ங்பரிவாரங்கள் பார்ப்பன இந்து மதத்தைப் பின்பற்றாதவர்களையும் ‘இந்துக்கள்’ பட்டியலில் சேர்த்து தங்களுடைய பெரும்பான்மைவாத அரசியலுக்கு பலம் சேர்ப்பதுண்டு.  பார்ப்பன இந்து மதத்தின் முக்கிய அடையாளமான சாதியை தக்க வைப்பதில் சங்பரிவாரங்கள் இம்மியளவும் பிசகியதில்லை. அதற்கு சங்பரிவாரங்கள் ஆளும் மாநிலங்களே சாட்சி.

அண்மையில் குஜராத் மாநிலத்தில் தலித்துகள் தொடர்ச்சியாக உயர்சாதி என சொல்லிக்கொள்ளும் சாதி வெறியர்களால் தாக்கப்படுகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் தலித் திருமணத்தில் புகுந்த சாதி வெறி குண்டர்கள், மணமகனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அங்கே இதுபோன்று அரங்கேறிய நான்காவது சம்பவம் இது.

அதேபோல், அதே நாளில் சமர்கந்தா மாவட்டத்தில் சித்வடா என்ற கிராமத்தில் நடந்த தலித் இளைஞரின் திருமணத்துக்கு சாதிவெறியர்களின் மிரட்டல் வந்ததை அடுத்து, போலீசு பாதுகாப்பு போடப்பட்டது. கடந்த வாரம் இதே பகுதியில் நடந்த தலித் போலீசு ஒருவரின் திருமணத்துக்கும் இப்படி பாதுகாப்பு தரப்பட்டிருக்கிறது.

ஆரவல்லி மாவட்டம் காம்பிசார் கிராமத்தில் நடந்த  தலித் திருமணத்தைக் கண்டு எரிச்சலுற்ற சாதிவெறியர்கள், திருமணத்தை தடுக்க கிராமத்தின் முக்கிய சாலையில் யாகம் வளர்த்திருக்கிறார்கள். திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மீது கல்லெறிந்து தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.

சாலையில் யாகம் வளர்த்து தலித் திருமணத்தை நிறுத்த முயலும் ஆதிக்க சாதி வெறியினர்.

சாதி இந்துக்கள் நடத்துவதைப் போன்ற முறையில் தங்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளையும் நடத்த தலித் சமூகத்தினர் போலீசிடம் அனுமதி கேட்டு பாதுகாப்பும் கேட்டுள்ளனர்.   இவ்வளவு நாளாக, தங்களுக்குக் கீழ் அடிமைகளாக இருந்தவர்கள் தங்களைப் போல திருமணம் நடத்துவதைக் கண்டு ஆத்திரமுற்ற சாதிவெறியர்கள், கிராமத்தில் முக்கிய இடங்களில் யாகம் வளர்த்து திருமணத்தை தடுக்கப் பார்த்திருக்கிறார்கள்.

“திருமணத்தை தடுக்கும் வகையில் நடு ரோட்டில் அவர்கள் யாகம் வளர்த்தார்கள். போலீசு வந்து அவர்களை அமைதிப்படுத்த முயற்சித்தது. அப்போது திருமண சடங்கும் முடிந்தது. உடனே, அவர்கள் கற்களால் எங்களை தாக்கத் தொடங்கினர். நாங்கள் தப்பித்து ஓடி ஒளிந்துகொண்டோம்” என்கிறார் சம்பவத்தின் போது அங்கே இருந்த மணமகனின் நண்பர் ஹர்ஸ் வகேலா.

“திருமணத்தை நடத்த நாங்கள் அனுமதி வாங்கினோம். கிராமத்தின் முக்கியமான சாலைகளில் யாகம் வளர்க்க அவர்கள் எந்த அனுமதியும் வாங்கவில்லை” என்கிறார் வகேலா. சாதிவெறியர்களின் கல்வீச்சில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் போலீசுக்காரர்களும் அடக்கம்.  கல்வீச்சு சம்பவத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக போலீசு தடியடியை நடத்தியிருக்கிறது.

படிக்க:
பார்ப்பனியத்தை எதிர்த்து பவன் மால்வியாவின் குதிரைச் சண்டை
மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! தூத்துக்குடி மக்கள் அறைகூவல் !

சாதிவெறியர்களின் தாக்குதலுக்கு என்ன காரணம்?

“பெரும்பான்மையாக வாழும் தாகோர் (தாக்கூர்) சாதியைச் சேர்ந்த இந்துக்கள், தலித்துகள் இத்தகைய திருமணத்தை நடத்துவதற்கு எதிராக உள்ளனர்.  எனவே, திருமணம் நடத்தும்போது எங்களுக்கு பாதுகாப்புக் கொடுங்கள் எனக் கேட்டோம். போலீசும் வந்தது. ஆனால், திருமணத்தின் போது, சிலர் எங்களை மிரட்டினார்கள். எனவே, நாங்கள் வீட்டுக்கு திரும்பிவிட்டோம். கூடுதலாக போலீசு வந்தவுடன்தான் திருமணத்தை நடத்தினோம்” என்கிறார் மணமகனின்  தந்தை.

சாதிவெறியர்களின் மிரட்டல் காரணமாக போலீசில் இவர்கள் புகார் அளிக்கவில்லை. அப்படி புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறது போலீசு.

கடந்த வாரத்தின் தொடக்கத்தில் மெசனா மாவட்டத்தில் தலித் மணமகன் ஒருவர் குதிரையில் ஊர்வலம் சென்றதற்காக சாதிவெறியர்களால் ஊர் விலக்கம் செய்யப்பட்டார். மணமகனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கிராமத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட ஐவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

இதேபோல, கடந்த ஆண்டு ஜூன் மாதம், தலித் இளைஞர் ஒருவர் திருமண ஊர்வலத்தில் போலீசு பாதுகாப்புடன் குதிரையில் சென்றபோது, சாதிவெறியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டினர்.

மூன்றாண்டுகளுக்கு முன்பு உனாவில் தலித் இளைஞர் ஒருவர் பொது இடத்தில் அடித்தே கொல்லப்பட்டார். அப்போதைய முதலமைச்சர் ஆனந்தி பட்டேல் உடனடியாக நீதி பெற்றுத்தரப்படும் என்றார். ஆனால், இதுநாள் வரை வழக்கு விசாரணை மட்டுமே நடந்துகொண்டிருக்கிறது.

அரசியலமைப்பும் சட்டமும் வழங்கியிருக்கிற குறைந்தபட்ச பாதுகாப்பையும் மீறி சாதிவெறி குண்டர்கள் வன்முறை வெறியாட்டம் ஆடுகின்றனர். இதையெல்லாம் தடுக்க வேண்டிய அரசே, சாதிய வன்முறைகளை ஊக்குவிக்கும் இந்துத்துவ அரசாக இருந்தால் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இப்படி மனிதர்களை சமமாக நடத்தாத ஒரு மதத்தின் ஆட்சியைத்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைப்போம் என்கிறார்கள் சங்கிகள்.


– அனிதா
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் 

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க