த்தரப் பிரதேசத்தில் போலீசுத்துறை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் 56 மாவட்டங்களுக்கு நவீன சிறை வேன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி தலைநகர் லக்னோவில் நடந்தது.

இந்த நிகழ்சியில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் “உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டுக்கு முன்பெல்லாம் எங்கு பார்த்தாலும் கலவரமும், ரவுடிகளின் அராஜகமுமாகதான் இருந்தது. ரவுடிகளின் அட்டகாசம் மாநிலத்தில் அதிகரித்து இருந்தது. ஆனால் தற்போது சட்ட ஒழுங்கு சீர்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன” என்றும்,

“தற்போது உத்தரப்பிரதேசத்தில் பின்பற்றப்படும் சட்ட ஒழுங்கு நாட்டிற்கும், உலகிற்கும் எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. முன்பு போல் இப்போது இல்லை. சட்ட ஒழுங்கு சீர்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய அரசு ஆட்சியின் போது குற்றவாளிகளை தப்ப விடுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அப்படி இல்லை. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான இங்கு சட்ட ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்காக போலீசுத்துறையை நவீனமயமாக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றும் கூறினார்.

படிக்க : உ.பி: இலவச ரேஷனை நிறுத்தி உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் யோகி அரசு!

உ.பி.யில் யோகி ஆதித்யநாத்தின் சட்ட ஒழுங்கு

உ.பி.யில் 2017-இல் ஆட்சிக்கு வந்த யோகி ஆதித்யநாத் தன் ஆட்சியில் குற்றம் குறைவாக உள்ளது அதனை மேலும் குற்றம் இல்லாத, சமூக சீரழிவு இல்லாத, குற்றவாளிகள் தப்பித்து ஓடாத நிலைக்கு உயர்த்தும் அளவுக்கு போலீசித்துறை நவீனமாக்கப்படும் என்று பிதற்றுகிறார், ஆனால் உண்மை என்னவென்றால் யோகி ஆட்சிக்கு வந்தவுடன் தான் அதிக குற்றமும், அதிக சமூக சீரழிவும் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.

இந்து ராஷ்டிரத்தை நிறுவ வேண்டும் என்ற தனது பாசிச கொள்கைக்காக மத கலவரங்களை தூண்டிவிடுவது, முஸ்லீம்கள் இந்த நாட்டின் எதிரிகள் என்ற பிம்பத்தை மக்களிடம் பரப்பிவிடுவது, தாழ்த்தப்பட்டவர்களின் மீது தாக்குதல் நடத்துவது போன்ற பல செயல்களில் ஈடுபட்டு நாட்டையே சீரழித்து கொண்டு இருக்கிறார்.

குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முஸ்லீம் மக்கள் தங்கள் இறை தூதராக கருதும் நபிகள் நாயகத்தை அவதூராக பேசியவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடிய முஸ்லீம் மக்களின் வீடுகளை இடித்தது மட்டுமல்லாமல் அது சட்டப்பூர்வமாக நடந்தது என்று தனது சட்டவிரோத நடவடிக்கையை நியாயப்படுத்தி கொண்டது பாசிச யோகி அரசு.

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது. அந்த பட்டியலிலும் இந்த பாசிஸ்ட் யோகி ஆளும் உ.பி. தான் முதலிடம் பிடித்திருக்கிறது.

2021-இல் 24 கோடி பேரோடு, அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசம் 56 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகளுடன் மீண்டும் இந்த பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இன்னும் சொல்ல வேண்டுமானால் கடந்த செப் 16 அன்று கூட உ.பி.யில் உள்ள லக்கீம்பூரில் தாழ்த்தப்பட்ட 2 சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளனர். இப்படி தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி கொண்டுதான் வருகிறது.

ரௌடிகளையும், குற்றவாளிகளையும் கைது செய்து அவர்களை தப்பிக்க விட மாட்டோம் என்று போலீசுத்துறையை நவீனமாக்கும் வேலைகளில் ஈடுபடுகிறோம் என்று சொல்கிறார் யோகி. ஆனால் பெரும்பாலான ரௌடிகளையும், குற்றவாளிகளையும் தனது கட்சிக்குள்ளேயே வைத்திருப்பது மட்டுமின்றி முஸ்லீம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் மீதும் தாக்குதல் நடத்த புதிதாக ரவுடிகளை
உருவாக்குவாதே இந்த பாசிச யோகி அரசுதான்.

படிக்க : உ.பி: பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமின் மனுவை நிராகரித்த பாசிச நீதிமன்றம்!

ஆக! இந்த பாசிஸ்ட் கூறுவது என்னவென்றால் இந்துத்துவதிற்கு சேவை செய்யும் போலீஸையும் சட்டத்தையும் கொண்டு உழைக்கும் மக்களை ஒடுக்கும்
உ.பி.யின் சட்ட ஒழுங்குதான் இந்த நாட்டிற்கும், உலகிற்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்பதுதான்.

ஆம்! இன்றைய உண்மையும் கூட அதுதான்! ஏற்கனவே உத்தரப்பிரதேசம் இந்து ராஷ்டிரத்துக்கான சோதனைச் சாலையாகவே இருக்கிறது. இங்கு அவர்கள் செய்யும் அனைத்து அட்டூழியங்களும் இந்தியா முழுவதற்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்துதான் இவனுடைய பேச்சு வெளிப்படுகிறது.

இந்த பாசிஸ்ட்களின் சட்ட ஒழுங்கு என்றுமே உழைக்கும் மக்களாகிய நம்மை பிளவுபடுத்தி ஒடுக்கி சுரண்டுவதையே நோக்கமாக வைத்திருக்கும். எனவே உழைக்கும் மக்களாகிய நாம் ஒன்றாக சேர்ந்து இந்த மதவெறி ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி.யை வீழ்த்தாமல் நமக்கு வாழ்வில்லை!!!

அகல்யன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க