என் பெயரும் ராமன் தான்! || கவிதை

ராமனை அழைத்து செத்து செத்து வாழ்வதைவிட மலத் தொட்டியில் மாண்டு போவதே மேல்

ன் பெயரும் ராமன் தான்!

மலக்குழியில்
இறங்கப் போகிறேன்
எந்த சாமியை வேண்டுவது
அயோத்தி ஸ்ரீ ராமனை வேண்டுவதா?

என்னைப் பீயள்ளப்
படைத்தவனை அழைக்கிறேன்
என்னை காப்பாற்ற வருவானா?

மலக்குழியில்
மூச்சு அடைக்கையில்
எப்படி அழைக்கலாம் ராமனை?

ராமன் என்றாலே
கண் முன்னால் சம்பூகன் வந்து போகிறானே
சீதை சிதையில் எரிகிறாளே !

ஐயோ காப்பாத்துடா ராமா என்று
கதறியபடி நான் செத்துப் போனால் என்னவாகும்?
ஸ்ரீ ராமனை அவதூறு செய்தான் என்றல்லவா ஆகும்

செத்துப் போன என்மீது
தேசத் துரோக வழக்கு பாயும்
ஸ்லீப்பர் செல்களாக
என் குடும்பம் அடுத்த நாள் செய்தியில் வரும்

வேண்டாம்
வேண்டவே வேண்டாம்
ராமனை அழைத்து
செத்து செத்து வாழ்வதைவிட
மலத் தொட்டியில் மாண்டு போவதே மேல்

இன்னும் கொஞ்ச நேரத்தில்
மூச்சடைத்து விடும்
மலத் தொட்டியின் ஒரு மூலையில் இருப்பேன்

என் தாயிடம் சொல்லிவிடுங்கள்
என் பெயரைச் சொல்லி அழ வேண்டாம் என்று
ஏனென்றால் என் பெயரும் ராமன் தான்.

மருது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க