திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் தன் மகளையும், மருமகனையும் ‘பேண்ட் வாத்தியம்’ முழங்க வரவேற்க வேண்டும் என நினைத்தார் அந்த தந்தை. இது ஒரு குற்றமா? ஆனால், அந்த கிராமத்தில் பேண்ட்-வாத்தியம் வைப்பது ’பெரிய’ சாதிக்கு உரியது; தலித்களுக்கு இதற்கு அனுமதி இல்லை.

எதிர்ப்பை மீறி, போலீஸ் பாதுகாப்புடன் திருமணத்தை நடத்திய அந்த தந்தை மகளையும், மருமகனையும் பேண்ட்-வாத்தியம் முழங்க வீட்டுக்கு வரவேற்றார். அந்த சத்தம் பெரிய சாதியின் காதுகளை தீயாய் சுட்டது. விளைவு, தலித்கள் நீர் எடுக்கும் கிணற்றில் மண்ணெண்ணையை ஊற்றிவிட்டார்கள். இந்த கொடுங்கோடையின் தகிப்பில் ஒரு குடம் நீருக்கு வழியின்றி மக்கள் எங்கும் பரிதவித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்தான் குடிக்கும் தண்ணீரில் மண்ணெண்ணை ஊற்றியிருக்கின்றன இந்த ‘பெரிய சாதி பருப்புகள்’.

ஆதிக்க சாதியினரால் நாசம் செய்யப்பட்ட கிணறு. (இடம் : மத்திய பிரதேச மாநிலம், அகர் மால்வா மாவட்டம், மனா கிராமம்) நன்றி : ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ள இந்த சாதிய வன்முறை அந்த ஒரு மாநிலத்துக்கு உரியதோ, அந்த ஒரு சாதிக்கு உரியதோ அல்ல. தனக்கும் கீழே ஒரு சாதி இருக்கிறது என கருதும் அனைத்து சாதிகளிடமும் இந்த மனநிலை இருக்கிறது.

பேண்ட் வாத்தியம் இசைக்கக்கூடாது என்று சொல்வது நமக்கு கேலிக்குரியதாக இருக்கலாம். ஆனால், இதே தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில், தலித்கள் ஆண் நாய் வளர்க்கக்கூடாது என்ற கட்டுப்பாடு இன்னும் நடைமுறையில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வளர்த்தால், அவர்கள் வீட்டு பெண் நாயை மேட்டர் செய்துவிடுமாம். நாய்களிடையே சாதிக் கலப்பு ஏற்பட்டுவிடுமாம்.

கடந்த வாரம் நீர்ப்பஞ்சம் நிறைந்த ஒரு தென் மாவட்டத்துக்கு சென்றபோது, ஊற்றுநீர் எடுப்பதில் வெளிப்படும் சாதிய அணுகுமுறையை கண்கூடாக பார்க்க நேர்ந்தது. இதனால் ‘பகலில் நீ; இரவில் நான்’ என்ற, சச்சரவை தவிர்க்கும் ஓர் உடன்பாட்டுக்கு அவர்கள் வந்திருக்கின்றனர். எல்லோருக்கும் குடிநீர் கொடுக்க வக்கற்ற அரசை நோக்கி கோபம் திரும்பாமல், சாதிய முரண்பாடுகளுக்குள் சிக்கி சீரழியுமாறு இந்து மதம் பணித்திருக்கிறது.

படிக்க :
♦ மோடியின் குஜராத்தில் தலித்துக்களுக்கு குடிநீரில்லை!
♦ குஜராத் : தலித் திருமணங்களை எதிர்க்கும் ஆதிக்க சாதி வெறி !

இத்தகைய ஆகக்கீழான உதாரணங்களை தேடிக் கண்டுபிடித்துதான் இந்த சாதி வெறியர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதோ, இவ்வளவு கேவலமான நிலைக்கு சென்றால் மட்டுமே இச்சாதிவெறி பொருட்படுத்தத்தக்கது என்பதோ அல்ல… அன்றாடம் வெளிப்படும் சின்னஞ்சிறு சொல்லில்; ஆகச்சிறிய செயல்பாட்டில் இவர்களின் மரபுரிமை சாதித்திமிர் வெளிப்படுவதை உணரலாம். இப்போது அந்த வெறி ஒரு பாதுகாப்பான எல்லையை சென்று சேர்ந்திருக்கிறது.

படம் : ஓவியர் முகிலன்

துரத்தப்படும் ஓர் வெறிநாய் மூச்சிரைக்க ஓடி தன் உரிமையாளரின் ஏரியாவை அடைந்ததும், ‘இப்ப அடிடா பார்க்கலாம்’ என்பதுபோல் ஒரு லுக் விடும் இல்லையா… அப்படி பாஜக-வின் பக்கத்தில் ஓடிச்சென்று நிற்கிறது சாதிவெறி. தன் வளர்ப்பு மிருகத்தை தடவிக்கொடுக்கும் ஓனரின் வாஞ்சைடன் அதைத் தடவிக்கொடுக்கிறது பாஜக.

‘ஓனரா இருந்தா ஓரமா போ’ என தமிழ்நாடு சொல்கிறது என்றாலும், இந்த மேற்பரப்பு பரவசத்தில் நாம் லயித்துவிடக்கூடாது. அங்கே பேண்ட் வாத்தியம் என்றால், இங்கு அதைப்போன்று பல. இந்த சாதி வெறியை ஒருங்கிணைக்கவும், பயன்படுத்திக் கொள்ளவும்தான் அரசியல் கட்சிகள் முயல்கின்றனவேயன்றி, இதை நீர்த்துப்போகச் செய்யும் எந்த நிகழ்ச்சிநிரலும் இவர்களிடம் இல்லை.

மலையை வெடி வைத்து தகர்ப்பதைப்போல, சமூகத்தை பிளவுப்படுத்தி, ஒரு பகுதி மக்களின் பிரதிநிதியாய் தன்னை முன்னிலைப்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சிலபஸ் பாஜகவிடம் இருக்கிறது. தமிழ்நாட்டில் அத்தகைய பிளவை உருவாக்க இப்போது சாத்தியமில்லை என்பதன் பொருள், எப்போதுமே சாத்தியம் இல்லை என்பதல்ல.

மேலும், அவர்களின் நோக்கம் வெறும் வாக்கரசியல் மட்டுமல்ல. சமூக நல்லிணத்தை காணாப்பொணமாக்குவதே அவர்களின் தேவை. ஒருவேளை, எதிர்காலத்திலும் தமிழ்நாட்டில் பாஜக நோட்டாவை கூட தாண்டாமல் போகலாம். ஆனால், மத அடிப்படையிலோ, சாதி அடிப்படையிலோ இங்கு ஒரு திட்டவட்டமான வெறுப்பரசியலை நிலைநிறுத்த அனைத்து வழிகளிலும் முயற்சிப்பார்கள். கேங்லீடர் வருவதற்கு முன்பு ஃபீல்டை க்ளீயர் செய்வதைப்போல. பிறகு பெரியண்ணன் வந்து மொத்த ஊரையும் கொத்துபுரோட்டா போடுவார்.

படிக்க :
♦ ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை
♦ ஒரு வரிச் செய்திகள் : 10/06/2019

இந்து மதவாதிகளின் அடிப்படை நோக்கம், இந்தியாவெங்கும் இந்து மதத்தை பரப்புவது அல்லது அகண்ட பாரதத்தை அடைவது. இந்த லட்சியத்தை அடைய, அவர்கள் தேர்தல் அல்லாத வழிகளில் பல பத்தாண்டுகளாக முயற்சித்துப் பார்த்தனர். ஆனால், இந்தியாவின் தனித்துவமான நிலவியல் வேறுபாடு அதற்கு அனுமதிக்கவில்லை.

நூற்றுக்கணக்கான மொழிகள், ஆயிரக்கணக்கான பண்பாட்டு வாழ்முறைகள், மாநில எல்லைகள்… இவற்றினூடாக இந்து மக்களை ஒரே இழையில் இணைத்து, அதை அனைவருக்குமானதாக மாற்ற அவர்களால் முடியவில்லை. எனவே தேர்தல் மூலம் அதிகாரத்தை கைப்பற்றி, அதன் வழியே இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை அமல்படுத்துவது என்பது, அவர்களுக்கு தவிர்க்கவியலாத ஒரு வழிமுறையாக இருக்கிறது. தேர்தல் அரசியல் களத்தில் பா.ஜ.க.வை தோற்கடிக்கச் செய்வது ஏன் அவசியம் என்பதற்கு இப்படி கண்ணோட்டமும் இருக்கிறது.

ஆனால், ஜனசங் தோற்றுவித்தபோது இருந்த நோக்கங்கள் இன்றும் அதே நிலையில் இருக்கவியலாது. இன்று, சாதிய பாகுபாட்டின் தாயான இந்து மதம், பொருளாதார பாகுபாட்டின் தாயான நவீன தாராளவாத கொள்கைகளுடன் இணைந்து நிற்கிறது. இது மேல பார்த்தா காவி. உள்ளப் பார்த்தா கார்ப்பரேட். இரண்டும் இரட்டைக்குழல் துப்பாக்கி. நம்மை நோக்கி குறிபார்த்துக் கொண்டிருக்கிறது.

நன்றி : முகநூலில் பாரதி தம்பி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க