவியையும் வேரறுப்போம்.


இவண்,
மக்கள் அதிகாரம்,
உசிலை.
தொடர்புக்கு : 78268 47268.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க