உ.பி: இலவச ரேஷனை நிறுத்தி உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் யோகி அரசு!

கார்ப்பரேட்டுகள் மற்றும் காவிகளின் நலனுக்காக செயல்படும் பாசிச யோகி அரசு, தினக்கூலித் தொழிலாளர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் என மாநிலத்தின் 150 மில்லியன் மக்களை பசி - பட்டினிக்கு தள்ளுகிறது!

0

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் இலவச கோதுமை மற்றும் அரிசி விநியோகத்தை ரத்து செய்ய உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இது குறைந்தது 36 மில்லியன் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அல்லது 150 மில்லியன் பயனாளிகளை பாதிக்கும்.

நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, ரேஷன் கார்டுதாரர்கள் ஜூலை மாதத்திற்கான ரேஷன் எடுக்கும் போது கோதுமை மற்றும் அரிசிக்கு முறையே கிலோவுக்கு ரூ.2 மற்றும் ரூ.3 செலுத்த வேண்டும். ஜூலை மாதத்துக்கான ரேஷன் வினியோகம் ஆகஸ்ட் 25ம் தேதி தான் தொடங்கியது.

கோவிட்-19 தொற்றுநோயின் தொடக்கத்தில் இலவச உணவு தானிய விநியோகத் திட்டம் மாநில அரசால் தொடங்கப்பட்டது. இதுவரை, உ.பி.யில் சுமார் 150 மில்லியன் மக்களுக்கு மாதம் இருமுறை இலவச ரேஷன் வழங்கப்பட்டு வந்தது.

படிக்க : உ.பி: பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமின் மனுவை நிராகரித்த பாசிச நீதிமன்றம்!

லக்னோ மாவட்ட அதிகாரி சுனில் குமார் சிங், ஆகஸ்ட் முதல் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் உணவு தானியங்களுக்கு (கோதுமை மற்றும் அரிசி) பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இருப்பினும், அரசாங்கம் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் தலா ஒரு கிலோ உப்பு மற்றும் பருப்பு (சானா) இலவசமாக வழங்கும், என்றார்.

நிலையான வருமானம் இல்லாதவர்கள் அல்லது “ஏழ்மையான” குடும்பங்களின் கீழ் வரும் நபர்களுக்கு ‘அந்தோதயா’ ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.

‘அந்தியோதயா’ அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு கார்டுக்கு 14 கிலோ கோதுமை கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் மற்றும் 21 கிலோ அரிசி ஒரு கிலோவுக்கு 3 ரூபாய் என மொத்தம் 35 கிலோ உணவு தானியங்கள் கிடைக்கும் என்று கூறினார்.

இலவச உணவு தானிய விநியோகத்தை திரும்பப் பெறுவது மாநிலத்தில் உள்ள மில்லியன் கணக்கான பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களை, குறிப்பாக தினசரி கூலித் தொழிலாளர்களை மோசமாக பாதிக்கும் என்று ரேசன் பயனாளிகள் கூறினார்.

உ.பி.யில் உள்ள பஸ்தாலி கிராமத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி சுசீலா, “குறைந்தது 2024 வரை அரசாங்கம் திட்டத்தை தொடரும் என்று நான் எதிர்பார்த்தேன். காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் இந்த நேரத்தில், இலவச ரேஷன் நாங்கள் குறைந்த அளவு பசி இல்லாமல் வாழவாவது உதவியது” என்றார்.

“இந்த முடிவு தினசரி கூலிகளின் பட்ஜெட்டை மோசமாக பாதிக்கும்” என்று வீட்டு வேலை செய்யும் மீரா கூறினார். “இலவச ரேஷன் மூலம் சேமிக்கப்படும் பணத்தை நாங்கள் எங்கள் குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவோம்” என்று கூறினார்.

தனியார் விருந்தினர் மாளிகையில் எலக்ட்ரீஷியனாக பணிபுரியும் ராம் தாஸ், கோவிட்-19 லாக்டவுன் காரணமாக வேலை இல்லாமல் இருந்ததாகக் கூறினார். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உணவு தானியங்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் புலம்புகிறார். “இலவச உணவு தானியங்களை திரும்பப் பெறுவதால் இப்போது குடும்பத்தை நிர்வகிப்பது கடினமாக இருக்கும்” என்று கூறினார்.

படிக்க : உ.பி: மூஸ்லீம் நபர்மீது ‘லவ் ஜிஹாத்’ குற்றம்சாட்ட முயற்சித்த பாஜக!

“பொருளாதாரம் நலிவடைந்திருக்கும் இத்தகைய சூழ்நிலையில் இலவச ரேஷனை திரும்பப் பெறுவதன் மூலம் 150 மில்லியன் விளிம்புநிலை மக்களை அரசாங்கம் தாக்கியுள்ளது” என்று அகில இந்திய மக்கள் முன்னணியின் டிங்கர் கபூர் கூறுகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகாலமாக கொரோனா உபியை நிலைகுலைய வைத்தது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே! அரசின் மருத்துவக் கட்டமைப்பு தோழ்வியால் பலர் மாண்டு போனார்கள். மேலும் பொது முடக்கத்தின் காரணமாக வேலையின்மை, பசி பட்டினி அதிகரித்தது.

கார்ப்பரேட்டுகள் மற்றும் காவிகளின் நலனுக்காக செயல்படும் பாசிச யோகி அரசு, தினக்கூலித் தொழிலாளர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் என மாநிலத்தின் 150 மில்லியன் மக்களை பசி – பட்டினிக்கு தள்ளுகிறது!

கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க