புல்லட் ஓட்டியதற்காக தலித் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்

அய்யாச்சாமியின் குடும்பத்திற்குப் பல ஆண்டுகளாகவே சாதியக் கொடுமையும் தீண்டாமையும் இழைக்கப்பட்டுவரும் நிலையில், அது போலீசு நிலையத்திலும் பலமுறை புகாராக அளிக்கப்பட்டு வந்தாலும் இது சாதியத் தாக்குதல் அல்ல எனச் சாதிக்கிறது போலீசு.

சிவகங்கை மாவட்டத்தில் தங்கள் கண் முன்னே புல்லட் பைக் ஓட்டியதற்காக தலித் மாணவரின் இரண்டு கைகளையும் ஆதிக்கச் சாதி வெறியர்கள் வெட்டிய கொடூரச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மேலப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதே ஆன அய்யாச்சாமி என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் கல்லூரி பயின்று வருகிறார். இவர் தினந்தோறும் புல்லட் பைக்கில் கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் தங்கள் கண் முன்னே புல்லட் பைக் ஓட்டுவது அப்பகுதியில் உள்ள ஆதிக்கச் சாதிவெறியர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதியன்று அய்யாச்சாமி வழக்கம்போல் தன்னுடைய கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வழி மறித்த அகமுடையார் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் “பட்டியலின சாதியில் பிறந்துவிட்டு நீ எல்லாம் எப்படி புல்லட் ஓட்டலாம்? கை இருந்தால்தானே புல்லட் ஓட்டுவ?” என்ற சாதிவெறியுடன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாணவரின் இரண்டு கைகளையும் வெட்டியுள்ளனர். இதில் அவரது வலது கை கடுமையாக வெட்டுப்பட்டுக் காயமடைந்தது.

இரத்த வெள்ளத்தில் அங்கிருந்து தப்பி சென்ற அய்யாச்சாமி பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இரண்டு கைகளும் வெட்டப்பட்டு வீட்டிற்கு வந்த அய்யாச்சாமியைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அய்யாச்சாமிக்கு தற்போது கைகளை இணைக்கும் அறுவைச் சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கைகளை வெட்டிய பின்பும் கொலைவெறி அடங்காத சாதிவெறியர்கள் கொலைவெறியோடு அய்யாச்சாமியின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். வீட்டில் உள்ள அனைவரும் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டதால், வீடு புகுந்து ஜன்னல், கதவு, பாத்திரம், வீட்டின் ஓடு என வீட்டிலிருந்த பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கி வீட்டையே சூறையாடியுள்ளனர்.

போலீசில் புகார் அளித்ததையடுத்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய ஆதிக்கச்சாதி வெறியர்களான வினோத், ஆதி ஈஸ்வரன், வல்லரசு ஆகிய மூவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள வினோத், ஆதி ஈஸ்வரன் மீது ஏற்கெனவே பல கொலை, கொள்ளை வழக்குகள் பதியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், போலீசோ நடந்தது வாய்த்தகராறுதான் சாதிய தாக்குதல் அல்ல என்று கூறி ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது.


படிக்க: அதிகரித்துவரும் சாதிவெறியாட்டங்கள்: துணைபோகும் தமிழ்நாடு போலீசு


ஆனால், அய்யாச்சாமி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சாதிவெறியர்கள் தாக்குதல் நடத்துவது இது முதன்முறையல்ல. அய்யாச்சாமியின் குடும்பம் அக்கிராமத்தில் புதிதாக வீடு கட்டி அடிப்படை வசதியுடன் வாழ்ந்து வருகின்றனர். இது அதே கிராமத்தில் வசிக்கும் அகமுடையார் சாதியை சேர்ந்த வினோத், ஆதி ஈஸ்வரன், வல்லரசு ஆகிய இளைஞர்களான ஆத்திரமூட்டியுள்ளது. இந்நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு அய்யாச்சாமியின் தந்தை பூமிநாதன் புதிதாக புல்லட் பைக் வாங்கியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஆதிக்கச் சாதி வெறியர்கள் அந்த பைக்கை அடித்து உடைத்துள்ளனர். பூமிநாதனையும் அடிக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து அய்யச்சாமி குடும்பத்தினர் போலீசு நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து ஊரில் வைத்துப் பேசி முடித்துள்ளனர். ஆனால், அதன்பிறகும் சாதி வெறியர்களின் கொட்டம் அடங்கவில்லை.

இதுகுறித்து அய்யாச்சாமியின் சகோதரர் பேசுகையில், “எங்களை இழிவாக, கேவலமாக ஏதோ சாக்கடையைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள். எங்களை மனுசனாகவே பார்ப்பதில்லை, மதிப்பதில்லை. சராசரியாக அனைவரும் செல்லும் பாதையில் பயணிக்க விட மாட்டார்கள். இவர்கள் வண்டியில் போகக் கூடாது, வேகமாகப் போகக் கூடாது, பெரிய வண்டிலாம் வச்சிருக்காங்கனு கொலை செய்கிறார்கள். நாங்கள் வீடு கட்டியதிலிருந்து பிரச்சினைகள் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். வீடு கட்டும் போது இடத்தை அடைப்பது, தண்ணீர் தொட்டியை உடைப்பது, பள்ளம் தோண்டுவது, வழி விடாமல் இருப்பது, லைனை துண்டிப்பது என்று தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இவையனைத்தையும் போலீசிடம் புகாரளிக்க, அவர்கள் அதனைச் சரி செய்ய, என்று சென்று கொண்டே போனது. புதிதாக புல்லட் வாங்கிய பின், இவங்களாம் புல்லட்டில் போகுற அளவுக்குப் பெரிய ஆள் ஆகிட்டாங்கனு என் தம்பியை வெட்டி, சாதியைச் சொல்லித் திட்டி வாள் கொண்டு துரத்தி இருக்கிறார்கள். அவன் உயிருக்குப் பயந்து வீட்டுக்கு ஓடி வந்திருக்கிறான். நான் அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தபின், வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். ஆள் இல்லாததால், வீட்டினை சூறையாடி இருக்கிறார்கள். உங்களால் எங்களை என்ன செய்ய முடியும், முடிஞ்சா வந்து பாருங்டா.. ’உங்க சாவு எங்கள் கைகளில்தான்டா’ என்று மிரட்டினார்கள்” என்று தங்களுக்கு நேர்ந்துவரும் தொடர் சாதியத் தாக்குதலை அம்பலப்படுத்தியுள்ளார்.

தாக்கப்பட்ட மாணவர் அய்யாச்சாமியின் தாய் பேசும்போது, “கல்லூரி முடிந்த பின் என் மகன் ரத்தத்துடன் கதறிக் கொண்டு வீட்டிற்கு ஓடிவந்தான். உடனே வண்டியில் தூக்கி வைத்து மகனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தோம். வீட்டினை உடைத்தது யார் என்று தெரியுமா என்று போலீசு கேட்டனர். நாங்கள் வயக்காட்டுக்கு சென்றதால், யார் என்று தெரியவில்லை என்றோம். அதற்கு போலீஸ் தரப்பில், வீட்டை உடைத்தவன் பெயரைச் சொல்லுங்கள்.. தூக்கி கொண்டு வந்து லாடம் கட்டுகிறோம் என்றார்கள். ஆனால் தாக்கியவர்களின் பெயரைச் சொன்னால், என் மகனின் படிப்பு கெட்டுப்போகும். வெட்டிப்புடுவாங்கனு பயந்து கொண்டு நாங்கள் சொல்லவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பாக என் மகன் முனியசாமி தண்ணீர் பிடிக்கச் சென்றபோது, வெட்டுவதற்கு வாளை கொண்டு துரத்தினார்கள். அப்போது நாங்கள் தகவல் கொடுத்த பின், என் மகன் உறவினர்கள் வீட்டிலேயே இருந்துவிட்டான். பின்னர் உடனடியாக போலீசாரிடம் தகவல் கொடுத்தபோது, உடனடியாக 3 பேர் வந்தார்கள். மறுபடியும் மறுபடியும் பிரச்சினை வந்துகொண்டே இருந்தது. நேற்று என் மகன் முனியசாமியை வெட்ட நினைத்தார்கள். அவர் கிடைக்காததால், தம்பியை வெட்டி இருக்கிறார்கள். இதுவரை என் மகன் கண் விழித்துப் பார்க்கவில்லை. நாங்கள் தலித் என்பதால், தொடர்ச்சியாகத் தாக்குகிறார்கள். இத்தனை நாட்களாக பி.சி.ஆர். சட்டத்தின் கீழ் புகார் அளிக்கவில்லை. நேற்று மகன் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் புகார் அளித்துள்ளோம்” எனக் குமுறுகிறார்.

இப்படி அய்யாச்சாமியின் குடும்பத்திற்குப் பல ஆண்டுகளாகவே சாதியக் கொடுமையும் தீண்டாமையும் இழைக்கப்பட்டுவரும் நிலையில், அது போலீசு நிலையத்திலும் பலமுறை புகாராக அளிக்கப்பட்டு வந்தாலும் இது சாதியத் தாக்குதல் அல்ல எனச் சாதிக்கிறது போலீசு. இவ்விவகாரத்தில் மட்டுமின்றி தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அனைத்திலும் ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


படிக்க: கோவை இரட்டை ஆணவப் படுகொலை: ஆதிக்கச் சாதி சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும்


இச்சம்பவம் மட்டுமின்றி, மயிலாடுதுறையில் சாராயம் விற்றதைத் தட்டி கேட்டதற்காக இரண்டு இளைஞர்கள் வெட்டி கொல்லப்பட்டிருப்பது, திருநெல்வேலியில் விக்னேஷ் என்ற பட்டியல் சாதியைச் சேர்ந்த மாணவன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் விடுதியில் கொடூரமான காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது என அடுத்தடுத்து தலித் இளைஞர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்தாண்டைப் போலவே இவ்வாண்டும் பொங்கலுக்குப் பிறகு தலித் மக்கள் மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

முக்கியமாக ஆர்.எஸ்.எஸ். காவி கும்பலானது தமிழ்நாட்டில் உள்ள தேவர், கவுண்டர், வன்னியர் போன்ற ஆதிக்கச் சாதி சங்கங்களிலும் பள்ளர், பறையர் போன்ற பட்டியலினச் சாதிச் சங்கங்களிலும் ஊடுருவி தலித் மக்கள் மீது சாதிய வன்முறைத் தாக்குதல்களையும் கொலைகளையும் நடத்தி வருகிறது. இக்கும்பல் அரசு கட்டமைப்பில் ஊடுருவியிருப்பது தலித் மக்களுக்கு எதிரான அநீதிகளை அடுத்த பரிணாமத்திற்கு இட்டுச் செல்கிறது.

ஆனால், ஆளும் தி.மு.க. அரசோ இதனைத் தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையையும் எடுப்பதில்லை. வேங்கைவயல் சம்பவத்திலோ பாதிக்கப்பட்ட தலித் மக்களைக் குற்றவாளியாக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. தலித் மக்களை அமைப்பாக்கி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் ஆதிக்கச்சாதி சங்கங்களையும் தடை செய்யவும் தலித் மக்களுக்கான நீதியை நிலைநாட்டவும் போராடுவதன் மூலம் மட்டுமே தலித் மக்கள் மீதான சாதிய தாக்குதல்களையும், ஆணவப் படுகொலைகளையும் தடுக்க முடியும். இத்தகைய போராட்டங்களைத் தலித் மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்கும் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கிய போராட்டங்களாகக் கட்டியமைப்பது ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க