
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஆதிக்கச் சாதி வெறியர்களின் தொடர் தாக்குதல்கள், சாதியப் படுகொலைகள், ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன.
இதில் குறிப்பாக ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக போலீசுதுறை செயல்படுவதைப் பல சம்பவங்களில் காண முடிகிறது. தற்போதும் பெரம்பலூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த மணிகண்டன் உடையார் சாதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவனால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் போலீசு முன்னிலையிலேயே நடந்துள்ளது. ஏட்டு ஸ்ரீதர்தான் பேச்சுவார்த்தை என்கின்ற பெயரில் மணிகண்டனை அழைத்துச் சென்றுள்ளார்.
குறிப்பாக, மூன்று ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகை காலங்களில் ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களை இழிவு படுத்துவது, வாகனத்தில் சென்றால் வழிமறித்து வம்பிழுத்து தாக்குவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதைப்போல் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்துவதும் அவர்களை அவமதிப்பதும் நடக்கின்றது. இந்த சாதி வெறியர்களுக்கு ஆதரவாக போலீசும் தாழ்த்தப்பட்ட மக்களை மிரட்டுவதும் அடிப்பதும் சமீப காலமாக நடந்து வருகிறது.
அதேபோல், இளைஞர்கள் சாதி வேற்றுமைகளைக் கடந்து ஒருவரை ஒருவர் காதலிப்பது இருந்து வந்தாலும், அது இரு வீட்டார் குடும்பத்திற்கும் அல்லது இரு சமூக மக்களுக்கும் தெரிந்தாலும், திட்டமிட்டு அவர்களுக்கு சாதிவெறியூட்டி ஆணவப் படுகொலை செய்வதும் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆணவக் கொலைகளைச் செய்துவிட்டு அதை மூடி மறைப்பது, அல்லது யாருக்கும் சந்தேகம் வராதபடி படுகொலைகளை நிகழ்த்துவது, அது கொலையா அல்லது தற்கொலையா என்று தெரியாத வண்ணம் நடத்துவது போன்றவை நம் கண் முன்னே நிகழ்ந்து வருகிறது.
அதற்குச் சான்றுதான் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் வேப்பங்குளத்தில் காளையன் என்ற இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம். இதை போலீசுதுறை ஆணவப் படுகொலை என்ற கோணத்தில் விசாரிக்கக்கோரி காளையனை பறிகொடுத்த குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் போராடி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இப்படிப்பட்ட சாதியத் தாக்குதல் நடந்து வருவதைப் பார்க்கும்பொழுது இதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி. செயல்பாடு இருப்பதையும், ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக போலீசுதுறையின் செயல்பாடு இருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்த சூழ்ச்சிகளை முறியடிக்க ஜனநாயக சக்திகள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதும் பாசிசத்தை வீழ்த்துவதும் அனைவரது கடமையாகும்.
தமிழ்நாட்டுக்குள் சாதி-மதத்தின் பெயரால் கலவரத்தை ஏற்படுத்தி காலூன்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி-யை தடை செய்!
ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களைத் தடை செய்!
ஆதிக்கச் சாதி வெறியர்களுக்குத் துணைபோகும் போலீசுதுறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!
உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!
சாதிவெறி, மதவெறி பாசிச சக்திகளுக்கு எதிராக அனைவரும் கரம் கோர்ப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைக்க ஒன்றிணைவோம்!
இவண்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram