18.01.2025
பெரம்பலூர் – வேப்பந்தட்டை தலித் இளைஞர் படுகொலை !
கொலைக்குக் காரணமான போலீசை கைது செய் !
கண்டன அறிக்கை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கைகளத்தூர் பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மணிகண்டன், உடையார் சாதியைச் சேர்ந்த தேவேந்திரன் ஆகியோருக்கு இடையில் பொங்கல் விளையாட்டில் வாக்குவிதம் ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி சமாதானம் பேச போலீஸ் ஒருவர் மணிகண்டனை அழைத்துச் சென்றுள்ளார். போலீஸ் முன்னிலையில் தேவேந்திரன், மணிகண்டனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
பஞ்சாயத்து செய்வதற்காக போலீசு எதற்காக மணிகண்டனை அழைத்துச் சென்றது? பஞ்சாயத்து செய்வது போலீசின் வேலை அல்ல. அப்படி சமாதானம் பேச வேண்டுமென்றால் அதையும் போலீஸ் நிலையத்திலேயே மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இன்றி தனிப்பட்ட இடத்திற்கு ஏன் போலீசு மணிகண்டனை அழைத்துச் சென்றது?
இதையெல்லாம் பார்க்கும் பொழுது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன் கொலை செய்யப்பட்ட இவ்வழக்கில் சமாதானம் பேச அழைத்துச் சென்ற போலீசு, திட்டமிட்டு கொலை செய்வதற்காகவே தனிப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து வருவதும், அதற்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் தாழ்த்தப்பட்ட மக்களை சிறையில் அடைப்பது, அவர்களுக்காக போராடுகின்றவர்கள் மீது வழக்கு தொடுப்பது என்பதையே தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தீண்டாமை வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசு செயல்படுவதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
வேப்பந்தட்டை, தாழ்த்தப்பட்ட இளைஞர் மணிகண்டன் படுகொலைக்கு காரணமான போலீசுக்காரர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட வேண்டும் என்றும் ஆதிக்கச் சாதி வெறியைத் தூண்டும் ஆதிக்கச் சாதி வெறி சங்கங்கள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram