சேலம் வீரகனூரைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியின் மகன்
முத்துவேல் ஆதிக்க சாதிவெறியர்களால் படுகொலை !
ஆதிக்க சாதிவெறியர்களுக்கு துணைபோகும் மாவட்ட நிர்வாகம் !
“இது 21-ம் நூற்றாண்டின் விஞ்ஞான உலகம், இப்ப எல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க?” என்று கூறி சாதிய அடக்குமுறைகளை சாதாரணமாகக் கடந்து செல்கிறோம். இன்றைக்கும் தீண்டாமை படுகொலை அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. சேலம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையம் ஊராட்சி, கிழக்கு வீதியில் சுமார் 80 குடும்பங்கள் முதலியார் சமூகத்தை சார்ந்தவர்களும், 4 குடும்பங்கள் முடி திருத்தும் சமூகத்தைச் சார்ந்தவர்களும் வசித்து வருகின்றனர்.
அந்த ஊரில் உள்ள ஆதிக்க சாதியான முதலியார் குடும்பங்களுக்கு முடி திருத்துவதும், அவர்கள் கொடுக்கும் தானியங்களையும், உணவுகளையும் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சேவை செய்யவதும்தான் முடி திருத்தும் சமூகத்தை சார்ந்தவர்களின் வேலையாக அப்பகுதியில் நீடித்திருக்கும் பார்ப்பனிய கட்டமைப்பால் பணிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் முடி திருத்தும் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அப்பகுதியிலிருந்து உயர்படிப்புக்குச் செல்வதோ, வெளியூருக்கு வேலைக்குச் செல்வதோ, இல்லாமல் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையாமல் வறுமையில்தான் வாழ்ந்து வருகின்றனர்.
படிக்க :
மேகதாது அணை : தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சதி || மக்கள் அதிகாரம் தருமபுரி
நள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் !
அதை மீறி அவர்கள் வெளியூருக்கு வேலைக்கு சென்றால் மிரட்டுவதும், சாதிய அடக்குமுறைக்கு எதிராக பேசினால் மர்மமான முறையில் கொலை செய்வதும் என அப்பகுதியில் பல படுகொலைகள் இதுவரை நடந்துள்ளதாக வேதனையோடு வெளிப்படுத்துகின்றனர் அப்பகுதி மக்கள்.
அப்படி ஆதிக்க சாதி கட்டுப்பாட்டை மீறி கோவைக்கு வேலைக்கு சென்றார், முத்துவேல் என்ற 22 வயது இளைஞர். கோவையில் வேலையை முடித்துவிட்டு  வீடுதிரும்பிய முத்துவேலை படுகொலை செய்து அருகாமையில் உள்ள ஏரியில் வீசியுள்ளனர் ஆதிக்க சாதிக் கும்பல்.
 “படுகொலைக்கு ஆதிக்க சாதியை சேர்ந்த மணி, பெரியசாமி, மாணிக்கராஜா தான் காரணம். அவர்கள்தான் கொலை நடந்த தேதியன்று மாலை முத்துவேலை அழைத்து சென்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள முத்துவேலின் உடலை வாங்க மறுத்து கடந்த 13 நாட்களாக போராடி வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசு, முத்துவேலின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், மர்மமான மரணம் என்ற வகையிலேயே முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளதாக போராடும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

This slideshow requires JavaScript.

பாதிக்கப்பட்ட குடும்பமும், அக்குடும்பத்துக்கு ஆதரவாக முடித்திருத்தும் தொழிலாளர்கள் சங்கமும் இப்படுகொலையை கண்டித்து, உடனடியாக கொலைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்தும், முடித்திருத்தும் கடைகளை அடைத்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர்.
இப்போராட்டங்களுக்கு ஆதரவாக தருமபுரி மக்கள் அதிகாரம் தோழர்களும் களத்தில் நின்று போராடி வருகிறார்கள். இருப்பினும் அவர்களை அழைத்து இன்று வரை பேச்சுவார்த்தை கூட நடத்த மறுத்து வருகிறது சேலம் போலீசு.
மாறாக, உடலை வாங்க சொல்லி மிரட்டி வருவது, அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் காலம் தாழ்த்தி, போராடுபவர்களை அவமதித்தும் வருகிறது போலீசு.
உயிருடன் இருக்கும்போது ஆதிக்க சாதி வெறியர்களால் சாதிய வன்கொடுமை நிகழ்த்தப்படுகிறது. இறந்த பின்பும் சாதி வெறியர்களை பாதுகாக்கும் அரசு கட்டமைப்பால், வன்கொடுமை ஏவிவிடப்படுகிறது.

This slideshow requires JavaScript.

சாதிய படுகொலையை மூடிமறைக்க, போலீசும், அரசு நிர்வாகமும் உடலை தாங்களே அடக்கம் செய்ய முயற்சித்து வருவதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு கொலையாளிகளான ஆதிக்க சாதி வெறியர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை வழக்கு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இப்படி, அரசும், போலீசும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கும், சாதிய கட்டமைப்பிற்கும் அரணாக இருப்பதற்கு இப்படுகொலையே சாட்சி ! இந்த சமூகக் கட்டமைப்பையும் அரசுக் கட்டமைப்பையும் மாற்றாமல் ஒடுக்கப்பட்ட  மக்களின் விடுதலை என்பது கானல் நீரே !

மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.
97901 38614

2 மறுமொழிகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க